அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்த ஆண்டு விருது வண்ணதாசனுக்கு என்ற அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. என்னை பாதித்த முதல் எழுத்தாளர் வண்ணதாசன். அவரின் அகம் புறம் தொடர் விகடனில் வரும்போது எனக்கு 17 வயது. ஒரு அட்டைப்பட சினிமா செய்திக்காக தற்செயலாக ஆனந்த விகடன் வாங்கியபோது கடைசியாக வாசித்த பகுதி தான் அகம்புறம் கட்டுரையின் முடிவில் ஏதோ இனம் புரியாத ஒரு அழுத்தம் மனதை நெகிழ்வாக்கியது. அதை வாசிப்பதற்காகவே ஆனந்த விகடனை தொடர்ந்து வாங்கினேன். அதன் பின் துரதிர்ஷ்டவசமாக வண்ணதாசனை விட்டுவிட்டு ஆனந்த விகடனை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அதன் பின் ஒரு எழுத்து என்னை பாதிக்க ஏழு ஆண்டு காலம் ஆகியது.
ஜெயமோகனின் நவீன தமிழ் இலக்கியம் அறிமுகம் என்ற புத்தகத்தை தோழி தற்செயலாக பரிசளிக்க அது இன்னொரு திறப்பாக என் உடைதலாக இருந்தது. இதுவும் தற்செயல் நிகழ்வு தான். இவை எனக்கு நிகழவே இல்லையென்றால் நான் எதையும் வாசித்திருப்பேனா என்பது சந்தேகம் தான். அதன் பின் இலக்கியம் வரலாறு ஆன்மிகம் தத்துவம் என ஜெ எனக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தார். நான் தவறவிட்டுவிட்ட ஒரு எழுத்தாளரை திரும்பவும் வாசிக்க விஷ்ணுபுரம் விருது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் இதுவும் எனக்கு ஒரு நிமித்தம் தான். நான் ஒரு நல்ல வாசகனா? என்பது எனக்கே இன்னமும் தெரியவில்லை. ஆனால் நான் தொடர்ந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். என்றாவது ஒருநாள் அந்த நிலையை அடையக்கூடும்.
வண்ணதாசனின் கதைகள் மென்மையாக தொடங்கிய போதும் என்னை அதன் ஆழத்திற்கு இழுத்துச் சென்று நான் அறியாத கணத்தில் என்னை நெகிழச் செய்துவிடுகின்றன. ஐம்பது சிறுகதைகளை வாசித்திருப்பேன் அவற்றில் பெரும்பாலானவற்றில் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவற்றின் நுண்மைகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு வாசித்திருக்கிறேன் என்பதை பவா அவர்கள் எச்சம் சிறுகதையை வைத்து பேசும்போது உணர்ந்தது கொண்டேன். மீண்டும் அவற்றையெல்லாம் வாசிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கிறது.
விஷ்ணுபுரம் விருதிற்காக வெள்ளிக்கிழமை காலையிலேயே நாகர்கோவில் பேசேன்ஜர் ரயிலில் கிளம்பிவிட்டேன். கிறிஸ்துமஸ் வருவதால் ஜெமோவின் இதுவரை இணையத்தில் சில கட்டுரைகளை மட்டுமே வாசித்திருந்த சிலுவையின் பெயரால் புத்தகத்தை பயணத்தின் போதே வாசித்து முடித்தேன். கிருஸ்துமஸ் நாளில் ஒரு வாசகனாக கிறிஸ்துவை நினைத்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும்.
