சுவையாகி வருவது- 2

 CO2B0413[  3   ]

 

வண்ணதாசனின் கதைகள் வெளிப்படுத்தும் சுவை மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். முதன்மையாக மனிதர்கள். அடுத்ததாக இடங்கள். மூன்றாவதாக பருவம். இவற்றில் மனிதர்களைத் தவிர்த்த பிற இரண்டும் பெரும்பாலும் மனிதர்களைக் குறித்த சித்தரிப்பின் பின்புலமாகவே அமைகின்றன. நிலம் மனிதர்களை ஏந்தி கண்ணருகே காட்டும் ஒரு உள்ளங்கை மட்டுமே அவருக்கு. பருவம் என்பது அத்தருணத்தின் உணர்வு நிலைக்கு அழகு கூட்டும் ஒரு சூழல்.

ஆகவே நிலச்சித்தரிப்பு அவருடைய புனைவுகளில் வெவ்வேறான வகைபேதங்களுடன் பெரும்பாலும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் சாலைகள்தான் அவரது கதைகளின் பின்புலக்காட்சிகளாக வருகின்றன. மெல்ல நடந்து போகும் ஒருவனின் அலையும் கண்களுக்கு முன் தன்னைக் காட்சியாக்கும் சாலையோரப் பொருட்களே வண்ணதாசனின் புனைவுலகில் நுழைகின்றன. கடையோரங்கள்,தலைச்சுமையர்கள், வழிப்போக்கர்கள். அபூர்வமாகவே ஓர் அருவியும் நான்கு சிரிப்பும் போன்ற கதைகளில் குற்றாலத்தின் நீர்க் கொப்பளிப்பும் மானுடச் சுழிப்பும் வெளிப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி நகரத்தின் ஒரு சில பகுதிகளின் காட்சிப் பதிவு என மேலோட்டமாக இவை தோற்றமளிக்கின்றன. ஆனால் அவரது பார்வை எவற்றைத் தொட்டெடுக்கிறது எவற்றை விட்டுவிடுகிறதென்பது எப்போதும் முக்கியமானது.வண்ணதாசனின் பார்வையில் படியும் நிலமென்பது அந்நிலத்துடன் பிணைந்த ஏதோ மனிதரால் அடையாளப்படுத்தப்பட்டதாக அவருக்குரியதாக மட்டுமே தன்னைக் காட்டிக் கொள்வதாக இருக்கும். கூடை முடையும் ஒருவர் அமர்ந்திருக்கும் இடம் அவரால் அர்த்தப்படும். செருப்பு தைக்கும் ஒருவரின் இடம் அவருக்குரியது. வண்ணதாசனின் காட்சிப்புலம் எப்போதும் அம்மனிதர்களின் இயல்பைத் தான் வாங்கிக் கொள்ளும்.

ஜுடி அன்னத்தை பார்க்கப்போகிறவன் [போய்க்கொண்டிருப்பவள்] சாக்கடையிலும் அபாரமாக மின்னும் ஒரு சரிகையை பார்த்துக் கொண்டு செல்கிறான் [கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்] காட்சிகள் சித்தரிக்கப்படுவதில் வண்ணதாசன் என்னும் ஓவியரின் கண்ணும் கையும் தொழில்படுகின்றன. முதன்மையாக காட்சிகளில் உள்ள ஒளியையும் வண்ணத்தையும்தான் அவை குறிப்பிடுகின்றன. அதன் பிறகுதான் வடிவங்கள்.

