கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

SR

“கன்னியாகுமரி”யில் கலையில் எது உன்னதம், சப்ளிமேஷன் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்ற விவாதம் கதைமாந்தர் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது.

அதை பிரவீணா கதை முடிவில் இப்படிச்சொல்கிறாள் – “அழகுணர்வு, நீதியுணர்வு, மெய்மைக்கான தேடல் மூன்றும் ஒன்று தான். அதைத்தான் சப்ளிமேஷன் என்றேன். (…) சப்ளிமேஷன் படியில் முன்னேறும் போது தான் வாழ்வுக்கு அர்த்தம் இருக்கிறது. சப்ளிமேஷன் கணம் தான் பிறப்பை நியாய படுத்திகிறது. மனிதர்களை இயங்க வைக்கும் வாழ்க்கையின் விசைகளில் மிக முக்கியமானது இது.” மேலும் ரவி அவன் கயமையின் காரணத்தாலேயே உன்னதமடைதலுக்கான திறனை இழந்துவிட்டதாகவும் அவள் சொல்கிறாள்.

மனித அறவுணர்ச்சிக்கும் கலை உன்னதத்துக்கும் என்ன உறவு என்று யோசித்து பார்க்கையில் எனக்கு “தாயார் பாதம்”, “மயில் கழுத்து” கதைகளில் வரும் ராமன் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. அவனை எல்லா வகையிலும் ரவிக்கு நேர் எதிரான ஒரு மனிதனாக கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

ராமன் அதிமிருதுவானவன். நுண்ணிய உணர்ச்சிகள் கொண்டவன். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அன்பின் புதுப்புனல் அவனுள் ஊர்றேடுக்கக்கூடியவன். பாட்டியின் கதியை கண்டதால் சங்கீதம் அவன் விறல் நுனியிலேயே நிற்கிறது, தொண்டைக்கு ஏற மறுக்கிறது. பாட்டியை தீர்மானமுள்ள பெண்ணாகவும் ஞான சரஸ்வதியாகவும் அன்றி வேறு வடிவில் ஏற்க அவன் மனம் மறுக்கிறது. மானசீகமாக அவள் முன் விழுந்து விழுந்து வாங்கிக்கொண்டே இருக்கிறான்.

அவன் அழகை உபாசிக்கிறான். அழகின் முன்னால் செய்வதறியாது தவிக்கிறான். அவனுக்கு அடக்கவோ, ஆளாவோ, ஏன், கண்டித்து ஒரு சொல் சொல்லவோ தெரியாது. கலையின் உச்சத்தை கண்ணால் கண்டுவிட்டான். அவன் ஆன்மா அதை அறிந்து உள்வாங்கிவிட்டது. ஆனால் மலையுச்சிக்கு போகமுடியவில்லை. ஏங்குகிறான். சங்ககால இருங்கால் முடவனைப் போல மலைதேனை சுட்டி வெறும்விரலை நக்கி வேதனைப்படுகிறான். தாங்காமல் உச்சிமண்டை வெடிக்கும் போது முடியல, முடியல என்று தேம்பித்தேம்பி அழுகிறான்.

அவனுக்கு சாத்தியம் ஆகும் இந்த உன்னதத்தருணம் ஏன் ரவிக்கு சாத்தியம் ஆகவில்லை?

எனக்கு தோன்றுவது, ராமன் போன்றவன் சுய பாதுகாப்புகளை களைந்து நிற்க முடிகிறது (he is vulnerable). அதாவது அவனால் தன் உணர்ச்சிகளை பாதுகாக்காமல் தன் முன்னும் மற்றவர் முன்னும் தன்னை நிறுத்திக்கொள்ள முடிகிறது. தன் அகம் சொல்லும் பாதையில் செல்லும் திறன் உடையவன். மறுபடியும் மறுபடியும் காயமடைய தயங்காதவன். ரவிக்கு இந்த vulnerability கிடையாது. உணர்ச்சிகளை பாதுகாக்காமல் வாழ பயம். இதுவே இருவருக்குமான முக்கிய வேறுபாடு.

ராமன் இயல்பாகவே பெண்மைக்கு உரிய நளினமும் மென்மையும் கொண்டவனாக கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் ரவியை ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமான ஆண் – அவனுக்கு தன்னை ஆண் என்று தொடர்ந்து நிரூபித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனுக்கு தன் vulnerabilityயை பற்றி சங்கடமோ கூச்சமோ இல்லை. அவனுக்குத் தெரியும், அவன் இமயமலையேறும் குருடன் என்று. அவன் அதை மிக இயல்பாக ஏற்றுக்கொள்கிறான். அதுவே அவன் பாத்திரத்தின் உச்சம், அதன் மீட்சி.

பிரவீணாவின் சொற்களில் சப்ளிமேஷன் என்பது “சுயமும், அடையாளங்களும், ஆசைகளும், அகங்காரமும், உடலும் பிரக்ஞையும் வகுக்கும் எல்லைகளை தாண்டி முன்னகர்தல்”. இதில் கலைஞனே கலைக்கு அவியாகும் நிலை கூட வரலாம். அது உச்ச கத்திரி வெய்யிலில் நாளெல்லாம் கற்படியில் நிற்பது போல. வெப்பம் தலையில் இறங்கி உடலெல்லாம் இறங்கி பரவி காலை பொசுக்கும். நிற்கவேண்டும். ராமன் நிற்கிறான். பிரபஞ்ச சைதன்யத்தை நாம் கலையில் வெளிப்படுத்த முதலில் அதை உள்வாங்க வேண்டும். இடிதாங்கி போல பேசாமல் நின்று அது நம்மை தாக்கி இறங்கிச்செல்ல வழிவிடவேண்டும். அதனிடம் சரணடைய வேண்டும். காதலில் எப்படி சரணடைகிறோமோ, அப்படி. அன்பின் வெள்ளம் நம்மை அடித்துச்செல்ல விடுகிறோம் இல்லையா, அப்படி. அதுவும் ஒரு அற உணர்ச்சி. அழகுக்கும் மெய்மைக்கும் நாம் செய்யக்கூடிய அறம்.

ரவி போன்றவருக்கு – ஆணோ பெண்ணோ திருநங்கையோ – இந்த சரணாகதி நிலை கைகூடாது என்றே தோன்றுகிறது. அன்பும் அறமும் அவனை நிலையிழக்கச்செய்கின்றன; அதற்க்கு எதிராக அவன் மனம் அணை கட்டிக்கொள்கிறது. ஆணவமும் கயமையும் குறுக்கே நிற்கிறது. மீண்டும் மீண்டும் தன் முரட்டாண்மையை நிரூபித்துக்கொள்வதிலேயே அகசக்தியெல்லாம் செலவாகி விடும். இப்பாவனைகள் மெய்மைக்கும் அழகுக்கும் நுண்ணுணர்வுகளுக்கும் இடம் அளிப்பதில்லை. இந்நிலையில் கலை உன்னதமோ மனமார்ந்த அன்போ கைகூடுவது கடினமே

சுசித்ரா ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
அடுத்த கட்டுரைஎச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்