வாசிப்பு கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

‘இந்த இணையதளத்தின் வாசகர்கள்…’ என்ற தலைப்பில் வந்த கட்டிரை நன்றாக இருக்கிறது. அதில் இடம் பெற்ற இரண்டு வரிகள்:

“ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள்.”

“அப்படி இருந்தும்கூட இத்தனைபேர் வந்து என் இணையதளத்தை வாசிப்பது இது இலக்கியத்துடன் வரலாறு தத்துவம் மதம் என்று விரிவதனாலும் என்னுடைய பெயருக்கிருக்கும் மெல்லிய பிரபலத்தாலும் மட்டுமே.”

இந்த இரு வாக்கியங்களும் உங்கள் வாசகர் யார் என்ற தெளிவையும் உங்கள் வெற்றியை உங்கள் எண்ணத்தின் படியே பார்க்கவேண்டும் என்ற நிதானமான பார்வையும் நன்றாக தெரிகிறது. தங்கள் எழுத்துக்கும் வலைப்பூவிற்கும் பரிச்சியமானவர்களுக்கு நான் சொன்னது ஏதும் புதிது அல்ல. ஆனால் வெகுஜன அங்கிகாரத்துக்கு ஆசை படுவது அதன் பலனாக கிடைக்கும் பிரபல்யத்திற்கும் பொருளுக்கும் ஆசை படுவதேயாகும். ஆனால் அது ஒரு ஆரம்ப நிலையாக இருக்கும் வரை அவசியமானதாகவே உள்ளது. காலப்போக்கில் கலையே முக்கியமாக ஆகவேண்டும். சிலர் அதே வெகுஜன நிலையில் தங்கிவிடுவதும் நிதர்சனமாகத்தான் இருக்கிறது.

இணையத்தின் முக்கிய பங்களிப்பே வாசகனை எழுத்தாளனிடம் நேரே தொடர்பு படுத்தியதுதான். ஒரு காலத்தில் தன்னை சுற்றியுள்ள மக்களின் மற்றும் ஆர்வத்துடன் கடிதம் எழுதும் மக்களுடன் மட்டுமே ஒரு எழுத்தாளன் பரிச்சியமாகியிருப்பார். ஆனால் இன்றோ உடனே தன் வாசகனிடம் ஒரு எழுத்தாளரின் எழுத்து சென்றடைகிறது. அதுமட்டுமில்லாமல் வாசகனின் உணர்வையும் புரிதலையும் எதிர் எண்ணத்தையும் உடனே அறியமுடிகிறது.

எனக்கு இந்த இடத்தில் ஒரு கேள்வி. ஒரு கதை உருவாவது என்பது ஒரு பிரசவம் போல். பிரசவம் நடந்தவுடன் அங்கு குழந்தையாக பாலகனாக வாலிபனாக பின் முழு மனிதனாக அனுபவித்தால்தான் அந்த பிரசாத்திற்கு சுகமளிக்கும் தன்மையிருக்கும். பிரசவித்தயுடனேயே அங்கு பெரிய மனிதனாக நம்முடன் எண்ண பரிமாற்றமும் எதிர்கேள்விகளும் கேட்டால் அந்த பிரசவத்தை ஆனந்தமாக அனுபவிக்கமுடியாது. அதுபோல் உங்கள் பிரசுரங்களுக்கு உடனே ஏற்படும் எண்ண பரிமாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்னொரு வரியும் முக்கியமாக தெரிகிறது.

“எழுதவேண்டியவற்றை முழுக்க எழுதியபின் இதில் இருந்து விலகியாகவேண்டும்.” இது ஒரு ஜெயகாந்தனின் சிந்தனைபோல் தெரிகிறது.

