மத்தகம் (குறுநாவல்) : 5

சுப்புக்கண்ணும் முத்துப்பாச்சனும் கருணனுமாக சேர்ந்து ஆற்றில் கேசவனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். நான் சற்றுத் தள்ளி பாறைமீது அமர்ந்திருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நான்தான் கேசவனுக்குத் தலைமைப்பாகன். மற்ற இரு பையன்களையும் சேர்த்துக் கொண்டிருந்தேன். அருணாச்சலம் அண்ணாவின் மரணத்தகவல் கேட்டதும் ஆசான் விழுந்தவர்தான். எழுந்திருக்கவில்லை. பக்கவாதம் வந்து விட்டது. கேசவனின் பெயர் சொன்னாலே அவர் உடல் நடுங்குவதாக சுப்புக்கண் சொன்னான்.

அருணாச்சலம் அண்ணாவை கேசவன் தூக்கி வீசிக் கொன்ற செய்தியைச் சொன்னது சுப்புக்கண்தான். “டேய் உள்ளதாடா? உள்ளதாடா எரப்பாளி?” என்று கேட்டவரின் தலைமட்டும் ஆடியிருக்கிறது. உதடு கோணலாகி வலித்திருக்கிறது மகளிடம் “படபடன்னு வருதுடீ” என்றபடி திண்ணையிலேயே படுத்துக்கொண்டார். சுப்புக்கண் விசிறியிருக்கிறான் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதுகளில் சொட்டியது. “இனி அந்த பூதத்த நான் கண்ணெடுத்தும் பாக்கமாட்டேன் மக்கா” என்று கண்களை மூடியபடியே சொல்லியிருக்கிறார். “ஆனை சேவுகம் ஆண்டவன் சேவுகம்னு சொல்யிருக்காங்கடே. இது ஆண்டவனில்லை. ஏதோ துர்தேவதையாக்கும்” என்று சொல்லி வலிப்பு வந்தவர் போலப் புரண்டு படுத்திருக்கிறார். ஒரு கால் மட்டும் துடித்துக்கொண்டே இருந்ததாம்

சுப்புக்கண் ஓடிப்போய் ஒரு பெரிய மூங்கில் நிறைய சாராயம் கொண்டு வந்து கொடுத்தான். அதை இரவெல்லாம் குடித்து மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்து விடியற்காலையில்தான் தூங்கியிருக்கிறார். எதுவுமே சாப்பிடவில்லை. எத்தனை குடித்தும் போதை ஏறாமல் ஒரே புலம்பல். பிறகு மதியம் தாண்டி மகள் எழுப்பியிருக்கிறாள். ஒரு பக்கம் தளர்ந்திருந்தது.

“காதைத் தேய்டே, எளவு வெண்ணை வச்சு உருவுத மாதிரில்லா உருவுதான். இது ஆனையாக்கும், உனக்க கெட்டினவ இல்ல” என்றேன். சுப்புக்கண் பேசாமல் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டான். மேலே படிகள் வழியாக சண்முகம் ஓடி வந்தான். “கொச்சாசானே கொச்சாசானே…” என்றான் “என்னடே, உனக்க அம்மைக்க தாலி அத்துப்போச்சோ?” என்றேன். “கேசவனைக் கொண்டு வரணும் ஆசானே. அங்க கொட்டிலில் கொச்சுகொம்பன் அலம்புது…”

நான் உத்தரவிடுவதற்கள் சுப்புக்கண் கேசவனை எழுப்பினான். கேசவன் ஈரத்துடன் எழுந்து அடிவயிறில் நீர் சொட்ட கரையை அடைந்து தன் சங்கிலியை தூக்கியபடி படிகளில் ஏறிச் சென்றது. நான் பின்னால் நடந்து சென்றேன். படிகளில் ஏறி கிழக்கு முற்றத்தை அடைந்தபோதே கொட்டிலில் சாவித்ரி உரக்கப் பிளிறும் ஒலி கேட்டது. பிறகு பிற யானைகளும் பிளிறின. கொச்சு கொம்பனின் தனித்த பிளிறல் பிறகு எழுந்தது. கேசவனின் கூடச் செல்வதற்கு சுப்புக்கண் ஓடவேண்டியிருந்தது. கொட்டிலை நெருங்கியதும் கேசவன் உரக்கப் பிளிறியது. அந்த ஒலி கோயிலின் மதில் சுவர்களில் எதிரொலி செய்தது. கொச்சுக் கொம்பனின் பதில் பிளிறல் எழுந்தது.

என் உடலில் அச்சத்தால் வியர்வை அரும்பியது. கொச்சுக் கொம்பன் பாறைமேல்மனை நம்பூதிரியால் திருவட்டார் ஆதிகேசவனுக்கு நடைக்கு இருத்தப்பட்டு இருபதுநாள்தான் ஆகிறது. ஒன்றரை வயதான குட்டி. கொம்புகள் என் கையளவுக்குத்தான். அது வந்ததில் இருந்தே தினமும் ரகளைதான். அதற்குப் போடும் தீனியை தின்ன மனமில்லாமல் வேறு யானைகளின் தீனியை நோக்கி துதிக்கை நீட்டும். தூண்களை முட்டிச் சாய்க்க முயலும். முடிந்தால் பிற யானைகளைக் குத்தும். கேசவனின் குரல் கேட்டால் மட்டும் அப்படியே அடங்கிவிடும். ஒருநாளும் இதுபோல கேசவன் குரலுக்கு அது பதில் அளித்ததில்லை.

கேசவன் திரும்பி கொட்டிலைப் பார்த்ததும் இன்னொரு முறை இன்னும் உக்கிரமாகப் பிளிறியது. அந்தக் குரலுக்கு கொச்சுக் கொம்பன் பதில் கூறவில்லை. அதன் கையில் பிடுங்கப்பட்ட ஒரு முருங்கைமரம் இருந்தது அறுத்த சங்கிலி காலில் கிடந்து இழுபட்டது. கையில் தடியுடன் கொச்சுக் கொம்பன் பின்னால் நகர்ந்தது. துதிக்கையை முன்னங்கால்களுக்கு கீழே கொண்டுசென்று தலையை தாழ்த்தியது.