இரவு நன்றாக உறங்கினால் தான் மறுநாள் நடக்கும் நிகழ்வுகளை நன்றாக கவனிக்க முடியும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமையே கிளம்பியிருந்தேன். கோவையில் எனது டிப்ளமோ வகுப்பை படிக்கும் போதுதான் வண்ணதாசனை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதே கோவையில் அவருக்கான விழா. மார்கழியின் இரவு மெல்லிய குளிரோடு இருக்க வேடிக்கை பார்த்து கொண்டே சற்று நேரம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றினேன். எனது கல்லூரி காலங்களில் எந்த கவலையும் இன்றி சுற்றிய இடங்கள் சற்றே மாறித்தான் போய் இருந்தன முழுவதும் மாற்றமடையவில்லை என்பது ஒரு ஆறுதல் தான் இன்னமும் நான் பழைய எச்சங்களை கண்டுகொள்ள முடிந்தது. கோயம்புத்தூர் என்றாலே அழகான பெண்களும் நினைவில் வரும். நான் இருக்கும் இந்த வெள்ளிக்கிழமை இரவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இளைஞர்களும் அழகான பெண்களும் வெளியேறி சென்று கொண்டிருந்தார்கள். நானோ அவர்களின் எதிர்திசையில் ஊரினை விட்டு வெளியேறி வந்திருந்தேன். அவரவருக்கு அவரவர் கொண்டாட்டங்கள்.
நவீனமான கவர்ச்சியான விடுதிகளை பார்த்துக் கொண்டே ஒரு குறைந்த வாடகையில் விடுதியின் அறையை தேடிக்கொண்டிருந்த காந்திபுரம் சந்துகளில் அந்த முதியவரின் அழைப்பை ஏற்று அவரின் விடுதியில் ஒரு படுக்கையுள்ள ஒரு அறையை கேட்டேன். எல்லா அறையிலும் இரண்டு படுக்கைகள் தான் இருந்தன. நான் எனக்கு ஒரு படுக்கை போதும் என்று வலியுறுத்தி மாடிப்படிக்கு கீழே ஒரு அறையை பெற்றுக்கொண்டேன். அதன் ஓரத்தில் பழைய மர சாமான்கள் போட்டு வைத்திருந்தார்கள். ஒரு இரவுக்கு இது போதும் என நினைத்து அந்த அறையை பெற்றுக்கொண்டேன். பின்னிரவில் ஒரு சத்தத்தை கேட்டு கண்விழித்த போது கட்டிலின் ஓரத்திலிருந்து கதவில் தனக்கான பாதையை அமைக்கும் பணியில் அந்த பெருச்சாளி ஈடுபட்டிருந்தது. நல்ல வேளை காலை கடிக்கவில்லை என்பது சற்றே நிம்மதி தான்.
உறக்கம் கலைந்த இரவில் பெருச்சாளியின் பணிக்கு எந்தவித தொந்தரவும் தராமல் கட்டிலில் படுத்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தலை சற்றே அசையும் அதிர்வுகளை கூட உணர்ந்து ஓடி ஒளிவதும் பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து தன் பணியை தொடர்வதுமாக சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது பெருச்சாளி. ஒருபக்கம் தூக்கம் கலைந்த எரிச்சல் இந்த இரவில் ஒரு பெருச்சாளியை கொல்ல வேண்டுமா என்ற கேள்வி. தூங்கினால் கடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு. ஏறத்தாழ ஒருமணி நேரம் சென்றிருக்கும் அந்த பெருச்சாளியின் செயல்களிலிருந்து அது கருமமே கண்ணாக இருப்பது தெரிந்தது. ஒரு வேளை அந்த பெருச்சாளியும் கீதையை வாசித்திருக்கலாம். அதன் பின் என்னையெல்லாம் ஒரு தடையாகவே பொருட்படுத்தாமல் வேலையை தொடர்ந்தது. நானும் காலையில் இன்னும் அதிகமான எழுத்தாளர்களை இலக்கியவாதிகளை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சாரி பெருச்சாளி உன்னை மட்டுமே என்னால் இந்த இரவில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மார்கழி குளிரில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தினம் விடிந்துவிட்டது. வடகோவை பேருந்தில் ஏறி குஜராத்தி சமாஜை அடைந்தேன். எதிர்கொண்டழைத்த ஒரு நண்பர் ஒரு அறையில் எனக்கும் ஒரு படுக்கையை ஒதுக்கி தந்தார். சகஜமாக நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டேன். கடலூரில் இருந்து வந்த ஒரு வாசகர், சுரேஷ் பிரதீப், சுசில் அவர்களையும் அறிமுகம் செய்து கொண்டேன். ஜெயும் உள்ளே வந்து எங்களை வரவேற்றார். ஊட்டியில் எங்களுக்காக நிகழ்வுகளை ஒருங்கமைத்த மீனா அக்காவிற்கும் என் வருகையையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
முதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் முதல் அமர்வு. சுற்றிலும் வாசகர்கள் சூழ நாஞ்சில் அவர்களுடன் உரையாடல் தொடங்கியது. அவரின் படைப்பை பற்றி ஆரம்பித்த உரையாடல் அவரின் தலைப்புகளில் வழக்கத்தில் இருந்து மறைந்த பழம் தமிழ் சொற்களை பயன்படுத்துவது குறித்த வாசகர் ஒருவரின் கேள்வி அவரை பழந்தமிழ் இலக்கியத்திற்கும் இட்டுச் சென்றது. தமிழின் சொல்வளம், கவிதைகளில் உள்ள இசைநயம், அதற்கு தேவைப்படும் ஒரு பொருட் பன்மொழி போன்ற மொழியை செழுமைப்படுத்தும் சொற்கள் குறித்து நாஞ்சிலின் உரை ஆழமாக சென்றது.
சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம் என செய்யுள்களில் இருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் கூறி நாஞ்சில் வேறொரு உலகில் நிகழ்ந்துகொண்டிருந்தார். வட்டார வழக்கு பற்றிய நண்பரொருவரின் கேள்விக்கு பெரும்பாலான வட்டார வழக்கு சொற்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டவைதான் என்ற நாஞ்சிலின் பதிலும் அதற்கு நாஞ்சில் அளித்த எடுத்துக்காட்டுகளுமாக உரை சுவாரஸ்யமாக அவ்வப்போது “ஆறு மலையாளிகளுக்கு நூறு மலையாளம்” என ஜெமோவும் அவ்வப்போது சொல்ல அவை அதிர்ந்து கொண்டிருந்தது.
பாரதியாரின் வார்த்தைகளிலுள்ள இணைவுகள் பற்றிய அராத்துவின் கேள்விக்கு நாஞ்சில் பாரதியின் பாடல்களையும் அவற்றில் பாரதியின் ஆழ்மனதில் நிகழ்ந்த சொற்களின் இணைவும், பாஞ்சாலி சபதம் பற்றிய அவரது முயற்சியையும் பாரதி ஒரு யுகத்தின் திருப்புமுனை கம்பனைப் போல அது எப்போதாவது நிகழ்வது என்றார். நாஞ்சில் அவர்கள் மஹாராஷ்டிராவில் இருந்த போது அந்த மனிதர்களை பற்றியும் அவர்களின் விருந்து உபசாரம் (அந்த சோள ரொட்டியை நானும் பகிர்ந்து கொண்டேன்) பற்றியும் ஈரானிய தேநீர் கடைகளில் நுழைய தயங்கும் அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள் குறித்தும் கல்லூரியில் சேர முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அவரின் நண்பருக்கு உதவிசெய்த கல்லூரி கிளார்க் பின் அவரோடு அவர் நண்பர் அருந்திய தேனீர் எல்லாம் நெகிழச் செய்தன. சகமனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள் அன்போடு, நாம் தான் அவர்களை காணத்தவறுகிறோம் என்ற நாஞ்சிலின் சொற்களும் அதுவே வண்ணதாசனின் படைப்புலகமும் கூட அல்லவா? சரியான தொடக்கம் தான் என நினைத்துக் கொண்டேன்
நவீன கவிதையில் இசைநயம் இல்லாதது அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள இயலாதது பற்றியும் சொற்களின் முக்கியத்துவம் பற்றியும் நாஞ்சில் கவிஞர் தேவதேவனிடம் ஒரு கேள்வியையும் முன்வைத்தார். மறுநாள் கடைசி அமர்வில் தேவதேவன் சொற்கள் வெறும் கருவிதான் சொற்களை கடந்திருக்கும் மௌனம் தான் மிக முக்கியம் என்கிற பொருளில் தன் பதிலை சொன்னார் (எனக்கு புரிந்த அளவு). திரும்ப நாஞ்சில் அவர்கள் அப்படியென்றால் மௌனத்தால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ளுங்கள் மௌனத்தால் கேள்விகளை கேட்டு மௌனத்தால் பதில்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
இரண்டாவது அமர்வு எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுடன் தொடங்கியது. அவருடைய எழுத்துலகம் பற்றிய அறிமுகத்திலிருந்து அவரின் படைப்புகளுக்கான களம் அவற்றின் மாய எதார்த்தம் போன்றவை பற்றிய கேள்விகளும் பதிலுமாக உரையாடல் நீண்டது. இரா.முருகன் அவர்களின் சில சிறுகதைகள் மட்டுமே வாசித்திருந்ததால் என்னால் அவ்வளவாக உரையாடலுடன் இணைய முடியவில்லை.
