கவின்மலர்

தமிழ்ச் சிற்றிதழ்களில் நல்ல சிறுகதைகளை வாசிக்க நேர்வது மிக அபூர்வமாகவே இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் ஒரு தேடலுடன் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். பொதுவாக இச்சிறுகதைகளின் பிரச்சினை என்ன? இவற்றை இவை அடையும் தோல்விகளின் அடிப்படையில் நான் நான்காகப் பிரித்துக்கொள்வதுண்டு.

முதல்வகைக் கதைகளை சோதனைக் கதைகள் என்பேன்.பல்வேறு உத்திகளை முயர்சி செய்யக்கூடிய கதைகள் இவை. மேலைநாட்டுக்கதைகளையோ அவற்றின் மொழியாக்கங்களையோ அல்லது அந்த பாணியில் தமிழில் எழுதப்பட்ட கதைகளையோ முன்னோடியாகக் கொண்டு எழுதப்படுபவை. பெரும்பாலும் சொல்வதற்கும் உணர்த்துவதற்கும் ஏதுமில்லாமல் அந்த உத்தியை மட்டுமே முன்வைப்பவை. சாரமில்லாத உத்தி தன்னளவிலேயே அபத்தமானது. அத்துடன் இவை மொழித்திறனோ சித்தரிப்புத்திறனோ இல்லாமல் முதிர்ச்சியற்று எழுதப்பட்டிருக்கும்.

இரண்டாம்வகைக் கதைகள் கவன ஈர்ப்புக்கதைகள். வாசகர்கவனத்தை ஈர்ப்பதற்காக பெரும்பாலும் பாலியல்சித்தரிப்புகளுடன் எழுதப்படுபவை. அபூர்வமாக சமகால அரசியல் அல்லது சினிமா சம்பந்தமான ஏதாவது பேசப்பட்டிருக்கும். உயிர்மை இவ்வகையில் பாலியல் கதைகளை விரும்பி பிரசுரிப்பதனால் அதில் இவற்றை எழுதவும் ஒரு சிறு குழு உள்ளது. பாலியல்கதைகளை எழுதுவது சாதாரண விஷயமல்ல. உடல் மனதின் பருவடிவமாக ஆகும் ஒரு தருணம் மனம் உடல்வடிவம் கொள்ளும் ஒரு தருணம் அது. முதிரா எழுத்தாளர்கள் கவன ஈர்ப்பை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதும்போது ’சரோஜாதேவி விளைவு’ மட்டுமே உருவாகிறது.

மூன்றாம்வகைக் கதைகள் நேரடியான அனுபவப்பதிவுகள். இளம் எழுத்தாளர்கள் தாங்கள் கண்டு அறிந்த விஷயங்களை கதையாக ஆக்கமுயல்பவை. இவை பெரும்பாலும் மொழி, வடிவம் இரு தளங்களிலும் மிகவும் சாதாரணமானவையாக இருக்கின்றன. எழுதப்படும் அனுபவ தளம் கலைக்குரிய குவிதலும் செறிவும் கொள்ளாமலேயே முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் இவற்றில் பலசமயம் குறிப்பிடத்தக்க கதைகளை வாசிக்க முடிகிறது, சிலசமயம் கதை எழுதபப்ட்ட முறை போதாததாக இருந்தாலும் அந்த அனுபவ நேர்மை காரணமாகவே கதை மனதை பாதிக்கிறது.

நான்காம்வகைக் கதைகள் கதை என்ற வடிவைப்பற்றிய போதாமைகொண்ட புரிதலின் விளைவாக எழுதப்படுபவை. கதை என்பது ஒரு நிகரனுபவம். உண்மையான வாழ்க்கையை வாசகன் கற்பனையில் வாழச்செய்வதென்பது அதன் அடிப்படை இலக்கு. வாசகன் பெறும் கவித்துவமும் தரிசனமும் எல்லாமே அவ்வனுபவம் மூலம் அவன் அடைபவை. . புனைவென்பதே அந்த அனுபவத்தை புனைந்துருவாக்குவதே. அவற்றை அளிக்காமல் புனைவிலக்கியம் நிகழமுடியாது. அதை உணராமல் மொழியைமட்டும் கொண்டு ஒருவகை கவித்துவத்தை உருவாக்கிவிடலாமென நினைத்து எழுதப்படும் கதைகள் சில அவ்வப்போது வருகின்றன.

இக்கதைகளில் சிலசமயம் கற்பனைத்திறனும் அவ்வப்போது முக்கியமான மொழி வெளிப்பாடுகளும் இருந்தாலும்கூட இவை கதையாக ஆகாமல் கவிதையாக எழவும்செய்யாமல் அரைகுறைவெளிப்பாடுகளாக எஞ்சி விடுகின்றன. பலசமயம் வெறும் குறியீடுகளாகவோ கவியுருவகங்களாகவோ சலிப்பூட்டுகின்றன. இவற்றை எழுதுபவர்கள் ஒரு நல்ல கதையின் இயல்பான உச்சியை அடைந்தபின்னர் நிகழ்வதே கவித்துவம், தரையில் வைத்து செய்யப்படுவதல்ல என்று உணர்ந்தால் ஒருவேளை நல்ல ஆக்கங்களை உருவாக்கக்கூடும்.