கேசவன் நின்று துதிக்கை தூக்கி தலையைக் குலுக்கி உரக்கப் பிளிறியது. கொச்சுக்கொம்பன் முருங்கைத்தடியைக் கீழே போட்டுவிட்டு வாலைச் சுழற்றியபடி பணிவுள்ள குழந்தை போல நேராக தன் இடத்தை நோக்கிச் சென்று தூணருகே நின்றுகொண்டது. நான் அதன் பாகனிடம் “டேய் எரப்பாளி… உடக்கி நிக்குத பானைக்கு எதுக்குடே அந்த சின்னச்சங்கிலிய போடுதே?” என்றேன். “சின்ன யானையாக்குமேண்ணு…” என்றான் அவன். “சின்னயானை உனக்க அம்மைக்க—- என் வாயில என்னமோ வருது. லே, ஆனைய சின்னதும் பெரிசுமாக்குது அதுக்க உடல் இல்ல மனசாக்கும். அதுக்க கொம்பப்பாருலே. ஒண்ணர வயசுக்கு இந்தக் கொம்பு வச்சிருக்குத ஆனை இருவது வயசில எப்பிடி வச்சிருக்கும்ணுபாரு. அதுக்க வயசப் பாக்காதே. அது ஒரு கொம்பனாக்கும். கஜகேசரியாக்கும்.”

அவன் கொச்சுக் கொம்பனை பெரிய சங்கிலியால் தளைத்தான். பவ்யமாக தென்னை ஓலைகளைப் பிய்த்து உதறித் தின்றபடி முன்னும் பின்னும் ஆடியது. அப்போது பார்க்க ஒன்றும் தெரியாத குழந்தை போல இருந்தது. கேசவன் அவனுடைய தூணில் வந்து நின்று கொண்டான். சுப்புக்கண் அவனைப் பிணைத்தான். இப்போதெல்லாம் சங்கிலிக்கட்டு என்பது ஒரு வெறும் பாவனைதான். எந்த யானையும் ஒருமுறை கடைசிச் சங்கிலியை உடைக்கும் அப்போதுதான் அது உண்மையில் என்ன என்று நமக்குப் புரியும். அதன் பிறகு அதை நாம் கட்டமாட்டோம் என்று கேசவன் அறுத்துக் கொண்டு ஓடியபோது ஆசான் கூறினார்.

சுப்புக்கண்ணை படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நான் ராமலட்சுமியின் வீட்டுக்குச் சென்றேன். அருணாச்சலம் அண்ணனின் மனைவி. அண்ணன் செத்த இரண்டாம் நாள் இரவு நான் போனபோது முதலில் அரிவாள் மணையுடன் வெட்டத்தான் வந்தாள். ஐந்தாம்நாள் அரிசியும் தேங்காயும் மீனும் வாங்கிக்கொண்டு போனேன். திண்ணையில் பசியோடு கிடந்த அருணாச்சலம் அண்ணனின் மூத்தமகன் குமரேசன் வந்து அவனே பையை வாங்கிக்கொண்டு உள்ளே கொண்டு வைத்தான். ராமலட்சுமிக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். நாலு பிள்ளைகளுக்கு அம்மா. இருந்தாலும் ஒரு அந்திக்கூரை என்ற அளவில் பழுதில்லைதான். கையில் பணம் சேரும் போது இன்னும் இளமையான ஒருத்தியைப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

நான் வீட்டுக்குள் நுழைந்தபோது அருணாச்சலம் அண்ணனின் கடைசிப் பையன் முருகனை இடுப்பில் வைத்தபடி வள்ளி நின்று கொண்டிருந்தாள்.

“உங்கம்மை எங்கட்டி?” என்றேன்.

“மீனு களுவுதா” என்றாள்.

“எங்க மத்தவ?”

“அவனை உமியெடுக்க அனுப்பியிருக்கு”. கோயில் உரல்புரையில் நெல் குத்தினால் உமிதான் கூலி. குமரேசன் இப்போதெல்லாம் இரவுகளில் வீட்டுக்கு வருவதில்லை. நான் திண்ணையில் அமர்ந்து கொண்டேன்.

சற்று நேரம் கழித்து கையை வேட்டியிந் கோந்தலையில் துடைத்தபடி ராமலட்சுமி வந்தாள்.

“எப்பம் வந்திய?” என்றாள்

“கொறெ நேரம் ஆச்சு. இம்பிடு சுக்கு வெள்ளம் எடு” அவள் சுக்கு நீர் கொண்டுவந்தாள். நான் அதைக் குடித்தபின் திண்ணையிலேயே படுத்துக்கொண்டேன்.

“என்ன, தேக சொகம் இல்லியா?” என்று கேட்டாள்.

“போடி சவமே” என்று சீறியதும் பதறி உள்ளே போய்விட்டாள். நான் திண்ணையில் படுத்து நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

கதவை மெல்லத் திறக்கும் ஒலி கேட்டது. நன்றாக இரவேறியிருந்தது. நான் கொஞ்ச நேரம் தூங்கியிருக்க வேண்டும். அவள் என்னருகே அமர்ந்து என் தலையை வருடினாள்

“கைய எடுடி” என்றேன். அவள் கையை எடுத்துவிட்டு மெல்ல விசும்பினாள்

“இப்பம் என்ன மயித்துக்கு அழுதுகாட்டுதே?” என்றேன்.

அவள் “அப்ப என்னை புளிச்சாச்சு… இனிமே வேற ஆளு வேணும் இல்லியா?” என்றாள்.

“சீ என்னட்டி சொல்லுதே எரப்பே… சவிட்டிப் போடுவேன்.” ஆனால் அவள் சொன்னது உண்மை. ஆரம்பநாட்களில் அவளுடன் படுக்கும்போது அருணாச்சலம் அண்ணனின் நினைவு வந்து ஒருவிதமான கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. இப்போது அது இல்லை. அந்தக் கிளர்ச்சி இல்லாமல் அவளைப் பார்க்கும் போது எரிச்சல்தான் வந்தது. அழுமூஞ்சிக் கிழவி.

ஆனால் நான் சற்று தணிந்து பெருமூச்சு விட்டு “அதெல்லாம் ஒண்ணும் இல்லட்டி. எனக்கு வேற கவல. கோவிலு காரியம்” என்றேன்.

அவள் மெல்ல என்னருகே படுத்து என்னை அணைத்து, தன் பெருத்த முலைகள் இறுக முயங்கி, “என்ன விட்டுப் போடாதீக ராசாவே. எனக்கு வேற ஆருமில்ல. எனக்க பிள்ளைக இப்ப ஒரு நேரம் கஞ்சி குடிக்கியது உங்களாலயாக்கும்…” என்றாள்.

“உன்ன ஆரு விடுகதா சொன்னா?” என்றேன்.