பாட்டையாவிற்கு என்பது வயதை கடந்திருந்தாலும் இளைஞர்களை விட அவர்தான் நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக கலந்து கொண்டவர். தன் நாடக உலகத்தைப் பற்றியும் அதில் அவர் வளர்ந்து வந்த இளமை பொழுதுகளையும் பின்னர் அவரின் டெல்லி வாசம் அங்கு நிகழ்ந்த தமிழ் நாடகத்திற்கான முயற்சி இந்திரா பார்த்தசாரதி அவர்களின் நாடகங்கள், மற்றும் க.ந.சு. விற்கும் அவருக்குமான உறவு என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். இடையிடையே கலகலப்பான சிரிப்புகளுக்கிடையே அரங்கு நிறைந்திருந்தது.
கடைசியாக அவரின் பார் பற்றி சொல்லும் போது அரங்கு மேலதிக கவனத்தோடு கடந்த காலத்திற்குள் சென்று அங்கே ராயல் ஸ்காட்ச் அருந்திக் கொண்டிருந்தது. அதையும் பாட்டையா ஜெமினி கணேசனுக்கு பாடம் எடுப்பது எங்களுக்கெல்லாம் பாடம் எடுப்பது போல இருந்தது ராயல் ஸ்காட்சிற்கான வணக்கங்களை நாங்கள் தெளிவாக கற்றுக்கொண்டோம். எங்கே நம்மக்கள் டாஸ்மாக்கிற்கு கிளம்பி விடுவார்களோ ஒரு கணம் யோசித்தேன் மறுகணம் ராயல் ஸ்காட்ச்யை குடித்தவர்களால் எப்படி டாஸ்மாக்கிற்கு செல்ல முடியும் என்றும் தோன்றியது. அதிகார உலகத்தில் அவரின் தொடர்புகள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்லிய அவரது பண்பும் என்னை கவர்ந்தது. அவரின் புள்ளிகள் கோடுகள் கோலங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும். உற்சாகமான மனிதர்கள் அந்த நெருப்பை தான் செல்லுமிடம் எல்லாம் பரவச் செய்கிறார்கள் ஜெமோவின் உவமை போல அது மின்மினி நெருப்பு போல சுகமானது.
ஆஜானுபாகுவான கருத்த மனிதரின் வெள்ளை சிரிப்புகளும் கைகளை விரித்து அவர் சொல்லிய கதைகளும் என்னையே அப்படியே அனைத்துக் கொள்வதை போலவே இருந்தன. அந்த அணைப்பின் கனிவில் இருந்து இன்னமும் நான் வெளியே வரவில்லை என்பதை இந்த பதிவை எழுதும் போதும் உணருகிறேன். பால் சக்கரியாவின் ஒரே ஒரு கதையை மட்டும் நான் வாசித்திருந்தேன் (மூன்று குழந்தைகள்). பவா இன்னொரு உலகத்திற்குள் காட்டிற்குள் என்பதே பொருத்தமாக இருக்கும் அழைத்துச் சென்றார். எல்லா ஆண்களையும் ஒரு கணம் அந்த கரடியின் மீது பொறாமை படுமளவிற்கு செய்து விட்டார். அந்த மாலையில் நண்பர்கள் அனைவரும் அவர்களின் மனதின் ஆழத்திலிருந்து சிரித்திருப்பார்கள்.
