வாழ்வை நேசித்தவனுக்கு…

IMG_3184

 

மொத்தமாகப் படித்து சிறு மொத்தமாக தொகுத்து கொள்ளக்கூடியவறாக கல்யாணி அண்ணாச்சியை வைத்து கொள்ள கூடாது என்று சில கதைகளை படித்து அதில் மட்டும் ஊறிக் கிடந்து எழுதுகிறேன்

போய்க்கொண்டு இருப்பவள் 

போர்த்தி கொள்ளுதல்
முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்
ஓட்டுதல்

– குறைவாக வார்த்தைகள் பயன்பட்டு ஒரு கதை மாந்தரின் உருவம், குண மற்றும் ஆளுமை பற்றிய பிம்பம் எளிதில் உருவாகி விடுகிறது. கண் மையை தொட்டு தொட்டு கண்ணில் இடுவது போல மஹேஸ்வரி, ஜூடி அன்னம் , பெயரிலே முழுக்கை போட்டவர் மற்றும் போர்வை வாங்கி வந்தவள் வளர்ந்து விடுகின்றனர் – மிக அழகுடன். அந்த தொட்டு தொட்டு வகையில் அவர்களின் வாழும் இடம், உடை பற்றியும் உண்டு என்றாலும் அது நாம் பேசிக் கொன்டே கவனிப்பது போலவே இருப்பது ஒரு தினுசு. அவர்களின் வாழ்வில் நிகழும் மற்றும் நிகழ்ந்தவை கூட மிக மென்மையாக அறுக்காமல் வலிக்காமல் தொட முடியம் அவரால். ராமச்சந்திரனின் மரணம் மற்றும் மஹேஸ்வரி புகும் தனிமை உலகம், மாஜிக் போன்ற தொலைந்த கலைகளில் தொலைந்தவர்கள், போர்த்திக் கொள்ளுதலில் வரும் கணவனின் ஆண் குணம் என போகிறது அவரின் கதை மாந்தர்களின் உலகில் வரும் வாழ்வின் திருப்பல்கள். எல்லாவற்றையும் மீறி, கதை முடிந்த பின், ம்ம்ஹும்ம்ம் என்று பெரு மூச்சு வந்து செல்லும் ( அல்லது மெலிதான ஒரு உணர்வு )…. இந்த கதைகளில் கதை முடியும் போது, இவர் அவர்களின் தொடர்ந்தபடியே போகும் வாழ்வின் பயணத்தைத் துவக்கி வைத்து இருப்பார். விரிந்து கிடைக்கும் வாழ்வின் பாதையில் மகிழ்வும் துயரும் மெல்லியது தான் அவரின் உலகில். காட்சிகளை எளிதில் மனதில் ஏற்றி கொள்ளலாம். மஹேஸ்வரி கண்ணாடி முன் நிற்பதையும், ஜூடி அன்னம் நிமிர்ந்த மார்புகளுடன் சிரித்தபடி செல்வது, போர்வையை மிக சரியாக விரித்து காண்பிக்கையிலும் என…

இத்தனை துவட்டல்களுக்கும் மீறி வாழ்வை, மனிதர்களை மிக நெருக்கமாக உணரவைப்பது எதனால்? அனைவரின் ஆழத்தில் இருக்கும் “மனிதம் ” என்ற ஈரத்தை அவரால் தொட முடிவதால் மட்டுமே என்றும் அந்த ஆன்மீக தொடல் நிகழ்ந்த பின் ஒரு நிறைவு கூடி விடுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் சொன்னது போல கவிதைக்கு மிக அருகில் செல்லும் வரிகள் நிறையவே வருவதால் வரும் ஒரு சாரல் கூட காரணமாக இருக்கலாம் – மனிதர்களை மிக அணுகி விட்டதாக தோன்றுவதை. நேசிக்க தானே வந்து தொலைத்தோம். நேசித்து வாழந்து தொலைக்க முடிவது இல்லையே.. வாழ்வின் பிடித்ததை இறுக்கி கொள்ள வைத்தமைக்கு, வணங்கி கொள்கிறேன் வண்ணதாசனை…

– வாழ்க்கை தொடர்ந்து இப்படியே தான் இருந்துஇருக்கிறது. இந்த வயது வரை. வாழ்க்கையில் எந்த பல் சக்கரங்களுக்கும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கறை சார்ந்த உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும் ( கல்யாண்ஜி கடிதம் )

அது சரி. காட்சிகளால் நிரம்பி வழியும் கல்யாண்ஜி கவிதை உலகம் பற்றி ஏன் எழுதவில்லை அல்லது எழுதியவர்களை தளத்தில் போட வில்லையா?