“இப்பம் என்னைக் கண்டாலே பிடிக்கதில்லை. பாத்தா அப்பமே சீத்த வாக்கு சொல்லுதீக… எனக்கும் என் பிள்ளையளுக்கும் ஆருமில்ல. கண்ணு தெறக்காத நாய்க்குட்டிகளாக்கும் எனக்க பிள்ளைய. எங்கள விட்டிடப்பிடாது… நாங்க அடிமகளாக்கும்.” அவள் என்னை முத்தியபடி உடைந்த குரலில் புலம்பினாள்.

“செரிடி சும்மா கெட.” என்றேன்,

“விடமாட்டீயளா?”

“மாட்டேன் போருமா?”

“சத்தியமா?”

நான் அவள் தலையில் கைவைத்து “சத்தியமா” என்றேன். அவள் பரவசத்துடன் அந்தக் கையை எடுத்து முத்தமிட்டு “போரும். போரும். இது போரும் ராசாவே, இது போரும்… நானும் எனக்க பிள்ளையளும் இனி சமாதானமாட்டு அந்தியுறங்குவோம். திண்ணையில நீங்க கிடந்தா நான் எப்பிடி உள்ள கிடப்பேன்? தீயில கிடக்கியது மாதிரில்லா இருக்கு?” என்று என்னை முத்தமிட ஆரம்பித்தாள். உதடுகள் சூடாக இருந்தன. கன்னங்களில் கண்ணீர் என் முகத்தில் பரவியது. மூச்சு சீற ஆரம்பித்தாள். உடைகளைக் கழற்றிவிடடு என்னை இறுக்கினாள் “ராசாவே தம்புரானே ராசாவே…”

பின்னர் மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கிடக்கும்போது நான் சொன்னேன் “நாளைக்கு காலம்பற திருவந்தரம் போணும். ஒண்ணாம் தேதி வருதுல்லா?”

அவள் பெருமூச்சுவிட்டு “அதுசெரி, அதாக்குமா காரியம்?” என்றாள்.

“போன மட்டம் போனப்பம் அண்ணன் இருந்தாரு” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவள் மெளனத்தை கவனித்தபின் “நல்ல மனுசன்” என்றேன்.

அவள் எழுந்து கூந்தலைக் கட்டியபடி “நான் உள்ள போறேன்” என்றாள்.

“அண்ணன் நினைப்பாக்கும் ஒரு கஷ்டம்” என்றேன்.  அவள் என்ன சொல்வாள் என என் மனம் படபடத்தது.

“அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே”  என்றாள். நான் திடுக்கிட்டு எழுந்து பார்ப்பதற்குள் உள்ளே போய்விட்டாள்.

காலையில் எழுந்து திண்ணையிலேயே அமர்ந்திருந்தேன். நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தேன். அவற்றில் ஏதோ வழி எழுதியிருக்கும், வாசித்து விடலாம் என்று எண்ணுபவனைப்போல. நட்சத்திரங்களை வாசிப்பது ஆசானுக்குத் தெரியும். அருணாச்சலம் அண்ணனுக்கும் கொஞ்சம் தெரியும். எனக்கு மட்டும் அவை புரியவில்லை. அவை அதிர்ந்து அதிர்ந்து எதையோ சொல்லிக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது ஆனால் என் புத்திக்கு அவை வந்து உறைக்கவில்லை. நட்சத்திரங்கள் சொல்வதை முழுக்கப் புரிந்து கொண்ட யாரேனும் உண்டா என்ன?

ஆனால் ஆயிரம் லட்சம் ஆண்டுகளாக நட்சத்திரங்கள் ஒன்றேயேதான் சொல்லிக்கொண்டிருக்கும். அந்த வார்த்தைகள் காலம் கவிழ்ந்தாலும் பூமி அழிந்தாலும் மாறாதவை. அவற்றை பூமியில் ஏவராவது புரிந்து கொண்டிருப்பார்களா? இருக்கலாம். புரிந்து கொண்டவர்கள் நாம் பார்க்கும்படி நம்முன் உலவிக் கொண்டிருக்கமாட்டார்கள். காட்டுக்குப் போய் மலைஉச்சியில் ஏறி தன்னந்தனிமையில் அமர்ந்து நட்சத்திரங்ளை மட்டும் அறிந்தபடி இருப்பார்கள்.

“பகவதி… தேவி… உனக்கொரு தூக்க நேர்ச்சை செய்து போடுதேன். இதிலேருந்து மட்டும் என்னைய காப்பாத்திவிடுடீ” என்று மனத்தைத் தொட்டு கூறினேன்.

ராமலட்சுமியை எழுப்பாமல் கிளம்பி அம்பலக்குளத்தில் குளித்து வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு நான் வந்தபோது கோயிலின் கிழக்கு முகப்பில் கேசவன் நின்றிருந்தான். சுப்புக்கண் என்னை நோக்கி ஓடிவந்து “ஆசானே, எங்க போச்சு? ஆசான் வரணும். நிர்மால்ய பூஜை இப்பம் முடியும்” என்றான்.

“நீ போய் நில்லுலே” என்றேன்.

“நானா? நான் குட்டிப்பாப்பான்லா. நீருல்லா ஆசான்? கொம்பு பிடிச்சு மும்பில நிக்கப்பட்டவரு நீருல்லா?”

“அதில ஒண்ணும் வலிய காரியமில்லடே… நீ நில்லு” என்றேன்.

சுப்புக்கண் என்னை அரை இருட்டில் கூர்ந்து நோக்கி, “அதிப்பம் போத்தி சம்மதிக்க மாட்டாருல்லா?” என்றான்.

நான் அவன் பார்வையைப் பார்த்து கண்களைத் திருப்பிக் கொண்டு “எனக்கு வவுறு சரியில்லடே… நிக்க முடியாது. போயி சொல்லு” என்றேன். சற்று நேரம் கழித்து திரும்பியபோது சுப்புக்கண்ணின் கண்களைச் சந்தித்தேன். அவள் உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டு விட்டான். நான் பெருமூச்சு விட்டேன்.

அவனுக்குத் தெரியாமலிருக்காது. ஒரு மாதமாக என்னை கேசவன் அருகிலேயே விடுவதில்லை. என்னுடைய வாசனை கிடைத்தாலே முன்னங்காலை தூக்கி வைத்து ம்ம் என்று ஒலியெழுப்பும். அதை நான் அறிவேன். அவனுக்கு துதிக்கை எட்டும் தூரத்திற்கு அப்பால்தான் எப்போதும் நின்றிருந்தேன். இருந்தாலும் ஒன்றும் அறியாதவன் போல வந்து கூப்பிடுகிறான். சோதனை செய்து பார்க்கிறான். அல்லது சம்பிரதாயமாக அழைத்துப் பார்க்கிறானா?

