எங்கள் பயணங்களில் எப்போதுமே நண்பர் வசந்தகுமார் மனித முகங்களை எடுப்பதில்தான் ஆர்வம் காட்டுவார். பலசமயம் பயணம் முடிந்து திரும்பிவரும்போது சென்ற இடங்கள் மிகக்குறைவாகத்தான் படமாக்கப்பட்டிருக்கும். அதைவிடக்குறைவாகவே சென்றவர்கள் படத்தில் இருப்பார்கள். பயணத்தில் இருக்கும்போது எதற்கு இவர் வழியில் பார்த்த அனைவரையுமே படமெடுக்கிறார் என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கும்.
பயணம் முடிந்து வந்ததுமே புகைப்படத்தொகுப்புகளைப் பார்க்கும்போது அவற்றில் நிறைந்திருக்கும் முகங்களைப்பார்த்து ஒரு ஏமாற்றம் ஏற்படும். ஏனெனில் நாம் அவற்றில் நமது முகத்தைத் தேடுவோம். அப்போது விதவிதமான நிலங்களில் நாம் நின்றுகொண்டிருந்த காட்சியே நம் உள்ளத்தில் இருக்கும் அதை புகைப்படத்தில் பார்க்க விரும்புவோம்.
ஆனால் ஓராண்டு கழிந்த பின்னர் முகங்களின் புகைப்படத்தைப் பார்க்கும்போது துணுக்குறும் அளவுக்கு அவை அந்த நிலப்பகுதியை ,பண்பாட்டை, வாழ்க்கை முறையை வெளிக்காட்டுவதைப்பார்ப்போம்.
பூடானில் ஒரு பாட்டி சிறுமி ஒருத்தியைக் கைபற்றி நடந்து போகும் ஒரு புகைப்படம் மொத்த பூடானையே கொண்டு வந்து முன்னால் நிறுத்துகிறது. இமயமலையின் புத்த மடாலயத்தின் படியில் அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் சுருங்கிய முகம் இமயமலையாகவே கற்பனையில் மாறிவிடுகிறது. முகங்களைப்போல வாழ்க்கையைக் காட்டும் எதுவுமே இல்லை.
கால் முளைத்து நான் வீட்டை விட்டு பயணம் கிளம்பிய பத்தொன்பதாவது வயதில் புறப்பாடு என்ற பெயரில் அந்த பயண அனுபவங்களை எழுதியிருக்கிறேன். பின்னர் பலமுறை வீட்டை விட்டு கிளம்பினேன். எனக்கென வீட்டை அமைத்துக் கொண்ட பின்னரும் கூட வீட்டில் தரிக்காதவனாகவே நான் இருந்து கொண்டிருக்கிறேன். இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக பயணம் ஏதுமின்றி வீட்டில் இருந்த நாட்கள் அதிகம் போனால் இருபது இருபத்தைந்து நாட்களாகத்தான் இருக்கும்.
பத்து நாட்கள் ஒரே தெருவில் நடந்து, ஒரே முகங்களை பார்த்து, ஒரே கடையில் டீ குடிக்கும்போதே உள்ளம் ஏங்கத் தொடங்கிவிடுகிறது. அறியாத ஊர் ஒன்றில் முற்றிலும் புதிய முகங்கள் நடுவே நின்று டீ குடிக்கும் ஒரு சித்திரம் உள்ளத்தில் எழுகிறது. அதன் பின் இருக்க முடியாது. கால்கள் பதறும் கிளம்பு கிளம்பு என்று. உடல் எம்பும் ஹீலியம் நிறைக்கப்பட்ட பலூன் மண்ணிலிருந்து எழத் துடிப்பது போன்றது தான்
இப்போதெல்லாம் என்னைவிட பயணத்துடிப்புள்ள நண்பர்களின் பெரிய படையே திரண்டுள்ளது. சென்ற இரண்டு மாதங்களில் சென்ற பயணங்களில் மூன்று நான்கு கார்களில் இருபது பேருக்கு மேல் சேர்ந்துகொண்டார்கள். பல்லவர்கால சமணக்கோயில்களைப் பார்க்கப்போனபோது காஞ்சிபுரத்தில் ஒரு கல்யாணமண்டபத்தையே வாடகைக்கு எடுத்து தங்கினோம்.
வருடத்தில் குறைந்தது இரண்டு வெளிநாட்டு பயணங்களும் மூன்று விரிவான இந்தியப்பயணங்களும் ஆறேழு தமிழகப் பயணங்களும் செய்து கொண்டிருக்கிறேன். சென்ற இரு வருடங்களாக பயணத்தில் இருந்த நாட்களை அன்றாட வாழ்க்கையின் நாட்களை விட அதிகம். பறவை சிறகு கொண்டிருப்பது பறப்பதற்காகத்தான் அது இளைப்பாறலாம் ஆனால் காற்றில் மிதந்து கொண்டிருக்கும்போது மட்டும் தான் அது பறவை.
