இனிய ஜெயம்,
ஜெயகாந்தன் ஒரு பதிலில், திராவிடப் பண்பாடு வேறு, திராவிட அரசியல் வேறு, நான் எதிர்ப்பது திராவிட அரசியலின் கீழ்மையைத்தான் என்கிறார். தொடர் வாசிப்புகளுக்குப் பிறகு அவர் சொல்வது புரிந்தது. ஆனால் அதையே இந்துப் பண்பாடு இந்து அரசியல் எனப் போட்டுப் பார்த்தால் குழப்பமே எஞ்சுகிறது.
வினா இதுதான். பண்பாட்டு ரீதியாக இத்தனை வேற்றுமைகளை ”தொகுத்து” முன்னகரும் இந்துமதத்திலிருந்து, இந்த வேற்றுமைகளை நேர் மறை அம்சத்துடன் ஆளும், நிர்வகிக்கும், சாரமான செயல்பாட்டு வழிமுறை ஒன்றினை, இப் பண்பாட்டின் அரசியலாகக் கொள்ளலாகாதா? இந்துப் பண்பாட்டில் இருந்து ஆக்கப்பூர்வமான அரசியல் என்றும் உயர்ந்து வராதா?
நீங்கள் பலசமயம் கடுமையாக எதிர்க்கும் இந்து அரசியல், இன்றைய நிலையில்தான் அவ்வாறு உள்ளதா? அல்லது என்றுமே [வேதகாலம் தொட்டு இன்றுவரை] இந்தியாவில் நிகழ்ந்த இந்துமத அரசியல், இந்துப் பண்பாட்டின் மீது ஆதிக்கம் செய்யும், ”பிறனாக” மட்டுமே இருந்திருக்கிறதா?
நமது நெடிய பண்பாட்டில் ”இந்துமத அரசியல்” எனும் அலகின் இடம் என்ன?
கடலூர் சீனு
*
அன்புள்ள சீனு,
திராவிடப்பண்பாடு என எதைச் சொல்லலாம்? குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாகத் திராவிடம் என ஒரு நிலம் சொல்லப்படுகிறது. கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள நிலம் அது. காஞ்சியுடன் அதன் எல்லை முடிகிறது. பின்னர் உள்ளது தமிழ்நிலம்.
திராவிடநிலத்திற்கு என ஒரு பண்பாட்டுத்தனித்தன்மை உண்டு என்றுதான் தொன்மையான நூல்களைக் கொண்டு அறியமுடிகிறது. குறிப்பாக சிற்பக்கலையில் அது திட்டவட்டமாகவே வரையறைசெய்யப்பட்டுள்ளது. இன்றுவரைத் தொடரும் பல்வேறு பண்பாட்டுத்தனித்தன்மைகளை உணவு, உடை, இலக்கியம் ஆகியவற்றில் நாம் கண்டுகொள்ளமுடியும்
திராவிடப்பண்பாடு களப்பிரர் ஆட்சிக்கும், பின்னர் பல்லவருக்கும், இறுதியாக பிற்காலச் சோழர்களுக்கும் பின் தென்னகம் முழுமையையும் தழுவியதாக ஆகியது. தமிழ்ப்பண்பாடு என்பது திராவிடப்பண்பாட்டின் ஒருபகுதி என்றாகியது. இன்று வேறுபாடுகளை அல்லது தனித்தன்மைகளை இழைபிரித்து அறிவது மிகவும் கடினம்
இன்றும் கண்கூடாக திராவிடப்பண்பாட்டின் தனித்தன்மையை கோயில்கட்டிடக்கலையில் காணலாம். ஆலயவழிபாடுச் சடங்குகளில் காணலாம். இலக்கியத்தில் அகம்புறம் பிரிவினை, செய்யுளின் கட்டமைப்பு, மொழியின் சந்தம் என பல நுட்பமான சிறப்பியல்புகளைக் காணலாம்.