இதோ அவன் போய் மற்ற பாகர்களிடம் ஏதோ இளம்சிரிப்புடன் சொல்கிறான். அவனுடைய சொற்களைக் கேட்டதும் அவர்களின் கண்கள் வந்து என்னைத் தொட்டு மீள்கின்றன. என் உடல் எரிவது போலிருந்தது. இன்று மாலை நான் ஒரு கைதியாக திருவனந்தபுரத்தில் இருப்பேனா? சுப்புக்கண் தலைமைப் பாகனாக கேசவனுடன் திரும்பி வருவானா? அவன் கைநீட்டி கம்பீரமாக ஏதோ ஆணையிடுகிறான். அந்தத் தோரணையை நான் அவனிடம் கண்டதேயில்லை. இப்போது அவனுக்குத் கீழேயும்  ஆட்கள் வந்து விட்டார்கள். அவன் உடனே வளர்ந்து விட்டான்.

சுப்புக்கண்ணும் பிற பாகர்களும் கேசவனை நடத்திக் கொண்டு சென்றார்கள். நான் மிகவும் பின்னால் தனியாக நடந்தேன். பயணம் முழுக்க தனிமையில் மீண்டும் மீண்டும் ஒரே நினைப்புடன் நடந்தேன். என்ன ஆகப்போகிறது? தம்புரான் யானை தொழுவதற்கு வரும்போது கொம்பு பிடித்து முன்னால் நிற்பவன்தான் தலைமைப்பாகன். இந்த தடவை சுப்புக்கண் நிற்கப் போகிறான். ஏன் என்று தம்புரான் கேட்டால் எனக்கு மரணம். கேட்காவிட்டால் கூடத் திரும்பிவரும்போது நான் தலைமைப் பாகனாக இருக்கமாட்டேன்.

ஒரே பாய்ச்சலில் முன்னுக்குச் சென்று சுப்புக்கண்ணைப் பிடித்து யானையின் கனத்த கால்களுக்கு அடியில் தூக்கிப் போடவேண்டும் என்ற வெறி எழுந்தது. அவனை விதவிதமாகத் தாக்குவது பற்றி கற்பனை செய்ய ஆரம்பித்தேன். தம்புரானைப் பற்றிக் கற்பனை செய்வது பற்றி பயத்தில் இருந்து அது விடுதலை அளித்தது. சுப்புக்கண் என்னிடம் வந்து பணிவுடன் ஆலோசனைகள் கேட்டபோது அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். அவன் திரும்பிச் செல்லும்போது அவன் உடலில் அந்தப் பணிவு இல்லாததை மீசையை முறுக்கியபடி கவனித்தேன்.

பாறசாலையைத் தாண்டும்போதுதான் சுப்புக்கண் வந்து சொன்னான் “ஆசானே. கெவுனிச்சியளா? ஒரு உத்சாகம் இல்ல. சனங்க செத்த மாதிரி இருக்கியானுக”

“ஏம்ல?” என்றேன்.

“பெரியதம்புரானுக்கு தேகசொகம் இல்லேண்ணாக்கும் பேச்சு. எப்பிடி இருக்காருண்ணு ஒரு விவரமும் இல்லியாம்”.

நான் எரிச்சலுடன் “ஒரு விவரமும் இல்லேண்ணா பின்ன இவனுக எப்பிடிடே அறிஞ்சானுக?” என்றேன்.

“அதிப்பம், அரமனை ரகசியம் அங்காடிப் பாட்டாக்குமே. நாலஞ்சு நாளா சுசீந்திரம் தோவாளை அகத்தீசரம் ஆளூர் வடசேரி பாத்திவசேகரபொரம் எல்லா எடத்திலயிருந்தும் மாடம்பிகளும் கரைநாயன்மாரும் நம்பூதிரிமாரும் குதிரவண்டியிலயும் மஞ்சலிலயும் கேறி திருவந்தரத்துக்கு போயிட்டே இருக்கானுகளாம்…”

எனக்கு அப்ப்போதுதான் அது உறைத்தது. ஆமாம் ஊரே இருண்டுதான் இருந்தது. என் கவலையில் மூழ்கி நான் எதையுமே கவனிக்கவில்லை. “இப்பம் ஆரையும் காணல்லியே” என்றேன்.

“எல்லாரும் போனா பிறவு ஆரும் காணமாட்டாகள்லா?”

நான், “போடா போயி சோலிகளைப் பாரு. அரமனைக் காரயம் நமக்கெதுக்கு? நம்ம ராஜா இந்தா போற இந்த ஆனையாக்கும். வாய நீட்டாம போ” என்றேன்.

“இல்ல, இப்பம் பெரியதம்புரான்….”

“பெரியதம்புரானுக்கு ஒண்ணும் இல்ல. சனங்கள் பேனை ஆனையாக்கிப்போடுவாங்க. போடே போயி ஆனைப்பணிய செய்யி” என்றேன். ஆனால் என்மனம் எடை நீங்கிப் பறக்க ஆரம்பித்து விட்டிருந்தது. ஆம், தம்புரான் கண்டிப்பாக படுத்த படுக்கைதான். அது எப்படி எனக்கு தோன்றாமல் போயிற்று? என்னை பகவதி கைவிடவில்லை. கொல்லங்கோட்டில் ஒரு நேர்ச்சை போட்டுவிட வேண்டியதுதான்.

பாறசாலைக் கோயிலில் தெளிவாகவே தகவல் கிடைத்தது. பெரிய தம்புரான் படுத்த படுக்கையாக இருக்கிறார். தன்னினைவு திரும்புமா என்பதே தெரியவில்லை. வெள்ளைக்கார அப்போத்திகிரிகள் ஏழு பேர் அவரைச்சுற்றி இரவும் பகலும் அமர்ந்து சிகிச்சை செய்கிறார்கள். சிறிய தம்புரான்தான் இப்போது ராஜ்யபாரம். ஆனால் ஒருவேளை கேசவனைப் பார்த்தால் தம்புரான் கண்விழிக்கக் கூடும் என்றார் பாறசாலை ஸ்ரீகாரியம். சிறுவயதில் மரணப்படுக்கையில் தம்புரான் கிடந்தபோது கேசவன் வந்ததனால்தான் அவர் உயிர்மீண்டார் என்று சொல்வார்கள்.

