அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக்கூட்டத்தில் தற்செயலாகத்தான் காசிரங்கா யானைப்பிரச்சினை எழுந்துவந்தது. ஏற்கனவே அவர்களுக்கு பல பிரச்சினைகள். முக்கியமாக எல்லா கல்விநிறுவனங்களையும் திணறசேய்துகொண்டிருக்கும் செம்மொழி நிதியை என்னசெய்வது என்றசிக்கல். செம்மொழிமையத்தினர் பல்கலைகளை மாட்டிவிட்டிருந்தார்கள். பல்கலையினர் கல்லூரிகளை மாட்டிவிட்டிருந்தார்கள்.
காரணம், செம்மொழி மையத்துக்கு ஏராளமான நிதி வந்து கிடந்து என்ன செய்வதெனறு தெரியாமல் விழித்துக்கொண்டிருந்ததுதான். ”நல்ல கூத்தாட்டுல்லாவே இருக்கு? பைசாவ என்ன செய்வானுக, பேசாம நாலுவட்டிக்கு விடணும்”என்று செம்மொழி உராய்வுமையத் தலைவர் முனைவர். அம்மமுத்துப்பிள்ளை சொன்னபோது செயலர் முனைவர் மரியஅற்புதம் பணிவாக ”இல்லசார், இது அதுக்குண்டான பணமில்ல…”என்றார். ”பின்ன?” ”புக்குபோடுகதுக்குண்டான பணம்”என்றார் செயலர் முனைவர் மரிய அற்புதம். தலைவர் மின்னதிர்ச்சி கொண்டு ”என்னது புக்கா? அது என்னத்துக்குவே?”என்றார். ”அது யாருக்குதெரியும்…போடணும்னு சொல்லுறான்” தலைவருக்கு ஆறவில்லை ”இப்ப ஆருவே இங்க புக்கு கேட்டு அழுதானுக…வேற சோலி இல்ல”
”போடல்லேண்ணாக்க பணத்த திருப்பி குடுக்கணும். திருப்பிக்குடுத்தா அடுத்தவாட்டி பணத்த குறைச்சு குடுப்பாங்க. பணம் குறைஞ்சா அரசாங்கத்திலே நம்ம கிட்ட ஏன்னு கேப்பாங்க” என்றார் செயலர் முனைவர் மரிய அற்புதம். ”என்னவே அக்குறும்பாட்டுல்லாவே இருக்கு? இத்தன ரூபாய்க்கு புக்கா? எங்கிணவே கொண்டாந்து அடுக்கி வைக்ய? செரி, புக்குண்ணாக்க புக்கு… எளவுகள போடச்சொல்லும்வே..”என்றார் முனைவர்.அம்மமுத்துப்பிள்ளை.”அதுக்கு புக்கு வேணுமே” ”ஏம்வே?” என்று முனைவர். அம்மமுத்துப்பிள்ளை ”இல்ல,பழைய புக்கை போடப்பிடாது. புதூ புக்கு வெணும்…அத யாரு எழுதுறது?” அப்போதுதான் தலைவருக்கு சிக்கல் உறைத்தது ”அது செரியாக்கும்… எவன் எழுதுகான் புக்கு? வட்டிக்குக் குடுத்தா வாங்கி மறுவட்டி விடுவானுக”
என்னசெய்வதென்று யோசித்தபோது பேரா.முத்து குமரேசனார் மகாபாரதக் கதை ஒன்றைச் சொன்னார். கர்ணன் பெரிய கொடையாளி என்றுபெயர் வாங்கியதில் அர்ஜுனனுக்கு வருத்தம். அதை தீர்க்க கிருஷ்ணன் ஒரு வழி செய்தார். ஒரு மலையை தங்கமாக ஆக்கி அதை அர்ஜுனனுக்குக் கொடுத்து இரவுக்குள் அதை தானமாகக் கொடுத்துவிடவேண்டும் என்று சொன்னார். அர்ஜுனன் முக்கி முக்கி ஒரு சிறுபகுதியை உடைத்து வந்துகூடிய பிச்சைக்காரர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும்போதே இரவாகிவிட்டது. சரி, கர்ணன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாமென மறுநாள் கர்ணனிடம் அதேபோலச் சொன்னார் கிருஷ்ணன். கர்ணன் அங்கே வந்த தகுதியான் ஒருவரை அழைத்து ‘இந்த மலையை எடுத்துக்கொள்’ என்று சொல்லி கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருந்தான்.
