அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
சுமார் ஏழரை மணியளவில் நான் குஜராத்தி சமாஜம் இருந்த இடத்திற்கு வந்தடைந்தபோது வாசலில் தான் சகோதரர் சுநீல் கிருஷ்ணன் அவர்களும், சகோதரர் கடலூர் சீனு அவர்களும் சிரித்துக்கொண்டே இன்னும் இருவேறு நபர்களுடன் நின்றிருந்தனர். வந்தவர்களுக்கும், வந்துக்கொண்டே இருந்தவர்களுக்கும் துணை புரிந்தனர். சுமார் எட்டரை மணியளவில் நீங்கள் மீனாம்பிகை அவர்களுடன் என்ட்ரி கொடுத்தீர்கள்.
காலை உணவை ருசியுடன் சுவைத்து முடிந்தவுடன் முதல் அமர்வு சரியாக ஒன்பதரை மணிக்குள் தொடங்கியது. நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்துலகம், அதோடு சொல் சேர்க்கை முறை மற்றும் அதன் சுவை வேறுபாடு மற்றும் கடவுளை அவர் பொதுவாக வணங்கும் முறையை பற்றி சொன்னபோது எழுந்த சிரிப்பலை அணைய வெகுநேரம் பிடித்தது. அவர் மிகவும் கோபமாய் சொன்ன பல தமிழ் வார்த்தைகளின் மறைவு மற்றும் சங்க இலக்கியத்தின் கொடை பற்றி பேசியது, தமிழை விரும்பி படிக்காமல் போகும் பலரை நினைத்து அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் வேதனை உண்டானது.
பின் சின்னதொரு தேநீர் இடைவெளி. அதற்கு பின் தொடங்கிய பாரதி மணி அவர்களின் அனுபவ பேச்சும், அவர் சொன்ன ரசவடை கதைமுதல், ராயல் சல்யூட் கதை வரை உள்ள பல அனுபவ கதைகளும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் சொன்ன பல உண்மைகள் பல பேருக்கு மன நெருடலை தந்தது உண்மைதான். அதிலும் நாடகத்துறையை பற்றி ஐயா சொன்னது. அவர் ஏன் அவரது நாடகத்துறை பற்றிய அனுபவத்தை மட்டும் கொண்டு தனியாக ஒரு புத்தகம் இன்னும் ஏன் எழுதாமல் இருக்கிறார் என வருத்தமும், வியப்பும் உண்டாகியது.
பின்னர் மதிய உணவை முடித்தபின் S.ராம்குமார் I.A.S அவர்களின் தொகுப்புரையுடன் நடந்த இரா.முருகன் அவர்களின் கதைகளின் மீதான உரையாடல் மற்றும் அவரது பேச்சு ,அதிலும் அவரது கதைகளின் களம் மற்றும் பின்புலம் அதோடு அவரது மேஜிக்கல் ஸ்டோரிகளின் போக்கு பற்றி உரையாடியதும் பல கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களும் அவரை நெருங்கி அறிவதற்கு உறுதுணையாக இருந்தது.
அதன்பின் பவா அவர்களின் பேச்சு அக்கூட்டத்தில் இருந்த மனிதர்களை எழும்ப விடாமல் கட்டி போட்டது என்று சொன்னால் அது ஒவ்வொருவரும் ஆமோதிப்பர். அவர் சொன்ன ஒவ்வொரு கதையும். அப்பப்பா…! மனிதர் பல உலகங்களுக்குள் அழைத்து சென்றுவிட்டார். அவர் வீட்டில் கிணறு வெட்டிய கதையில் நான் அவருடனே அந்த முதல் நீரை முகத்தில் வாங்கிக்கொண்டேன். பால் சக்கிரியாவின் கரடி கதை, சுவாமிஜியுடனான அவரது சந்திப்பு மற்றும் எத்தனையோ கதைகள். hats off to you பவா sir. நீங்கள் நிச்சயம் ஒரு பெரும் கதைசொல்லி தான். பல நாட்களுக்கு நண்பர்களிடம் சொல்ல பல பல கதைகளையும் மனித மனங்களின் ஓட்டங்களையும் கண்முன்னே கொண்டு வந்தீர்கள். முடிவில் அவர் முடித்த போது மனம் ஏங்கியது.