“நீ எதுக்கும் ஆனையோட போடே….அனந்தபத்மநாபனுக்க மனசு கனிஞ்சா நல்லதுதானே?” என்றார் ஸ்ரீகாரியம்.

நானும் மனதுக்குள் ஓயாது குழம்பினேன். நான் யானை அருகே போக முடியாதென்பதை கொட்டாரத்தில் யாரும் கவனிக்காமல் இருக்க என்ன செய்வது. தம்புரான் விழிப்புடன் இருந்தால் கண்டிப்பாகத் தெரிந்துவிடும். பேஷ்காரோ திவானோ அதையெல்லாம் கண்டுபிடிப்பவர்கள் அல்ல. ஆனால் தற்செயலாக எது வேண்டுமானாலும் நடந்து விடலாம். என் தலைவிதி கூடவே இருக்கவேண்டும். பகவதி அருளவேண்டும். ஒருவேளை சுப்புக்கண்ணே கூட என்னைக் காட்டிக் கொடுத்து விடக்கூடும். அந்த எண்ணம் வந்ததுமே தலையை அசைத்தேன். இல்லை, அப்படிச் செய்யமாட்டான். குறைந்தபட்சம் கொஞ்ச நாட்களுக்காவது அப்படிச் செய்ய மாட்டான், ஆனால்…

கரமனையாற்றில் சுப்புக்கண்தான் சேகவனைக் குளிப்பாட்டி நகைகளும் நெற்றிப்பட்டமும் அணிவித்தான். பழக்கமில்லாததனால் யானையின் காதுமணிகளை மாற்றி அணிவித்து விட்டான். “டேய், எரப்பாளி டேய்” என்று கூவியபடி நான் என்னை மறந்து முன்னகர்ந்தேன். “எடம்வலம் தெரியாத்த நாயே…” கேசவன் ம்ம் என்று அதிர்ந்தபோதுதான் என் அபாயம் புரிந்து பின்னால் தாவி மண்ணில் புரண்டு விழுந்து விட்டேன். முழங்காலில் சிராய்ப்புகளுடன் எழுந்தபோது மூவரும் என்னைப் பார்த்தனர். பிறகு பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். கேசவனின் பார்வை என் ஒவ்வொரு கணத்தையும் வேவு பார்க்கிறது என்று அப்போது உணர்ந்தேன். யானை எப்போதுமே அப்படித்தான் ஒன்றையும் மறப்பதில்லை. எப்போதுமே அந்தக் கணத்தில் வாழ்கின்றன அவை.

சுப்புக்கண்ணும் பாகர்களும் எனக்கு முதுகுகாட்டி யானையுடன் சென்று கொண்டிருந்தபோது நான் அவர்களின் பின்தலையையே பார்த்தபடி நடந்தேன். உதடுகள் அசைகின்றனவா, தலை ஆடுகிறதா? சைகையால் பேசிக் கொள்கிறார்களா? ஆனால் பேசிக் கொள்ளவே வேண்டாம், அவர்களுடைய உடல்கள் வழியாக அந்த ஏளனம் பரிமாறப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. இல்லை வெறும் ஐயமா? ஓர் எண்ணம் மனதில் எழுந்துவிட்டால் பிற்பாடு நினைப்பது எல்லாம் அதுதான். பார்ப்பதெல்லாம் அதுதான். அதுவல்லாமல் வேறு எதுவுமே இல்லை. சலிப்புடன் கைப்பிரம்பால் தரையை அடித்தபடி நடந்தேன்.

திருவிழா முடிந்த மறுநாள் போல இருந்தது நகரம். சாலைகளில் தென்பட்ட சிலரும் தூங்கியபடி நடப்பது போலிருந்தனர். கடைகளில் பல மூடியே கிடந்தன. ஆரியசாலையில் வழக்கம்போல் பொதிவண்டிகள் பாரம் இறக்கிக்கொண்டிருந்தன. என்றாலும்  சுறுசுறுப்பில்லாமல் விளக்கொளியில் நிழல்கள் ஆடுவதுபோல அசைந்தார்கள். கிழக்கு கோட்டையில் முற்றிலும் காவலே இல்லை. நாங்கள் பத்மதீர்த்தத்தை அணுகியபோது கோபுரத்திற்குப் பின்னால் வானம் வெளிற ஆரம்பித்து விட்டிருந்தது. முன்பென்றால் அது நாங்கள் கேசவனை கொட்டிலில் சேர்த்துவிட்டு ஊட்டுப்புரைக்கு சாப்பிடப்போகிற நேரம்.

அரண்மனையை நோக்கித் திரும்பியபோது எனக்கு ஏனோ மனம் பகீரிட்டது. அதே கணத்தில் கேசவனும் அப்படியே அசையாமல் நின்று விட்டான். அவன் காதுகள் அவ்வளவு நேரம் அசையாமலிருந்து நான் பார்த்ததே இல்லை. அவன் வயிற்றுக்குள் பெரியதோர் செம்புக் குட்டுவத்தை நகர்த்தியது போன்ற ஒலி எழுந்தது. சுப்புக்கண் பயந்து பின்னால் நகர்ந்துவிட்டான். பிற பாகர்களும் சிதறி விலகினர். கேசவன் துதிக்கையை தூக்கி நீட்டி நுனிமூக்கை அசைத்து வாசனை பிடித்தான். துதிக்கை காற்றில் துழாவித் துழாவி அலைந்தது. பின்பு அந்தப் பகுதியையே நடுக்கியபடி கேசவனின் பிளிறல் எழுந்தது. நான் விலகி ஓடி கோட்டைச் சுவருடன் ஒண்டிக் கொண்டேன்.

உரக்கப் பிளிறியபடி கேசவன் பெரும்பாறை உருள்வது போல கனத்து ஓடி அரண்மனைக் கிழக்கு முற்றத்தில் நின்று துதிக்கை தூக்கி நெற்றிமீது அறைந்தபடி கதறினான். பெரிய எடையொன்றுக்கு கீழே மாட்டி நசுங்கி வலி தாங்காமல் அலறுவது போலிருந்தது. அவன் குரலில் வெறியும் துயரமும் ஏறி ஏறி வந்தது. உடலை அலைபாய வைத்து, துதிக்கை தூக்கி சுழற்றி வீசி, கொம்பும் தலையும் குலுக்கி, மாறி மாறிப் பிளிறினான். அரண்மனை அந்த ஒலியில் நடுங்குவது போலிருந்தது. உப்பரிகைகளிலும் உள்ளறைகளிலும் சந்தடிகள் எழுந்தன. கீழே கூடத்தில் விளக்குகள் ஒவ்வொன்றாக எரிய சுவர்களில் நிழல்கள் எழுந்து கலந்து ஆடின. பேச்சொலிகள். கட்டளைகள். விளக்கொளியில் பெரிய சர்வாதிக்கார் வாளுடன் ஓடிவர பின்னால் காரியக்காரர்கள் வருவது தெரிந்தது. யானையைக் கண்டதும் அவர்கள் தயங்கி பின்னால் ஓடினார்கள்.