தலைவர் முனைவர். அம்மமுத்துப்பிள்ளை கண் இமைக்காமல் பேரா.முத்து குமரேசனாரைப் பார்த்தார்.பின்பு ”அவனாருவே அப்பேற்பட்டவன்?”என்றார்.”அதைச் சொல்லணுமா? அவன் காண்டிராக்டர்லா…”என்ற இழுத்த பேரா.முத்து குமரேசனார் குரலைத்தாழ்த்தி ”அந்தத் தங்க மலையில பத்து பர்சண்டேஜை அங்கநாட்டுத்தலைநகரிலே கொண்டாந்து ராணியம்மாகிட்ட குடுக்கதுக்கு ஏற்பாடு பண்ணியிட்டுல்ல கர்ணன் குடுத்தான்?”என்றார். முனைவர். அம்மமுத்துப்பிள்ளை புன்னகை செய்தார். விளைவாக மொத்த நிதியும் சடுதியில் பிரிக்கப்பட்டு பல்வேறு பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டது. பல்கலையினர் அதைப்பிரித்து கல்லூரிகளுக்கு அனுப்பினார்கள்.
நிதியை பல்வேறு வகைகளில் பகிர்ந்தளிக்க கற்பனையை தென்னெல்லை வரை ஓட்டி திட்டங்கள் தீட்டப்பட்டன. வழக்கமாக நிதி கிடைத்ததுமே கருத்தரங்குதான் கூட்டுவார்கள். ‘சங்க இலக்கியங்களில் மங்கையும் கொங்கையும்’ ‘பாணனும் பரணரும்’ ‘பரத்தையும் பத்தினித்தெய்வமும்’ ‘புறநாநூற்றில் பூரி’ போன்ற பல்லாயிரம் தலைப்புகளில் கல்லூரிகள் தோறும் கருத்தரங்குகள் இரவுபகலாக நடைபெற்றன. கருத்தரங்கப்பட்சிகளெல்லாம் மேடையிலேயே உண்டு உறங்கி சிறகோய்ந்து தூங்கின. கருத்தரங்கு மண்டைக்கு ஏறி எந்நேரமும் வாயில் சொற்பொழிவு கசிந்துகொண்டிருக்கும் நிலைக்கு அப்ஸெஸிவ் கம்பல்சிவ் செம்மொழியோ நியூரோஸிஸ் என்று பெயர்சூட்டினார் மதுரை மீன்விழி மிஷன் உளவியலாளரான டக்ளஸ் குமாரசாமி.
கருத்தரங்கக் கணக்குகள் நாலாபக்கமும் விரிக்கப்பட்டன. நெல்லையில் நடந்த ஒரு கருத்தரங்குக்கு ஓடிய கார்களுக்கு நான்கு சக்கரங்களுக்கும் தனித்தனியாக கணக்கு எழுதப்பட்டது என்று அறிந்த நாகர்கோயில் கருத்தரங்கு ஒன்றில் இரும்புநாற்காலிகளுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனியாக பில் போடப்பட்டது. அப்படியும் பணம் தீரவில்லை. ”என்னய்யா செய்றாங்க? நல்லா செலவுபண்ணி சாப்பிடச்சொல்லுங்கய்ய்யா” என்றார் தமிழ்த்துறைத்தலைவர். ”எலைக்கு நாநூறுரூபாவீதம் போற வாற அத்தனைபேருக்கும் சாப்பாடு போட்டாச்சு. இப்ப நாட்டில தமிழாசிரியருங்களுக்கெல்லாம் வயித்துபோக்கும் கடுப்புமா கெடக்கு… எல்லாரும் சாப்பிட்டுச் சலிச்சுப்போய் இப்ப அண்ணாச்சி இனிமே பழைய சோறும் கடிச்சுக்க வெங்காயமும் குடுங்க, மாறுதலா இருக்கும்னு சொல்றாங்க” என்றார் பேரா.கார்த்திகேயன்.
சரி, இனி இரண்டில் ஒன்றுதான் என்று துணிந்து வெளி அமைப்புகளுக்கும் கருத்தரங்கு, தெருமுனைக்கூட்டம் ஆகியவற்றுக்கு நிதி அளிக்கப்பட்டது.ஆசிரியர் சங்கங்கள், அரசூழியர் சங்கங்கள் போன்றவை நிதி பெற்றபின் சுமைதூக்குவோர், சங்கம் பாரவண்டி இழுப்போர் சங்கம் ஆகியவற்றுக்கும் நிதி அளிக்கப்பட்டது. தெருவெங்கும் தமிழாய்வுகள் பீரிட்டன. முந்திரிப்பருப்புத்தொழிலாளர் சங்கம் சார்பில் கோவலன் கொலைக்கு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலைநேரதர்ணா நடத்தப்பட்டபின்பு சீவகனின் காதலிகளைப்பற்றி ஆடிட்டர் ஜெனரல் ஆராயவேண்டுமென்று மாநில கணக்கன் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நிகழ்ந்தது. தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய ஊர்வலம் ஒரு புள்ளியைக் கடக்க நாலரை மணிநேரம் ஆகியது, அவர்கள் தங்கள் ஏணிகளுடன் வந்திருந்தார்கள்.