இக்காட்சிகள் அனைத்தும் மிக ஆர்வமூட்டும் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளன. ஒரு பொருள் இரு பின்புலங்கள் கொண்டது. ஒன்று அதன் பயன்பாட்டுத்தளம். இன்னொன்று அது பிற பொருட்களுடன் கொண்டுள்ள உறவு. இது இரண்டிலிருந்தும் அப்பொருளைப் பிரித்தெடுத்து வண்ணமும் வடிவமும் மட்டுமாக நிறுத்தும் ஒரு தன்மை வண்ணதாசனின் சித்தரிப்புகளுக்கு உண்டு. இதை தான் ஓவியனின் கண் என்று சொன்னேன்.சாலையோரத்தின் கிடக்கும் ஒரு சிகரெட் அட்டை அதன் தோற்றத்தாலும் அழகாலும் மட்டுமே கதைக்குள் இடம் பெறுகிறது. ட்ராலியில் சீராக நகரும்ம் ஒளிப்பதிவுக் கருவியால் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் புறக்காட்சிகள் போல.

இவ்வாறு பொருளின் இரு பின்புலங்களையும் வெட்டிவிடுவதின் வழியாக தான் சித்தரிக்கும் மொழிப்புலத்திற்குள் தன்னுடைய காட்சி எல்லைக்குள் அப்பொருள் தன்னிச்சையாக இருந்து கொண்டிருக்க வண்ணாதாசன் அனுமதிக்கிறார். பொருளின் பல்வேறு அர்த்த சாத்தியங்கள் அகற்றப்படுவதால் தன் பொருள்தன்மையின் மூலமே அவை நம்மிடம் உரையாடியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறார். அது அளிக்கும் புதிய சாத்தியங்கள் தான் வண்ணதாசனின் காட்சி உலகம் என்று சொல்லலாம். வெவ்வேறு கதைகளிலிருந்து இதை உணரும் பத்திகளை வாசகன் தொட்டெடுக்க்கலாம்.

இவ்வாறு பொருள்வயப் பின்புலமாக மட்டுமே வண்ணதாசனின் நிலம் கதைகளுக்குள் காட்சியாகிறது. திரைமொழி அறிந்த ஒரு வாசகன் பெரும்பாலும் அண்மைக்காட்சிகளால் ஆன சித்தரிப்பு என்று இவரது கதைகளைச் சொல்லிவிடமுடியும். விரிந்த நிலக்காட்சி அனேகமாக இக்கதைகளில் இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு தெருவையோ ஒரு கட்டிடத்தையோ கூட வண்ணதாசனின் கதை சென்று தொடுவதில்லை. ஏனெனில் விரிந்த காட்சிகள் என்பவை வெளியின் சித்திரங்கள். அவை பொருட்களின் பெருந்தொதொகுப்பு. வண்ணதாசனின் நிலம் தனிப்பொருட்களால் ஆனது காடென ஒன்று அவர் படைப்புகளில் எழுவதில்லை. மலர் சூடி நின்றிருக்கும் சிறிய செடிகளே முகம் கொள்கின்றன.

இத்தகைய அவதானிப்புகள் ஒரு கலைஞனென்ற வகையில் வண்ணதாசனின் உள்ளத்திற்குள் நாம் செல்வதற்கு பெரிதும் உதவக்கூடிய பாதைகளை அமைக்கின்றன. தேனுண்ணிகள் மலர்கள் கொண்டுள்ள வெவ்வேறு வகையான தோற்றங்களுக்கேற்ப உருமாறி உள்ளே செல்வதை பார்க்கிறோம். முற்றிலும் தலைகவிழ்ந்து நிற்கும் மலர்களும் உண்டு. தேனுண்ணி பறந்தபடியே கவிழ்ந்து அவற்றுக்குள் நுழைகிறது. புனைவுக்குள் நுழையும் வாசகன் கொள்ள வேண்டிய பாவனைகளை அவ்வெழுத்தின் கலைசார் பாவனைகள் தீர்மானிக்கின்றன. மிகச்சிறிய நுண்மைகள் வழியாக தன்னையே நுண்மையாக்கிக் கொண்டு மட்டுமே ஒரு வாசகன் வண்ணதாசனுக்குள் நுழைய முடிகிறது

