வழிப்போக்கர்களும் வழிகாட்டிகளும்

yrsk13

 

வணக்கம் ஜெயமோகன் சார்,
இன்று வெளியான முகங்களின் தேசம் வழிப்போக்கன் படிக்கும் போது கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். எங்கோ முகமறியாத மனிதனின் துயரத்தை படிக்கும்போதே அகம் இவ்வளவு வேதனையடைந்து துயரத்தில் கண்ணீர் விடுகிறோம். இதே இரக்ககுணம் அனைவருக்குள்ளும் இருக்கும்தானே அப்படியெனில் ஏன் மனிதன் சக மனிதனை துன்புறுத்தவும், பிறர் பொருட்களையும், பிறர் உழைப்பையும் அபகரிக்கிறான்? இது என்’மனதில் எழுந்த கேள்வி.
// அந்த அம்மாளை என்னால் காணமுடிந்தது. தீங்கே உருவான சில பெண்கள் எங்குமுண்டு. //
ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான் வாழ்க்கைக்குள் வந்துவிட்டவர்களிடம், சுயநலங்களும், கணக்குகளும் இருக்கின்றன அவர்களின் கருணை மாசடைந்திருக்கிறது. எனவே வழிப்போக்கனிடம் தானே நியாயம் கேட்க முடியும்.
ஷாகுல் ஹமீது,
நாகர்கோயில்.
*
அன்புள்ள ஷாகுல்
உயர்நிலைகளில் அடையப்படும் இன்பத்திற்கு நிகரான பேரின்பம் தீமையிலும் உள்ளது. அதை அறிந்தவர்கள்தான் அதில் திளைக்கிறார்கள். இந்தப்புவியின்நெசவு அப்படி
ஜெ
***
மரியாதைக்குரிய ஜெ,
உங்கள் இணையதளம் ஒரு தங்க சுரங்கம். அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம், பயணம், வரலாறு இன்னும் எத்தனை எத்தனை அரிய பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் wiki loop என்ற சொற்றொடருண்டு ஏதோ ஒன்றை தேட கடைசியில் அங்கு சுற்றி இங்கு சுற்றி சம்பந்தமே இல்லாத பக்கத்தில் சென்று முடியும். அதுபோல நான் ஜெயமோகன் loop இல் மாட்டிக் கொண்டேன்.
சாருவுக்கு கடிதத்தில் ஆரம்பித்து, எம் ஓ மத்தாயின் நினைவுகளில் மூழ்கி, எனது இந்தியாவில் தவழ்ந்து, மதமாற்ற தடைச்சட்டம் ஒரு விவாதத்தில் கலந்து, அழிமுகத்தில் நீராடி, முன்னாள் எழுத்தாளர் டாட்காமில் சிரித்து, குஷ்பு குளித்த குளத்தில் விழுந்தேன். உங்களின் அங்கத கட்டுரைகள் தமிழ்நாட்டின் சராசரியை நோக்கி விடப்பட்ட தாக்குதல்களே. திருந்துவார்களா என்றால், தெரியவில்லை.
என் பொழுதை இனிமையாக்கி, அறிவை செறிவாக்கியதற்கு நன்றி.
அரிபாலாஜி
*
அன்புள்ள அரிபாலாஜி
அவ்வப்போது நானே அச்சுழலில் மாட்டிக்கொள்வதுண்டு. சிலந்தி போல கொஞ்சம் கொஞ்சமாக பின்னி விரித்து மிகப்பெரிய ஒரு வலையாக இன்று இதுமாறிவிட்டிருக்கிறது
ஜெ
***
அன்பின் ஜெ,
வழிகாட்டிகள் – கிட்டதட்ட, தொடர் பயணம் செய்பவர்களில், பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்கும்.
பத்திருபது வருடங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அடிக்கடி சென்று வருவோம், ஒரு குழுவாக.
அப்போது ஒரு முறை, மக்கள் ஆட்டுமந்தைக் கூட்டம் என்பது போல் ஒரு விவாதம், எங்கள் நண்பர் குழாமிற்குள் வந்தது.
நான் நிரூபிக்கிறேன் என்று ஒரு முயற்சி செய்தேன்.
மலை சுற்றும் பாதையில், ஒரு புளிய மரத்தினடியில், கை நிறைய கற்பூரக் கட்டிகள் வைத்துக்கொண்டு, ஓரிடத்தில் கொஞ்சம் சிகப்பை தூவி விட்டு, ஒரு கற்பூரக் கட்டியை கொளுத்தி வைத்தோம். சில நிமிடங்கள் அதை, அணையாமல் மேலும் மேலும் கட்டிகளை வைத்தோம்.
அரைமணிக் கூரில், அந்த இடம் ஒரு வழிபாட்டுக்குரிய இடமாக உருமாறிவிட்டது.
ஒருவரும் சில வினாடிகள் கூட, யோசிக்க தயாரில்லை. கையிலிருக்கும் கற்பூரத்தை, எரியும் அகலில் போட்டுவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு சென்று கொண்டே இருந்தனர்.
சிவக்குமரன்
*
அன்புள்ள சிவக்குமரன்,
வழிபாடு என்பதே ஒருவகையில் அறிவுக்கு எதிரானதுதானே? உயர்நிலையில்கூட அது அப்படித்தான். அறிவழியும் பெருநிலை. அது கீழ்த்தளத்தில் அறிவுகொள்ளா எளிமை
ஜெ

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47
அடுத்த கட்டுரைதிதலையும் பசலையும்