ஆசிரியனின் பீடம்

1

ஜெயமோகன் சார்,

இந்தக் கடிதத்தை எழுத முக்கியக் காரணம் மிகுந்த மன உளைச்சல் தான் என்பதை முன்பே நான் சொல்லிவிடுகிறேன். கட்சிகள் மத்தியில் அரசியல் நடந்தால் அதை பொருட்படுத்தவே மாட்டேன். அது அவர்களுடைய இயல்பு. அரசியல் அவர்களுக்கு அவசியம். நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தேவையே இல்லை. நான் நம்பிக்கை வைத்திருக்கும் முக்கியமான தரப்பினர் படைப்பாளிகளும், பேராசிரியர்களும் தான். அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.

இவர்கள் சந்திக்காமல் இருந்தாலே போதும். அப்படித்தான் இதுவரை இருந்து வந்துள்ளனர். படைப்பாளிகளை பேராசிரியர்கள் மதிப்பதில்லை. படைப்பாளிகள் பேராசிரியர்களை மதிப்பதில்லை. இந்த முரண்பாடு பனிப்போர் போன்று இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த மாநாடு ஒன்றில் இரண்டு தரப்பினரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை இவர்கள் செய்யாமலே இருந்திருக்கலாம். Pandora பெட்டியை அந்தப் பேராசிரியர் திறந்து விட்டார். பெரும் சண்டை இரண்டு பேருக்கு மத்தியில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் என்னிடம் பேசும் போதெல்லாம் “நாங்க எழுதினா தானே உங்களுக்கு Project” என்று காரணமே இல்லாமல் என்மீது பாய ஆரம்பித்து விடுகிறார். பின்பு தான் தெரிந்தது: இது ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வெறுப்பு அல்ல என்றும் இது போன்று ஒரு சூழ்நிலை நம் மத்தியில் நிலவுகிறது என்பதையும் புரிந்துக் கொண்டேன். சரி, பேராசிரியர்களின் பதில் என்னவென்று இந்தப் பக்கம் வந்தால், அவர்களுடைய வெறுப்பு அதற்கும் அதிகம். “உன்னோட கதைய Syllabusல வைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதே நான் தான்” என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள்.

எனக்கு இப்போது யார் பக்கம் நியாயம் இருக்கிறது இல்லை என்பது பொருட்டல்ல. பெரும்பாலான ஆசிரியர்களின் வெற்று வார்த்தைகளின் மூடத்தனத்தால் என்னைப் பல ஆண்டுகள் புத்தறிவு பெறாமல் இருளிலேயே வைத்திருந்ததைப் பல ஆண்டுகள் நான் அனுபவித்திருக்கிறேன். எதோ ஓரிரண்டு ஆசிரியர்கள் மாத்திரம் தான் அந்த சிறிய அறிவு தீபத்தை அணையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது படைப்பாளிகளின் தாக்குதல் அந்த ஓரிரண்டு பேர்கள் மீதுதான் தொடுக்கப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களை நான் சல்லிக் காசுக்கும் மதிப்பதில்லை. ஒரே அதிகாரம், அதட்டல்.

இப்போது என்னுடைய பிரச்சனையே இந்த இரண்டு சாராருக்கும் இடையே உள்ள போராட்டம் தான். இப்போது உங்களிடம் இருந்து எனக்கான பதில் யார் சரியானவர் என்பது கிடையாது. இதற்கான தீர்வை கொடுக்க உங்களால் மாத்திரமே முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். காரணம் நான் உங்களில் ஒரு பேராசிரியருக்கான ஆளுமையைத்தான் முதலில் பார்த்திருக்கிறேன்/படித்திருக்கிறேன். அதற்குப் பின்புதான் என்னைப் பொருத்த வரையில் நீங்கள் ஒரு படைப்பாளி. ஒரு முறை ஆய்வின் மூன்றுத் தன்மைகளைப் பற்றி பேசியிருந்தீர்கள். ஒன்று கோட்பாட்டின்படியான ஆய்வு, இரண்டாவது தனிநபர் சொந்தக் கருத்துக்கள் சார்ந்த ஆய்வு. மூன்றாவது கல்விப்புலத்தின் ஆய்வு என்று. இவை மூன்றில் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வே நம்பகமானது என்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