என்ன காரணத்தினால் வண்னதாசனின் புனைவுகளுக்குள் கடந்த காலம் வரலாறோ இல்லையோ அதே காரணத்தினால்தான் அவரது படைப்புகளில் விரிந்த நிலக்காட்சிகளும் இல்லை. எல்லையை மேலும் மேலும் குறுக்குவதினூடாக நுண்மை நோக்கிச் செல்லும் சுவைசார்ந்த பயணம் அவருடைய படைப்புலகம். அவருடைய படைப்புகளில் நாம் காணும் மிக நுணுக்கமான ஓர் உள அசைவு அல்லது நிகழ்வுமாறுபாடு என்பது பிற அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு நம்மைக் கூர்மையாக்கிக்கொண்டு முன்செல்வதன் வழியாக நாம் அறியும் ஒன்று.

இதே காரணத்தினால்தான் பெரும்பாலும் சிறிய கவிதைகளும் கவிதைக்கு அருகே செல்லும் சிறுகதைகளும் மட்டுமே அவரால் எழுதப்பட்டுள்ளன. விரிந்த புலத்தில் காலம் மடிப்புகளாகவும் அலைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு பெரிய படைப்பை எழுதுவதற்கான தூண்டுதலை அவர் பெற்றதில்லை. துண்டுபடுத்தப்பட்ட காலத்திற்குள் நிகழும் வாழ்க்கையே அவருடையது. பனித்துளிக்குள் தெரியும் பனை என்று சொல்லலாம்.

இவ்வியல்பால் தான் அவரது படைப்புகள் பெரும்பாலும் குறைத்துச் சொல்லி வாசகனை ஊகிக்க விட்டு நின்றிருக்கும் அமைதி கொண்டுள்ளன. அவர் சொல்ல விரும்பும் அனைத்தும் எதுவும் நிகழாத அன்றாட வாழ்க்கைக்குள் அமைந்தாகவேண்டும் எனும்போது அவை குறிப்புணர்த்தலாகவே நிகழ முடியும். எனவேதான் வண்ணதாசனின் பல கதைகள் கதைக்குள் மறைக்கப்பட்ட கதை கொண்டவையாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ”நீ இப்போது இறங்கும் ஆறு” என்னும் கதை குறித்து சுஜாதா ”மிகத்திறமையாக ஒரு கதை ஒளித்து வைக்கப்பட்டுள்ள கதை” என்று சொன்னார். கணிசமான கதைகளுக்குள் இந்த வரையறை பொருந்தும்.

எப்போதும் அவருடைய கூறப்பட்ட கதைகளுக்குள் உணர்த்தப்படும் வேறு கதை ஒளிந்திருக்கும். இந்த வகையான நுண்சித்தரிப்புக்குள் பெரிய கதைகள் அவ்வண்ணமே திகழ முடியும். பொற்கொல்லன் தன் நுண்கிடுக்கியால் தொட்டெடுத்து வைக்கும் ஒரு சிறு பொன்மணி போன்றவை அவருடைய கதைகள். அவை எங்கு சென்று அமையும் என்று ஊகிக்கும் ஒரு வாசகன் அந்த முழு நகையையும் தன் கற்பனையால் காண முடியும். இங்கிருந்து அங்கு செல்லும் வாசகனுக்குரியவை அக்கதைகள்.

அவரது கதைகள் அளிக்கும் அனுபவம் என்பதும் அந்த கணம் விரியும் தருணங்கள்தான்.அவ்வகையில் பார்த்தால் வண்ணதாசனின் நிலக்காட்சிகள் அனைத்தும் அகன்ற பெருநிலத்தை குறிப்புணர்த்தும் சிறிய நிலச்சித்தரிப்புகள்தான். சிறுமலர் சூடி நிற்கும் இச்செடி அது நின்றிருக்கும் பெருநகரத்தை தன் கற்பனையால் விரித்துக் கொள்ளும்படி வாசகனுக்கு சொல்கிறது.