முற்போக்கு கைத்தொழிலாளர் சங்கம் சார்பில் செம்மொழி வளர்ச்சிக்கு அமைக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் செம்மொழி ஆர்வத்தைத் தூண்டின. செம்மொழி என்று எழுதப்பட்ட பலகையை ஓடிப்போய் தொட்டுவிட்டு திரும்பும் ஓட்டப்பந்தயங்கள், தலையில் பெரிய புறநாநூறு புத்தகத்தை வைத்துக்கொண்டு அது கீழே விழாமல் நடக்கும்போட்டிகள் போன்றவை பெரும்புகழ்பெற்றன. கரகாட்டக்கலைஞர் ஆறுமுகம் முதல்பரிசை தட்டிச்சென்றார். இவர் மொத்த பத்துபாட்டையும் தலையிலும் பதினெண்கீழ்க்கணக்கை கீழேயும் வைத்துக்கொண்டு எழுநூறடி தூரத்தை எட்டு நிமிடத்தில் கடந்தார்.
எல்லா முனைவர்களுக்கும் முடிந்தவரை ஆய்வேடுகள் எழுத நிதி அளிக்கப்பட்டது. ஆய்வேடுகளை அவர்கள் எழுதுவதற்கான பயிற்சிப்பட்டறையும் அமைக்கப்பட்டது. அதில் ஆய்வேடுகளை விரைவாக எழுதுவதற்கான வழிமுறைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. பழைய ஆய்வேடுகளை பிய்த்து ஒன்றுடன் ஒன்று கலந்து ஒளிநகல் எடுப்பது, முதல் இரு பக்கங்களுக்கு பிறகு தினமலர் தினமனி தினதந்தி மாலைமுரசு செய்திகளை எழுதிசேர்ப்பது போன்ற வழிமுறைகளை எளிதில் பேராசிரியர்கள் கற்றுக்கொண்டார்கள். ஆனால் சினிக்கூத்து, பருவம், மூக்குத்தி போன்ற இதழ்களைச் சேர்க்கலாகாது என்று அறிவுறுத்தப்பட்டது.
அதிக ஆய்வேடுகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. நாநூற்றி எழுபத்தேழு ஆய்வேடுகளை ஆறேமாதத்தில் உருவாக்கிய முனைவர்.நாராயணசாமிக்கு சிறப்புப்பரிசு அளிக்கப்பட்டது. அவர் வீட்டில் ஒரு தொழிற்சாலையே இதற்கென இயங்கியது என்றார்கள். நாற்பதுபேர் கணினி சகிதம் வேலைபார்த்தார்கள். ஆய்வேடுகளை அரைத்து கூழாக்கி ஆலவாய் பல்கலை வாசலில் அய்யன் திருவள்ளுவருக்கு நூற்றுமுப்பத்துமூன்றடி உயரமான சிலை அமைக்கப்படுமென துணைவேந்தரவர்கள் பலத்த கைதட்டலுக்கு இடையே அறிவித்தார்.
இந்நிலையில்தான் அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக்கூட்டத்தில் முனைவர் சாமிநாதன் காசிரங்கா யானையைப்பற்றி சொன்னர். ”அஸ்ஸாமிலே காசிபுரம்ங்கிற ஊரிலே ஒரு யானை தமிழிலே சத்தம்போட்டுட்டு செத்துப்போயிருக்குன்னு சொன்னாங்க. அந்த யானையை செம்மொழியானைன்னு சொல்லி ஒரு கருத்தரங்கு போட்டா என்ன?” எண்ணங்கள் ஓடாமல் ஸ்தம்பித்துப் போயிருந்த கும்பலுக்கு அது ஒரு பெரிய திறப்பாக இருந்தது. ”பிரம்மாதம்…நாம பயலாஜி டிபார்ட்மெண்டையும் கருத்தரங்கத்திலே சேர்த்துக்கலாம்.யானையைப்பத்தி என்னமாம் சொல்லுவானுக…”என்றார் டாக்டர்.பாலசுப்ரமணியம். ”அவனுக வேண்டாம். தமிழுண்ணாக்க அதை தமிழன் அனுபவிச்சாப்போரும் உயிரியலன், பொருளியலன்லாம் உள்ள வந்தாங்கன்னா அவங்க இங்க்லீஷ்லே பேசியே எங்கள ஓரம்கட்டிருவானுக” என்றார் முனைவர் சாமிநாதன்.