எழுதவேண்டியவை என ஏதாவது உள்ளதா என்ன? அது ஒரு உள்தேவையாக பார்த்தல் அங்கு ஒரு பூரணத்துவம் அடைந்தால் அந்த தேவை மறையும். உள்தேவை என்பதே வேதாங்க பார்வையில் ஒரு பற்றாகுறை எண்ணத்தின் வெளிப்பாடுதான். இந்த பற்றாகுறை எண்ணமே வாழ்கையின் உந்துதல் சக்தியாகவும் ஆகிறது. அந்த உள்உந்துதல் இல்லா நிலையே அரதி என சொல்லலாம். அதே பற்றாகுறை நிலையின் ஒரு வெளிப்பாடுதான் நாம் எதையாவது பகிறவேண்டும் என நினைப்பதும். ஏனனில் பகிர்தலில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது சாமான்யர்களுக்கு பற்றாகுறை நிலையின் காரணமாகவும் ஞாநிகளுக்கு பூர்ணத்துவத்தினால் ஏற்படும் அபரிமிதமான அன்பின் காரணமாகவும் பகிர்தல் ஏற்படுகிறது.

ஒரு எழுத்தாளருக்கு உள்மனதில் பகிரும் எண்ணமும் அதனால் ஏற்படும் அங்கிகாரமும் தேவையற்றுப்போனால் எழுத்தும் நின்றுவிடும். எழுதாமல் இருப்பது ஒரு தனிமனித மேம்பட்ட நிலையாகதான் இருக்குமே தவிர எழுதவேண்டியவை எழுதப்பட்டுவிட்ட நிலையாக இருக்கிமா என்ன?

உங்கள் கட்டுரை எனக்கு பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளினால் ஏற்பட்ட எண்ணங்களை பகிர்கிறேன். எதிவாதமாக அல்ல, பகிர்வதர்க்காக மட்டுமே.

அன்புடன்,

வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ.மோ!
தங்கள் இணையதளம் பற்றிய கட்டுரை கண்டேன்.உண்மை.பெரும்பாலானவர்களின் இலக்கிய வயது எட்டாம் (literary age) வகுப்பிலேயே நின்று .மருத்துவம்(நானும் ஒரு மருத்துவந்தான்),கணினி மென் பொருள் ,போன்று படிப்பவர்களின் இலக்கியப் பரிச்சயம் குமுதம் விகடனைக் கூடத் தாண்டுவதில்லை.இன்று ஒரு ரயில் பயணத்தில் ஒரு தலைமுறையே செல் ஃபோனை நோண்டிக் கொண்டே இருக்கிறது.புத்தகம்(அதுவும் விஷ்ணுபுரம் போன்ற தலையணைகளை) படித்தாலே என்ன ஸார் பரிட்சையா? என்று சக பயணி கேட்கிறார்.
இந்நிலையில் தங்கள் தளம் போன்று எந்த பலனும் எதிர்பார்க்காமல்,ஒரு இலக்கியக் கடமையாக,தத்துவம்,இலக்கியம்,சமூக உளவியல் போன்றவற்றை அலசும் இணையதளம் எனக்குத் தெரிந்து தமிழில் வேறில்லை,எனவே தாங்கள் தொடர்ந்து எழுதவும்.மூடுவதைப் பற்றி நினைக்க வேண்டாம்.ஒரு வார இதழ் ஷாம்பு,ப்ற்பசை,கேர் ஃப்ரீ என்று இலவசமாகக் கொடுத்து நாங்கள் தான் நம்பர் ஒன் வார இதழ் என்றது.அதற்காக அந்த இதழ் சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழை விடச் சிறந்ததாகி விடுமா?தரத்தை அளக்கும் எந்த மானியும் எண்ணிக்கையைப் பொருட்படுத்துவதில்லை
அன்புள்ள
ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம்

