வண்ணமும் மென்மையும்…. சௌந்தர்

IMG_3209

இந்த தேசத்தின் ஒவ்வொரு நகரத்தின் கடைசி தெருவிலும் தொடங்குகிறது ஒரு கிராமம், ஒவ்வொரு கிராமத்தின் தெருக்கள் தோறும், வழியனுப்பி வைத்திருக்கிறது அந்த நகரத்தின் மாந்தர்களை. இங்கு நகரமெங்கும் தொட்டிகளிலேனும் வளர்க்கப்படுகிறது ஒரு செடி. தன் கிராமத்தில் விட்டு வந்த பசுமையான நினைவை, அந்த காட்டை, பசுமையை தொலைக்க மனமுமில்லாமல், ‘’பிழைப்பு’’ என்கிற காலில் கட்டப்பட்ட இரும்புக்குண்டை கழட்டிடவும் முடியாமல், அறுபடாத தொப்புள்கொடி உறவாய், தொட்டிகளில் வளர்கிறது அந்த ஒரு செடி. ‘’பாரம்’ மிகுந்த அல்லது மகிழ்ச்சி பொங்குகிற ஒவ்வொரு நாளிலும் தன ஊரை அந்த நாளின் சம்பவத்தை தன் ஊரோடு பிணைத்து பார்க்காத மனமே எந்த நகரிலும் இல்லை.

இப்படி மனம் முழுவதும் ஊரை சுமந்து கொண்டு அலையும் நகரத்து ”கிராமத்தானுக்கான” உணர்வை, பசுமையான நினைவை, வாழ்வின் உன்னதம் என்று சேமித்து வைத்திருக்கும் கனவுகளை, தன் கதைகளின் காட்சிகளின் ஊடாகவும், கதைமாந்தர்களின் வாயிலாகவும் சிறு நிகழ்வின் தருணங்களாகவும், வண்ணங்களாகவும், விவரித்து சொல்லி, ஒவ்வொருவரின் அகக்காட்சிகளையும் தொட்டு காட்டுவதில் வண்ணதாசன், ஒரு மகத்தான “அகக்காட்சிகளின் கலைஞன்”

வீட்டிலிருந்து கிளம்பும் ஒரு கதை மாந்தர் வீடு திரும்பும் வரை கதையோடு சேர்ந்து வண்ணங்களும் பயணிக்கிறது. என் சிறுவயது நாட்களை எண்ணிக்கொள்கிறேன், ஆழ்வார்திருநகரி, நாங்குநேரி, பாளை, என்று தாமிரபரணி ஆற்றின் கரைகள் தான் இன்றுவரை என் சொர்க்கபுரி, விளையாடி, குளித்து, களைத்து, உடலில் சிராய்ப்பு ஏற்படாமல் வீடு திரும்பிய நாட்கள் அரிது, ”சைபால்” தேக்கப்படாத என் முட்டியோ, முழங்காலோ நான் பார்த்ததே இல்லை, ஆனாலும் இன்றுவரை மனம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பது என்னவோ ஊரில் தான்.

மென்மையான கதை சொல்லி என்கிற மதிப்பீடு அவர்மேல் இருக்கலாம், நிஜத்தில் ஒவ்வொருவரும் பரபரப்பும் பதற்றமும், ‘செயல்படுதல்’ என்கிற பெயரில் ஆக்ரோஷமான, கொந்தளிப்பான மனோநிலையும் கொண்ட மனிதர்களாவே இருக்கிறோம், வண்ணதாசன், போன்ற ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம், நம்மில் இருக்கும் மென்மையான பகுதியை தொட்டு எடுக்கிறார் என்றால், அது, அவர் நமக்குள் செய்யும் நல் மாற்றம் தானே.

”ஒளியிலே தெரிவது” கதை தொகுப்பில் வரும் ‘அருணாசல காந்தி’ யும், செண்பகா என்கிற செண்பக அக்காவும் நம் கைபிடித்து அழைத்து சென்ற பக்கத்து வீட்டு அக்காவின் மாற்று பெயர்கள் தான். இந்த கதைகளின் மூலம் நம்முள் இன்னும் இருக்கும் அரை டவுசர் பையனை காண முடிவது ஒரு காலாதீத அனுபவம் அல்லவா?

இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் பெரும்பாலும், ‘பின்னால் திரும்பி பார்த்து, நினைவுகளை அசை போடும்’ கதைகள். பெரும்பாலும் இந்த ‘கதை’ எனும் கருவியை வைத்துக்கொண்டு இதனூடாகவே, நம் கிராம வாழ்க்கையை வாழ்ந்துவிட கிடைத்த பரிசு என்பேன்.

அதே போல் ”சிநேகிதிகள்” கதையில் வரும் நாச்சியாரும்  கிருஷ்ணம்மாவும், இன்றுவரை தாமிரபரணி, மற்றும் எந்த ஆறும் ஓடும் கரை ஊர்களில் காணக்கிடைக்கும் மனுஷிகள். தோளில் ஈரமான துவைத்த துணியை, சுமந்து வந்த நடு வயது பெரியம்மாக்களை காணுகையில், இவர்களுக்கும் ”சொல்ல’ ஏதாவது காதல் கதை இருக்குமே என்று தான் நினைத்துக்கொள்வோம்

இவர் கையாண்டிருக்கும் நுட்பங்களும், அவதானிப்புகளும், அடுத்த தலைமுறை எழுத்துக்கும், படைப்புலகில் மாணவராக வருபவருக்கும், திசைகாட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து பார்ப்பதுபோல் வாழ்க்கை முழுவதையும், ஒவ்வொரு நகர்வாக, காட்டியிருக்கும் சித்திரம் இவரது கதைகள், எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல் இருப்பதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று.

கதைகள் தோறும், கையில் எண்ணற்ற தூரிகைகளை எடுத்து பலவண்ண கலவைகளில் குழைத்து தெளித்தபடியே செல்கிறார், எத்தனை வண்ணம் காட்டுகிறார், சாமியார் கழுத்தில் தொங்கும் வழவழப்பான கருப்பு ருத்ராட்சமாலை, குங்குமம் இடப்பட்ட திருவோட்டில் காசுவட்டங்கள், சிவப்பு குஞ்சமும், காம்புமாக இருக்கும் வாகைப்பூ சிவப்பு ஒரு கதையிலும், பட்டுரோஜா சிவப்பு பற்றி சொல்லும்போது, ”குளிச்ச உள்ளங்காலு நிறம்” என்று ஒவ்வொரு வண்ணத்தை சொல்லுகையிலும் அதன் அதிகப்பட்ச சாத்தியத்தை சொல்கிறார்.

அதேமாதிரி வாழ்க்கையின் வண்ணங்களைச் சொல்லிச் சொல்லி சொல்லவே முடியாது என்பதுபோல் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரின் கதைக்களம் என ஒரு புராதனமான நகரமும் அதன் வலைப்பின்னலில் விரிந்து கிடைக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களும், கோவிலும், தாமிரபரணி எனும் ஜீவ நதியும், அதில் பெருமை மிகு பண்பாடும் சேர்ந்தே, இன்று அது அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்தும், அந்த நதிபோலவே வற்றியும் வரும், பொழுதில் ஏற்படும் பதட்டமும், சுருங்கியபடியே வரும் கனவுகளும், விரிந்துவரும் வன்மங்களும், கிட்டதட்ட எல்லா கதைகளிலும் நிரம்பியுள்ளது

சேவலும், தவிட்டு குருவியும், அணிலும் இவருக்கு சிநேகிதமான சகஜீவன்கள், அப்படியே வாசலும், ஜன்னலும், இலையும் புல்லும், பூவும், கதையை ஏற்றிச்செல்லும் அழகான வாகனங்கள். அவர் வாழ்க்கையில் மனிதர்களைப்பற்றி கவனிக்காத இடமே இல்லையோ என்று தோன்றச் செய்கிறது மூச்சு திணறும் ஒரு நகரின் நெரிசலான முட்டு சந்தில் ஒரு ஓரத்தில், அல்லது ஒரு பனங்காட்டு கிராமத்தில், ஒரு குடிசைவீட்டின் முகப்பில், நம்மை நிறுத்திவிட்டு அங்கிருந்து வேறு ஒரு உலகை, வாழ்க்கையை திறந்து காட்டும் லாவகம் அவருக்கு கைகூடுகிறது. நாம் வெறுமனே கையை பிடித்துக்கொண்டு கதையோடு அவருடன் நடப்பது மட்டுமே ஒரு பேரனுபவம்…