”அப்ப எங்களுக்கு ·பண்ட் வேணாமா?”என்று டாக்டர் சண்முகநாதன் கோபத்துடன் கேட்க பொருளியல்துறையினரும் சேர்ந்துகொண்டார்கள். ”காட்டு யானைகளை அதுங்களோட பிண்டத்தை வைச்சு கணக்கெடுக்க ஜப்பான் ·பண்ட் வந்தப்ப நாங்க பங்கு கேட்டமா? இவ்ளவுக்கும் அந்த் யானையெல்லாம் தமிழ் யானை”என்றார் முனைவர் சாமிநாதன். ”யாரு சொன்னது? அதிலே இருபது யானை மேக்னா யானை. அதெல்லாம் சுத்த தெலுங்கு. அதுங்களை மேக்னா நாயிடுன்னு கிளாஸி·பை பண்ணியிருக்கோம்”என்றார் டாக்டர் சண்முகநாதன்.”சண்டை வேண்டாம், யானைபற்றி கருத்தரங்கு போடுவோம்” என்றார் முதல்வர் ”யாரு செலவழிச்சா என்னய்யா, பணம் செலவழியணும், செம்மொழி வாழணும்…அதுதானே நம்ம லட்சியம்?”என்றதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.
ஒருவழியாக கருத்தொருமை எட்டப்பட்டபின் கருத்தரங்கு கூட்டப்பட்டது. ‘ செம்மொழி நோக்கில் இந்தியயானையின் தமிழ்பண்புக்கூறுகளும் தொல்தமிழ் நாகரீ£கமும் – சங்க இலக்கியச் சிறப்புக்குறிப்புடன் ‘ என்பது கருத்தரங்கின் தலைப்பு பரவலாக கவனத்தை ஈர்த்தது. கருத்தரங்குக்கு தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளில் இருந்தும் தமிழறிஞர்கள் வந்துசேர்ந்தார்கள். எழுபத்தெட்டுபேர் கட்டுரைகள் படிக்கவும் நூற்றியெண்பதுபேர் விவாதிப்பவர்களாகவும் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு நட்சத்திர விடுதி அறைகள் ஏற்பாடுசெய்யப்பட்டன. சென்னையில் இருந்து விமானம் மூலம் உணவு வரவழைக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு குலுக்கலில் முதல்பரிசாக ஒரு வெட்கிரைண்டரும் இரண்டாம்பரிசாக பத்து மிக்ஸிகளும் மூன்றாம் பரிசாக நூறு எவர்சில்வர் குடங்களும் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
கருத்தரங்கில் தலைமைவகித்த துணைவேந்தர் உள்ளூர் பிரமுகர் ‘மணல்வீடு’ சங்கரை சிறைக்கே சென்று சந்தித்து காலில் விழுந்து ஆசிவாங்கிவிட்டு வந்தமையால் கருத்தரங்கு சற்றே தாமதமாகியது. பல்கலைக்கழகம் சார்பில் செம்மொழி ஆய்வின் ஒரு பகுதியாக கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கிவருவதை எடுத்துச்சொன்ன அவர் மணல்குத்தகையாளர், மளிகை மொத்தவணிகர், வட்டச்செயலர், எம்.எல்.ஏ ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியவகையில் மொத்தம் பதினேழுகோடி ரூபாய் செலவாகியிருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டு கௌரவ டாக்டர் பட்டம் வேண்டுபவர்களின் வசதிக்காக ஒரு தனித்துறை உருவாக்கப்படும் என்றார். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் கௌரவ டாக்டர் பெறாதவர்களே இல்லாத நிலை உருவாகவேண்டுமென்பதே பல்கலைக்கழகத்தில் அவா என்று சொல்லி கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.
