சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்ச்சியில் தமிழின் முக்கியமான திரையாளுமை ஒருவர் கலந்துகொண்டார். அவரைச்சந்திக்க ஐம்பதுபேர் தயாராக இருந்தனர். விடுதியிலிருந்து அவரை அழைத்துவர ஏழுபேர் சென்றோம். அவர் ஆடையணிந்து புன்னகையுடன் வந்து எங்களுடன் அமர்ந்தார். ஓரிரு சொற்கள் பேசுவதற்குள் எங்கள் நண்பர்களில் ஒருவர் “ஏன் சார் நீங்க அந்தப்படத்தை எடுத்தீங்க?” என்று ஒரு படத்தைக் குறிப்பிட்டுக் கேட்டார்
அந்த இயக்குநர் எடுக்கநேர்ந்த ஒரு தரமற்ற படம் அது. அவருக்கே அதில் வெட்கம் உண்டு. அவர் சுருண்டுவிட்டார். எங்களுடன் கிளம்பி வருவதைத் தவிர்த்துவிட்டார். வாசகர்களை அவர் சந்திக்கவே இல்லை. சோர்ந்துபோய்த் தன் தனிமைக்குள் மீண்டும் சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை. ஆனால் எனக்கு அது நல்லது என்றே தோன்றியது. அங்கே காத்திருந்த ஐம்பதுபேரில் எத்தனைபேரிடம் அதைவிடக்கூரிய நச்சுக்கத்திகள் இருக்கிறதென எப்படித் தெரியும்?
அந்த நண்பர் நல்ல வாசகர். நுண்ணிய ரசனை கொண்டவர். அனைத்துக்கும் மேலாக அவர் அந்த இயக்குநரின் நல்ல ரசிகரும்கூட. “ஏன் அப்படிக் கேட்டீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். “தெரியலை சார். சட்னு கேட்டுட்டேன்” என்றார் அவர். “நான் சொன்னேன், இதுக்குப்பேருதான் common man’s grudge. ஒவ்வொரு சாமானியனுக்கு உள்ளயும் இது கொஞ்சமாவது இருக்கும்”
வெற்றிபெற்றவர்களையும் முக்கியமானவர்களையும் சாமானியன் பார்த்துக்கொண்டே இருக்கிறான் அவன் அறியும்செய்திகளெல்லாமே அவர்களைப்பற்றித்தான். வரலாறென்பதே அவர்களுடையதுதான் என்பது அவனுக்குத்தெரியும். அவர்களை அவன் பிரக்ஞைபூர்வமாக வழிபடுவான். ஆனால் அவன் உள்மனதில் அவர்கள்மேல் காழ்ப்பும் இருக்கும்.
ஏனென்றால் எந்த சாமானியனும் அவனுடைய பகற்கனவில் நிகரற்ற ஆளுமைதான். வாய்ப்புகள் அமையாமல் நின்றிருப்பவன்தான். ஐன்ஸ்டீனையோ காந்தியையோ கூட ஒருவன் தன்னைவிட மேலானவன் என உள்ளூர நினைப்பதில்லை. அந்த ரகசிய எண்ணத்தையே அவன் மேலோட்டமான பாராட்டுரைகளால் நெகிழ்வுகளால் மூடிவைக்கிறான். ஆனால் அவனை மீறி அது வெளிப்படும் தருணங்கள் எப்போதும் அமைகின்றன
மிகமிகச்சாதாரணமானவர்களுக்குக்கூட இந்த உணர்வு உண்டு. ‘தலைவா” ‘வாத்யாரே’ என கூவி கும்பிட்டு நெகிழும் அத்தனை பேரிடமும் இந்த ஆழ்மனக் காழ்ப்பு உறைகிறது. நேற்றுவரை அம்மா என்று மட்டும் சொன்னவர்கள் இன்று சகஜமாக ஜெயலலிதா எனச் சொல்ல ஆரம்பிப்பது இதனால்தான். எளியேன் என தன்னைத் தாழ்த்திக்கொள்பவனுக்குள் கோல்பட்ட நாகம் ஒன்று சீறிக்கொண்டிருக்கிறது. ஆரவாரப்புகழ்மொழிகளுக்கும் துதிகளுக்கும் அடியில் வசைகள் உறைகின்றன.