பவா தன் மனிதர்களை பற்றி சொல்லிய நீர் கதையும் வேறு ஒரு உலகிற்குள் அழைத்துச் சென்றது. அறம் மானுடர் மேல் தன்னை நிகழ்த்திக் கொள்ளும் கணங்களில் கண்ணீர் துளிர்க்காமல் நான் கடந்து போனதில்லை. அவ்வாறே பவாவின் கதையிலும் நிகழ்ந்தது.
அசோகமித்திரனுக்கான பாராட்டுவிழாவில் அவரின் கரங்களை பற்றி மேடையில் அமர்ந்திருக்கும் பவாவையும் அந்த இரவில் அவர் முன் விரிந்திருக்கும் மக்கள் கூட்டத்தினையும் நினைத்துக்கொள்கிறேன்.
யோகிராம் அவர்களுடன் பவாவின் அனுபவம், திருவண்ணாமலையின் கலை இலக்கிய இரவுகள் என பவாவின் சொற்களின் வழியே அவர் வாழும் உலகத்திற்குள் அந்த மாலையில் சென்று வாழாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். இறுதியாக பவா அவர்களின் கைகளை பற்றிக்கொண்ட தருணங்கள் அப்படியே இருக்கட்டும் ஒரு உயிருள்ள சித்திரமாக.
இரவு உணவு முடிந்த பின் மருத்துவர் கு.சிவராமானுடன் கலந்துரையாடல் நிகழ்ந்தது. அலோபதிக்கு மாற்றாக உள்ள மருத்துவ முறைகள் அலோபதியுடன் இணையும் புள்ளிகளையும் விலகும் புள்ளிகளையும் குறிப்பாக புத்தூர் கட்டு தொடர்பான பதிலில் விளக்கினார். அவர் மாற்று மருத்துவ அடிப்படைவாதிகளிலிருந்தும் அலோபதி அறிவியல் அடிப்படைவாதிகளிலிருந்தும் வேறுபட்டு தேவைப்படும் இடங்களில் இரண்டும் இணைந்து செயல்படும் முறையினை பற்றியும் சமகால பேலியோ டயட்டினால் பிற்காலத்தில் உருவாகும் பிரச்சனைகளை பற்றியும் கீடோசிஸ் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பேலியோ எந்த விளக்கத்தையும் தராதது பற்றியும் அதன் மூலம் ஏற்படும் மறைமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனப்படுத்தினார்.
இந்தியாவில் மருத்துவ முறையிலுள்ள சிக்கல்கள் ஊட்டச்சத்து தொடர்பான தேசிய கொள்கைகள் (Iodine and Vitamin D) வகுக்கப்படுவதில் கார்பொரேட் நிறுவனங்களுக்கு உள்ள பங்கு மற்றும் சித்தா ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கார்போரேட் நிறுவனங்களால் ரெடிமேடு மருந்துகள் தயாரிக்கும் விதத்தில் உள்ள அபத்தங்கள் என உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. தற்கால ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட புற்றுநோய்க்கான வாய்ப்புகள் தினந்தோறும் உணவில் இறைச்சி (red meat) சேர்த்துக் கொள்வதால் அதிகமாவது பற்றியும் பேசினார். நவீன அறிவியல் முறையிலுள்ள மருந்து சோதனைகளுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை உட்படுத்த சொல்வதிலுள்ள அபத்தத்தையும் சிக்கல்களையும் எடுத்துக் கூறினார்.