கருத்தரங்கில் முதலில் பேசிய முனைவர்.பாலமுருகன் [செல்லமாக லாபமுருகன்] ஆப்ரிக்க யானைக்கும் இந்திய யானைக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன என்றாலும் அவை இரண்டும் யானைகள் என்ற அளவில் பெரிய அளவில் ஒற்றுமைகள் உள்ளன என்றார். இரண்டுக்குமே தும்பிக்கை இருப்பது சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. ஆப்ரிக்க மொழிகளில் சிலவற்றுக்கு தமிழுடன் நேரடித்தொடர்பு உள்ளது. அனுதாபம் தெரிவிப்பதற்காக நாம் தமிழில் ‘உச்- உச்- உச்’ என்ற ஒலியை எழுப்புவதையே கலஹாரி புஷ்மேன்கள் தங்கள் பெரும்பாலான தொடர்புகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்றார். செம்மொழிக்கும் கலஹாரிக்கும் இடையேயான உறவைப்பற்றி ஆராய்வதற்காக ஒரு குழு அங்கே அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கவிஞர் ‘தச்சன்’ பேசினார். கானம்பாடி இதழில் கவிதை என்று சந்தேகப்படமுடியாத கவிதைகளை எழுதி தமிழ்க்கவிதையில் திருப்புமுனையாக அமைந்தமைக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். தச்சன் சுருக்கமாக யானையைப்பற்றி அகராதிகள் கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்று வரிசையாக எடுத்துச் சொல்லி செம்மொழி நிதி கிடைத்துள்ள இந்த நிலையிலாவது அபிதானசிந்தாமணிக்கு புதிய பதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தலைவரிடம் முறையிட்டார். தலைவர் உடனேயே எழுந்து மைக்கில் ‘அந்த அம்மாள் உரிய முறையில் விண்ணப்பம்செய்துகொண்டால் உடனே ஆவன செய்யப்படும்’ என்று அறிவிக்க அரங்கே கைதட்டி ஆராவாரம் செய்து அதை வரவேற்றது. மேலும் வையாபுரி இடைவிடாத நடிப்புப்பணிகள் நடுவிலும் பேரகராதி ஒன்றை தயாரித்திருப்பது கல்லூரி ஆசிரியர்களெல்லாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்று தலைவர் சொன்னபோது தீவிரமான கரவொலி எழுந்தது.
அதன் பின்பு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. பெரும்பாலான கட்டுரைகள் முனைவர்பட்ட ஆய்வேட்டுக்குரிய முறைமையை பின்பற்றி எழுதப்பட்டிருந்தன. அவை அச்சுபோடப்பாட்டு அரங்கில் வினியோகம்செய்யப்பட்டன. ‘காசிரங்கா யானையும் பெரும்பாணாற்றுப்படையும் ஓர் ஓப்பாய்வு- நைஜீரிய யானையின் சிறப்பு குறிப்புடன்’ என்ற கட்டுரையை வாசித்த கரந்தைத் தமிழ்ற்சங்கத்து விதிவண்ணன் இருபது பக்க கட்டுரைக்கு நூற்று நாற்பத்தேழுபக்க அடிக்குறிப்புகள் அளித்திருந்தார். யானைக்கு துதிக்கை உண்டு என்பதற்கு அவர் கலித்தொகை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு ஆகியவற்றிலிருந்து ஆதாரம் காட்டியதோடு புகழ்பெற்ற உயிரியலாளர் ‘யானை’பாலகிருஷ்ணன் மற்றும் அகமது அலி ஆகியோரின் நூல்களில் இருந்தும் ஆதாரங்கள் காட்டியது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மொத்த அடிக்குறிப்புகளைக் கூட்டி நாநூற்றி எண்பது என்று காட்டியிருந்ததற்கும் அடிக்குறிப்பு அளித்து அதில் எண்சுவடியை சான்றாதாரமாகக் காட்டியிருந்ததை சற்று மிகை என்றே அறிஞர்கள் கருதினார்கள்.
முனைவர் வீல்வேந்தன் சென்னைப்பல்கலையில் இருந்து துணைவியார் சங்கவை சகிதம் வந்திருந்தார். அவருக்குக் கேட்கத்தான் தெரியுமென்பதனால் யானையைப்பற்றி சகட்டுமேனிக்குக் கேள்வி கேட்டார். திராவிடயானைக்கும் ஆரிய யானைக்கும் உள்ள ஆறுவித்தியாசங்கள் என்ன என்ற அவரது கேள்வி பெரிதும் விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து முனைவர் ‘மகிழவன்’ முறைப்பியல் நோக்கில் யானையைப்பற்றி விரிவாகப்பேசினார். அவரது கட்டுரை எண்பதுபக்கங்களுக்கு நீண்டது. அதற்குக் காரணமென்ன என்பதை அவர் முன்னுரையிலேயே விளக்கியிருந்தார். அவர் தன் கட்டுரையை அமைப்பியல் நோக்கில் எழுத ஆரம்பித்து பத்து பத்திகள் தாண்டுவதற்குள் பாரீஸில் அமைப்பியல் காலாவதியாகி விட்டதென்று தகவல் வந்தது. உடனே ·போன் போட்டுவிசாரித்ததில் பின்-அமைப்பியல் முளைத்து வந்திருக்கும் தகவல் தெரிந்தது. அந்தநோக்கில் கட்டுரையில் மறுநாள் மேலும் பத்துபத்திகள் எழுதிக்கொண்டிருக்கையில் பின்-அமைப்பியல் காலாவதியாகிவிட்ட தகவல்தெரியவே பதற்றமாகி நியூயார்க்குக்கு ·போன்செய்தபோது சிறப்பியல் என்று ஒரு புதுச்சிந்தனை கலி·போர்னியாப்பகுதிகளில் எதிர்பாராத இடங்களில் அவ்வப்போது தென்பட்டு மறைவதாக தெரியவந்தது. உடனே அந்த நோக்கில் எழுத ஆரம்பித்து முடிக்கப்போகும்போதுதான் முறைப்பியல் வந்தது. முடிவுரை முறைப்பியல் நோக்கில் எழுதப்பட்டுள்ளது என்றார் மகிழவன்.