தனக்கும் தனக்கு வெளியே நிகழும் சமுதாயத்திற்குமான உறவும், அதில் முரணும், ஒரு படைப்பில் கதை மாந்தர்களின் உரையாடல் மூலம் நிகழ்த்திக் காட்டிவிடுவதிலும், அந்த சூழல் அனைத்தையும் ஒவ்வொன்றாய் விவரித்து சொல்லிவிட்டு அவர்களின் நுண்ணியல்புகளை, பூடகமாக சொல்வதில் இருக்கும் அழகியல், இவருக்கே சாத்தியமான கூறு மொழி

முரண்பாடான சமூக நபர்கள் என்று வருகையில் இவரது பார்வை மிகவும் வித்தியாசமானதும், விஸ்தாரமானதும், எனலாம். இந்த அடிப்படையில் ஒரு சிறு உரையாடல் மூலம் அந்த சூழலை, நபரை, அரவணைத்தும் தாண்டிச்சென்றும், அந்த கதைமாந்தர் போய் நிற்கும் தூரம் மிக உயரம். உதாரணமாக “கனியான பின்னும் நுனியில் பூ” என்னும் சிறுகதையில் தினகரிக்கும் அவள் அப்பாவுக்கும் நடக்கும் உரையாடல் அனைத்தும் இறுதியில் திருடன் என்று சொல்லப்படும் ஒருவரை நோக்கி ”அவரு கொய்யாப்பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவுதாம்மா” என்று நிறைவுறுகிறது.

அந்த குட்டி பெண்ணிற்கு, திருடன் என்று ஏற்கனவே பரிச்சயப்படுத்தப்பட்ட ஒரு மனிதரை, அவளுடைய அப்பா மேற்சொன்ன ஒற்றை வரியில், எளிதாக தாண்டிப்போகவும், அந்த குழந்தைக்கு மட்டுமன்றி வாசகர்களுக்கும் ஒரு திறப்பாக அமைவதோடு அந்த கதை முடிகிறது. அதே வேளையில், இந்த திறப்பை அவர் வெளிப்படையாக நடத்துவதேயில்லை, மிக அந்தரங்கமாக, நுட்பமாக, நிகழ்த்தி வாசிப்பவர்களின் பார்வைக்கே விட்டு விடுகிறார், திறப்பு நிகழ்ந்தால் நன்று என்பது போல

திருநெல்வேலி நகரின், சாலைகள், சிறு தெருக்கள், சந்துகள், புதிதாக கட்டிய ஜவுளிக்கடை, அப்படியே விட்டுவிட்ட பழைய முச்சந்தி பிள்ளையார், தெப்பக்குளம், கோவில்வாசல்கள், பாளை பஸ் ஸ்டான்ட், கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, தேரடி, மற்றும் அந்த தொன்மையான நகரை சுற்றிய கிராமங்கள், இங்கெல்லாம் குழுமியும், தனித்தனியேயும், திரியும் சாமானியர்கள் அனைவரும், அவர்களுக்கே தெரியாமல் இவரது கதையில் உலாவியபடியே இருக்கிறார்கள்.

இவரது கதைமாந்தர்களை சற்று கவனிக்க வேண்டும், ஆர்.கண்ணன், சின்னு, மங்காயி அத்தை, சின்ன பெண்குழந்தை தினகரி, கிருஷ்ணம்மா, நாச்சியார், சுலோச்சனா அத்தை, ஜெகதா, என இவர்கள் அனைவரும் முற்றிலும் வித்தியாசமானவர்கள் தான். வெவ்வேறு சூழலும், பின்னணியும், மனநிலையும், கொண்டவர்கள் தான். ஆனால் நளினமான இயல்பும், தங்கள் அன்றாட வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை தாங்கிக்கொள்ளும், மென்மையான இயல்பும், அதே வேளையில் அராஜகத்தையோ, மூர்க்கத்தனத்தையோ, தாங்கிக்கொள்ள இயலாத அன்பை எதிர்நோக்கும், அதையே பிரதிபலிக்கும், இயல்பான இவர்களை வண்ணதாசன் அவர்கள் படைத்திருக்கும் விதத்தில், நாம் இவர்களை காதலிக்காமல் கடந்து செல்லவே முடியாது.

