”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”

11

 

ஓரு மூத்த எழுத்தாளர் உரையாடலில் சொன்னார். எங்களுக்குத் தெரிந்த பொதுவான வாசகி ஒருவர் அவரை முதலில் சந்தித்தபோது “மன்னிக்கணும் நான் நீங்க எழுதின ஒண்ணையுமே படிச்சதில்லை” என்று சொன்னார் என்று. உடனே “சரி, இப்ப படி” என அவரது ஒரு நூலை எடுத்து அவர் அளித்ததாகச் சொல்லிச் சிரித்தார்.

எனக்கு அந்த வாசகியைத்தெரியும். உண்மையில் நிறைய வாசிக்கக்கூடியவர். நாஞ்சில்நாடனை முன்னரும் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்கு முன்னரே சந்திக்கப் போவதைப் பற்றித் தெரியும். அப்படியும் ஏன் வாசிக்கவில்லை? குறைந்தது சந்திக்கச் செல்வதற்கு முன்பாவது ஓரிரு கதைகளை வாசித்திருக்கலாமே? அது ஒரு அடிப்படைப் பண்பு அல்லவா?

நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். “நான் வாசிச்சிருக்கேன். கதைகள் ஞாபகமும் இருந்தது. ஆனால் அவரை மாதிரி இருக்கிறவங்க கிட்ட நுணுக்கமா அறிவாப் பேசணும், அது நமக்குத் தெரியாதேன்னு நினைச்சேன். தப்பா பேசுறதவிட வாசிக்கலைன்னு சொன்னா நல்லதுன்னு தோணிச்சு” என்றார்.

அந்த மூத்த எழுத்தாளர் உண்மையில் மிகவும் இயல்பான மனிதர். ஆனால் “உங்க ரைட்டிங் ஒண்ணையும் வாசிச்சதில்ல” என்று சொல்பவர்களை எழுத்தாளர்கள் எப்படி உள்ளூர எதிர்கொள்வார்கள்?

முன்பு ஒருமுறை ஒரு நண்பர் அவருடைய நண்பருடன் என்னைப் பார்க்க வந்திருந்தார். என் படைப்புகளை அவர் வாசித்ததில்லை. என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தமையால் ஓர் உற்சாகத்துடன் வந்துவிட்டார். “நான் உங்கள கேள்விப்பட்டிருக்கேன், வாசிச்சதில்லை” என்றார்.

நான் அதற்கு முன்பு வரை அன்புடன் அவரைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பின் என் கண்களில் ஆர்வம் முழுமையாக அணைந்துவிட்டது. அவரிடம் அதன்பின் ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. அவர் என்னிடம் சொன்னவற்றுக்குக் கூட என் கண்கள் எதிர்வினை ஆற்றவில்லை. சொல்லப்போனால் அவர் அங்கிருப்பதை நான் அறிந்ததாகவே காட்டவில்லை.

அவர் மேலும் மேலும் புத்திசாலித்தனமாகப் பேசி என்னை கவர முயன்றார். நான் அவர்பக்கம் திரும்பவே இல்லை. விடைபெறும்போது கூட சரி என தலையாட்டிவிட்டு செல்பேசியில் குறுஞ்செய்திகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

திரும்பிச்செல்லும்போது அவர் மிகமிக ஆழமாகப் புண்பட்டிருந்தார். எண்ணி எண்ணிக் கொதித்துக் கொந்தளித்தார். “திமிர், இவர் யாரு பெரிய புடுங்கியா?” என என்னை வசைபாடினார். என் படைப்புகள் எதையாவது வாசித்து நான் ஒரு முட்டாள் என ஒரு கடிதம் போடவேண்டும் என திட்டமிட்டார். கையில் கிடைத்தது காடு நாவல். அதை வன்மத்துடன் வாசிக்க ஆரம்பித்தார்.

மெல்ல அந்நாவல் அவரை உள்ளிழுத்தது. நான் அவருக்கு அணுக்கமானவனாக ஆனேன். என் படைப்புகளை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார். ஒருவருடம் கழித்து என்னை அவர் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார். நான் அவரை அடையாளம் காணவே இல்லை. அவர் அறிமுகம் செய்து கொண்ட போது கூட முகம் ஞாபகம் வரவில்லை. அவர் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்

மீண்டும் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அவர் ஏழாம் உலகம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். ஏழாம் உலகுக்கு அடியிலும் ஒர் எட்டாம் உலகம் இருப்பதை மெலிதாக அந்நாவல் தொட்டுச் சென்றிருப்பதைப் பற்றி. நான் அவரிடம் பேச ஆரம்பித்தேன். அடிக்கடி சந்திக்கலானோம். அணுக்கமான நண்பர்களாக ஆனோம்

உண்மை என்னவென்றால் இது எதுவுமே எனக்குத் தெரியாது. அவரை நான் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை. அவர் என்னை வாசிக்கவில்லை என்று சொன்ன மறுகணமே இயல்பாகவே என் மனம் அவரை விட்டு விலகிவிட்டது. என் உலகில் அவர் முழுமையாகவே இல்லாமலாகிவிட்டார். இது தப்பா சரியா என்பது விவாதமே அல்ல, எழுத்தாளர்கள் எங்கும் அப்படித்தான்.