சித்த மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நோயை கண்டறிவதற்கான பயிற்சி முறைகளில் உள்ள சிக்கல்கள் என துறை சார்ந்து அவருடைய உரையாடல் நீண்டது. நண்பர்களில் இருந்த அலோபதி மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் துறை சார்ந்து பேசிய விஷயங்கள் புரியா விட்டாலும் எனக்கு புரிந்த அளவு பெற்றுக்கொண்டேன். நவீன அறிவியலின் அடிப்படைகளையே நாம் முறையாக கற்காத போது அதனுடைய போதாமைகளை வரையறைகளை கடந்து பார்க்கும் பார்வையெல்லாம் சாத்தியமாக இன்னமும் நெடுங்காலம் ஆகக் கூடும். அதுவரை அறிவியலையும் நம்பிக்கை சார்ந்து மட்டுமே அணுகிக் கொண்டிருப்போம் என்று தோன்றியது.. அவருக்கு என்னுடைய நன்றிகள்.
ஒருநாள் தொடக்கத்திலிருந்து முடிவுவரை வெவ்வேறு ஆளுமைகளுடன் செறிவான உரையாடல்கள் நிகழ்ந்து அதில் நான் பங்கு கொண்டு என்னை செறிவாக ஆக்கிக் கொண்டேன். இரவில் படுக்கையில் விழுந்தும் களைப்படையாமல் மனம் முழுக்க சொற்கள் நிரம்பியிருந்தது.
அதிகாலையில் ஜெ நடைப்பயிற்சிக்கு வழக்கமாக உரையாடல் நிகழும் என்பதை ஊட்டி சந்திப்பில் அறிந்திருந்த போதும் எப்படியோ மறந்து விட்டேன். காலையில் தொடங்கிய உரையாடலில் நான் செல்லும் போதே எழுத்தாளர் சு.வேணுகோபால் பேச ஆரம்பித்திருந்தார். இயல்பாக மனிதர் போகிற போக்கில் மாடுகளையும் வயல் வரப்புகளையும் சித்திரமாக காட்டி வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றார். பஷீர் பற்றிய உரையாடல் நீண்டு சென்றது.
இறுதியாக ஜெமோ பஷீர் ஒரு சூபி ஞானி எனக்கூறி அவரின் தரிசனத்தை அடைய மீண்டும் குழந்தைகளாக வேண்டும் அல்லது ஞானமடைய வேண்டும். அவரின் கதைகள் அத்தகைய தரிசனத்திலிருந்து உருவானவை. பஷீர் தான் தீவிரமாக எழுதியவற்றையெல்லாம் தீக்கிரையாக்கியது பற்றியும் அதன் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொண்டது பற்றியும் ஜெ மூலமாக அறிந்து கொண்டேன். பாத்திமாவின் ஆடு என்ற அவரது நாவலை மட்டுமே படித்திருக்கிறேன். அந்த ஆடு கதையில் வரும் இடங்களையும் பஷீரிடமிருந்து எல்லோரும் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட பின்பு கடைசியாக இருந்த அந்த நாற்காலியிலும் ஒரு கோழி அமர்ந்து சாவகாசமாக ஒருகண்ணை திறந்து பார்க்கும் இடத்தையும் ஜெ சுட்டிக் காட்டினார். வாசிப்பை மெருகேற்றிக் கொள்ள இதுபோன்ற உரையாடல்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தன.
பின்னர் தொடர்ந்த எழுத்தாளர் சு.வேணுகோபால் தன்னுடைய உலகங்களுக்கு மீண்டும் இழுத்துச் சென்றார். அவர் எழுதிய முதல் நாவல் தொடர்பான சுவாரஸ்யமான செய்தியையும் விவசாயியின் வீழ்ச்சியை ஒரு விவசாயியாக வாழ்ந்து பார்த்த அனுபவத்தையும் அவருக்கும் அண்ணனுக்கும் உள்ள தொடர்பையும் காளைகளை பற்றியும் அவரின் சொற்கள் மிக அருகாமையை உணரச் செய்தது. பின்னர் தனக்கும் வண்ணதாசன் கதைகளுக்கும் உள்ள தொடர்பையும் பற்றி சொல்லிச் சென்றார். இன்னமும் அவரின் படைப்புகளை வாசித்திருக்கவில்லை வாங்கி வைத்த நிலம் என்னும் நல்லாள் புத்தகம் திறக்கப் படாமல் காத்திருக்கிறது. வெகு சீக்கிரத்தில் அந்த கணம் எனக்கு அமைவதாக.