கதகளி போன்ற ஒருகலையை மிக எளிதாகத் திராவிடநாடகமேடை என்று சொல்லமுடியும். அதன் கரு எப்போதுமே புராண இதிகாசங்கள்தான். அதன் வெளிப்பாட்டுமுறையில் சம்ஸ்கிருத நாடகங்களின் ஆழ்ந்த செல்வாக்கு உண்டு. அதில் பரதமுனிவரின் ரசக்கொள்கையும் முத்திரையியலும் பயன்படுத்தப்படுகின்றன. அதைமீறியும் அதன் அழகியல் முழுக்கமுழுக்க திராவிடத்தன்மைகொண்டது. யக்ஷகானத்துக்கும் இதைச் சொல்லலாம். திராவிடத்திற்கு அப்பால் பல நாடகவடிவங்கள் உள்ளன. அவை எவையும் கதகளியோ யக்ஷகானமோ போல இல்லை
ஆக, திராவிடப் பண்பாடு என்பது என்றுமிருப்பது. அது விரிந்த அளவில் இந்தியப்பண்பாட்டின் ஒரு சிறப்புநிலை. அதற்குள் தமிழ்ப்பண்பாடும் மலையாளப்பண்பாடும் மேலும் நுண்ணிய தனித்தன்மைகொண்ட சிறப்புநிலைகள். கலைகளில், இலக்கியங்களில் ஈடுபாடுகொண்ட எவரும் இந்தப் பண்பாட்டு நுண்மையை உதாசீனம் செய்யமாட்டார்கள். அவற்றை மேலும் மேலும் நுணுகி ஆராய்பவர்களாகவே இருப்பார்கள். ஏனென்றால் கலையும் இலக்கியமும் நுட்பங்களில் [Details] தான் உள்ளன.
ஜெயகாந்தன் சொல்வது இதைத்தான். நானும் அந்த ரசனை உடையவனே. ஹொய்சாளக் கட்டிடக்கலையோ ராஷ்டிரகூட கட்டிடக்கலையோ எனக்கு கஜூராகோவின் கட்டிடக்கலையை விட அணுக்கமானவையாக இருப்பது இதனால்தான்.
ஆனால் திராவிட அரசியல் என்பது முற்றிலும் வேறு. திராவிட அரசியல்பேசும் எவருக்கும் மேலே நான் சுட்டிய எந்தப் பண்பாட்டு அம்சங்களிலும் அடிப்படை ஈடுபாடுகூட இருப்பதில்லை என்பதை நீங்களே காணலாம். அவர்கள் பேசிக்கொண்டிருப்பது அதிகாரத்தைப்பற்றி மட்டுமே. அப்படியென்றால் திராவிட அரசியலென்றால் என்ன?
பண்பாட்டை வழிபடும் எழுத்தாளன் எப்போதும் சந்திக்கும் இக்கட்டில்தான் ஜெயகாந்தனும் இருக்கிறார். பண்பாட்டை அவன் பெருங்காதலுடன் தழுவிக்கொண்டிருப்பான், அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பான். மறுபக்கம் அதிகார அரசியல்வாதிகள் அதிகாரத்தைநோக்கிச் செல்லும்பொருட்டு பண்பாட்டின் சில அடையாளங்களை மட்டும் எடுத்துத் தொகுத்து ஒரு பிரிவினை வாத அரசியலை, வெறுப்பரசியலை கட்டமைத்துக்கொண்டிருப்பார்கள்
எழுத்தாளன் அந்த பிரிவினைநோக்கை, வெறுப்புவளர்ப்பை கடுமையாகக் கண்டிப்பான். அது அவன் அறம். உடனே நீ அந்தப்பண்பாட்டுக்கு எதிரானவன் என அவை முத்திரை குத்துவார்கள். உடனே அவன் அப்பண்பாட்டை தான் வழிபடுவதாகச் சொல்வான். அவன் எதிரிகள் அவன் அந்த வெறுப்பரசியலின் பிரதிநிதி என்று பழிசுமத்த்துவார்கள். காலம்முழுக்க இந்த வேறுபாட்டை அவன் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்
பண்பாட்டுவாதம் நேர்நிலைத்தன்மை கொண்டது. அது பண்பாட்டின் நுட்பங்களை நோக்கும். பண்பாட்டின் அழியாச்சரடுகளை வளர்க்கமுயலும். பண்பாட்டு அரசியலோ பண்பாட்டு அடையாளங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். அதன் அடிப்படையில் ஒருசாராரை மக்கள்திரளாகக் கட்டமைக்கும். அவர்களை அதிகார அரசியலுக்குக் கருவிகளாகவும் படிக்கற்களாகவும் பயன்படுத்தும்
பண்பாட்டுஅரசியலின் வழிமுறை என்பது பண்பாட்டு எதிரிகளைக் கட்டமைப்பதுதான். பண்பாடுகள் அனைத்துமே பிறபண்பாடுகளுடன் இணைந்தும் விவாதித்தும்தான் வளர்ந்திருக்கும். பண்பாட்டுஅரசியல் எப்போதுமே ஒரு பண்பாட்டுத்தூய்மைவாதத்தை உருவாக்கும். தூய்மையான பண்பாடு ஒன்று தங்களுக்கு இருந்ததாகவும் அது பண்பாட்டு எதிரிகளால் திரிக்கப்பட்டதாகவும் வாதிடும். அந்தத் திரிபுகளைக் களைந்து தூயபண்பாட்டை முன்னெடுக்கவேண்டுமென அறைகூவும்.
