அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் பிறந்த என் ஆண் பிள்ளையின் பெயர் சூட்டு விழாவின் ஒரு பகுதியாக தொட்டிலிடும் நிகழ்வும் இருந்தது. அப்போது பாடலாக அன்னமாசார்யாவின் கீர்த்தனையான “ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ முகுந்தா…” பாடப்பட்டது.
பெண் பிள்ளை பிறந்திருந்தால் என்ன பாடியிருப்பார்கள் என என் சிந்தனை சென்றது. பெண் தெய்வங்களுக்கான தாலாட்டு பாடல்கள் உள்ளனவா என இணையத்தில் தேட ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவேளை பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடியிருப்பார்களோ என்று எண்ண, ஏனோ ‘சின்னஞ்சிறு கிளி’ என்ற வரி பள்ளி நாட்களில் என் நண்பன் எடுத்து வளர்த்த கிளிக்குஞ்சை ஞாபகப்படுத்தியது. நீங்கள் கிளியை அதன் மழலை பிராயத்தில் பார்த்திருக்கிறீர்களா?.
பாரதி என்ன பதத்தில் இந்த ‘சின்னஞ்சிறு கிளி’யை பயன்படுத்தியிருப்பாரோ தெரியாது. எனக்குள் அது பாரதி காலத்து பெண்ணின் வாழ்க்கை குறித்த மினிமலிச ஓவியமாக இப்படி விரிந்து கொண்டே செல்கிறது.
“பிறப்பில் அருவருக்கப்பட்டு, பின் வண்ணமேறி சிறகு முளைத்தவுடன் சிறகு முறிக்கப்பட்டு, யாராலோ கூண்டிலைடைக்கப்பட்டு, உடையவனின் சொல்லையே வழிமொழிந்து….”
மகள்களுக்கான பாடல்களை ஆண்கள் யாரும் எழுதத் தேவையில்லை. அதை அவர்களே இயற்ற வல்லவர்கள் என்று புரிந்து கொண்டாலே போதும் என நினைக்கிறேன்.
ஜெ. விஜய்.
ஜெய்சல்மர், ராஜஸ்தான்.
*
அன்புள்ள விஜய்
கிள்ளை என்பது மழலைக்கு நிகரான ஒரு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. கிளியின் பல்வேறு இயல்புகள் கவிதையில் கையாளப்பட்டிருந்தாலும் அது மானுடமொழியை பயின்றுபேசுவதில் உள்ள குதலையின் பேரழகுதான் கொண்டாடப்பட்டிருக்கிறது. பெண்குழந்தைக்கு கிள்ளை என்று ஒப்பு சொல்லப்பட்டது அதனால்தான்
அதிலும் பெரும்பாலும் அது இளங்கிளிதான். மழலையிலும் மழலை கோருகிறது கவிதையுள்ளம். கிளியை தூதுவிடுதல் நம் மரபில் இருக்கும் முக்கியமான கவிதை வடிவம். சுகசந்தேசம் என பெயர்கொண்ட சம்ஸ்கிருதகாவியங்கள் பல உண்டு
சரியாகச் சொல்லத்தெரியாத ஒன்றைத் தூதுவிடுவதிலுள்ள அழகு எண்ணுகையில் உவகை அளிக்கிறது. மழலையால் மட்டுமே சொல்லத்தக்க சில உண்டு அல்லவா
அழகர் கிள்ளைவிடுதூதில் பலபட்டடை சொக்கநாதப்புலவர் சொல்லும் வரி இது
அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில் ஏறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் – கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ?
அணில்பிள்ளை சொல்லெடுக்காது வாய் குழறும். குயில்குஞ்சு வான்தொடும் மரக்கிளையில் ஏறிக்கொள்ளும் கிளிப்பிள்ளைதான் சொன்னதைச் சொல்லும். அதைவிட பெரிய பேறு ஏது?
கிளிப்பாட்டு ஒரு தனிக்கவிதைவடிவமாகவே தென்மொழிகளில் உள்ளது. பாரதி சின்னஞ்சிறு கிளியிடம் மட்டும் பேசவில்லை. நெஞ்சில் உரமும் இல்லாத நேர்மைத்திறமும் இல்லாத மானுடரைப்பற்றியும் கிளியிடம்தான் சொல்கிறார்
மலையாளத்தின் முதற்கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சன் அத்யாத்மராமாயணம் என்னும் முதற்காவியம் கிளிப்பாட்டு வடிவில்தான். ’சாரிகப்பைதலே கேள்குக” என்றுதான் அது தொடங்குகிறது. கிளிக்குஞ்சே கேள் என. ஆம், கிளிமதலைதான். சின்னஞ்சிறு கிளி.
அந்த மழலையை உருவகமாக எடுத்துக்கொள்வது ஒரு வாசிப்பு. கூண்டை உருவகமாக எடுத்துக்கொள்வது இன்னொரு வாசிப்பு. சரிதான், லா.ச.ரா சொல்வதுபோல அவரவர் பூத்தபடி
ஜெ