விசித்திரபுத்தர்

1

 

சம்பவாமி யுகே யுகே என்பது தெய்வங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஞானாசிரியர்களுக்கு பொருந்துகிறது. அந்தந்தக் காலகட்டத்தின் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப அவர்கள் தோற்றம்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரைப்போல் பிறிதொருவர் இல்லை. இது வரை வந்தவர்களை வைத்து இனிவரும் ஒருவரை புரிந்து கொள்ள முடியாது.

ஆனால்… ஆம் அந்த பிழையையே எப்போதும் செய்கிறோம். ஞானாசிரியர்களுக்கு என்று நம் மரபு ஒரு நிலைச்சித்திரத்தை அளிக்கிறது. அதில் அத்தனை ஆசிரியர்களையும் கொண்டு சென்று பொருத்துகிறோம். நம் புனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒரே முகம், ஒரே புராணம்

அப்படிப் பொருந்தவில்லை என்றால் விளிம்புகளை வெட்டி மடித்து அந்தச்சட்டத்திற்குள் அடக்கிவிடுகிறோம். எப்படி மடித்தாலும் என்னென்ன வளைத்தாலும் எந்த சட்டத்திற்குள்ளும் அடங்காத ஒருவர் ஓஷோ.

ஓஷோ உருவான சூழலை அறிந்தால் அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கலாம். புரிந்துகொள்ள தொடங்கியபின் அதை விட்டுவிட்டு அவருடைய ஆளுமையை மட்டும் நோக்கினால் போதும். எழுபதுகளில் உலகெங்கும் ஆன்மிகமான சோர்வு படர்ந்திருந்தது. இருமாபெரும் உலகப்போர்கள் உருவாக்கிய அவநம்பிக்கைச் சூழலில் பிறந்தவர்கள் இளைஞர்களாகிவிட்டிருந்தனர். மாற்றத்தின் கனவுடன் எழுந்த பல புரட்சி இயக்கங்கள் தோல்வி அடைந்தன. அமெரிக்க ரஷ்ய மோதல் உச்சத்தில் இருந்தது. ஓர் உலகப்போர் எக்கணமும் நிகழும் என்ற பதற்றம் நிலவியது. [தர்க்கோவ்ஸ்கியின் sacrifice போன்ற திரைப்படங்களில் இன்று அந்த பதற்றத்தை நாம் காணலாம்.]

மரபார்ந்த அனைத்து மதிப்பீடுகளையும் நிராகரிக்கும் பீட் தலைமுறை போன்ற அறிவியக்கங்கள் உருவாகி வந்தன. ஹிப்பி இயக்கமாக அந்த பதற்றம் திரண்டது. தன்னைத்தானே சிதறடித்துக் கொண்ட ஒரு தலைமுறை அது. நேற்று இல்லாமல் நாளையும் இல்லாமல் இன்றில் மட்டுமே வாழ்பவர்களின் ஓர் உலகம். போதை இசையும் காமமும் மட்டுமே அங்கே ஓங்கி நின்றன

இந்தியாவிலும் சுதந்திரத்துக்குப்பின் நேருயுகம் உருவாக்கிய நம்பிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. அரசை மையமாக்கிய நிர்வாகம் இருந்தமையால் அனைத்து வளர்ச்சிகளும் குன்றி வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. இடது சாரிப்போராட்டத்தின் தோல்விக்குப் பிந்தைய அவநம்பிக்கை எங்கும் நிறைந்திருந்தது.

அந்த இருண்ட தலைமுறையின் ஞானி ஓஷோ. அந்தத் காலகட்டத்தின் மிகச்சிறந்த உள்ளங்களுடன் உரையாடியவர். அவர்களுக்கு மரபான உபதேசங்களைச் சொல்லவேண்டியதில்லை. தத்துவநோக்குகளை, ஒழுக்கத்தை, துறவை கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அவர்களிடம் பேசமுடியாது. அவர்களின் வினாக்களிலிருந்து ஓஷோ எழுந்தார்.