பண்பாட்டு அரசியல் எப்போதுமே தன் பண்பாட்டுக்கு எதிரிகளுக்கு எதிரான வெறுப்பை உருவாக்கி அதையே தன்னை ஒருங்கிணைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகக் கருதும். அதன் உச்சநிலையே ஃபாஸிஸம். எந்தவகையான பண்பாட்டரசியலும் அடிப்படையில் ஃபாஸிசமே ஆகும். அரசியல் என்பது அதிகாரத்தின்பாதை. அதிகாரம் மக்களின் உலகியல்நலன்களுக்கானது. ஆகவே உலகியல்ரீதியாக மக்களுக்கு தான் என்ன அளிக்கமுடியும் என்று பேசுபவனே அரசியல்வாதி. பண்பாட்டைக் காப்பதாக வாக்குறுதி அளிப்பவன் மக்களை ஏமாற்றும் ஃபாஸிஸ்ட் மட்டுமே
பண்பாட்டு அரசியல் என்பது நவீனஜனநாயகத்தில் உருவாகி வந்தது. அதற்கு முன்னர் இருந்த பண்பாட்டுப்பூசல்களுடன் அதை இணைக்கவேண்டியதில்லை. சுருக்கமாக அதன் வரலாற்றை இப்படிச் சொல்லலாம். ஐரோப்பாவில் நவீன தேசங்கள் உருவாகி வந்தது பதினான்காம் நூற்றாண்டுமுதல்தான். ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவை கத்தோலிக்க தேவாலயம் ஆண்டுவந்தது. மதத்தின் அந்த பொதுஆதிக்கத்திற்கு எதிராக அந்தந்த நிலப்பகுதிகளில் அரசியல் எதிர்ப்புகள் உருவாகி வரத்தொடங்கின.
இதற்கு நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, கல்வியின் வளர்ச்சி போன்ற பல காரணங்கள் இருந்தன. இக்காலகட்டத்தில் மத அடிப்படைகள் மறுபரிசீலனைக்கு உள்ளாயின. நவீனப்பண்பாடு என நாம் இன்று சொல்லும் ஒன்று உருவாகி வரத்தொடங்கியது. ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்கள் நிலப்பகுதியின் தனித்தன்மை கொண்ட பண்பாடுகளை அடையாளம் கண்டுகொண்டன. மதம் உருவாக்கிய பொது அடையாளத்திலிருந்து அதைப்பிரித்து காட்டமுயன்றன
ரோமின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற விரும்பிய அரசர்கள் இந்தப் பண்பாட்டுக்கூறுகளை தங்கள் தேசங்களின் அடையாளமாக ஆக்கிக்கொண்டார்கள். அதைக்கொண்டு மக்களை தொகுத்து தங்களுக்குக் கீழே அணிவகுக்கச் செய்தனர். மொழி, நிலப்பரப்பு ஆகியவை இப்படிப்பட்ட பண்பாட்டு அடிப்படைகளுக்கான அலகுகளாக ஆயின
இங்கிருந்து தொடங்கிய பண்பாட்டு அரசியல் நவீன ஜனநாயகத்தில் மிகப்பெரிய ஒரு அரசியல் ஆயுதமாக ஆகியது. பண்பாட்டு அடையாளங்களை உணர்ச்சிபூர்வமாக முன்வைப்பதும், பிறனைக் கட்டமைப்பதும், எதிரிகளைச் சுட்டிக்காட்டி வெறுப்பைத் தூண்டுவதும் மீண்டும் மீண்டும் வெற்றிகரமான வழிமுறையாக நிரூபிக்கப்பட்டது. ஐரோப்பாவிலிருந்துதான் உலகமெங்கும் ஜனநாயகமும் நவீனப்பண்பாடும் சென்றது. கூடவே இந்தப் பண்பாட்டுவாதமும் பண்பாட்டு அரசியலும் சென்றன. அன்றுமுதல் இன்றுவரை இந்த முரண்பாடு இருந்துகொண்டிருக்கிறது.
ஜெயகாந்தன் பேசுவது இந்த வேறுபாட்டைத்தான். இந்துத்துவம் இந்துப்பண்பாடு சார்ந்து இதே வேறுபாட்டைத்தான் நானும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்துத்துவ அரசியல் பிரிவினைநோக்கை, வெறுப்பை நோக்கிச் செல்லும்போது அதைக் கண்டிப்பதும் சரி இந்துப்பண்பாட்டின் சாராம்சத்தை முன்வைப்பதும்சரி ஒருசெயல்பாட்டின் இருபக்கங்கள் மட்டுமே. ஆனால் இவ்வேறுபாட்டை மொண்ணையாக சிந்திப்பவர்களிடம் சொல்லிப்புரியவைப்பது எளிதல்ல.