கதைகளில் காட்டப்படும் மைக்ரோ டீட்டைலிங் எனப்படும் மிக நுண்ணிய காட்சிப்படுத்தல், பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை காட்டுவதற்கு இணையானது, உதாரணமாக, கூழாங்கல் கதையில் வரும் ”சிவபெருமான் கைலாயத்தில் நிற்க, கங்கை அவர்மேல் இறங்குகிற தோற்றம், மீசை வைத்த சிவன், காலை அகட்டி நிற்பார், முகம் ஏறிட்டு இருக்க, கனிவு, காதல், கம்பீரம், எல்லாம் தெரியும், கதையின் முடிவில் நாயகன், நாயகி காலின் கீழ் அமர்ந்து மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கும்போது மெளனமாக இந்த படம் பின்னணியில் நிற்கும், அந்த நேரம் தரிசனம்.

கனியான பின்னும் நுனியில் பூ, எனும் கதையில் குழந்தை தினகரி குனிந்து குனிந்து வாகைப்பூக்களை எடுத்து கையில் அடுக்கிக்கொள்கிறாள், திருச்சூர் பூரத்திருவிழாவில், யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, அந்த மரம் அவளுக்கு, ஒவ்வொரு பூவாக, குஞ்சமும் காம்புமாக பொழிந்துகொண்டே இருக்கிறது.

அணில் நிறம் அல்லது நிறங்கள் கதையில் மடியிலோ, தொடையிலோ வைக்கப்பட்டிருக்கும் தீப்பட்டி, கீழே விழுந்து, குனிந்து எடுப்பதற்குள், தீப்பெட்டியின் உள்ளே குச்சிகளும், கூடும் மோதிக்கொள்ளும் சப்தம், இதே போல் ஒவ்வொரு கதையிலும், இயற்கையின் பிரமாண்டத்தை, மிக மெளனமாக சில காட்சி படுத்தல்களின் மூலம் சிறு சிறு பொருட்களிலும் துலங்க செய்வதில், வண்ணதாசன் அவர்கள் வாசகர்களின் மனதை வென்றிருக்கிறார்.

இனிமையான நினைவுகள், மனிதர்கள், நிகழ்வுகள் அப்படியே கால சுழற்சியிலிருந்து உறைந்து நின்றுவிட வேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமான கனவு, எனினும், மனது இதுபோன்ற சிறுபிள்ளைத்தன கனவுக்குத்தான் ஏங்கியபடியே இருக்கிறது. இவரது படைப்புகளை அணுகுவது அப்படி ஒரு கனவுக்குள் வாழ்வதே. ஒரு செடியின் நுனியில் உள்ள மொட்டு பூவாக மலர்வதை அதன் அருகில் அமர்ந்து ஓவ்வொரு நொடியாக பார்வையிடுதல் போன்றது.

வண்ணதாசன் கதைதொகுப்புகளில் இருக்கும் பிரச்னையே, இதுதான் மிகச்சிறந்த கதை என்று ஒன்றை தனியாக கோடிட்டு காட்டிவிட முடியாததுதான். ஒவ்வொன்றும் அதனதன் வடிவத்திலும், சூழலிலும், மிக கச்சிதமாக பொருத்தப்பட்ட படைப்புகள்.

ஒரு நாளின் அத்தனை நிகழ்ச்சிகளையும் இப்படி அவதானிக்க ஒரு கலைஞனையும் தாண்டிய ஒரு மனநிலை தேவையாகிறது, எவ்வளவு அழுந்த சாத்தினாலும் காற்றுக்கு திறக்காத ஜன்னல்கள் இல்லை, ஆண்களின் சட்டை அணிந்த கட்டிட தொழிலாளிப் பெண்களும், விடிய கருக்கலில் இன்னும் அரைக்கீரை, தண்டங்கீரை விற்றுப்போகிற சப்தம், வீசி எறியப்பட்ட மது பாட்டிலுக்கும், வளர்ந்து கிடைக்கும் செடிக்கும் இடையில் சந்தோசமாக தானியம் தேடும் சந்தோச மைனா, ரெயில் கூவல், என்று வழி நெடுக அவதானிப்பு. ஒளியிலே தெரிவது தொகுப்பின் முன்னுரையில் சொல்லியிருப்பார், இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு எத்தனையோ பக்கங்கள் எழுதலாம், நான் எழுதாவிடடாலும் வேறு யாரோ எழுதுவதற்கு திறந்து கிடக்கின்றன, எதையும் மூடி விட முடியாது என் பேனா உட்பட’ என்று, ஆம் ஒரு போதும் உங்கள் பேனாவை மூடிவிடாதீர்கள்.