அன்றைய ‘தெய்வங்களால் கைவிடப்பட்ட இளைஞர்’களில் ஒருவன்தான் நானும். படிப்பை முடிக்காமல் வீட்டைவிட்டு ஓடியவன். மெய்மை தேடி பிச்சைக்காரனாக அலைந்தவன். என் தலைமுறையின் குரலான மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு பாடியதுபோல ‘பைத்தியத்திற்கும் தற்கொலைக்கும் நடுவே ஓர் அலறல் போலக் கடந்து சென்ற வாழ்க்கை’ கொண்டவன்.

1982 முதல் மூன்றுமுறை ஓஷோவின் பூனா குருகுலம் சென்றிருக்கிறேன். அவரை சந்திக்க நேரவில்லை. அவருடைய நூல்களை பாலைவனத்தில் தொலைந்துபோனவன் கண்டெடுத்த வரைபடத்தை ஆராய்வதுபோல ஆவேசத்துடன் வாசித்திருக்கிறேன். அவர் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. நான் கற்றதை எல்லாம் சிதறடித்தார். மீண்டும் நானே அடுக்கிக்கொண்டபோது சிந்திக்கக் கற்றிருந்தேன். அவருக்கு நேர் எதிராகவே என் சிந்தனைகள் சென்றன. ஆகவேதான் அவர் எனக்கு ஞானாசிரியர்

ஓஷோவின் முதல்பணி என்பது உடைப்பதுதான். நம் பண்பாடு ஆயிரம் ஆண்டுத் தொன்மைகொண்டது. ஆகவே சிந்தனைகளையும் உணர்வுகளையும் எல்லாம் ஆசாரங்களாக ஆக்கிக்கொள்கிறோம். ஆசாரம் என்பது மாற்றமில்லாதது. கண்மூடித்தனமாக ஒழுகவேண்டியது. ஆசாரங்கள் அனைத்தும் மெய்மை நோக்கிய பயணத்துக்கு எதிரானவை.

அந்த உறைநிலையை தன் துடுக்குத்தனம் வழியாக, அப்பட்டமான ஆணவம் வழியாக, அராஜக சிந்தனை வழியாக, அபத்தம் வழியாக, ஏன் ஆபாசம் வழியாக அவர் உடைத்தார். பகவத் கீதை பற்றிய உரைக்கு நடுவில் ஒரு பாலியல் நகைச்சுவைத் துணுக்கு வருவது இன்றும்கூட இந்தியர்களை நடுங்கவைப்பதுதான்.

ஓஷோவின் அராஜகம் அவரைத் தொடர்பவனை கிறுக்கனாக்கிவிடும். ஒரே உரையாடலில் “ஒஷோ நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?” என்று ஒருவர் கேட்கிறார். “ஆம் நானேகடவுள்” என்கிறார். அடுத்த வினா “ஓஷோ, உண்மையிலேயே நீங்கள் கடவுளா?“ அதற்கான பதில்”நீ என்ன முட்டாளா? மனிதன் எப்படி கடவுளாக முடியும்?”

சிந்தனைகளை நாம் அறிதல்களாக உணர்தல்களாக ஆக்கிக்கொள்வதில்லை. அவற்றை தெரிந்துகொள்கிறோம். திரும்பச்சொல்கிறோம். நம்மை அவற்றை உள்வாங்க விடாமல் தடுப்பது அச்சிந்தனைகளுக்கு முன்பு அதுவரைக்கும் இருந்த சிந்தனைத் தொடர்ச்சியும் வரலாறும்தான். அச்சிந்தனையின் நாளைய பயன்மதிப்பு அடுத்த பெரும்தடை

ஓஷோ நேற்று நாளை. இரண்டிலிருந்தும் அவற்றை விடுவித்து அந்தந்த கணங்களில் நின்று சிந்தனையை நம்மதாக்க அறைகூவுகிறார். ஆகவே அவருடைய மொத்த நூல்களை வாசிப்பவன் ஒத்திசைவுள்ள சிந்தனைக் கட்டுமானம் உருவாகிவருவதையோ ஒரு மையச்சிந்தனை சரடு ஓடுவதையோ காணமுடியாது. ஏகப்பட்ட முரண்பாடுகள் தென்படும். பார்வைகள் சிதறிக்கிடக்கும்..