உப்பரிகை மீது விளக்குகள் எரிந்தன. உப்பரிகையின் மான்கண் மீன்கண் சாளரங்கள் வழியாக உள்ளேயிருந்த ஒளி பீரிட்டு இருட்டில் நீண்டு முற்றத்து வேப்பமரத்தில் பரவி ஆடியது. உப்பரிகை நோக்கி பலர் வந்து எட்டிப் பார்த்தார்கள். சர்வாதிக்காரர் இன்னொரு வாசலில் வந்து “எடா, ஆரெடா பாப்பான்? எடேய்” என்று கூவினார். சுப்புக்கண்ணும் பிற பாகர்களும் கைகளில் குச்சிகளுடன் தள்ளி நின்று “ஆனெ இவிடெ… ஆனெ இவிடெ” என்று குரல் எழுப்பினார்கள். கேசவன் எதையும் கேட்கவில்லை. கொம்பால் அந்த அரண்மனையையே பெயர்த்து சரித்துவிடுவது போல மத்தகம் தாழ்த்தி துதிக்கை சுழற்றிக் கதறியது. அதன் குரலில் ஆங்காரம் குறைந்துபோய் வெறும் துக்கம் மட்டும் ஒலிப்பது போல எனக்குத் தோன்றியது. மரணவீட்டில் எழக்கூடிய நெஞ்சு உடைந்த அழுகை போல “அய்யோ இனி நான் என்ன செய்வேன்” என்று கதறுகிறதா என்ன?

உள்ளே இருந்து இளையதம்புரான் வருவதைக் கண்டேன். அவர் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது. மூக்குத் துளைபோல இரட்டைக் குழல்கொண்ட தோள் உயரமான துப்பாக்கி. பழுத்த மூங்கில் நிறமான குழாய். ஈட்டி மரத்தாலான மட்டை. அதை தோளில் தூக்கியபடி வந்த தம்புரான் வாசலில் நின்று கடும் கோபத்தில் முகம் சுளித்து, “போ.. போடா” என்றார். கேசவன் காதை நிறுத்தி மெல்ல உடலை மட்டும் பின்வாங்கி கவனித்தது.

“போடா அஸத்தே… போடா” என்று இளமுறைத் தம்புரான் கூவியபடி துப்பாக்கியை அக்குளுக்கு மேலே பதித்து கேசவனை நோக்கி நீட்டினார். அவர் நீளமான பட்டு அங்கி அணிந்து செருப்பு போட்டிருந்தார். மூக்குக் கண்ணாடி பந்த வெளிச்சத்தில் தீக்கங்குகள் போல ஒளிவிட்டது. அவர் துப்பாக்கியை நீட்டியபடி மேலும் பின்னகர்ந்து குறி பார்த்தார். கேசவனின் துதிக்கை மெல்ல நீண்டது. குழந்தை கை நீட்டுவது போல, மலைப்பாம்பு தலை நீட்டுவது போல. இளைய தம்புரான் அந்தக் துப்பாக்கியின் கீழே உள்ள வளையத்துக்குள் சுட்டுவிரலால் அழுத்த அது மூடி திறந்து கொள்ளும் ஒலி கேட்டது.

கேசவன் சட்டென்று இரண்டு கல்படிகளில் கால்வைத்து ஏறி அகன்ற வெளிவாசலில் உடல் நெருக்கி உள்ளே போய் இளமுறைத் தம்புரானை நெருங்கி விட்டது. எல்லாம் ஒரு கணம்கூட இருக்காது. உள்ளே அலறல் ஒலிகள் கேட்டன. நான் “கேசவா” என்று கதறியபடி என்னை மறந்து யானையை நோக்கி ஓடினேன். யானையை அடைந்து அதன் பின்னங்காலில் என் பிரம்பால் அடித்தேன் “கேசவா கேசவா” என்று கூவினேன்.

பின்பக்கம் மல்லாந்து விழுந்த இளந்தம்புரான் ஓடி மாடிப்படியை அடைந்து படிகளில் ஆவேசமாக ஏறி மேலே ஓடினார். கேசவன் அந்த துப்பாக்கியை தன் துதிக்கையால் எடுத்துச் சுழற்றி நெற்றி மீது தூக்கி பின்பு கீழே போட்டது. மீண்டும் எடுத்து நெற்றி மீது தூக்கியது. பிறகு சுழற்றி வீசிவிட்டு அதையே உற்று பார்த்தபடி நின்றது. மிக மெல்ல அதை நெருங்கி கவனமாக துதிக்கையால் தொட்டு மெதுவாக எடுத்து பிளிறியபடி தரையில் போட்டு முன்காலால் மிதித்து சப்பையாக்கியது. இன்னொருமுறை பிளிறியபடி திரும்பியது .

அப்போதுதான் நான் விரிந்த அரண்மனையின் கூடத்தில் யானையுடன் தனித்து நிற்பதை உணர்ந்தேன். கூடமெங்கும் நாற்காலிகள் இரும்பு கட்டில்கள் பூத்தொட்டிகள் இன்னும் என்னென்னவோ பொருட்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பின்னால் பெரிய அரண்மனைச் சுவர்மட்டும்தான். என் கால்கள் கல்தூண்கள் போலக் கனத்தன. என்றால் இமைகளைகூட அசைக்க முடியவில்லை. ஆனால் கேசவன் என்னைப் பார்க்கவில்லை. வாசல் வழியாக வெளியே போகச் சென்றவன் தன் உடல் அதன் வழியாக நுழையுமா என்று ஐயப்பட்டு தயங்கி நின்றான்.

உடல் அதிர சிறு பிளிறல் ஒன்றை எழுப்பி விட்டு பின்னால் வந்தான். கூடத்துக்கு அப்பால் உள்வாசலில் நின்றபடி சர்வாதிக்காரர் “டேய் அதை தளைக்கெடா… தளைக்கெடா” என்று கூவினார். கேசவன் மீண்டும் முன்னால் நகர்ந்து வாசலில் நுழைந்தான். அவனுடைய உடல் வாசலில் இறுகியது. அவன் மறுபக்கம் சென்றபோது வாசல் சட்டத்தில் ஒன்று சடசடஒலியுடன் விரிசல்விட்டு உடைந்தது. வெளியே படியில் மிகக் கவனமாக கால் எடுத்து வைத்து இறங்கி முற்றத்துக்குப் போய்விட்டான். திரும்பி அரண்மனையைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியே ஓடினான்.