உண்மைதான். நாம் நினைவுப்பயிற்சியை நம்பியே கல்வியை அமைத்திருக்கிறோம். கற்பனை தர்க்கம் இரண்டுக்கும் இடமில்லாத கல்வி. உண்மையான கல்வி வெளியேதான் உள்ளது. அதை நம்முடைய சின்னஜ்சிறிய அறிவுலகமே அளித்துக்கொண்டும் இருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களின் இந்த வலைதளம் 2008ல் ஆனந்த விகடன் விவகாரம் மூலம்தான் முதன் முறையாக பல புதிய வாசகர்களைப் போலவே எனக்கும் அறிமுகம் ஆனது. அப்போது முதல் உங்களின் வலைதளத்தை தொடர்ந்து படித்து வரும், உங்கள் எழுத்துகள், முக்கியமாக நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலின் துணையோடு வாசிப்பின் ஆரம்பநிலையை கடந்து அடுத்த படி நோக்கி சென்று கொண்டிருக்கும் இளம் வாசகன் நான். உங்களின் சிறுகதைகள்,நாவல்கள், அங்கத கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள், இலக்கிய கோட்பாடு, இலக்கியத்தை அணுகும்முறை பற்றிய கட்டுரைகளின் பின்னால் உள்ள உங்களின் அனுபவம், பார்வை, சளைக்காத உழைப்பு எனக்கு பிரமிப்பை தருகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழியிலேயே எல்லா பாடங்களையும் படித்திருந்தாலும், தமிழ் இலக்கியம் என்றால் மனப்பாடம் செய்து ஒப்பித்தல் என்ற மனநிலையை தாண்டி மிக சமீப காலம் நான் வரை வந்ததில்லை. இணையத்தில் அபரீதமாக உங்களைப் பற்றிய வசவுகளால் உங்கள் வலைதளத்தை படிக்க ஆரம்பித்தில் தயங்கினேன். ஆனால் வாசிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே, எனது பல முன்முடிவுகளை முற்றிலுமாக மாற்றி அமைத்து பல கதவுகளை திறந்தது. சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், கந்தர்வன், கண்மணி குணசேகரன் முதல் தஸ்தொவெஸ்கி வரை பல படைப்பாளிகள் உங்கள் தளம் மூலமாகவே எனக்கு முதன் முதலாக அறிமுகமானார்கள்.

ஆரம்பத்தில் உங்களின் அங்கத கட்டுரைகள், சிறுகதைகள் எனக்கு சுத்தமாக புரிந்ததில்லை. உங்களின் பெரும்பாலான கதைகளின் நாஞ்சில் வழக்கு மொழி எனக்கு அறிமுகம் இல்லாததால், பல மீள் வாசிப்பிற்கு உட்படுத்திய பிறகுதான் கொஞ்சமாவது புரிந்தன.மேலோட்டமான வாசிப்பிற்கும் , ஆழமான வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசம் மெதுவாக புரிய வந்தது. உங்கள் சிறுகதை தொகுதிகளிலுள்ள கண்,தேவதை, ஜகன் மித்யை, முடிவின்மையின் விளிம்பில், நச்சவரம் போன்ற கதைகளை படித்த பிறகு இது முற்றிலும் வேறு உலகம் என புரிந்தது. இது தந்த வாசிப்பனுபவமே, தமிழின் முக்கியமான நாவல்கள், சிறுகதைகள் அனைத்தையும் படித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது.

தங்கள் வாசகன்,
சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்

உங்கள் முயற்சிகள் வெல்லட்டும். நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதனூடாக எளிதாக உள்ளே வந்துவிட்டீர்கள் என்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனென்றால் ஒரு ஆறுமாதம் கூர்ந்து வாசித்தால் புரியாததாக ஏதும் தமிழில் இல்லை

ஜெ

திரு ஜெமோ,

ச‌மீப‌த்தில் உங்க‌ளின் ம‌த்த‌க‌ம் க‌தை ப‌டித்தேன். க‌தை பிடித்திருந்தாலும் அங்க‌ங்கே வ‌ந்த‌ ம‌லையாள‌ வ‌ச‌ன‌ங்க‌ள் புரியாத‌தால் வாசிப்பு முழுமையடையாத‌து போன்ற‌ உண‌ர்வு. வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து.

அடிக்க‌டி நாங்க‌ள் ப‌டித்த‌ க‌தைக‌ளைப் ப‌ற்றி ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் விவாத‌ம் நிக‌ழும். நேற்று அவ்வாறான‌ ஒரு விவாத‌த்தில் உங்க‌ளின் “காடு” க‌தை அடிக்க‌டி இணைய‌த்தில் பேச‌ப்ப‌டுவ‌து குறித்து கேட்ட‌போது ஒரு ந‌ண்ப‌ர் சொன்ன‌து “பாதிக்கு மேல படிக்க முடியல. நிறைய மலையாள வாடை”. அவ‌ரும் என்னைப் போன்றே உங்க‌ளின் எழுத்துக‌ளுக்கு தீவிர‌ விசிறி என்ப‌து குறிப்பிட‌ப்ப‌ட‌ வேண்டிய‌து.