வண்ணதாசனின் பருவ சித்தரிப்புகள் பெரும்பாலும் அவருடைய கற்பனையுலகிலிருந்து எழுபவை. மிக அரிதாகவே மழை பெய்யும் பாளையங்கோட்டை அவர் காட்டும் சித்தரிப்புகளில் ஒப்பு நோக்க அதிகமான மழையும் ஈரமும் கொண்டதாக இருப்பதை வண்ணதாசனின் கதைகளைப் படிப்பவர்கள் அறியலாம். அது வண்ணதாசன் தன் புனைவுலகின் மேல் பரப்ப விரும்பும் ஈரம் மட்டுமே. முன்பனிக்காலத்தின் குளிரும் முதல் மழைக்காலத்தின் ஈரமும் கொண்டவை அவரது சூழல்கல். அரிதாக தகிக்கும் கோடை சித்தரிக்கப்படும்போது கூட வீட்டுக்குள் நுழைவதன் குளிர்ச்சியும் இளங்காற்றின் தழுவல் அளிக்கும் சிலிர்ப்பையும் அவரது கதைகள் சித்தரிக்கின்றன.

பருவச் சித்தரிப்புகளின் ஊடாக வண்ணதாசன் அவர் உருவாக்கும் கதை மாந்தர்களின் உணர்வுகளுக்கு மெல்லிய அடிக்கோடொன்றை இடுகின்றார் அவருடைய கதைகள் அன்றாட வாழ்க்கையில் எளிய நகர்சார் சூழலில் மிகச்சாதாரணமான மானுடர்களுக்கு நிகழ்பவை. அவற்றில் கற்பனாவாத அம்சத்திற்கு இடமே இல்லை. வண்ணதாசன் புனைவுலகம் எப்போதுமே கறாரான இயல்புவாதச் சித்தரிப்பாலானது. ஆனால் அதன் மேல் பருவகாலத்தின் ஈரச்சம் படரவிடுவதன் வழியாகவே அவர் அதை நெகிழச் செய்கிறார். அச்சித்திரங்கள் அப்பருவத்தால் மேலதிக அர்த்தம் அளிக்கப்படுகின்றன. அவர் புனைவுலகில் குறைவாகவே சித்தரிக்கப்படும் கசப்புக்கு அவை இளைப்பாறலாக ஆகின்றன.

 

 

 

3333

 

[   4  ]

 

 

அடிப்படையில் சுவைஞனாகிய என் தந்தை ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான நில அடையாளத்தைக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கு என்றால் அது கருங்கல் பகுதியின் செம்மண் நிலத்தில் இருந்து வரவேண்டும். வாழை என்றால் பேச்சிப்பாறையின் கரிய மண்ணிலிருந்து. மீனென்றால் தேங்காப்பட்டிணத்திற்கு கீழாக உள்ள கடற்கரைகளில் இருந்து.  ஒவ்வொன்றுக்கும்  நிலம்  அதற்கான தனிச்சுவையென அதற்குள் ஊடியிருக்கிறது. தேர்ந்த சுவைஞன் கீரையை கசக்கிப்பார்த்து எந்த நிலத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிட முடியும். வாழைப்பழத்தை முதல் வாயிலேயே அதன் மண்ணின் சுவையை அறிந்துவிடமுடியும். மண்ணில் ஒரு பகுதியாகவே தாவரங்கள் எழுகின்றன. உயிர்கள் பிறந்து வருகின்றன். மனிதர்களும் அப்படித்தான்.