நான் முற்றத்தில் குதித்து பின்னால் ஓடினேன். உப்பரிகையில் தோன்றிய இளையதம்புரான் ஒரு சிறிய துப்பாக்கியால் கேசவனை குறிபார்த்த பிறகு உரக்க “டெவில்! பிளடி டெவில்!” என்று கூவினார். எனக்குப் பின்னால் சுப்புக்கண் ஓடி வந்தான். “ஆசானே, பெரிய தம்புரான் செத்துப்போய் மூணு நாளாச்சாம். பனிக்கட்டியிலே போட்டு ஊற வச்சு வச்சிருக்காங்களாம். சின்னவரு நம்பூதிரிமாரையும் நாயர் மாடம்பிமாரையுமெல்லாம் விளிச்சு பேசிட்டிருக்காராம். நாளைக்குத்தான் நாட்டுக்கு முரசறைஞ்சு சொல்லுவாங்களாம்…” என்றான்.

நான் மூச்சுவாங்க, “ஆருடே சொன்னது?” என்றேன்.

“கரமனையில சொன்னாங்க. ஆனை கண்டுபிடிச்சுப்போட்டு பாத்தேளா?”

“பெரியதம்புரான் இப்ப எங்க இருக்காரு?”

“வெள்ளைக்கார அப்போத்திகரிமாரு எடுத்துக் கொண்டுபோயி அவனுகளுக்க வைத்தியசாலையிலே வச்சிருக்கானுகளாம்.” என்றான் கருணன்

என்ன செய்வதென்று தெரியவில்லை. கேசவன் இப்போது எங்கே போயிருப்பான்? அப்போத்திகிரி வைத்தியசாலைக்கா? யானைகளுக்கு நம்மால் கற்பனைகூட செய்துவிட முடியாத அளவு மோப்ப சக்தி உண்டு என்பார் ஆசான்.

“நாமெல்லாம் மணம் பிடிக்கது மூக்காலே. ஆனை மணம் பிடிக்க அதுக்க ஆத்மாவலயாக்கும்டே” எனக்கு ஒரு கணம் கடும் சோர்வு வந்தது. என்ன செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. என்று தோன்றி சோர்ந்து அங்கேயே குந்தி அமர்ந்து விட்டேன்.

ஆனால் அமர்ந்தததுமே அப்படி அமர முடியாது என்றும் தோன்றிவிட்டது. கழுமரத்தில் சாவதற்கு யானையின் காலில் சாகலாம். அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என் தாத்தாவும் யானையால் தான் கொல்லப்பட்டார்கள். அப்பா மேலைத் தாமரைசேரி கிருஷ்ணனின் தந்தங்கள் மீது, ரத்தம்வழிந்த குடல் தெச்சிப்பூ மாலை போல தொங்கி மண்ணில் இழுபட, வைக்கோல் பொம்மை போல துவண்டு கிடந்ததை நான் கண்டேன். கொம்பும் தலையும் குலுக்கிப் பிளிறியபடி கிருஷ்ணன் திற்பரப்பு கோயிலைச்சுற்றி வந்தது. சடலத்தைக் கீழே போட்டுவிட்டு பின்னால் வந்தவர்களைத் துரத்த வந்தது. நானும் அம்மாவும் தம்பியும் தங்கைகளும் தூரத்தில் நின்று கதறி அழுதோம். “என்றே உடயதே… என்றே ராஜாவே… இனி எனக்கும் பிள்ளைகளுக்கு ஆருண்டு தம்புரானே” என்று அம்மா அடிவயிற்றில் ஓங்கி ஓங்கி அறைந்து கதறினாள்.

இரண்டாம்நாள் களியலில் இருந்து காட்டில் தடிபிடிக்கும் தாப்பானைகளைக் கொண்டு வந்து கிருஷ்ணனை மடக்கிப் பிடித்து வடம் போட்டுக் கட்டி அடக்கி காலுக்குச் சங்கிலி போட்டுத் தளைத்தார்கள். அப்பாவின் சடலம் எறும்புகளும் ஈக்களும் மொய்த்து, ரத்தம் கரிய பசையாக மாறி, நாற்றமடித்துக் கிடந்தது. அவரை தென்னை ஓலை பின்னி அதில் மண்வெட்டி வைத்து அள்ளி குவித்து சிதைக்குக் கொண்டு சென்றார்கள். கிருஷ்ணனின் அம்மா  கல்யாணிக்குட்டிதான் என் தாத்தாவையும் கொன்றாள் என்று சிதைக்கு சுற்றும் கூடியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஒருவாரம் வீட்டில் கொலைப்பட்டினி கிடந்தோம். அதற்கு அடுத்த வாரமே அம்மா அப்பாவின் அடுத்த பாகன் ராமன் நாயருடன் வாழ ஆரம்பித்தாள். அடுத்தவாரம் என்னை அவர் இழுத்து போட்டு உதைத்து கையில் தென்னை மட்டையுடன் ஆற்றுக்கரை வரை துரத்தி வந்தார். நான் தப்பி ஓடி கொல்லங்கோடு கோயிலுக்குப் போய் ஊட்டுப்புரையில் இலை பொறுக்கி எச்சிலைச் சாப்பிட்டு வளர்ந்தேன். அங்கே காவுங்கல் பார்கவனின் பாகன்  அச்சுநாயருக்கு உதவியாக சேர்ந்தேன். அச்சுநாயருக்கு பையன்களைப் பிடிக்கும்.