வண்ணதாசன் அவர்கள் எழுத்தாளர் சு வேணுகோபால் அவர்களை தொடர்ந்து பேச ஆரம்பத்தில் ஜெ, வண்ணதாசனின் வாசகர் மலையப்பனைப் பற்றி நினைவுப்படுத்த தன் கனவுகளில் மெல்ல அவர் ஆழ்ந்து கடந்த காலத்தின் நினைவு அடுக்குகளில் எங்கோ மறைந்திருந்த அந்த வாசகரின் அன்பையும் அதன்பின் அவருடனான கடிதப் போக்குவரத்தையும் சொல்லிச் சென்றார். காசர்கோட்டில் ஜெ அந்த வாசகரை அவரின் சலூனில் சந்தித்து பின் வண்ணதாசனுக்கு எழுதியதை பற்றியும் உரையாடல் மெல்ல மெல்ல பற்றிக்கொண்டது.
வண்ணதாசனின் பெண்கள் எங்கும் இருக்கிறார்கள். இரண்டு பெண்கள் அரங்கில் அவரின் எழுத்துக்கள் தங்களை பாத்தித்ததைப் பற்றியும் அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை பற்றிய பார்வைகள் மாறியதையும் அன்பின் கணங்களில் நெகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பறவையின் மிகச் சிறந்த இறந்தகாலம் பறந்தகாலமாக தானே இருக்க முடியும்.
கன்னட எழுத்தாளர் H.S.சிவப்ரகாஷ் அவர்களுடனான உரையாடல் தமிழ் மொழியின் பழந்தமிழ் இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் மற்றும் இந்திய தத்துவ மரபுகளின் மேலுள்ள ஆழமான புரிதல்களும் அவரின் பதிலில் வெளிப்பட்டன. சிலப்பதிகாரத்தில் தான் முதல் முதலாக பிருந்தாவனம் பற்றி சொல்லப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னரே பக்தி இலக்கியங்களிலும் பாகவத மரபிலும் எடுத்தாள பட்டதையும் சுட்டிக் காட்டினார். சைவ மதம் பற்றியும் குறிப்பாக காஸ்மீர் சைவம் குறித்தும் ஒரு வாசகர் கேட்க அதை பற்றி அவர் விளக்கியதும் தொடர்ந்த உரையாடலில் சாத்தியப்பட்டது. மிகுந்த நிதானத்துடன் ஆழமான புரிதலுடன் கம்பீரமாக வெளிப்பட்ட அவரின் சொற்களையே இதை எழுதும் போதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அய்யா பாரதிமணி அவர்கள் கேட்டே தமிழ் நாடகத்தின் மீது ஒளிவுமறைவற்ற விமர்சனத்தை கேட்டபோது. தான் அவ்வாறு முழுவதும் தமிழ் நாடகங்களை பற்றி கூர்ந்து நோக்கியிருக்காததால் அதைப்பற்றி வேறு எதையும் சொல்வது சாத்தியமில்லை என கடந்து சென்ற விதமும் என்னை கவர்ந்தது. அவரின் படைப்புகளுக்காக லிங்காயத் அடிப்படைவாதிகள் தந்த நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளையும் வெறுப்பின்றி கடந்தவர் என்பது அவரின் நிதானமே காட்டுகிறது.