 

 

வண்ணதாசனுக்கு விருது கொடுக்கும் செய்தி என் தளத்தில் வந்த போது வந்த கடிதங்களிலிருந்து அவரது வாசகர்களின் இயல்புகளைப் பற்றிய ஒரு பொதுப்புரிதலுக்கு நான் ஆளானேன்.  கணிசமான கடிதங்கள் ஒட்டப்பிடாரத்திலோ கோயில்பட்டியிலோ அருப்புக்கோட்டையிலோ வரண்ட நிலங்களைச் சார்ந்த மக்களால் எழுதப்பட்டவை. அவர்கள் தங்கள் பிறப்பியல்பால் வளர்ப்பால் மனிதர்களைப்பற்றிய ஐயமும் விலக்கமும் கொண்டவர்களாக இருந்தார்கள். வண்ணதாசனின் கதைகளினூடாக ஓர் ஈரத்தைப்பற்றிக் கொண்டதாகவும் அதனூடாக மனிதர்களை நேசிக்கவும் வெல்லவும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் நிலைத்ததாகவும் அவர்கள் எழுதியிருந்தார்கள்.

 

ஒருவகையில் பார்த்தால் எல்லா எழுத்துக்களும் அதற்கான வாச்கர்களுடனான உரையாடலில் இருந்தே உருவாகின்றன. இந்த உரையாடல் வண்ணதாசனுக்கும் அவரது வாசகர்களுக்கும் நடுவே கடந்த முப்பதாண்டுக்காலமாக மௌனமாக நடந்துவருகிறது. இதைப்புரிந்துகொள்வதில் நம் அறிவியக்கம் ஈடுபடவே இல்லை. அது எளிய முன்முடிவுகள், அடையாளங்களுடன் கடந்துசெல்லவே அது முயன்றிருக்கிறது

 

வண்ணதாசன் வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த ஈரத்தைப்பற்றியே நான் மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்நிலத்தை என் கற்பனையில் விரிக்கும் போதெல்லாம் உடைமுள் தான் நினைவில் எழுகிறது. கல்பற்றா நாராயணன் கவிதை வரியை அடியொற்றி சொல்லப்போனால்

 

எத்தனை நொந்திருந்தால்

காஞ்சிரம் இத்தனை கசந்திருக்கும்.

எத்தனை அஞ்சியிருந்தால் முருக்கு

இத்தனை முள் சூடியிருக்கும்.

 

 

அரிதாக கிடைத்த வேர்நீரைக்கொண்டு முளைக்க வைத்துப்பரப்பிய இலைகளை ஆடுகளிடமிருந்தும் முயல்களிடமிருந்தும் காக்கும் பொருட்டு கசப்பு ஊறி,  கூரிய முட்களை ஆயுதமாகச் சூடி நின்றிருக்கும் உடைமுள் போன்றவர்கள் தான் அங்குள்ள மனிதர்களும் என்று பட்டது.

 

எனது நிலம் வேறு. இங்கு பசுமையே முதன்மையானது. பசுமையென்பது நீர். குமரி மாவட்டத்தின் எந்தக்காட்டுக்குள்ளும் இரண்டு கிலோ மீட்டர் ஓடி புகுந்து வரலாம். நாய்க்கூட்டத்தின் நாக்குகள் போல நக்கிச் செல்லும் ஈரம் மிக்க இலைகளையே நாம் உணர்வோம். ஆனால் அமைக்கப்பட்ட வழிகளன்றி சற்று காலெடுத்து வைத்தாலும் பாம்புக்கூட்டம் போல செடிகள் படமெடுத்து நஞ்சுடன் கொத்துவது பொட்டலின் இயல்பு.

 

அங்கு வளர்ந்த மனிதர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கவனமாக அணுகு என்று ஒவ்வொரு செடியும் எச்சரிக்கும் ஒரு நிலம். உறவுகள் வேறுவகையானவை. எனது நிலத்தின் மரமாகிய தென்னை தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு இலைநுனிகளால் மட்டுமே பிற மரங்களை தொட்டு தன்னில் நிறைந்து வானில் ஆடி நின்றிருக்கும் ஒன்று. அதன் வேர்கள் ஆழத்தில் ஒன்றெனப்பின்னியிருக்கலாம். வெளியே அதன் நிலத்தில் பிறிதொன்றுக்கு இடமில்லை. ஆனால் பொட்டலிலோ பின்னிப் பிணைந்து ஒற்றை பெருக்கென அன்றி அள்ள முடியாததாக நின்றிருக்கிறது உடைமுள்.