இதைப்பற்றித் தமிழகத்தின் முக்கியமான நடிகர் ஒருவரிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் போன்றவர்களேகூட இந்தப்பிரச்சினையை அன்றாடம் சந்தித்துக்கொண்டிருந்தார்கள் என்றார். எம்ஜிஆரைச் சூழ்ந்து கொந்தளிக்கும் ரசிகக்கும்பலில் பலர் ஊசிகளால் அவரைக் குத்திவிடுவார்கள். கண்ணாடியை தட்டிவிடுவார்கள். சொல்லப்போனால் காயம் இல்லாமல் எம்ஜிஆர் அவரது ரசிகர்க் கூட்டத்தைக் கடந்துவரவே முடியாது
சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை நாவலில் நடிகர் பிரேம்குமார் இந்தக் காழ்ப்பை எதிர்கொள்ளும் ஒருதருணம் வரும். பிரேம்குமாரின் படம் தோல்வியடைந்து அவன் சோர்ந்திருக்கும் நாட்கள். அவன் காரிலிருந்து இறங்கும்போது டப்பாக்கட்டாக லுங்கி கட்டியிருக்கும் ஒருவன் “என்னா வாத்யாரே படம் சர்ரியான டப்பா… ஊத்திமூடிச்சா?” என்கிறான். அவன் இறங்கி அந்த ஆளை அறைந்துவிடுகிறான்.
பலதருணங்களில் நடிகர்களின் அருகே நின்று இதை நானே பார்த்திருக்கிறேன். பத்தில் ஒருவர் அவர்களை நக்கலோ விமர்சனமோ செய்வார்கள். அவர்கள் தங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை என்று பாவனைசெய்வார்கள்.இந்தக் காரணத்தாலேயே முக்கிய ஆளுமைகள் பொதுவெளிக்கு நேரடியாக வருவதில்லை. கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கவசம் அவர்களுக்கு சுற்றும் இருக்கும். இருந்தாகவேண்டும்.
முக்கியமானவரக்ளைப்பற்றிச் சாமானியன் பேசும்போது கவனியுங்கள், அவனுக்கு அவர்களைப்பற்றி பிறர் அறியாத விசேஷமான சில எதிர்மறை விஷயங்கள் தெரியும் என்பான். அவர்களின் தோல்விகளையும் சரிவுகளையும் பட்டியலிடுவான். நேரில் சந்தித்தபோது அவர்களை எப்படி மடக்கினேன் என்று சொல்வான்.
அவன் வெளிப்படுத்துவது தன் ரகசிய அகங்காரத்தை மட்டுமே. இது அரசியல்வாதிகள் போன்ற முக்கியமான நபர்களுக்கு நன்றாகத்தெரியும். அப்படி தன்னை மடக்க நினைப்பவனை உடனடியாக அவர்கள் புகழ்வார்கள். அவன் பெயரென்ன என்று கேட்பார்கள். அவன் அப்படியே மடங்கிவிடுவான்.கல்லூரிகளில் இது அடிக்கடி நடக்கும்.
விமர்சனம் கூடாது என்பதல்ல நான் சொல்லவருவது. விமர்சனம் ஆழ்ந்து அறிந்த ஒருவரால் சமநிலையுடன் செய்யப்படவேண்டும். முழுமையாகச் சொல்லப்படவேண்டும். சீண்டும் கூற்றுகள், பொத்தாம்பொது அபிப்பிராயங்கள், நக்கல்கிண்டல்கள் விமர்சனங்கள் அல்ல.
இணையவெளி இன்று சாமானியனின் ஊடகம். ஒளிந்தும் தெளிந்தும் அவன் வெளிப்படும் இடம் அது. சாமானியனின் இரட்டைமுகம் அதில் நிறைந்துவழிகிறது. ஒருபக்கம் கண்மூடித்தனமான வழிபாடு. மறுபக்கம் காழ்ப்பு. ஒரே தன்னிலையுணர்வின் இருமுக வெளிப்பாடுகள் இவை
இது பலவழிகளில் வெளிப்படும். ஒரு பிரபலத்தை வழிபட்டு மற்றவர்களை அவருக்கு எதிரானவர்களாக உருவகித்து வசைபாடுவது அதில் முதல்வகை; .ஒருவகையில் பாமரர்களின் வழிமுறை இது.அஜித் ரசிகன் விஜய் உட்பட அனைவரையும் வசைபாடுவது அவன் அஜித் மேல் கொண்ட பற்றினால் அல்ல. அது அவன் சொல்லிக்கொள்ளும் சாக்குதான். மற்றவர்களை வசைபாடி இன்பம் அடைய அவன் அஜித்தை ஒரு அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் கொண்டுள்ள பற்று பொய் அல்ல. அது அவனே அவனைஅறியாமல் போட்டுக்கொள்ளும் வேடம்தான். அவன் பிறரை வசைபாடி அடையும் இன்பத்தை அஜித்தே சொன்னாலும் விடமாட்டான்.