இது ஏன்? உங்க‌ளுக்கான‌ த‌மிழ் வாச‌க‌ர்க‌ள் ம‌லையாள‌மும் தெரிந்திருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறீர்க‌ளா?

ஏனென்றால் உங்க‌ளின் இன்னொரு க‌தையில் கிரிக்கெட்ட‌ர் காளிச்ச‌ர‌ணுட‌ன் பேசும் க‌தையின் நாய‌க‌ன் பேசும் வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லாம் த‌மிழில் வ‌ரும், ஆனாலும் “நான் ஆங்கில‌ம் பேசிய‌து அவ‌ருக்கு ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும்” என்று எழுதியிருக்கிறீர்க‌ள். ஆங்கில‌த்தில் பேசிய‌தை த‌மிழில் எழுதும்போது ஏன் ம‌லையாள‌த்தில் பேசுவ‌தும் த‌மிழில் எழுத‌க்கூடாது?

நீங்க‌ள் உங்க‌ள் வாச‌க‌ர்க‌ள் மீது ம‌லையாள‌த்தை திணிப்ப‌தாக‌ என்று தோன்றுகிற‌து. உங்க‌ள் க‌தைக‌ளை விரும்பிப் ப‌டிப்ப‌வ‌ன் என்ற‌ முறையில் என‌க்கு இதைச் சொல்ல‌ முழுத் த‌குதியும் இருப்ப‌தாக‌வே நினைக்கிறேன்.

க‌தை க‌ன்னியாகும‌ரி, கேர‌ள‌ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌ப்ப‌தால் நேட்டிவிட்டி கெடாம‌ல் த‌ருவ‌த‌ற்காக‌ என்று நீங்க‌ள் ப‌தில் சொன்னால் எனக்கு என்ன‌ சொல்வ‌து என்று தெரிய‌வில்லை. ம‌லையாள‌ம் தெரியாத‌த‌தால் உங்க‌ள் க‌தையுட‌ன் ஒட்ட‌ முடியாம‌ல் போகிற‌து என்ற‌ வ‌ருத்த‌திலேயே இதை எழுதுகிறேன்.

ந‌ன்றி
வெங்க‌ட்

அன்புள்ள வெங்கட்

என்னுடைய கதைகளை நீங்கள் சொன்னது போல எளிதாக ஒரு வகைமைக்குள் அடக்க முடியுமா என்று தெரியவில்லை.. என் கதைகளில் ஒரு பத்து சதவீதம் படைப்புகளில் மட்டுமே குமரித்தமிழ் கையாளப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் போன்றவை நேர்த்தமிழில் உள்ளன. கொற்றவை தூய தமிழில். கன்யாகுமரி, இரவு போன்ற நாவல்களில் மலையாள உரையாடல்கள் நேர்த்தமிழில்தான் உள்ளன. மேலும் பல கதைகளில் இதைக்காணலாம்

மலையாளம் கலந்த வட்டாரவழக்கு பயன்படுத்தப்படும் கதைகள் எப்போதுமே குமரிமாவட்டத்தின் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை சொல்லக்கூடியவையாக இருக்கும். அந்த மொழியில் இருந்து அவர்களை பிரிக்க முடியாது. பிரித்தால் அவர்கள் அவர்களாக இருக்க மாட்டார்கள். மொழியும் நிலம்போலவே ஒரு பிராந்தியம்தான்.. காடு நாவலில் உள்ளது மலையாளம் அல்ல. மலைத்தமிழ். அது அந்த வட்டார மலையின மக்களுக்கே உரிய தமிழ்.

எங்களூரைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி ஆ மாதவன் நாஞ்சில்நாடன் தோப்பில் முகமது மீரான் நீல பத்மநாபன் முதல் இளையதலைமுறையில் குமார செல்வா வரை இந்த வட்டார வழக்கை பல வகைகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் அது மலையாளம் அல்ல. தெலுங்கு ஆதிக்கம் வருவதற்கு முந்தைய தமிழ்தான்.