 

அந்நிலத்திலிருந்து வந்த மனிதர்களுக்குரியதா வண்ணதாசனின் கதை? அக்கதைகளில் ஓயாது பெய்து கொண்டிருக்கும் இளமழை என்பது அப்பாலை நிலம் கொண்டிருக்கும் கனவுதானா? மீண்டும் மீண்டும் அம்மக்கள் இக்கதைகளுக்குள் சென்று கண்டு கொண்டிருப்பது எதன்பொருட்டு? மனிதர்கள் கனிவு கொண்டிருக்கிறார்கள் என்று வண்ணதாசன் வெவ்வேறு வார்த்தைகளில் கதைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார். பேட்டிகளிலும் உரையாடல்களிலும் கூட அதைச் சொல்கிறார். கனிவை இவ்வேனில் வெளியின் ஆழத்திலிருந்து  அகழ்ந்தெடுத்து வைக்கிறாரா என்ன?

 

ஒரு கோணத்தில் அது இல்லையென்றும் தோன்றுகிறது. சுட்ட பனம்பழத்துக்கு நிகரான இனிமை கொண்ட பழத்தை எவரும் உண்டு விட முடியாது. கள்ளிப்பழத்துக்கு நிகரான மணம் எந்தக் கனிக்கும் இல்லை. பாலை தன் பிறிதொரு உச்சத்தில் இனிமையையும் நறுமணத்தையும் சூடத்தான் செய்கிறது. அத்தனை இனிமை இருந்தால் மட்டுமே அங்கு கேள் கொண்டு வாழ முடியும் என்பது போல அத்தனை நறுமணம் கொண்டால் மட்டுமே அங்கு விதையும் வேரும் கொண்டு பரக்க முடியும் என்பது போல. வரண்ட உயிர்வெளியிலிருந்து அதன் சாரமென எங்கோ கரந்திருக்கும் இனிமையையும் நறுமணத்தையும் மட்டும் எடுத்து வைக்கும் வண்ணதாசனின் கதைகளின் நோக்கம் ஒரு மாபெரும் சமன்படுத்தல்தானென்று தோன்றுகிறது.

 

வண்ணதாசனின் சுவையுணர்வு மீண்டும் மீண்டும் மனிதர்களை சித்தரிப்பதிலேயே முழுமை கொள்கிறது. எளிய மனிதர்கள், தங்கள் அன்பன்றி தனித்தன்மை ஏதுமில்லாதவர்கள் முகங்களென மின்னி மின்னி வந்துசெல்கிறார்கள். முன்பு திரிச்சூர் நாடகவிழாவில் நான் கண்ட நாடகத்தில் மேடைக்கு வந்த இயக்குநர் தன் கைகளில் இருந்த பீய்ச்சொளி விளக்குகளால் கரிய திரைமூடிய மேடையின் இருளில் சிலபகுதிகளைத் துலக்கி அங்கு நின்றிருந்த முகங்களைக் காட்டினார். அவ்வொளியில் அவை வந்து அழுது சிரித்து சினந்து உரைத்து இருளுக்கு மீண்டன. துலங்கித் துலங்கி முன்வரும் அத்தகைய முகங்களின் பரப்பு வண்ணதாசன் கதைகள். அவர் அவ்விளக்குகளுடன் மேடையில் எப்போதுமிருக்கிறார்

 