இலக்கிய வினாடி வினா. கடவுளே …. கையளவு கூட கற்கவில்லை என்று புரிந்தபோது மனம் தவித்த தவிப்பும், நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று பயந்த நிமிடமும் , அதே நேரம் ஒரு வெறியும் ஏறியதை சொல்லாமல் முடியாது.
இரவுணவுக்கு பின்னர் தொடங்கிய Dr.சிவராமன் அவர்களின் மருத்துவ கேள்வி-பதில் மற்றுமல்லாது அவர் சொன்ன பல புதிய தகவல்கள் நிச்சயம் எங்களை போன்ற இளம் வாசகர்களுக்கு புதிய அனுபவம் தான். கலந்துரையாடல் வேளையில் Dr.சுநீல் அவர்களின் சில வாதங்களும் நிச்சயம் பல புரிதல்களை அனைவருக்கும் வழங்கியது. அதோடு quiz செந்தில் அவர்கள் சொன்ன இந்திய அரசு ஆராய்ந்து கண்டடைந்த முடிவுகளை நாம் செயல்படுத்தாமல் குப்பையில் போட்டதையும் ஆனால் அந்த தரமுடிவுகளை பக்கத்து நாடான பங்களாதேஷ் உபயோகித்து கொண்டிருப்பதையும் நினைத்த போது பலருக்கும் இந்திய அரசின் மேல் கோபத்தை வரவழைத்தது.
சு.வேணுகோபால் அவர்களது உரையுடன் தொடங்கிய மறுநாள் காலை அமர்வு விவசாயத்தை பற்றியும், அதன் வலிகளையும், நுட்பங்களையும், அதன் முறைகளையும் அதோடு அவர் பஷீர் மற்றும் பல எழுத்தாளர்களை பற்றியும் பேசியது பலரது எண்ணங்களை திருப்பிப் போட்டது. அவரின் பேச்சின் இடையில் வந்து சேர்ந்தார் இவ்விழாவின் நாயகன் “வண்ணதாசன்” என்ற அவர்களின் உயரம் ஒரு கம்பீரம் தான்.
வண்ணதாசன் ஐயாவின் பேச்சு கனிவுடன், மன நிறைவுடன், ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வாழவேண்டிய அவசியத்தை, அதன் அபத்தத்தை, அதன் சுருள்களையும் அவர் சொல்லியது ஆழ்மனதில் அவரது மெல்லிய வருடும் குரலினாலான பேச்சு சுமார் இரண்டு மணிநேரம் கடந்ததையே அறிய முடியவில்லை. இன்னும் அவர் நிறைய பேசமாட்டாரா …? என அனைத்து உள்ளங்களும் விருப்பப்பட்டது.
எச்.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களின் ஆங்கில உரை மற்றும் அவர் சொன்ன பல பதில்கள். மதுரை காண்டத்தை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் மற்றும் தமிழ் ,கன்னட இலக்கிய மரபு பற்றியும் அவர் நிறைய நிறைய தகவல்களை சொன்னது நிறைவாக இருந்தது.
மதியம் உணவை பீடாவுடன் முடித்த பிறகு நடந்த எழுத்தாளர்களுடனான கேள்வி-பதில் மற்றும் அதில் சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், தேவதேவன் மற்றும் நாஞ்சில்நாடன் ஆகியோர் அளித்த பல பதில்கள் மிகவும் சுவையுடனும், வாசகர்களுக்கு உதவியாகவும் இருந்தது.
எம் கோபாலகிருஷ்ணனிடமிருந்து பரிசுபெறுகிறார் சேலம் பிரசாத்
பின்னர் மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய அனைவரது பேச்சும் “வண்ணதாசன்” என்ற ஆளுமையின் எழுத்துலகத்தை பற்றியும், ஒவ்வொரு கதையின், கவிதையின் தாக்கத்தையும் உணர முடிந்தது. ஆனால் இரண்டு நாள் இரு மணித்துளிகள் போல அதிலும் குறைந்த பட்சம் அங்கு நான் இருந்த நாற்பது மணி நேரத்தில் முப்பது மணி நேரத்துக்கும் மேல் எழுத்துலக ஆளுமைகளுடனும் அவர்களது எண்ணங்களையும், அறிவுரைகளையும் நெருக்கத்தில் இருந்து அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பும் அதற்கு உதவி புரிந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் மிக பெரிய நன்றிகளை அனைவர் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராகேஷ்
கன்யாகுமரி