ஓஷோ என்ன சொல்கிறார் என எவர் சொன்னாலும் அது ஓஷோ அல்ல அவர் நம் தர்க்கசிந்தனையை திகைக்க வைக்கிறார். ஒத்திசைவு உள்ள எண்ண ஓட்டங்கள் உருவாகாமல் தடுக்கிறார். நாமே சிந்தித்தாகவேண்டும் என கட்டாயத்தை உருவாக்குகிறார்.

ஓஷோ உலகசிந்தனையாளர்களில் மிகப்பெரும்பாலானவர்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஏறத்தாழ எழுநூறு நூல்களாக அவை வந்துள்ளன. அவர் உலகசிந்தனைகளைக் கொண்டு ஒரு மாபெரும் புனைவுலகை உருவாக்கியவர். கிருஷ்ணனையும் நீட்சேயையும் புத்தரையும் அவர் சுயமாக உருவாக்குகிறார். ஒருநாவலில் கதாபாத்திரங்கள் போல. அவர்களை நாம் வெளியே வேறுவகையில் காணலாம். அந்த வேறுபாடுதான் ஓஷோ அளிக்கும் ஞானம்.

மேற்கோளாக ஓஷோவை அறிய முடியாது. ஏனெனில் அந்த மேற்கோளுக்கு மறுப்பான இன்னொரு மேற்கோளை உடனே எடுத்துவிட முடியும். ஓஷோ என்ன சொல்லுகிறார் என்று அள்ளி அள்ளி தொகுப்பவர்கள் ஓஷோவை அறிந்துவிட முடியாது. எப்படித் தொகுத்தாலும் பாதி ஓஷோ வெளியே இருப்பார். சார்லி சாப்ளின் கார் ரிப்பேர் செய்வது போல. கார் நன்றாகவே ஓடும். ஆனால் எந்திரத்தில் பாதி வெளியே கிடக்கும்.

ஓஷோவைப் பின்பற்றுபவர்கள் இருளில் இருக்கிறார்கள். ஏனெனில் பின்பற்றுவதற்குரிய ஆசிரியன் அல்ல அவர். என்னால் பின்பற்ற முடியாதென்று தன் மரபை நோக்கி திமிருடன் சொன்ன ஒரு தலைமுறைக்கு முன் நின்று பேசியவர். ஓஷோவுடன் விவாதித்தவர்கள்தான் ஓஷோவை உடைத்துச் சென்றவர்கள்தான் தங்களுக்குரிய வழியை தாங்கள் கண்டு கொள்கிறார்கள். என் தலைமுறையில் மெய்மை நோக்கிச் சென்ற அனைவரிலும் ஓஷோவின் பங்களிப்பு உண்டு

குளித்து விபூதி பூசி ஆசாரமாக அறியும் மெய்ஞானத்தை காலையில் எழுந்து கழிப்பறைக் கிண்ணத்தின் மேல் அமர்ந்தபடி அறிய முடியும் என்று இந்திய மனதிற்கு காட்டியவர் அவர். ஓஷோவுக்குப்பின் இந்தியாவெங்கும் நவீன குருமார்களின் நிரை உருவாகி வந்ததை பார்க்கலாம். நகைச்சுவை, நவீனச் சிந்தனைகளூடான தொடர்பு,. அறிவியல் ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள் அவர்கள். இன்று இந்திய மெய்ஞானத்தைப் பற்றிப் பேசுபவர்களை ஓஷோவை எதிர்கொண்டவர்கள் கொள்ளாதவர்கள் என பிரித்துவிடலாம்