அவருடைய படைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் வரிகளைச் சொல்லும் மனிதர்கள் மிகக்குறைவு. தீவிரமான இக்கட்டுகளுக்கோ உணர்ச்சி உச்சங்களுக்கோ செல்லும் கதைமாந்தர் அரிது. ஏனென்றால் அவர்கள் கரிசல்செடிகள் போல இருத்தலுக்கான போரில் எப்போதுமிருப்பவர்கள். கிளைபின்னி வேரடர்ந்த வாழ்க்கை கொண்டவர்கள். அவ்வன்றாட வாழ்க்கைப் பரப்பில் முன் தோன்றி புன்ன்கைத்து பின் மறையும் இம்முகங்கள் அனைத்தும் எங்கோ எப்போதோ நாம் பார்த்தவை போல் உள்ளன. மிக எளிய கண்கள். கனிந்த புன்னகைகள். ஆற்றங்கரைக் கூழாங்கல் போல ஆயிரம் முறை சொல்லப்பட்டதால் மெருகேறிப்போன சொற்கள்.

 

தன் கதைகளில் வண்ணதாசன் இந்தக் கதாபாத்திரங்களின் உறவுகளைத் தான் எப்போதும் சொல்லிச் செல்கிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் தாங்கள் கொள்ளும் இன்றியமையாத உரசல்களுக்கு அப்பால் நேசத்திற்கென கை நீட்டுகிறார்கள்.  கசப்புகளைக் கடந்து வந்து தழுவிக் கொள்கிறார்கள். மிகச்சிறிய இடங்களுக்குள் முற்றிலும் ஒத்திசைந்து வாழக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு சாலையில் நடக்கும் போது ஒருவரை ஒருவர் மெய்களால் தழுவிக்கொள்கிறார்கள்.

 

முகங்களைச் சொல்வதில் வண்ணதாசனுக்கு இருக்கும் திறன் என்பது அவருள் வாழும் ஓவியனின் கைகளால் உருவாக்கப்பட்டது. பெரும்பாலான வண்ணதாசனின் கதாபாத்திரங்களை விரைவான கோட்டோவியங்கள் என்று சொல்லலாம். கணிசமான காட்சிகளை அவர் ஒற்றைச் சொற்றொடரிலேயே உருவாக்குகிறார் என்பதை வாசகர் அறியலாம். ”எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும்” என ஒரே வரியில் ஒரு பொட்டல்நிலத்தின் சித்திரம் வந்துசெல்கிறது.

 

எப்படி காட்சிகளை அவற்றின் இருபெரும் விரிவுகளிலிருந்து வெட்டி எடுக்கிறாரோ அவ்வாறே மனிதர்களை அவர்களின் பகைப்புலத்தில் இருந்தும் இறந்த காலத்தில் இருந்தும் வெட்டி விடுகிறார். அவர்களின் தோற்றம் மட்டுமேயாக அக்கதைகளுக்குள் வந்து நிற்கிறார்கள். மிகச்சிறிய நுட்பங்கள் வழியாக வண்ணதாசன் முகங்களை நினைவில் நிறுத்துகிறார். இக்கட்டுரைக்காக அவருடைய எந்தக் கதையையும் தேடி எடுத்து படிக்கக்கூடாது என்று எண்ணினேன். இயல்பாகவே இந்தச் சித்திரங்கள் என் உள்ளத்தில் எழுகிறது என்று தோன்றுகிறது. வேறு வேறு அணில்கள் கதையில் கூடைக்காரக் கிழவி புன்னகைக்கும் போது இதழ்களுக்கு நடுவில் வந்து செல்லும் வெற்றிலைச்சாறின் சிறிய குமிழ் ஒன்று என் நினைவில் வந்தது. வீட்டுக்கு விருந்தாளியாக வந்து  ‘பரவாயில்லை கொஞ்சம்போல குடித்தோம்’ என்று வாய்பொத்திச் சொல்லி என்று திண்ணையிலேயே அமர்ந்திருக்கும் கிராமத்துப் பெரியவர்.