சற்றே பெரிய சிறுகதையான ‘சின்னு முதல் சின்னு வரையில்’ ஆர்.கண்ணன் என்கிற தன் நண்பனின் வாழ்க்கை சரிவும், அதை தொடர்ந்து அவன் இறப்பும், பல வருடங்களுக்கு பின் அவன் மனைவியை பார்க்க கதாநாயகன் குடும்பத்துடன் செல்வதும் ஊரார் பேச்சை கேட்டு, மனைவியின் பிடிவாதத்தால், பாதியிலேயே திரும்பி வருவதும், என முழுக்க முழுக்க மன போராட்டங்களுடன், கதை நம்மை முழுவதுமாக நிறைத்துக்கொள்கிறது. இதன் காட்சிகளில் வெளியூர் போய் பலவருடங்கள் கழித்து திரும்பிய ஒருவர் காணும் தன் சொந்த கிராமம், அதன் மக்கள், மாற்றங்கள் என புரிந்துகொள்வதற்கு முன்பே, அடுத்து அடுத்து நடக்கும் நிகழ்வுகள் என ஒரு குட்டி கொந்தளிப்பு நிறைந்த கதை.

ஒரு சிறு நிகழ்வில் மனிதர்களை அவதானித்து விடும் கதாபாத்திரங்கள் தான் வண்ணதாசனின், படைப்பில் நடமாடுபவர்கள், சுலோச்சனா அத்தை, ஜெகதா, மற்றும் ஒரு சுடுமண் காமதேனு’ எனும் கதையில் லேனா மாமா, சுலோச்சனா அத்தை, வீட்டில் குடியிருக்கும் கதாநாயகன், அவன் மனைவி ஜெகதா, மிகவும் நெருக்கமாக, ஒரு குடும்பம் போல் தொடங்கிய ஒரு அந்த நால்வரின் உறவில், ஒரு மழைநாளில் அத்தையின் மடியில் கிடந்த தன் கணவனின் உள்ளாடையை எடுக்கும் தருணத்தில், அத்தையை முழுவதும் அறிந்து விடுபவள் போல், வீட்டிற்கு வந்ததும் ”நாம் வேற வீடு பார்த்து போயிடலாங்க” என்று ஏங்கி அழுகிறாள்.

அப்படி எனின், இவர் கதைகளில் கயவர்களே இல்லையா…? இருக்கிறார்கள் இவர் பாஷையில் சொல்வதென்றால், அவர்கள் கொய்யாப்பழம் வாங்க வந்திருக்கிறார்கள், நாம் மாதுளை வாங்க… என்று ஒரு வரியில் கடந்து சென்று விடுகிறார்.

குழந்தைகள் போல அவதானித்தல் என்பது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட மனநிலை, அந்தவகையில், இவரின் கதையில் வரும் குழந்தைகள் அனைத்தும், கை நிறைய பூக்களுடனும், மனம் நிறைந்த கனவுகளுடனும், கண்ணில் படும் அனைத்தியும் சித்திரங்களாக்கி நம்மையும் காண வைக்கின்றன, ‘இமயமலையும், அரபிக்கடல்,’ கதையிலும் ‘சங்கிலி’ கதையிலும், ”கன்னியான பின்னும் நுனியில் பூ” கதையில் வரும் தினகரியும், நம்முள் இருக்கும் சிறுமிகள். இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கும் பித்து நிலை ஒரு தரிசன நிலைக்கு நிகர். எப்போதேனும் நிகழ்வது தரிசனம் எனில், எப்போதும் நிகழும் இந்த அவதானிப்பு, நிகர் தரிசனம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்…?

இவர் காட்டும் ஊர் திருநெல்வேலி என்கிற பெயரில் இருக்கும் உலகமெங்கும் உள்ள அவரவர் சொந்த ஊரே, ஒரு படைப்ப்பாளி தன் படைப்பின் மூலம் பாலை நிலத்தை காட்டுவாசிக்கும், காட்டின் செழிப்பை வறண்டவனுக்கும் அககாட்ட்சிகளாக காட்டுவதில் தான் அவரின் ஆளுமை முழுமையாக வெளிப்படுகிறது அந்த வகையில் நீங்கள் இருக்கும் ஊரை, வீட்டை, தெருவை, குளுமையாக, பசுமையாக ஆக்கிவிட வண்ணதாசனால் முடியும். அதற்கு தேவையெல்லாம், அவர் கதைகளில் நம்மை ஒப்புக்கொடுத்து விடுவது மட்டும் தான்.

இதை அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால்…. இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகூண்டு -கடிதங்கள்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55