ஓஷோ வாழ வழிகாட்டும் ஞானி அல்ல. உலகியல் வாழ்க்கைக்கு ஓஷோவின் பங்களிப்பென்று எதுவுமில்லை. தேர்வில் வெல்லவோ வணிகம் செய்யவோ அவரிடம்போய் கேட்கவேண்டியதில்லை. அவர் இந்த விளையாட்டின் விதிகளென்ன என்று யோசிப்பவர்களுக்குரிய ஆசிரியன்.

ஆனால் ஓஷோ இந்திய மரபுக்குப் புதியவர் அல்ல. நமக்கு சார்வாகம் போன்ற நாத்திக ஞான மரபு இருந்துள்ளது. காபாலிகம் காளாமுகம் பாசுபதம் போன்ற தாந்த்ரீக மரபுகள் இருந்துள்ளன. எங்கும் நில்லாத சித்தர்களின் மரபு இருந்துள்ளது. என்னுடையது வெண்முகில்களின் வழி என ஓஷோ அதைத்தான் சொல்கிறார்.

பௌத்த மரபிலும் இத்தகைய ஞானமரபுகள் அனைத்தும் உண்டு. ஆனால் அனைத்தையுமே புத்தரின் முகங்களாக அவர்கள் ஆக்கிக்கொள்வார்கள். கருணைமிக்க புத்தருக்கு நிகராகவே யோகமோகினியை அணைத்துப் புணர்ந்துகொண்டிருக்கும் புத்தரும் உண்டு. காலவடிவமாக கொடூரமுகம்கொண்ட புத்தரும் உண்டு

தொண்ணூறுகளுக்குப்பின் உலக மயமாக்கல் தொடங்கியது. தொழில்நுட்பம் பண்பாடுகளை உருகி இணைத்தது. மானுட ஞானங்கள் அனைத்தும் ஒற்றையிடத்தில் குவிந்தன.. ஓஷோவின் கேலியும் கிறுக்கும்தான் இன்று ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன

முகநூல் கேளிக்கைகளில் ஊறிய ஓர் இளைஞன் ஓஷோவை இன்று படித்தால் அவன் என்ன செய்கிறானோ அதைத்தான் ஓஷோ செய்திருப்பதாக தோன்றும். ஆனால் அதுவே அவனை ஓஷோவுக்குக் கொஞ்சம் அருகில் கொண்டு செல்லும். கொஞ்சம் செவிகொடுத்தான் என்றால் கைமுத்திரைகளும் வாய்ச்சொற்களும் விளையாட்டுக்காட்ட கண்களால் மெய்மையைச் சொல்லும் விசித்திரமான ஒரு புத்தர் என்று அவன் அறிவான்

 

தமிழ் ஹிந்து நாளிதழ்

 

==========================================================================================

ஓஷோவின் பைபிள் வரி

ஓஷோ உடைத்துவீசப்படவேண்டிய பிம்பம் – 1

ஓஷோ உடைத்துவீசப்படவேண்டிய பிம்பம் – 2

ஓஷோ உடைத்துவீசப்படவேண்டிய பிம்பம் – 3

முட்டாள்களின் மடாதிபதி

மனலீலை

காந்தி காமம் ஓஷோ

காந்தி ஓஷோ மற்றும் சிலர்

 

ஓஷோ கடிதங்கள்1

ஓஷோ கடிதங்கள் 2

ஓஷோ கடிதங்கள் 3

ஓஷோ கடிதங்கள் 4

ஓஷோ கடிதங்கள் 5

ஓஷோ கடிதங்கள் 6

ஓஷோ கடிதங்கள் 7

ஓஷோ கடிதங்கல் 8

முந்தைய கட்டுரைதிதலை: சொல்லாய்வு
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54