என் பயணங்களைப்பற்றி எழுத எண்ணும்போது இந்தியா என்னும் சித்திரம் எழுந்து வருகிறது. உலகில் பல நாடுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மண்ணின் மேல் இருக்கும் மோகம் ஒவ்வொரு கணமும் கூடிக்கூடி வருகிறது. எத்தனையோ பயணங்களுக்குப் பின்னரும் இதை இன்னும் பார்க்கவில்லை, உணரவில்லை என்னும் ஏக்கமே எஞ்சுகிறது. ஒவ்வொரு முறை வரைபடத்தை எடுக்கும்போதும் நான் பார்க்காத நிலங்கள் கண்முன் எழுந்து வந்து துயர் கொள்ளச்செய்கின்றன. இன்னும் எஞ்சும் வாழ்நாளில் இங்கிருப்பதில் எத்தனை பகுதியை பார்க்கமுடியும் என்னும் எண்ணம் சுமையெனக் கனக்கிறது.
இந்த உணர்வு இந்தியா என் நாடு என்பதற்காக மட்டுமல்ல. இந்த நிலம் முழுக்க நிறைந்திருக்கும் உலகின் தொன்மையான பண்பாடு ஒன்றின் துளியே நான் என்று என்னை உணர்கிறேன் என்பதனால் மட்டும் அல்ல. இந்தியா எனக்கு ஒரு ஆன்மிகமான அனுபவம். அதில் பயணம்செய்வது ஒரு வகையான தியானம்
இந்தியாவை அறிய அறிய எனது மொழியை நான் நன்கு அறியத்தொடங்கினேன். இந்தியாவில் பயணம் செய்யும் தோறும் இந்தியாவின் இலக்கிய மரபு, மெய்ஞான மரபு ஆகியவற்றை மேலும் அணுகி அறியத் தொடங்குகிறேன். காசியை , கங்கையை, இமையத்தை அறிந்தால் நான் என் பாட்டனை பாட்டியை மிகநுட்பமாகப் புரிந்துகொள்கிறேன்.
இந்தியாவில் இருக்கும் இத்தனை பிரம்மாண்டமான பன்மை அனேகமாக உலகின் எந்தப்பகுதியிலும் இல்லை. ஆறுமாதம் பயணம் செய்தால் அமெரிக்கத் துணைக்கண்டமே சலிக்கத் தொடங்கிவிடும். மீண்டும் மீண்டும் ஒரே சாலைகள். ஒரே வகைக்கட்டிடங்கள்.ஒரே வகை மனிதர்கள். ஒரே வாழ்க்கை. ஆனால் இங்கே வெறும் ஐம்பது கிலோமீட்டருக்குள் நிலப்பகுதியும் மொழியும் உணவும் உடையும் இனமும் கூட முற்றாக மாறும்
இந்தியா ஒரு மாபெரும் கலைடாஸ்கோப் ஒரு சின்ன அசைவில் மொத்த தோற்றமும் மாறிவிடுகிறது.நாம் நோக்க நோக்க முடிவிலாது மாறிக்கொண்டே இருக்கிறது இந்தியா ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் மொழிகளின் இனங்களின் வாழ்க்கை முறைகளின் மாபெரும் கருவூலம். — வாசித்து முடிக்கவே முடியாத நூல்
இத்தனை பன்மைக்குள்ளும் ஓடும் ஒருமையை நான் தொட்டறிந்திருக்கிறேன் என்பதனால் தான் முதன்மையாக இந்தியன் என்றே என்னைச் சொல்லிக் கொள்வேன்.
இந்தியத் தேசியத்தின்மீது இறைநம்பிக்கைக்கு நிகரான ஒன்றை நான் கொண்டிருக்கிறேன்.. ஏனெனில் இறைவனை நேரில் கண்ட ஒருவனின் நம்பிக்கைக்கு நிகரானது அது. அவனிடம் நீங்கள் நாத்திகம் பேசமுடியாது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கோஹிமாவிலிருந்து அமிர்தசரஸ் வரை இந்தப்பண்பாட்டில் எந்தப்பகுதியிலும் என்னுடையது என்று நான் உணரும் இடம் உண்டு. . என்னவர் என்று நான் உணரும் மக்களே அங்கு இருக்கிறார்கள். இத்தனை பயணங்களில் மிகக்குறைவாகவே கசப்பான அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்துள்ளன. என்னைத் தன்னவர் என்று உணரும் மக்களையே இந்த நிலம் முழுக்க நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தியா என்று சொல்லும்போது நாளிதழில் படிக்கும் ஒரு வார்த்தையாகவே பலருக்கு உள்ளம் பொருள்படுகிறது. சிலருக்கு அது பாடப்புத்தகத்திலிருக்கும் ஒரு சொல். சிலருக்கு பணத்தாளிலிருக்கும் ஒரு அடையாளம். சிலருக்கு அதிகாரபீடம். சிலருக்கு ஒரு வரைபடம். எனக்கு அது முகங்களின் பெருக்கு
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் கண்டு என் நினைவில் பெருகியிருக்கும் பல்லாயிரம் முகங்கள்தான் என் இந்தியா. என்னிடம்பேசியவை. நான் அணுகி அறிந்தவை. ஆகவே தான் இத்தொடரை முகங்களின் தேசம் என்று தலைப்பிட்டேன். முகங்களினூடாகவே இத்தேசத்தை கண்டடைவதற்கான ஒரு முயற்சி இந்நூல்
அது நீர் நிலையில் ஒரு நீர்த்துளியை தொட்டு எடுப்பது போலத்தான். அறியத்தெரிந்தவர்க்கு முழு நீர்நிலையையும் அது கற்பிக்கும்
நன்றி
குங்குமம் முகங்களின் தேசம் முடிவுப்பகுதி