அப்படி நிகழலாகாது என்றால் அவரே ஓர் எழுத்தாளராக, சிந்தனையாளராக, ஆய்வாளராக இருக்கவேண்டும். அல்லது மிக அசலாக எதையாவது சொல்லியிருக்கவேண்டும். எந்த மனிதருக்கும் எல்லாரும் நினைவிலிருப்பதில்லை. வட்டத்திற்குள் வட்டத்திற்குள் வட்டம் என அவர்கள் நெருக்கங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். அனைவரையும் நினைவில் வைத்திருக்க முயல்பவர் சிந்திக்க முடியாது.

என் வட்டம் சிந்தனையின், கருத்துக்களின் வட்டம்தான். அதில் என் நினைவாற்றலைப் பற்றி இதுவரை பலர் பிரமிப்புடன் எழுதிவிட்டார்கள். ஒரு முக்கியமான கருத்தைச் சொன்னவரை நான் மறப்பதே இல்லை. அக்கருத்தாகவே அவரை நான் நினைவில் வைத்திருப்பேன். பல சமயம் நூல்களை மட்டும் அல்ல வரிகளைக்கூட. ஆனால் அன்றாடம் சந்திக்கும் ஒருவரை மறந்துவிட்டிருப்பேன்.

வாசிக்காமல் எழுத்தாளரைச் சந்திப்பதும், அவரிடம் ‘உங்களை நான் வாசித்ததில்லை’ என்று சொல்வதும் நேரடியான அவமதிப்பு மட்டுமே. அதை தமிழ்நாட்டில் கூசாமல் செய்வார்கள். அது இங்கே ‘கள்ளமற்ற தன்மையாக’ எண்ணப்படுகிறது. ஒரு பெருமையாகக்கூட பல பெரியவர்களால் மேடைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. நம்மை ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் அந்த மேடையிலேயே “நான் இவரைப் படித்ததில்லை” என்று சொல்வது அடிக்கடி நிகழ்கிறது. நம் கல்வியாளர்களில், அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் இத்தகைய சும்பன்கள்தான்.

ஒருமுறை திருவனந்தபுரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்குச்செல்ல சுந்தர ராமசாமிக்குக் கார் வந்தது. ஓட்டுநர் “சார் எழுதின ஒரு புளியமரத்தின் கதை வாசிச்சிருக்கேன்” என்றார். சுரா மலர்ந்துவிட்டார். அங்கு செல்வது வரை அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். புளியமர ஜங்ஷன் போல நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் இருந்த பல சாலைச் சந்திப்புகளைப் பற்றி.

சுரா அரங்குக்கு உள்ளே நுழைந்ததும் நான் ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்தேன். முந்தையநாள் மாலைதான் சுராவை அழைத்து வருவது பற்றி ஓட்டுநரிடம் நீல. பத்மநாபன் சொல்லியிருக்கிறார். அதற்குமுன் அவரைப்பற்றி ஓட்டுநர் கேள்விப்பட்டதே இல்லை. அன்றே வாடகை நூலகம் போய் அவரது புத்தகங்களுக்காகத் தேடி புளியமரத்தின் கதையை எடுத்து அறுபது பக்கம் மட்டும் படித்திருந்தார்

“படிக்காம போய் நின்னா அவருக்கு அது அவமானம் இல்ல சார்? நீ எழுது, ஆனா நான் படிக்கமாட்டேன்னு சொல்றது இல்லியா அது?” என்றார் ஓட்டுநர். “ஒருவாட்டி கதகளி ஆசான் கிருஷ்ணன்நாயரை கூட்டிட்டு போகணும். ஃபோன்போட்டு உள்ளூர் கதகளி ரசிகனிட்ட அவர் எப்டி யாருன்னு கேட்டுட்டுப்போனேன். ஒரு பெரியவர்கிட்ட அவரை சுத்தமா தெரியாதுன்னு சொல்லக்கூடாது”