அபூர்வமாகத் தென்படும் நல்ல கதைகள் ஒன்று உயிரெழுத்து நவம்பர் 2010 இதழில் கவின்மலர் எழுதிய ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்ற கதை. கவின்மலர் எழுதிய எதையும் நான் வாசித்ததாக நினைவில்லை. கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று தேவதேவன் சொன்னார். இந்தக்கதை ஓர் இளம் எழுத்தாளர் அவரது வருகையை அறிவிக்கும் சிறந்த ஆக்கங்களில் ஒன்று என்று ஐயமில்லாமல் சொல்லமுடியும்.

மூன்றாவதாகச் சொன்ன வகைமையைச் சேர்ந்த கதை இது. அனுபவத்தின் பாசாங்கற்ற யதார்த்தச்சித்திரம். பள்ளிமுதல் சேர்ந்து வாழ்ந்து வளரும் இரு தோழிகளின் கதை. கயல்விழி, சுடர்மொழி என்று அவர்களுக்குப் பெயர். சேர்ந்து சைக்கிளில் பள்ளிக்குச் செல்கிறார்கள். சேர்ந்து பையன்களால் காதலிக்கப்படுகிறார்கள். ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பின் வாழ்க்கை திசைமாறுகிறது. கயல் திருமணமாகி குடும்பமனைவியாகிறாள். சுடர் மேலே கற்று ஆய்வாளராக ஆகிறாள். இருவருக்கும் நடுவே உருவாகும் இன்றியமையாத இடைவெளியில் உச்சம் கொள்கிறது கதை.

இதன் முதல் கலைத்திறன் என்பது கதைநிகழ்ச்சிகளில் இருக்கும் அபாரமான யதார்த்தம்தான். ஒரு நிகழ்வு, ஓர் உரையாடல்கூட மிகையானதாகவோ வலிந்து செய்யப்பட்டதாகவோ தோன்றவில்லை. சர்வசாதாரணமாக விரியும் நிகழ்ச்சிகள் வழியாக இருதோழிகளின் நுட்பமான அந்தரங்கப்பரிமாற்றம் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது . அவர்களின் ஓயாத பேச்சு. எதற்கெடுத்தாலும் சிரிப்பு. சின்னச்சின்ன பிணக்குகள், ஒருவரை ஒருவர் உரிமைகொண்டாடும் பற்று. ‘பிரண்ட்ஸ் சாரி’ கட்டிக்கொண்டு கல்லூரி செல்வதுபோன்ற சின்ன நிகழ்ச்சிகள். மிக இயல்பாக அந்த உலகுக்குள் சென்று விட முடிகிறது

இரண்டாவதாக, குறைவாகவே சொல்லி யதார்த்தத்தை உருவாக்கும் திறனைச் சொல்லவேண்டும். எந்த விஷயமும் அதிகமாகச் சொல்லப்படவில்லை. இந்த இரு பெண்களின் குடும்பச்சூழல் பற்றி கதையில் இல்லை. ஆனால் அவை நடுத்தரக் குடும்பங்கள் என எளிதில் ஊகிக்கமுடிகிறது. அவர்கள் வாழும் நகரம் பற்றியும் பெரிதாக இல்லை. ஆனால் ஒரு நடுத்தர தமிழக நகரம் என்ற சித்திரம் சாதாரணமாக உருவாகி வருகிறது.

கதையை முக்கியமாக ஆக்குவது அதன் முதல் தளத்தில் சொல்லப்பட்ட தோழிகளின் நட்பு-விலகல் என்ற தளத்துக்கு அப்பால் சென்று பெண்ணுக்கு திருமணம் அல்லது ஆணின் துணை தேவையாகும் ஓர் இடம் வரை கதை இயல்பாகச் சென்று நிற்பதனால்தான். சுடர் ’ஒண்ணூம் ஆகாது. செத்தா போயிடுவேன்? தனியா வாழ்ந்துடுவேன்’ என்று சொல்கிறாள்’செல்வம் இன்றிரவு உங்கள் அறைக்கு வருகிறேன்…’ என்று நண்பனின் துணையை தேடும் இடம் நோக்கிகயல்விழியின் பிரிவு அவளைக் கொண்டு செல்கிறது. தோழி விலகிசெல்லும் இடத்தை தோழன் இயல்பாக வந்து நிரப்புகிறான்.

கதையின் சில்லறைகுறைகள் என்றால் ‘வீடுதேடும் படலம் ஆரம்பமாகியது’ போன்ற பழகிப்போன சொற்றொடர்களைச் சொல்லலாம். கவின்மலர் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியராக வரமுடியும் என நினைக்கிறேன். வருக

கவின்மலரின் இணையதளம் – இந்த சிறுகதை –http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post_16.html

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு http://www.jeyamohan.in/?p=336

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும் http://www.jeyamohan.in/?p=8188

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… http://www.jeyamohan.in/?p=169

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் http://www.jeyamohan.in/?p=214

முந்தைய கட்டுரைசாதி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு இணைப்புகள்