“ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” கட்டுரையை வாசித்துவிட்டு விருதுவிழவுக்கு வர மனமில்லாமல் தான் இருந்தேன், (தங்களையும், எஸ் ரா மற்றும் சில சம கால எழுத்தாளர்களை தவிர்த்து அதிகம் வாசிக்க இயலாத சூழ்நிலையால்). ஆனால் தங்களின் தனிப்பட்ட விழா அழைப்பிதழை கண்டவுடன், பிரம்மத்தின் நுண்சொல் கண்ட சூதன் போல், மாற்று எண்ணமின்றி விழவில் பங்குபெற இடைப்பட்ட ஒருவார காலத்தில் விழவுகளில் பங்குபெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொடர்ந்து வாசிக்க நேர்ந்தது இவ்வாழ்வின் நிகரற்ற அணுபவம்,. (ஜெய் உங்களின் சந்திப்பின் பின்பும் உங்கள் கடிதங்களின் ஒவ்வொறு முறையும் என் இத்துணை வருட வாசிப்பின்மின்மையின் எடை கூடி நிற்கிறது.)
சனிக்கிழமை காலை கோவை வந்தடைந்து நிகழ்வு அரங்கின் வரவேற்பில் என் கொல்லிமலை அமர்வின் நண்பர்கள் வரவேற்றது ஒர் ஊழின் கணம், அன்று நாஞ்சிலின் முதல் அமர்விலேயே தெரிந்துவிட்டது, இரு நாட்கள் சொற்களின் அறியா தெய்வங்களின் அளி சூழ இருப்பேன் என்று, நாஞ்சில் நாடனின் பேச்சை முதன் முதலில் கேட்டது பெரும் பரவசம் (அந்த தடாகை மலையடிவாரத்துகாரரிடம் சென்று கணிப்பொறியில் மாட்டியது என்ன சிடி என்று கேட்க மனம் குறுகுறுத்தது), தேனீர் இடைவெளியில் அவரின் ”சூடிய பூ சூடற்க” புத்தகத்தை பற்றிய தனி உரையாடலும், அதை என் அன்னைக்கு அவர் பெயரிலேய பரிசளிக்க வேண்டும் என்று அவரிடம்சொல்லி நாஞ்சிலின் கையெழுத்து வாங்கும் பொழுது அவர் திருமதியா என்று கேட்டதும், அதற்கு நான் அதனால் தானே அம்மா என்று பணிவான துடுக்குடனும் சொன்னது இனி என் நினைவின் அழிய பொற்கணங்கள்.
தொடர்ந்து பாரதி மணி அவர்களின் நாடக அனுபவங்களின் ஊடாக அவர் கூறிய ராயால் சல்யூட் அருந்திய அனுபவம், மது தவிர்ப்பாளனாகிய என்னையும் கற்பனையில் அருந்த செய்தது அவரின் பேச்சின் வல்லமை, மேலும் இரா. முருகன் அவரின் சில சிறுகதைகளை வாசித்த அனுபவத்தின் ஊடே, அங்கு வாசகர்கள் கூறிய அரசூர் வம்சம் நாவலை வாசிக்கும் ஆவல் அதிகமாகி உள்ளது.
ஜெய் என்வாழ்வில் மறக்க இயாலாத கதை சொல்லியை அறிந்த நாள் அது. பவா செல்லதுரை, உண்மையில் அன்று நான் மிகவும் மானசீகமாக வருந்த நேரிட்டது. அவர் கூறிய கரடி கதையை அதை மூலத்தில் எழுதிய பால் சக்கிரியா அவர்களே அவ்வாறு பேச்சில் கூறமுடியுமா என்பது சந்தேகமே .
தொடர்ந்து நிகழ்ந்த வினாடி வினா நிகழ்ச்சி கல்லாத உலகளவை கண்முன் காட்டியது. (வாசக மாணவர் பாரதி எங்கள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டார் என்பது மாற்றுக்கருத்தில்லாதது), அன்று இரவு மருத்துவர் சிவராமன் அவர்களுடனான உரையாடல் என் தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாக நிகழ்ந்தது.
தங்களுடன் நடை செல்லும் ஆவலில் இரவு சரியாக தூங்காமல் காலை 5 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி வெளியே வந்து தாங்கள் முன்னமே சென்றுவிட்டதை கண்டு வருந்தி பின் தேனீர் கடையில் சந்தித்த நிகழ்வில் இருந்து தொடங்கிய இரண்டாம் நாள்
சு.வேணுகோபால் அவர்கூறிய விவசாய வாழ்வின் உன்மத்தங்கள் (காளையை அவர் அண்ணன் பராமரிக்கும் செயல்), தொடர்ந்து விழா நாயகர் வர அவரைபற்றிய அவரின் அனுபவம் மிகசிறப்பு.
ஜெய் உண்மையில் உங்கள் கடிதத்துக்கு பின்தான் வண்ணதாசனை வாசிக்க ஆரம்பித்தேன், என்ன ஒரு நெகிழ்வு மலையப்பனுக்காக அவரின் கைகளுக்கு முத்தம் வைக்க தூண்டிய உங்களுக்கு நன்றியின் சிறு சொல்லில் உரைக்க மனமில்லை.
அன்று இடைவெளியில் என் பாலிய காலத்து மாணவர் ஒருவரை காணக் கிடைத்து மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, நாங்கள் ஒன்றாக படித்த பள்ளி, நாங்கள் ஓடி விளையாடிய வீதிகள் என்று ஒருவருக்கு ஒருவர் இத்துணை நாள் தெரியாமல் இருந்து, இங்கு இந்நிகழ்ச்சியில் அறிந்துகொண்ட அந்நபர் சேலம் பிரசாத் என்பது ஒரு பெரும் நெகிழ்ச்சி, ஜெய் ஆசிரியராக நீங்கள் தந்தது இதையும் சேர்த்து ஈடில்லாதது.
சிவபிரகாஷ் அவர்களின் சமரசமற்ற உரை சற்று திகைப்பை ஏற்படுத்தியது, அன்றைய அனைவருடனான இறுதி அமர்வின் முடிவில் தமிழகத்தில் நாடகதுறையின் அடுத்த கட்ட எழுச்சி பற்றிய தெளிவின்மை சற்றே வருத்தம் கொள்ளச்செய்தது. இறுதியில் விழவானது அதன் தெய்வங்கள் வகுத்த அதற்கே உரிய முறையில் சிறப்பாக முடிந்தது. ஜெய் இவ்விழவின் பெரும் பணி எவ்வாறு என்று, இது போல் பல நிகழ்ச்சிகளை குழுவுடன் இணைந்து நடத்திய நான் நன்கு அறிவேன், இப்பெரும் நிகழ்ச்சியை குறைந்த நிகழ்ச்சியாளர்களை கொண்டு மிக சிறப்பாக செய்த செல்வேந்திரன், செந்தில், மீனாம்பிகை, ராஜகோபாலன், விஜய சூரியன், அரங்கசாமி, மற்றும் அனைத்து விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுக்கும் நன்றியோ வாழ்த்தோசொல்வதை விட அடுத்த இந்திய அளவிலான விஷ்ணுபுரம் விருதுவிழாவில் உடன் பங்காற்ற விழைகிறேன்.
நன்றி
சசிகுமார்
சேலம்