தேர்ந்த ஞானத்தின் கரைகளில் அவர் அவ்வாறு தான் இருக்க முடியும். காந்தியை போல எதிரிகளின் செயலின் முறைகளின் மேல்தான் வெறுப்பே தவிர எதிரிகளின் மீது அல்ல. தன் படைப்பை அவர்கள் எதிர்த்ததைப் பற்றியல்ல எதிர்த்த முறைகளையே அவர் விமர்சிக்கிறார். அவரை அரசியலில் இருந்து காப்பாற்றிய இ எம் எஸ் நம்பூதிரி பாடு பற்றியும் மரபில் தேர்ந்த அறிவு பற்றியும் சொன்னபோது தமிழகத்திற்கு அவ்வாய்ப்பு அமைவதற்கான சாத்திய கூறுகளே இல்லை.
விழாவில் பேசும்போது விஷ்ணுபுரம் இலக்கிய செயல்பாடுகளின் மீது அவர் திருப்தியுற்றிருப்பதையும் தேர்ந்த வாசகர்களால் அளிக்கப்படும் விருது அரசாங்கத்தாலோ அதன் நிதியுதவியிலோ பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலத்திலோ நிகழாத இந்த விழா அபூர்வமானது தான். அவரின் கோரிக்கையான வேற்று மொழி எழுத்தாளர்களுக்கும் இது அளிக்கப்பட வேண்டும் என்பதும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் கூறிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரை சிறந்த முறையில் கௌரவித்திருக்கிறது.
பின்னர் மத்திய உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்த உரையாடலில் எழுத்தாளர் பாவண்ணன் கன்னடத்தின் நாடகங்களை போல தமிழ் நாடகங்கள், நிகழ்த்து கலைகள் ஏன் வளரவில்லை என்பதற்கு அவர் சொன்ன பதில் கன்னடத்தில் பெரும்பாலான யக்ஷகான குழுக்களின் முன்பதிவு 2022 வரை முடிந்துவிட்டதாகவும் அதை போன்ற வரவேற்புகள், அதன் மக்கள் கொண்டுள்ள ஈடுபாடு போன்றவையே அவற்றை அழியாமல் வைத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஒரு வருடத்திற்கு மேலாக பயிற்சி செய்து பின் அடுத்த வருடம் முழுவதும் கன்னட நிலமெங்கும் அந்த நாடகத்தை அவர்கள் நடத்துவது பற்றியும் கேட்டபோது நான் ஒரு நவீன நாடகம் கூட பார்த்தது இல்லை என்பதையும் நினைத்துக்கொண்டேன். இறுதியாக பாவண்ணன் அவர்கள் பேசிய unconditional love பற்றி பேசும்போது மனிதர்கள் இன்னமும் ஈரத்தோடு இருக்கிறார்கள் என நிறைய எடுத்துக்காட்டுகள் கூறினார். ஒருவகையில் எழுத்தாளர்களும் அவர்களில் சேர்த்திதானே சமூகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் unconditional love இல்லையென்றால் வாழ்க்கையை உயிரை பணையம் வைத்து ஏன் எழுத போகிறார்கள்?
விழா முடிந்ததும் மெல்ல மெல்ல திருவிழாவின் முடிவுதரும் வெறுமைகள் என்னை சூழ எனது ஊருக்கான பயணத்தை தொடங்கினேன். விழா அரங்கு நிறைந்ததை போலவே என் மனமும் கூடவே வயிறும் நிறைந்திருந்தது. முதல் நாள் மதியம் உணவு ஏறத்தாழ நம் மக்களுக்கே சரியாக இருந்தது. உணவு பரிமாறி விட்டு இறுதியாக சாப்பிடும் போது தான் பார்த்தேன் அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு உணவில்லை என்பதை உடனே சக நண்பர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது முன்னரே அவர்கள் வெளியில் சென்று சாப்பிட போதுமான பணத்தை வழங்கி விட்டதாக கூறினார். இப்படி எல்லா விதங்களிலும் பூரணமாய் தன் பங்களிப்பை வழங்கி எனது வாழ்வின் மிகச்சிறந்த இரண்டு நாட்களை தங்கள் இடைவிடாத உழைப்பின் மூலம் கனிய செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து கூடவே கடமையும் பட்டுள்ளேன் என்பதையும் நினைவில் கொள்கிறேன்.
அன்புடன்
விஷ்ணு