இப்போது எதிர்காலத்தைப் பற்றிய என்னுடைய முடிவுகள் இரண்டு. ஒன்று மாதசம்பளத்திற்கு இனிமேல் வேலை செய்வது. தால்ஸ்தாயும் வேண்டாம், தாஸ்தாவஸ்கியும் வேண்டாம். இரண்டாவது, புரோமோஷனுக்காக பொறுப்பற்ற கட்டுரைகளை எழுதி என்னுடைய CVயை எப்படியாவது ஐம்பது பக்கங்களுக்கு நீட்டிப்பது. அதற்கு அநேக ஸ்காலர்ஷிப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான முன்மாதிரிகள் எனக்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் ரசனையைக் கொன்று வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொன்று நன்றாக வாழ்வேன். யார் கேட்கப்போகிறார்கள். ஒன்று பணம் பதவிக்காக வாழ்வது இல்லை என்றால் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள என் எதிர்காலத்தைத் தொடருவது. பக்தினை என்னுடைய எதிர்காலக் கனவாக வைத்திருந்தேன். நான் எந்த வழியை தெரிந்தெடுப்பது என்பதை உங்களுடைய பதில் தான் தீர்மானிக்கும். பதில் அளிக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை. குழப்பத்தில் என்னுடைய எஞ்சிய காலத்தைப் பயனற்ற விதத்தில் கழித்துவிடுவேன். நன்றி.

அன்புடன்

*

அன்புள்ள அ

உங்கள் இக்கட்டும் சோர்வும் புரிகிறது. ஆனால் ஒன்று புரிந்துகொள்ளுங்கள், நம் சூழலில் உலகியல் வெற்றிகருதாது வேறெந்த விஷயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்குமே இத்தகைய பெருஞ்சோர்வின் தருணங்கள் உண்டு. சொல்லப்போனால் அதுவே மிகுதி. இலக்கியமே கூட. நீங்கள் வெற்றிபெற்ற இலக்கியவாதிகள் என்பவர்களே கூட மிகமிகச்சிறிய வட்டத்திற்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே. இருட்டில் வழிதுழாவி நடப்பவர்கள் அனைவருமே

ஆனால் எந்தச்செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதற்கான நிகர்பலன் ஒன்றுண்டு என்று கூறவே நான் விழைகிறேன். ஏனென்றால் அதைநம்பியே நான் சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கும் சோர்வுக்காலங்கள் வரும். ஆனால் உடனே அந்த மூடுபனியை ஊதி அகற்றிவிடுவேன். ஏனென்றால் அது செயல்கொல்லி. அதில் கொஞ்சமேனும் மறைமுகமகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

கல்வித்துறை இன்றிருக்கும் நிலையில் எவ்வகையிலும் நம்பிக்கை கொள்ள இடமில்லை, எல்லா திசைகளிலும் சிறுமை என நான் அறிவேன். ஆயினும் முன்னால் வந்தமரும் மாணவர்களில் எங்கோ ஒரு கண்ணும் காதும் திறந்திருக்கிறது என நம்பவேண்டியதுதான். ஏனென்றால் நான் இன்றுவரை சந்தித்த நல்ல ஆசிரியர்கள் எவரும் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் வெறுமையை உணர்ந்ததில்லை. வணிகர்கள், சினிமாப்பிரபலங்கள், உயரதிகாரிகள், அரசூழியர்கள் என பெரும்பாலும் அனைவருமே சென்றடையும் வெறுமை அது. ஆசிரியர்தொழில்  மட்டும் அதற்கு தன்னை அர்ப்பணித்தவரைக் கைவிடுவதே இல்லை ஆசிரியன் இறுதியில் அவனே சென்று அமரும் ஒரு பீடம் உண்டு.

ஜெ

 

முந்தைய கட்டுரைதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரையாரோ சிலர்!