தன்னை அதிகூரிய நுண்ணுணர்வாளனாக, அற்புதமான நீதியுணர்ச்சி கொண்டவனாக, அபாரமான ஞானம் கொண்டவனாக, அதேசமயம் கவனிக்கப்படாதவனாக கற்பனைசெய்துகொண்டு பிற அனைவரையும் வசைபாடித்தள்ளுவது இன்னொரு மனநாடகம். கொஞ்சம் அறிவுஜீவிகள் செய்வது. எந்த நுண்ணுணர்வும் அவன் ரசனையில் உண்மையில் இருக்காது. அத்தனை சமரசங்களையும் அன்றாட வாழ்க்கையில் செய்துகொண்டிருக்கும் பிழைப்பாத்மாவாகவே இருப்பான். ஆனால் காழ்ப்பைக் கக்க இந்த வேடம் ஒரு நல்ல சாக்கு
ஆளுமைகளின் சரிவுகளை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறான் சாமானியன். அவர்களின் வெற்றிகளும் சாதனைகளும் அவற்றுக்காக அவர்கள் செய்யும் உழைப்பும் தியாகமும் அவனுக்கு பெரிதாகப்படுவதில்லை. அவர்கள் செய்யும் பிழைகளும் அடையும் வீழ்ச்சிகளுமே அவனால் கூர்ந்து கவனிக்கப்பட்டு அதிகமும் பேசப்படும். வசைபாட ஒரு நம்பகமான தருணம், கொஞ்சம் தருக்கப்பூர்வமான காரணம் போதும். கண்ணீர்மல்க, வாயோரம் எச்சில் தெறிக்க கச்சேரியை ஆரம்பித்துவிடுவான்.
நான் சினிமா பற்றி என்னிடம் பேசுபவர்களை எப்போதும் கூர்ந்து கவனிப்பேன். ‘இந்த நடிகன் இப்ப சோத்துக்கே கஷ்டப்படுறான் இல்லியா சார்?” என்று கண்கள் மின்ன கேட்பவர்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள்? வெற்றிப்படங்களை விட தோல்விப்படங்களை நினைவில் வைத்திருப்பவர்களின் உளவியல் என்ன? ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே “அது அம்புடுதான். ஊத்திக்கும்” என ஆசையோடு எழுதுபவர்களின் இன்பம் என்ன?
சாமானியனின் காழ்ப்பு, வேறொன்றுமில்லை. சாமானியன் எளியவன் என்பதனால் நியாயவானாக இருந்தாகவேண்டுமென்பதில்லை. அவன் ‘பொதுமக்கள்’ என அரசியல்வாதிகளால் சொல்லப்படும் புனிதபிம்பத்தைச் சூடியவன் என்பதனால் அவன் உணர்வுகள் கௌரவமானவை என கொள்ளவேண்டியதில்லை. சாமானியன் பலசமயம் மிகமிகக் கீழ்மையான விழைவுகளாலும், தாழ்வுணர்ச்சியின் விளைவான பாவனைகளாலும், அடிப்படையான குரூரங்களாலும் இயக்கப்படுபவன்.
நம்மை நாமே கூர்ந்து நோக்கிக்கொள்வதே இதைக் கடந்துசெல்ல ஒரே வழி. நாம் நம்மை எப்படி வரையறைசெய்துகொள்கிறோம் என்பதே முக்கியம். ’நான் சாமானியன், ஆகவே உயர்ந்தோரால் சுரண்டப்படுபவன். ஆகவே நியாயவான்’ என்பதே பலருடைய பாவனை. அதிலிருந்து வெளியே வந்து நம் உள்நோக்கங்களை, நம் நடிப்புகளை நாமே நோக்கிக்கொண்டால் மட்டுமே நேர்மையான , உண்மையிலேயே பயன்மிக்க கருத்தைச் சொல்லமுடியும்.. அக்கருத்தின் மூலமே நாம் நமக்கான அடையாளத்தைக் கொள்ளமுடியும். அப்படிக் கொள்பவனுக்கு மட்டுமே அறிவுலக முக்கியத்துவம் உள்ளது.
உண்மையில் தன்னை அப்படிப் பார்க்க ஆரம்பிக்கையிலேயே ஒருவன் சாமானியன் அல்லாமலாகிவிடுகிறான்.
பழைய கட்டுரைகள்