 

 

புகழ் பெற்ற கதைகளின் காட்சிகளுக்கு நிகராகவே அவரது பல  அதிகம் வாசிக்கப்படாத கதைகளிலிருந்து மனிதர்கள் தங்கள் அசைவுகளுடன் எழுந்து வருகிறார்கள். அவர்கள் ஒன்று திரண்டு ஒரு மக்கள்பரப்பென ஆகிறார்கள். ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பிரிக்க முடிவதில்லை, உடைமுள் குவை போல.  ஒருமுகம் இன்னொன்றை அறிமுகம் செய்கிறது. இன்னொன்றென உருமாறி தான் காட்டுகிறது.  ரயிலில் நம் அருகே அமர்ந்து அறிமுகம் செய்து கொண்டு தன் வாழ்க்கை முழுமையையும் சொல்லும் முகங்கள் அல்ல. ரயில்சாளரத்தினூடாக சாலையோரத்தில் கணம் ஒன்று எனமின்னி மறையும் முகங்கள். கணம்திறந்து காலமெனக் காட்டி அணைவதுபோன்றது வண்ணதாசனின் முகங்களைக் காணும் அனுபவம்

 

அந்த ஒற்றை படச்சட்டத்திலேயே நமக்கு அவர்களின் குணச்சித்திரத்தை வாழ்க்கையை உவகையை இழப்பை துயரை வெற்றியை அறிமுகம் செய்கின்றன. அவற்றினூடாகவே வண்ணதாசனை நாம் மேலும் அணுக்கமாக அறிந்து கொள்கிறோம். இம்முகங்களினூடாக கடந்து போகும் வாசகன் மேலும் மேலும் மனிதர்களை நேசிக்ககற்றுக்கொள்கிறான். வாழ்வதனூடாகவே வாழ்வின் சாட்சியென இருந்துகொள்வதன் இன்பத்தை அறிகிறான். இந்த முகச் சித்திரங்கள் வழியாக வண்ணதாசன் காட்டுவது நெல்லையின் சுவையை என்று சொல்லலாம். முகங்களுக்குப் பின்னணியாகவே  நிலமும் பருவகாலமும் அவரது படைப்புகளில் அமைந்துள்ளன.

 

வண்ணதாசனின் புனைவுலகில் மனிதர்கள் மெல்லத் தொட்டுக்கொள்ளும் நுண்தருணங்களே பெரும்பாலும் உச்சங்களாக அமைகின்றன. நீருக்குள் விழிமூடி நீந்திச் செல்லும்போது எவருடையவோ கால் ஒன்று நம்மைத் தொட்டுச் செல்வது போல, அத்தொடுகையிலேயே அவர் எவரென நாம் அறிந்து கொள்வது போல. அந்த தொடுகையின் மர்மக்கணம் நிகழும் தருணத்தை பல்வேறு காட்சி சித்தரிப்புகளை உணர்வுகளை சொற்சித்திரங்கள் வழியாக நிகழ்த்திச்சென்று கதைக்குள் நிறுவிவிடுகிறார் வண்ணதாசன். அத்தருணத்தை தன் வாழ்க்கையில்  எங்கோ முன்பு காண முடிந்த வாசகன் ஆம் இது மனிதகணம் என்று அடையாளம் கண்டு கொள்கிறான்.

 

வண்ணதாசனின் புனைவுலகு எனக்கு சுவையினூடாக அறியப்படுவதுதான்.  பொதுவான இல்லத்து அங்கணத்தில் இட்ட மெத்தையில் படுத்து எழுந்து செல்லும் ஒருவனின் உடல் வெம்மை பதிந்துள்ள மெல்லிய பள்ளததில் பிறிதொருவர் வந்து படுத்துக் கொண்டு அவரை தன் உடலினூடாகத் தான் அறியும் ஒரு சித்திரம் வண்ணதாசன் கதைகளில் இருக்கும். இம்மனிதர்கள் அனைவரும் எழுந்து சென்ற மெல்லிய வெம்மையான தடம் ஒன்று அவர் கதைகளில் இருக்கிறது. வாசகன் சென்று அமைவதற்கானது அது.

முந்தைய கட்டுரைசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65