முறைப்பியல் என்றால் என்ன என்பதை மகிழவன் சுருக்கமாக விளக்கினார். பிரதியானது வாசகனை நோக்கி முறைக்கிறது என்பதே இந்த கருத்தின் சாராம்சம். இதை நாம் பொதுவாக நவீனநாவல்களை வாசிக்கும்போது தெற்றென உணரமுடிகிறது. வாசகன் திருப்பி பிரதியை முறைக்கும்போது அவ்விரு நிகழ்வுகளும் சந்திக்கும் புள்ளியில் மிகச்சரியாக இலக்கியம் நிகழ்கிறது என்று சொன்னார். காசிரங்கா காட்டில் ஒரு யானையை தத்துவம் எதிர்கொண்டபோது அந்த யானை தன் தூல உருவத்தை விட்டுவிட்டு குறியீட்டுருவம் கொண்டது. ஒரு யானை மொழிக்குறியாக ஆகும்போது அதன் குறி என்னவாக ஆகிறது என்பதை நாம் ஆராயவேண்டும். யானையைக் கட்டுடைக்கும்போது அதைக் கட்டிப்போட்டுசெய்வது நல்லது என்றார் மகிழவன்.
பேராசிரியர் பழக்குலை எழுந்து மகிழவன் முன்வைக்கும் அதொன்றும் தமிழுக்குப் புதியதல்ல என்றும் தமிழ்மரபிலேயே முறைப்பா என்ற பெயரில் ஒரு பாடல்வகை இருந்திருக்கிறது என்றும் ஆசிரியப்பா மேலோங்கியபோது அது வழக்கொழிந்தது என்றும் சொன்னார். சித்தமருத்துவ நூல்களில் இஞ்சியைப்பற்றிய பல பாடல்கள் இந்த வடிவில் இருந்திருக்கின்றன. இனவிரைவியல் நோக்கில் யானையைப்பற்றி ஆராய்ந்து கவிதைகள் எழுதினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். இனவிரைவியல்கவிதை ரயில்வே அட்டவணைக்குரிய மொழிநடையில் ஐயம் திரிபிலாது தெளிவுற அமைந்திருக்கும் என்றார் அவர். அதைப்புரிந்துகொள்ல அதைப் படிக்கவேண்டிய தேவையே இல்லை.
முனைவர்.ராஜகுமார் எழுந்து மகிழவன் கட்டுரையில் ‘பாடாவதி சிந்தனை’ என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அச்சிந்தனைகள் தெளிவுற வகுத்துரைக்கபடவில்லை என்றும் மேற்படி அம்மையாரைப்பற்றிய அடிக்குறிப்பும் அளிக்கப்படவில்லை என்றும் அ·தொரு குறை என்றும் தெரிவித்தார். பெண்ணியச்சிந்தனையாளர் முனைவர் கலாவதிதான் அச்சுப்பிழையாக அங்கனம் குறிப்பிடப்பட்டிருக்கிறாரா என்று இன்னொருவர் கேட்டார். அமைப்பியல் கலாவதியாகிவிட்டது என்று இருப்பதன் பொருளை ஓர் ஆய்வாளர் கேட்க மகிழவன் அதுதான் அச்சுப்பிழை என்றும் பாடாவதி சிந்தனை என்பது நாம் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்ட சிந்தனைகளையே என்றும் விளக்கினார். அத்துடன் தன்பெயர் அச்சிடப்பட்டிருக்கும் இடங்களில் ‘ம’ என்ற எழுத்து சரியாக விழாமல் பலவகையான கருத்துக்குழப்பத்திற்கு இடமளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இளம் ஆய்வாளர் வேங்கிடமலை வாசித்த கட்டுரை தொல்பழம்நூலான மதங்கதரங்கிணி அல்லது யானைப்பானை என்றநூலைப்பற்றியது. தென்காசி வைரவன் அண்ணாவியாரால் 1998 ல் எழுதப்பட்டு அவரது மனைவியாரால் வெந்நீரடுப்பு வழியாக வழக்கொழியச்செய்யபப்ட்ட இந்த பழம்பிரதியானது பரவலாக தமிழ்நாட்டு அறிவுலகில் அறியப்படாமலிருந்தது. தாய்லாந்தில் பாங்காங், அமெரிக்காவில் லா வேகாஸ், சிங்கப்பூரில் செந்தேசா போன்ற ஊர்களில் நிகழ்த்திய கடுமையான அகழ்வாராய்ச்சியின் பயனாக அந்நூலின் பெரும்பகுதியை மீட்டெடுத்து செம்பதிப்பாக அவர் கொண்டுவந்த வரலாற்றை விவரித்து எஞ்சிய பகுதியைத்தேட விரைவிலேயே மாஸ்கோ வழியாக ·பின்லாந்துக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னபோது பிற ஆய்வாளர் துஞ்சுகளிறன்ன உயிர்த்து நெஞ்சு கலுழ்ந்தனர்.