 

அன்புடன்
லிங்கராஜ்

 

CO2B0303

இனிய ஜெயன்,

 

வாழ்த்துக்கள்.

 

வண்ணதாசனுக்கு ’ஒரு சிறு இசை”க்காக சாகித்யஅகாதமி விருது. அத்தொகுதியின் முதல் பக்கத்தில் நீங்கள் “காதலியின் முத்தம் போலவோ,நூற்றுக் கிழவியின் ஆசி போலவோ  எங்கோ சென்று தைக்கும் சிறுகதைகள்” என நெகிழ்ந்திருப்பீர்கள். அதை அகாதமியும் ஆமோதித்திருக்கிறது.

 

கடந்த மூன்று வருடங்களாக விளக்குத் திரியை நீங்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆ.மாதவன், பூமணி இப்போது வண்ணதாசன்.

 

பின்னெழுபதுகளின் ஒரு விடுமுறை நாள்.  எங்கள் பகுதியின் சிறிய நூலகம் அது. புத்தகங்களைத் தேடிக் களைத்துப் போனபோது தடிமனான அட்டைப் போட்ட புத்தகமொன்று தட்டுப் பட்டது. அது இலக்கிய சிந்தனை வெளியீடு. அந்த வருடம் வந்திருந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதில் தனுமையும் ஒன்று. சுஜாதா தேர்வு செய்து சிலாகித்து எழுதியிருந்தார். படிக்க ஆரம்பித்தேன். தஞ்சாவூர்காரனாயிருந்ததால் அது வரை தி.ஜானகிராமன் மட்டுமே சகலமும் என்றிருந்தேன். அத்தனை அபிப்ராயத்தையும் அச்சின்னஞ்சிறுகதை புரட்டிப் போட்டது.

அதற்கடுத்து சில வருடங்களுக்குப் பிறகு பிறிதொரு கதை. அது கணையாழியில் வந்த தங்களின் கிளிக்காலம். அன்றிலிருந்து இன்று வரை கிட்டதட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு ரகசியத்தை மனதுக்குள் பூட்டி வைத்திருந்தேன். அது தங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்பதே.

 

பவா தன் 19 டி.எம்.சாரோனிலிருந்து புத்தகத்தின் தன்னுரையில் எழுதியிருப்பார்.  ஸ்டான்ஸ்ட்லாவாஸ்கியின் நாடக ஒத்த்திகை நடக்கும் இடத்திற்கு டால்ஸ்டாய் வந்திருக்கிறார். ஸ்டான்ஸ்ட்லாவாஸ்கியால் அந்த கணத்தை எதிர்கொள்ள முடியாமல் அவரைச் சந்திப்பதை இயன்ற அளவு தவிர்க்கிறார் என்று.

 

மனதுக்குள் எழும் அத்தகைய பெரும் பாறையை உடைக்க எல்லோருக்கும் ஓர் உளியேனும் தேவைப்படும். எனக்கோ பெரும் நெம்புகோலே கிடைத்திருக்கிறது. உங்கள் இருவரையும் சந்திக்கும் அற்புத தருணம் அது.

 

அவரே சொல்வது போல் குழந்தைகளால் மட்டுமே காட்டமுடிகிற எட்டாவது வண்ணத்தை அவராலும் காட்ட முடிந்திருப்பதால் அவர் வல்லிக்கண்ணன்தாசன் என்பதைவிட வண்ணதாசனாய் மேலெழும்புகிறார்.

 

எதையும் எழுதாததால் ஒருபோதும் தேயாத பென்சில் என்று ஒரு கதை எழுதியிருப்பார். ஆனால் வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் எழுதிக் கொண்டிருப்பதாலே இவரது பென்சில் என்றும் தேயாத பென்சில்.

வண்ணதாசனையும், கல்யாண்ஜியையும்ப் பிரித்துப் படிக்க ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் முடித்துக் கொள்கிறேன்.

 

தங்களிருவரையும் சந்திக்கும் ஆவலில் மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும்,

 

சந்தானகிருஷ்னன்.

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67
அடுத்த கட்டுரைஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்