இந்துப்பண்பாடு எனச் சொல்லும்போது நான் இந்த மண்ணில் நான்காயிரமாண்டுகளுக்கு முன்னர் உருவாகி தொன்மங்கள் வழியாக, குறியீடுகள் வழியாக, நூல்கள் வழியாகப்பெருகி வளர்ந்த ஒரு பெரும் ஞானப்பரப்பை அதனடிப்படையிலான வாழ்க்கையைக் குறிப்பிடுகிறேன். அது நூற்றாண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்த பண்பாட்டுப்பரிமாற்றம் மூலம் உருவானது. நூற்றுக்கணக்கான உட்பிரிவுகளும் உள்முரண்பாடுகளும் கொண்டது.
இந்துப்பண்பாடு என இந்துமதத்தைச் சொல்லும்போதே விரிவான அளவில் பௌத்த, சமண, சீக்கிய மதங்களும் அதில் அடக்கம் என்று சொல்லலாம். அவற்றின் மெய்யியலும், படிமவியலும், தர்க்கமுறைமையும் முற்றிலும் ஒன்றே. வேறுபாடுகள் அந்த ஒற்றை அடித்தளத்தில் இருந்து எழுவது. இந்துப்பண்பாடு எனச் சொல்லப்படும் இந்தத் தொடர்ச்சியை உணருந்தோறும் இதன் நுட்பங்களையும் விரிவையும்தான் நான் சென்றடைகிறேன்
ஏறத்தாழ இதே சொற்களில் இந்துப்பண்பாடு பற்றி ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் இவ்விஷயத்தில் எப்போதுமே ஒற்றை எண்ணமே இருந்திருக்கிறது. வியாசர் முதல் ஜெ. கிருஷ்ணமூர்த்தி வரை அத்தனை இந்திய மெய்ஞானிகளுடனும் மானசீகமான அணுக்கம் கொண்டிருந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவர் இந்துத்துவ அரசியலுக்கு முற்றெதிரியாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது.
ஏனென்றால் அது பிரிவினையை தன் போக்காகக் கொள்கிறது. மிக எளிதாக அது பௌத்தசமண மதங்களை வெளித்தள்ளுவதைக் காணலாம். அதன்பின் அது நாட்டார் வழிபாடுகளை நிராகரிக்கும். மெல்லமெல்ல அது ஒரு தூய்மைவாதம்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும். அது கொண்டிருக்கும் பண்பாட்டு உருவகம் இறுக்கமானது. பிறன் என்பதைக் கட்டமைத்து அவனுக்கு எதிராக தன்னை உருவகித்துக்கொண்டது.
திராவிட அரசியல் இங்கே உருவானபோது சென்னைராஜதானி இருந்தது. அதில் ஆந்திரர்களின் செல்வாக்கே அதிகம். அவர்களை உள்ளடக்கிய அரசியலுக்காகவே திராவிடம் பேசப்பட்டது. இன்று அது தமிழ்ப்பண்பாட்டு அரசியலாகச் சுருக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பண்பாட்டுவாதம் பேசுவது வேறு தமிழரசியல் வேறு. இந்த வேறுபாட்டை எப்போதும் கருத்தில்கொண்டுதான் எதையும் பரிசீலிக்கவேண்டும்
ஓர் உரையாடலில் ஜெயகாந்தன் வள்ளலாரையும் நாராயணகுருவையும் ஒப்பிட்டுப்பேசும்போது “அவர்கள் திராவிடஞானிகள்” என்றார். அவர்களின் வேர்கள் தொன்மையான சித்தர்மரபில், சைவமரபில் இருப்பதைப்பற்றி அவர் பேசிக்கொண்டே சென்றபோது நான் “பசவண்ணரையும் சேர்த்துக்கொள்ளலாமா?” என்றேன். “சங்கரர் முதல் இன்றுவரையிலான அனைவரையும் சேர்த்துக்கொள்ளலாம். அவர்கள் திராவிடசிசுக்கள்” என்றார். இதுதான் ஜெயகாந்தனின் பார்வை.
இதிலுள்ளது ஒரு வகையான ஒருங்கிணைப்பு நோக்கு. நுண்மைநோக்கிச் செல்லும் தேடல். இது எவருக்கு எதிராகவும் வெறுப்பும் கசப்பும் கொண்டிருக்கவில்லை. நான் எனச்சொல்லும்போதே பிறன் அனைவரும் எதிரி என கூச்சலிடவில்லை. பண்பாட்டுவாதம் ஒரு கனிவு. பண்பாட்டரசியல் ஒரு மனச்சிக்கல் அல்லது அரசியல்சூழ்ச்சி
ஜெ