உடனே ஆவேசமாக எழுந்த முனைவர் தேவகஷாயகுமார் ‘இந்த முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாதா? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? புதுமைப்பித்தன் எழுதிய கதைகளையே இன்னமும் நாம் தேடிக்கண்டுபிடித்து முடிக்கவில்லை. அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் யானையைப்பற்றிப் பேசுவது அயோக்கியத்தனம், மொள்ளமாரித்தனம், பொறுக்கித்தனம். அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”என்றார் ”பால்பாயிண்ட் பேனாக்கள் வராத காலத்திலேயே நான் புதுமைப்பித்தன் கதைகளை கையால் பார்த்து பிரதிஎ டுத்தவன்” என்று அவர் கண்ணீர்மல்க குறிப்பிட்டார்.
”புதுமைப்பித்தன் கதைகள் இன்னும் மிச்சமுள்ளதா?”என்று வீல்வேந்தன் கேட்டதற்கு கண்டிப்பாக உள்ளது என்று சொன்ன தேவகஷாயகுமார் தமிழ்ச்சமூகத்தின் நலன் கருதி அவற்றை தான் தன் தோட்டத்தில் பள்ளம் பறித்து புதைத்து வைத்திருப்பதாகவும் அந்தக்கதை இல்லாத எந்த புதுமைப்பித்தன் பதிப்பையும் தான் செம்பதிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொன்னார். பாரதி படைப்புகளுக்கு மெய்ப்பு நோக்குவதும் புதுமைப்பித்தன் கதைகளை தேடிக்கண்டுபிடிப்பதும் தமிழாய்வுலகின் முக்கியமான பொழுதுபோக்குகள் என்று சொன்ன தேவகஷாயகுமார் மேலும் மூன்றாமுலக நாடுகள் ஒடுக்கப்படும் சூழலில் அந்தக்கதைகள் வெளியாவதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
வேறு ஒரு கேள்விக்குப்பதிலாக தேவகஷாயகுமார் கால்டுவெல்தான் மூன்றாமுலகம் என்ற கருத்தை உருவாக்கியதாகவும் அதை தமிழ்க்கடல் ராய.சொ மறைத்தது வரலாற்று மோசடி என்றும் வாதாடினார். அதை வீல்வேந்தன் ஆமோதித்தார். உடனே புதுமைப்பித்தனுக்கு ஒரு மறுசெம்பதிப்பு கொணரப்படவேண்டும் என்று அவர் கருத்து சொன்னார். ஆதிசங்கரரின் பிரம்மசூத்திர பாஷ்யத்துக்கு கடலைக்குடி நடேச சாஸ்திரி எழுதிய எண்ணூறுபக்க உரை நூலை இருமுறை வருடிப்பார்த்துவிட்டு அந்நூலின் மறுபதிப்பில் தன்பெயரை பெரிய எழுத்தில் முதலில் போட்டுக்கொண்ட அவருக்கு புதுமைப்பித்தன் செம்பதிப்பையும் வருடிப்பார்த்து புகழ்பெற ஆசை எழுந்தது இயல்பே.
முனவர் தமிழேந்தி அவர்கள் ‘உலகசிந்தனைகளும் தமிழும்’ என்ற தலைப்பில் நீளமாக வாசித்த கட்டுரை முனைவர் நெருஞ்சிவிழியனின் ‘தமிழிலக்கியத்தில் உலக ஆயுதம்’ என்ற பெரும்புகழ்பெற்ற நூலை அடியொற்றி அமைக்கப்பட்டிருந்தது. கிமு பத்தாம் நூற்ராண்டில் சாக்ரடீஸ் ஔவையாருக்கு எழுதிய கடிதத்தில் ‘சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே பெரிய கள் பெறினே..’ என்றபாடலில் இருந்து அவர் ‘ஸ்பிரிச்சுவாலிட்டி’ என்ற கருத்தை உருவாக்கியிருப்பதற்கு நன்றி தெரிவித்திருப்பதைக் குறிப்பிட்டார். தலைவியின் கைவளை நெகிழ்தலில் இருந்து கலீலியோ உருவாக்கிய இயற்பியல் விதிகளையும் பரத்தையுடன் தலைவன் புதுப்புனலாடும்போது தலைவியின் முலைமேல் கண்ணீர் வழிந்ததை அடியொற்றி பிளேட்டோ கருத்துமுதல்வாதத்தை உருவாக்கியதையும் அவர் விரிவாக விளக்கினார்.