வட்டார வழக்கு என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு அடையாளம். ஜோ டி குரூஸின் மீனவர்களின் வட்டார வழக்கு எனக்கு கொஞ்சம் சிக்கலை அளிக்கலாம். ஆனால் அவர்களின் பேச்சு இல்லாமல் அவர்களை எப்படி புனைவுலகுக்குள் கொண்டுவர முடியும்? கொண்டுவந்தால் அது கலைப்பூர்வமாக இருக்குமா?

ஜானகிராமனை தஞ்சை வட்டார வழக்கில் இருந்தும் கி ராவை கரிசல் வட்டார வ்ழக்கில் இருந்தும் பிரிக்க முடியுமா என்ன? ஒரு வட்டார வழக்கு இன்னொரு வட்டாரத்தவுருக்கு புரியாது. அப்படியானால் வட்டார வழக்கே தேவையில்லையா?

ஒரு வட்டார வழக்கு நமக்கு அன்னியமாக இருந்தால் கொஞ்சம் கவனம் கொடுத்து அதை பழகிக்கொள்வதே முறை. நல்ல எழுத்தில் அடிப்படையான விவரணைகள் ஒருபோதும் வட்டார வழக்கில் அமையாது. உரையாடலின் அழகை சொல்லும் பகுதிகள் மட்டுமே வட்டாரவழக்கில் அமையும். ஆகவே ஓர் எளிய கவனம் இருந்தாலே இவற்றை வாசிக்கலாம்

நாம் வணிக- கேளிக்கை எழுத்தை வாசிக்கையில் சிலவற்றை கோருகிறோம். அது நமக்காக எழுதப்பட்டிருக்கவேண்டும், நம் வாசிப்பை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றெல்லாம். ஆனால் அதை இலக்கியத்திடம் கோர முடியாது. இலக்கியத்தை நோக்கி நாம் சென்றுதான் ஆகவேண்டும். அது ஒரு மக்கள் திரளீன் வாழ்க்கையை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது என்பதனால்

இது உலகம் முழுக்க உள்ள சவால்தான் Alice
Walker எழுதிய The Color Purple நாவலில் அமெரிக்க கறுப்பர்களின் ஆங்கிலத்தை நான் மிகவும் கஷ்டப்பட்டே புரிந்துகொண்டேன். ஆனால் அவர்களின் மொழியில் இருந்து அவர்களை பிரித்து யாங்கி ஆங்கிலத்தை பேசவைத்தால் அது அந்த மக்களை காட்டுமா என்ன?

ஜெ

.அன்புள்ள தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

கோதையின் மடியில் படித்ததுமே தங்களுக்கு எழுத எண்ணினேன். இப்போது கட்டாயம் உருவாகியிருக்கிறது… “ஒரு கட்டத்தில் இந்த இணையப்பதிவை நிறுத்த வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது ஓர் அறிமுகதளம் மட்டுமே. இதற்கு இயல்பாகவே ஓர் எல்லை உள்ளது. இதற்கான தேவை முடிவடையும்போது இது வெறும் சம்பிரதாயமாக ஆகக்கூடும். எழுதவேண்டியவற்றை முழுக்க எழுதியபின் இதில் இருந்து விலகியாகவேண்டும்”

வாழ்வின் மகத்தான தருணங்களை நான் கோதையின் மடியில் பெற்றதாக உணர்ந்தேன். ஒரு தீவிர வாசகருக்குரிய மனநிலை இருந்தும் பெரிய ஆக்கங்களை வாசிக்காமலிருக்கும் என் போன்றவர்களுக்கு உங்களது இணையப்பதிவு நிறுத்தம் பெருத்த ஏமாற்றத்தைத் தரும். என்றாலும் நீங்கள் கூறும் “எல்லை” என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

அத்துனைக்கும் நன்றிகள்.

அன்புடன் ரவிச்சந்திரன்.

அன்புள்ள ரவிச்சந்திரன்

நிறுத்தி விடுவதைப் பற்றி யோசிப்பது அவ்வப்போது நிகழ்கிறது. இந்த இணையதளம் ஒரு சுமையாக ஆகிறதா என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் எனக்கென ஒரு ஊடகமாக இருப்பதனால் இது தேவையாகவும் படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது, விழா
அடுத்த கட்டுரைசில கவியியல் சொற்கள்