யோகியும் மூடனும்

maxresdefault

 

அன்புள்ள ஜெயமோகன் சார்..

 

 

வணக்கம்.

 

 

நலம் தானே!

 

 

”வழிப்போக்கர்கள்” கட்டுரையை வாசித்தேன். யோகி ராம்சுரத்குமாரைப் பற்றி, நீங்கள் அவருடன் சக சாமியாராக அங்கே இருந்தது பற்றிக் குறிப்பிட்டிருகிறீர்கள்.  பின்னர் அவரைச் சந்தித்ததாகவும் சொல்லியுள்ளீர்கள். ’மா தேவகி டயரி’  என்னும் நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இணைத்துள்ளேன். இதில் யோகியார் சன்னதித் தெரு இல்லத்தில் இருக்கும் போது இரு எழுத்தாளர்கள் வந்து சந்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் “மலையாள எழுத்தாளர்” நீங்கள்தான் அல்லவா? முற்போக்கு எழுத்தாளராகக் குறிப்பிடப்படுபவர் பவா செல்லதுரை. சரியா?

 

 

இந்தக் கட்டுரை உங்களுடைய கிண்டல், குறும்பு, பதட்டம் எல்லாவற்றையுமே படம் பிடித்துக் காட்டுகிறது. ஆனால், முழுக்க முழுக்க அவர்கள் பார்வையில், அவர்கள் அவதானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது பற்றிய உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.  ‘சொல் புதிதில்’ யோகியார் பற்றி ஒரு கட்டுரை/நேர்காணல் வந்திருக்கிறது என்று படித்த ஞாபகம் இருக்கிறது. அது இந்தச் சந்திப்பு தானோ?

 

 

அன்புடன்

 

அரவிந்த்

 

 

 

அன்புள்ள அரவிந்த்

 

உண்மைதான். இக்குறிப்பு அதைப்பற்றித்தான். இதைப்பற்றி நான், பவா இருவருமே எழுதியிருக்கிறோம். சிறிய சொல்வேறுபாடுகளுடன் இது பதிவாகியிருக்கிறது

 

இக்குறிப்பில் சொல்லப்படுவதுபோல நான் என்னுடைய உச்சகட்டத் திமிருடன், மீறலுடன் அந்தச் சந்திப்பில் இருந்தேன். சொல்லப்போனால் அவரைச் சீண்டுவதற்காகவே சென்றேன். சீண்ட எல்லா வகையிலும் முயன்றேன். எல்லா வரிகளும் எரிச்சலூட்டுபவைதான். அங்கே கூடியிருந்த அவருடைய பக்தர்கள் நடுவே நீங்கள் இவர்களை உங்களைப்பற்றி புகழும்படி சொல்லிவைத்திருக்கிறீரகளா  என்று கேட்டேன்

 

”நீங்கள் தல்ஸ்தோய் போல இருக்கிறீர்கள்” என்றேன். ”வார் ஆர் பீஸ்? என்று சிரித்தபடியே கேட்டார். பவா செல்லத்துரையை தெரிந்திருந்தது. என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பாலகுமாரனைப்பற்றி பெயர்சொல்லி கடுமையாக ஏதோ கேட்டேன். அதுவும் பாலகுமாரனைப்பற்றிய கோபத்தால் அல்ல, அவரைச் சீண்டவேண்டும் என்றுதான்

 

அன்றைய என் மனநிலையை இப்படிச் சொல்லலாம். நான் கொந்தளிப்பும் நிலையின்மையும் கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்தேன். துறவுபூண்டு அலைந்தும் பல்வேறு துறவிகளைச் சந்தித்தும் சலிப்பு கொண்டிருந்தேன். எரிச்சலுடன் தான் யோகியை அணுகினேன். அந்த எரிச்சல் அவர் மீது அல்ல, என் மீதுதான்.

 

இன்று பலர் அனைத்தையும் முகநூலில் கரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பதும், நக்கலடிப்பதுமெல்லாம் இதே காரணத்தால்தான். அதிலிருந்து தப்ப ஒரு புற உதவி தேவையாகிறது. ஒரு திறப்பு, ஓர் அடி. இல்லையேல் அறிவுஜீவி என தன்னைத்தானே நம்புபவன் நிரந்தரமாக உழலும் நரகம் அது.

 

இந்தக்குறிப்பில் மா தேவகி சொல்வது அனைத்தும் முழுமையாக உண்மை. ஆனால் அவர் என் மனதில் என்ன நிகழ்ந்தது என்று அறியவில்லை. எழுத்தாளனின் மனம் வழக்கமான பக்தன், ஆன்மீகசாதகனின் மனம் அல்ல, அதை பிறர் எளிதில் உணரவும் முடியாது.

 

வெளியே அத்தனைபேர் காத்திருக்கஅன்று அவர் எனக்காக அத்தனை நேரம் செலவழித்தார்.  என் அந்தரங்கத்துடன் மிகமிக வன்மையாக மோதினார். முடிந்தவரை உக்கிரமாக அவரை தள்ளி வெளியே நிறுத்தினேன். கைகளால் தரையை அறைந்து சிரித்தார். கால்களை என் அருகே நீட்டினார். என் கண்களுக்குள் நோக்கினார். நான் அவரை வணங்காமல் வேண்டுமென்றே எழுந்து சென்றேன்

 

ஆனால் நான் அவரை மிகமிக அருகே உணர்ந்தேன். என்னுடைய ஆழத்தில் மிகத்தீவிரமாகப் புரட்டப்பட்டேன். அந்த அலைக்கொந்தளிப்பை நான் கடக்க ஒருவாரம் ஆகியது. அன்று என்ன நடந்தது? தோராயமாக இப்படிச் சொல்கிறேன்.என் அவநம்பிக்கைகள், மீறல்கள் கசப்புகள் மறைந்தன.  மானுடம் பற்றி இரக்கமே இல்லாமல் என்னால் இன்று பார்க்கமுடியும். ஆனால் கசப்புகளே இல்லை. இப்போதைக்கு இதற்குமேல் சொல்லமுடியாது

 

யோகியை நான் சந்தித்தது 1992 மார்ச் மாதம் 8 ஆம்தேதி. ஏழுநாட்கள் கழித்து 1992 மார் 15 ஆம் தேதி நித்யசைதன்ய யதியைச் சந்தித்தேன். அவரை என் ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டேன். அகந்தை முற்றாகக் கரைய முழுதும் பணிந்தேன். அவரிடம் முதற்சந்திப்பிலேயே யோகியைச் சந்தித்ததைப்பற்றித்தான் பேசினேன்

 

அந்த அனுபவத்தையும் நித்யாவிடம் பேசியதையும்தான் முடிவின்மையில் இருந்து ஒரு பறவை என்னும் குறிப்பில் எழுதியிருந்தேன். நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது இதழில் யோகியின் அட்டையுடன் அக்கட்டுரை வெளியாகியது. பின்ன வாழ்விலே ஒருமுறை தொகுப்பில் உள்ளது

 

யோகியும் நித்யாவும் எல்லாம் ஒன்றுதான். ஓ.வி.விஜயனின் ஒருநாவலின் தலைப்பு குருசாகரம். ஆசிரியர் என்பது ஒரு கடல். மனிதர்கள் அலைகள்.

 

 

ஜெ

 

முந்தைய கட்டுரைMA DEVAKIS DIARY
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51