எழுந்து கச்சையை இறுக்கிக் கட்டியபின் தரையில் படிந்த கேசவனின் பாதங்களைப் பார்த்தபடி ஓடினேன். அவன் ஆரியசாலைக்குள் நுழையவில்லை. ஆனால் அந்த தடங்களின் திசையைப் பார்த்ததுமே எனக்குப் புரிந்துவிட்டது, அவன் திருவட்டாறுக்குத்தான் போகிறான் என்று. கரமனை வழியாக போவது மனிதர்களின் பாதை. யானைகள் எப்போதும் இயல்பாகவே  நூல்பிடித்தது போன்ற நேர்ப்பாதையை நாடுகின்றன. அந்த வழியை அவற்றின் ஆத்மாவில் வாழக்கூடிய ஒரு சூட்சுமமான பறவைதான் சொல்லிக் கொடுக்கிறது என்றார் ஆசான். “ஆனைக்கு பாதையில்லைடே… ஆனை போறவழியே பாதை”

கரமனை ஆற்றை சேறுமண்டிய ஒரு வளையில் கேசவன் தாண்டிச் சென்றிருப்பது தெரிந்தது. நானும் சேற்றில் பாய்ந்து கோரை புற்கள் உடலை அறுக்க உள்ளே சென்று நீரில் நீந்தி மறுபக்கம் சென்று மேலேறி விரைந்தேன். யானை சாலைக்கே போகவில்லை. வயல்கள், தோப்புகள், காடுகள் வழியாகவே சென்றிருந்தது. இரண்டு இடங்களில் ஓடைகளைத் தாண்டியிருந்தது. ஓடைகளின் கரைகளில் அதன் கனத்த காலடிகள் பட்டு சேறும் புற்களும் சிதைந்து கலங்கியிருந்தன. நெய்யாற்றின் கரையில்தான் அது சாலையில் ஏறியிருந்தது. ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் வயலில் இறங்கி தோப்புகள் வழியாக ஊடுருவிச் சென்றிருந்தது. மூன்று இடங்களில் அதன் பிண்டத்தையும் மூத்திரத்தையும் பார்த்தேன். எங்கும் அது நின்ற மாதிரி தெரியவில்லை.

வழியில் என் உடல் களைத்து அப்படியே ஒரு வயல் வரப்பில் படுத்து தூங்கிவிட்டேன். சிறிது நேரம்தான்.  யானையின் உடலசைவுகள் என் உள்ளூர ஓடிக்கொண்டிருந்தன. யானையின் கனத்த காலடிகள் சேற்றில் மிதிபடுகின்றன. புல்லுடன் மண்சிவந்து குழைகிறது. அது ஒரு ரணமாகிறது. ரத்தம் குமிழியிடுகிறது பச்சை ரத்தத்தின் மணத்தை உணர்ந்தேன். மணமா, நாற்றமல்லவா? ஆனால் அது நறுமணம் என்றே தோன்றியது. உடலில் நரம்புகளையெல்லாம் மலரச்செய்யும் நறுமணம். குனிந்து ரத்தத்தை சேற்றுடன் அள்ளினேன். அதில் வெள்ளி நிறமான பரல்மீன்கள் நீந்தின. திடீரென்று ரத்தம் நாற்றம் எடுக்க ஆரம்பித்து. நசுங்கித் தரையுடன் ஒட்டியிருந்த அப்பாவின்தலை. இரு கண்களும் நுங்குமுற்றல் போல கண்குழிகளைவிட்டு பிதுங்கி வெளியே விழுந்து கிடந்தன. குடற்புழு போன்ற நரம்புகளால் அந்தக் கண்கள் கண் இருந்த சிவப்புக் குழியுடன் இணைக்கப்பட்டிருந்தன. வாய் நொறுங்கி உள்ளே பற்கள் பொரிபோல நிறைந்திருந்தன.

நான் உடல் அதிர விழித்துக் கொண்டேன். விழித்த வேகத்திலேயே எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். இம்முறை யானையின் தடத்துக்காக காத்திருக்கவில்லை. புதர்களைத் தாண்டி சேற்றுப் பரப்புகளைத் தாண்டி ஒரே மூச்சில் அம்பு போல திருவட்டாறு நோக்கி ஓடினேன். திருவட்டாறுக்கு நான் சென்று சேரும்போது மாலை மயங்க ஆரம்பித்திருந்தது. ஊரே அமைதியாகக் கிடந்தது. இங்கும் செய்தி வந்திருக்கும் போலும். கோயிலுக்குப் பின்பக்கம் வழியாக ஓடி பெருந்தெருவுக்கள் நுழைந்து இடதுபக்கம் திரும்பி யானைக் கொட்டிலை நோக்கிச் சென்றேன். யானைக் கொட்டிலில் கேசவன் இருப்பது எனக்கு பார்க்காமலேயே தெரிந்துவிட்டது. அக்கணமே என் உடல் தளர்ந்தது. மூச்சு வாங்க உடம்பெங்கும் ஆவி எழ கனத்த கைகால்களை முழு மனத்தாலும் உந்தி உந்தி கொட்டிலை நோக்கிச் சென்றேன்.

கேசவன் அவனுடைய இடத்தில் அந்த கருங்கல்தூணை ஒட்டி நின்று கொண்டிருந்தது. ஓலை தின்னவில்லை. உடலில் காதுகளின் வீசல் தவிர அசைவே இல்லை. அவன் என்னை வெகுதூரம் முன்னரே பார்த்துவிட்டான் என்று எனக்குத் தெரிந்தது. நான் பின்னால் வருவதுகூட அவனுக்குத் தெரிந்திருக்கும். அவன் உடல் சேற்றால் மூடியிருந்தது. முதுகில் சருகுகளும் உதிர்ந்த மலர்களும் கிடந்தன. நான் அவனை உற்றுப்பார்த்தேன். என் பார்வையால் அவன் சருமம் ஆங்காங்கே சிலிர்ப்பதைக் கண்டேன். மெல்ல ஒரு அடி எடுத்து வைத்தேன். அவன் தன் துதிக்கையை சுருட்டிக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்.

நான் சிலகணங்கள் அசையாமல் நின்றேன். பின்பு புன்னகை புரிந்தேன். என் பிரம்பை வீசியபடி கேசவனை நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க அவனுடைய காதுகள் நிலைத்தன. அருகே போய் அவனுடைய கொம்புகளின் அருகே நின்றேன். பிரம்பால் அவன் காலை அடித்தபடி “ஆனே, காலெடு ஆனே” என்றேன். கேசவன் மிக மெல்லத் தன் முன்னங்காலைத் தூக்கி மடித்துக் காட்டினான் அதை நம்ப முடியாதவன் போல அவனுடைய கண்களைப் பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து நீண்ட தடமாக இறங்கியிருந்தது. மடித்த கால்களில் கால் வைத்து எம்பி கழுத்துக் கயிற்றைப் பிடித்து மேலேறி அவனுடைய உயர்ந்த மத்தகத்தின் மீது அமர்ந்து கொண்டேன்.

முற்றும்

முந்தைய கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 4
அடுத்த கட்டுரைதூரன், கடிதங்கள்