அதன்பின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டபடியே இருந்தன. நடுவே முனைவர் அக்காப் பெருமாள் ‘நாட்டாரியல் நோக்கில் யானையும் தமிழும்’ என்ற தலைப்பில் வாசித்த கட்டுரையில் வள்ளியூர் பக்கம் கோணிமூலை என்ற ஊரில் குழியானை மாற்று என்ற சடங்கில் வருடம்தோறும் பதினேழு லட்சம் ரூபாய்செலவில் யானையை குழி தோண்டி புதைத்து திருப்பி தோண்டி எடுக்கும் பெரிய திருவிழா நடப்பதைக் குறிப்பிட்டு குழியானை என்று பழைய ஏட்டுச்சுவடியில் இருந்ததை முத்தாலம்மன் கோயில்களை புனருத்தாரணம் செய்த இந்துமுன்னணியினர் தவறாகப்புரிந்துகொண்டதன் விளைவே அது என்றார்.
மேலும் அவர் தான் கள ஆய்வில் திரட்டிய நாட்டாரியல் தரவுகளை தனி இணைப்பாக சேர்த்திருந்தார். ‘ஆனைக்க கொட்டைய ஆடு வச்சிருந்தா நடக்க முடியுமா?’ ‘ஆனைக்கு தும்பிக்கை மனுஷனுக்கு நம்பிக்கை’ ‘சேனைய திங்கிறவன் ஆனையத்திங்க முடியுமா?’ ‘ ஆடு வாலாட்டினா ஆனை குண்டிய ஆட்டும் ‘ போன்ற முந்நூறு பழமொழிகளை சேர்த்திருந்தார். ஈசாந்திமங்கலம் விலக்குதான் மேலே குறிப்பிட்ட களம். அங்கே ஒரு லார்ஜ் அதிகமாக செலுத்திக்கொண்ட ‘சலம்பன்’ குமரேசன் ஒரே மணிநேரத்தில் சொன்ன கேள்விப்படாத பழமொழிகள் அவை, அவற்றை அவனும் அதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை என்று அக்கா பெருமாள் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நள்ளிரவில் தூங்கிவழியும் தலைவர் முன்னிலையில் கருத்தரங்கு முடிவுக்கு வந்தது. முடிவுரை நடந்துகொண்டிருக்கும்போதே பங்கேற்பாளர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அம்மாப்பாளையம் வந்துசெல்வதற்கான விமானச்செலவு மற்றும் படிகள் உறைகளில் போட்டு அளிக்கப்பட்டன. பேராசிரியர்களின் கல்வித்தகுதிக்கேற்ப உறைகளின் அளவு மாறியது. முதல்தரம் நச்சினார்க்கினியர் உறை என்றும் இரண்டாம் தரம் இளம்பூரணர் உறை என்றும் மூன்றாம்தரம் பரிமேலழகர் உறை என்றும் குறிப்பிடப்பட்டது.
தலைவர் தன் உரையில் தமிழ் செம்மொழிதான் என்பதை மொழிப்பகைவர் இத்தகைய கருத்தரங்குகளை வந்து பார்த்தால் ஐயமிலாது உணர்ந்துகொள்ள முடியும் என்றார். எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அளந்துவிடுவதற்கு வாய்ப்பளிக்கும் தமிழ்போன்ற ஒரு மொழி உலகிலெங்கும் உண்டா என்று அவர் அறைகூவி தமிழை வெம்மொழி என்று ஐக்கியநாடுகள் சபை அறிவிக்கும்வரை நமது போராட்டம் ஓய்வடைதல்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
தஞ்சையில் இருந்து வந்த பேராசிரியர்கள் தங்கள் சொகுசுப்பேருந்தில் ஒட்டுமொத்தமாக அரிசிக்காரன் பாளையம் நரசிம்மநாயிடு பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்குக்குக் கிளம்பினார்கள். கருத்தரங்குக்குகள் தோறும் போகும் வசதிக்காக அவர்கள் அந்தப்பேருந்தை அமர்த்தி தொடர்ச்சியாக பயணத்தில் இருந்தார்கள். பிறபேராசிரியர்களும் அவரவர் வசதிப்படி அடுத்த கருத்தரங்குகளுக்கு கிளம்பிச்சென்றார்கள். கருத்தரங்க அறையில் ‘வானமளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே’ என்றபாடல் ஒலித்தது.