இன்னொரு அனுபவம். மறைந்த கேரள அமைச்சர் நீலலோகிததாசன் நாடார் அன்று இருபத்தெட்டு வயதான என்னை அறிமுகம் செய்துகொண்டபோது “தெரியும், மலையாளத்திலே ஒரு கட்டுரை வாசிச்சிருக்கேன். தமிழிலே ஒரு கட்டுரை வாசிச்சிருக்கேன்” என்றார். முந்தையநாள் நிகழ்ச்சி நிரலைப் பார்த்ததுமே ஆ. மாதவனை அழைத்து எல்லாரையும் பற்றிக்கேட்டு அறிந்து அவரிடமிருந்தே சாம்பிளுக்கு சில எழுத்துக்களை வரவழைத்து வாசித்திருந்தார்

இது ஒரு அடிப்படை அறிவுலக நாகரீகம். ஓர் எழுத்தாளரைத் தெரியாமலிருக்கலாம். ஆனால் முன்னரே அவரைச் சந்திக்கப் போகிறீர்கள் என அறிவீர்கள் என்றால் உறுதியாக கொஞ்சமேனும் வாசிக்க வேண்டும். முன்னரே வாசித்திருந்தால் கூடப் புரட்டிப்பார்த்து பெயர்களை, கருக்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவரிடம் அவற்றைச் சொல்லியே பேசவேண்டும். “நெறைய வாசிச்சிருக்கேன் சார், ஒண்ணுமே ஞாபகமில்லை” என்பதைவிட அவர் மூஞ்சியில் துப்புவது மேலும் நாகரீகமானது

முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு, முன்னர் வாசித்ததும் இல்லை என்றால் நீங்கள் ஒரு வாசகராக அவரிடம் காட்டிக் கொள்ளவே வேண்டாம். எனக்கு அந்தச் சலுகை இல்லை, நான் அறியப்பட்ட வாசகன். அப்படி நிகழ்ந்தது என்றால் வாசிக்காமைக்கு மன்னிப்பு கோருவேன். ஒரே வாரத்தில் அவரது படைப்புக்களை வாசித்துவிட்டு கடிதம் போடுவேன்.

எழுத்தாளர்களிடம் புத்திசாலித்தனமாக, அறிவார்ந்த முறையில் பேசவேண்டுமென்பதில்லை. நீங்கள் யாரோ அதை இயல்பாக வெளிப்படுத்தினால் போதும். நல்ல எழுத்தாளனிடம் எவரும் தன் அளவைவிட மேலதிகமாக தன்னை காட்டிக்கொள்ள முடியாது. ஐந்து நிமிடங்களில் தெரிந்துவிடும்.

வாசிக்காமல் எழுத்தாளரைச் சந்தித்து “வாசிச்சதே இல்லை சார்” என்று அறிமுகம் செய்யும்போது ஒருவர் தன்னை கீழ்மைப் படுத்திக்கொள்கிறார். அதன்பின் நான் இவ்வளவு பணம் வைத்திருக்கிறேன், இன்ன பதவியில் இருக்கிறேன் என என்ன சொன்னாலும் அங்கே அவரது மதிப்பு முழுமையாக அழிந்துவிட்டது. நாகரீகமான எழுத்தாளர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். என்னைப் போன்றவர்களின் முகம் அப்போதே மாறிவிடும். அவரைப்பற்றி ஆழமான ஒரு ஏளனம் அல்லது அலட்சியம் உள்ளூரக் குடியேறிவிடும். அதை என்னால் மறைக்கவே முடியாது.

சரி, ஏன் வாசித்தே ஆகவேண்டும்? வாசிக்காமலிருந்தால் என்ன தப்பு? இயல்பாக வெள்ளந்தியாக ஏன் இருக்கக்கூடாது? இருக்கலாம், நீங்கள் ஒரு பிளம்பராக எழுத்தாளரை சந்திக்கிறீர்கள் என்றால் அந்த வேலையைச் செய்யலாம். பிளம்பராக அறிமுகம் செய்து கொள்ளலாம். அவர் வீட்டுக்கு காய்கறி விற்கப் போனால் அதை விற்கலாம். காய்கறியைப் பற்றிப் பேசலாம். அந்த எல்லையைக் கடந்து உங்களை அறிவுத்தளம் சார்ந்தவராக அறிமுகம் செய்து கொள்ளக்கூடாது. அந்தத் தகுதி வாசிக்காதவருக்கு இல்லை

 

முந்தைய கட்டுரைகள்

எழுத்தாளரைச் சந்தித்தல்

எழுத்தாளர்களை அணுகுதல்

எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

முந்தைய கட்டுரைகண்ணீருப்பின் கவிஞன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 – அழைப்பிதழ்