பகுதி ஆறு : மகாவஜ்ரம்
[ 1 ]
தண்டகாரண்யத்தைக் கடந்து திருவிடத்தின் மேட்டுநிலத்தின் மீது சண்டனும் இளையோர் மூவரும் ஏறினர். பாறைகள் ஏட்டுச்சுவடிகளை அடுக்கி வைத்தவைபோலிருந்தன. எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும் என பள்ளத்தில் சரிந்து நூற்றுக்கணக்கான சிற்றருவிகளாக ஆகி கீழே ஆறென ஒருங்கிணைந்தது. “அருவிகள் படைகொண்டு செல்கின்றன” என்றான் ஜைமினி. “வெண்ணிற காட்டுத்தீ என நான் நினைத்தேன்” என்றான் பைலன். “அன்னங்கள்” என்றான் சுமந்து.
“அவை ஏன் அருவிகளல்லாமலாகவேண்டும்?” என்று சண்டன் கேட்டான். “ஆம், ஏன் நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் பிறிதொன்றாக்குகிறோம்?” என்று சுமந்து வியந்தான். “பிறிதொன்றாக்கவில்லை, பிறிதுபலவாக்குகிறோம். சொல்லிச்சொல்லி சலிக்கும்வரை சொல்லிக்கொண்டே இருக்கிறோம்” என்றான் பைலன். “நாம் ஒவ்வொன்றையும் அனைத்துடனும் இணைக்க விழைகிறோம். ஒன்றென ஆன ஒன்றை நோக்கி அனைத்தையும் கொண்டுசெல்கிறோம்” என்றான் ஜைமினி. “இது வெண்முகில். இது மலையின் பால். இது நிலமகளின் புன்னகை. இது ஒரு சாமரம். சரியும் வெண்பட்டு…”
சண்டன் சிரித்து “அருவி என்னும் சொல்லை உதிர்த்து அதன் கீழ் சற்றுநேரம் நின்றாலே போதும். அது தான் எதுவென நமக்கு காட்டும்” என்றான். பொழிந்துகொண்டிருந்த நீர்ப்பெருக்கை நோக்கி நின்றிருந்த பைலன் திரும்பி சண்டனிடம் “ஓயாது கழுவிக்கொண்டே இருக்கிறது” என்றான். சுமந்து “ஆம், நீரென்று ஒன்றைப் படைத்த கருணையை எண்ணிக்கொள்கிறேன். எதிலிருந்தும் கழுவி மீளமுடிகிறது” என்றான். ஜைமினி “நீங்கள் பின்னர் அக்குகையிலிருந்தவர்களை சந்தித்தீர்களா, சூதரே?” என்றான்.
சண்டன் நீர்ப்புகை படாமல் முழவை முதுகைநோக்கி தாழ்த்திக்கொண்டு சொன்னான் “ஆம், நான் தாதவனம் என்னும் ஊரில் பிரசாந்தரை சந்தித்தேன். அவர் தன்னந்தனியாகச் சென்று அங்கமலதம் எனும் சுனையில் நீராடி அந்த குருதிக்கறையை கழுவிக்கொண்டார். தாததோஷம் என்னும் பழிக்கு அவர் ஆளாகிவிட்டதாக நிமித்திகர் சொன்னதனால் மீண்டும் மும்முறை வந்து அங்கே மகாஅபராதபூசனையை செய்தார்.”
“கரூஷம் என்னும் சுனையில் சென்று தன் நிணப்பூச்சை கழுவி மீண்டார் பிரசண்டர். அவருக்கும் தந்தைப்பழி இருந்தது. நூறுபாடல்களில் விருத்திரன் புகழ்பாடி அதை அகற்றிக்கொண்டார். ஆனால் பிச்சாண்டவர் அக்குருதியை கழுவவேயில்லை. குகையிலிருந்து தனித்துவந்த அதே நடையில் தனித்து விலகிச்சென்றார். மீண்டும் மூன்றாண்டுகள் கழித்து பிரசாந்தர் அவரைக் கண்டபோதும் சடைகளிலும் உடலிலும் அக்குருதிஉலர்ந்த செம்பொடி எஞ்சியிருந்தது.”
“பிரசண்டர் அவரைக் கண்டது மேலும் ஓராண்டுக்குப்பின் காசியின் இந்திரவிழவின்போது” என்றான் சண்டன். “நகர்மையத்தில் அமைந்த இந்திரகோட்டத்தில் கோயில்கொண்டிருந்த இந்திரனின் பொற்சிலையை மலர்களைந்து அணிகளைந்து பல்லக்கிலாக்கி அரசரும் படைத்தலைவரும் அமைச்சரும் குடித்தலைவரும் தோள்களில் சுமந்தபடி நீராட்டுக்கு கொண்டுசென்றனர். வேதமோதியபடி அந்தணர் முன்செல்ல புலவரும் குடிமூத்தாரும் பின் சென்றனர். அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் அந்நிரைக்கு முன்னால் மங்கலம் கொண்டுசென்றனர். காசியின் பதினெட்டு பெருங்குடிகள் முழுதணிக்கோலத்தில் தொடர்ந்தனர்.”
இந்திரனை வாழ்த்தும் கூவல்கள் எழுந்து பட்டுத்தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்த நகர்த்தெருக்களை நிறைத்தன. நகரமாளிகைகளின் உப்பரிகைகளில் நின்ற மங்கையர் வாழ்த்துக்கூவி அரிமலர் தூவினர். அந்தப் பொன்மழையில் நனைந்தபடி சென்ற அணியூர்வலம் கங்கைக்கரையை அடைந்தது. படிக்கட்டில் இறங்கி கங்கையை அடைந்ததும் அந்தணர் நீரை அணைந்தனர். மலரிட்டு சுடர்நீட்டி வழிபட்டு கங்கையை வணங்கியபின் மூழ்கி எழுந்து கங்கைநீரை மும்முறை அள்ளிவீசி இந்திரனை வாழ்த்தினர். அரசர் தன் கையில் இந்திரனை எடுத்துக்கொண்டு நீரில் மூழ்கி எழுந்தார்.
காலைமுதலே கண்கூசும் ஒளியுடனிருந்த வானம் அவர்கள் கங்கையை அடையும்போதே இருட்டத்தொடங்கியது. அரசர் மூழ்கி எழுந்ததும் கருமுகில் ஒன்று வந்து வானில் நின்றது. அதில் மின்கதிர்கள் வெட்டின. இடியோசை களிறென ஒலியெழுப்பியது. ஐங்குடிப்பெருக்கும் இந்திரனை வாழ்த்தும் ஒலி உச்சம்கொண்டது. மழைத்துளிகள் சாய்வாக வந்து தைக்கலாயின. கைவீசி துள்ளி ஆர்ப்பரித்தனர் நகர்மாந்தர். ஆணும் பெண்ணும் களிவெறிகொண்டு நடனமிட்டனர்.
மழை மென்தூவல் பொழிவென அவர்களை மூடியது. உடல்கள்தோறும் பற்றி எழத்தொடங்கிய காமத்திற்கு பட்டுத்திரையாகியது. இந்திரனை மீண்டும் ஆலயத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் எங்கும் ஆணும்பெண்ணும் முறைமறந்து நெறிமறந்து குருதியொன்றே முன்செலுத்த கலவிகொண்டனர். அவர்கள் சூடிய களபமும் சந்தனமும் குங்குமமும் கரைந்தழிந்தன. ஆடைகள் தோலென்றாயின. நகர்மாளிகைகள் நனைந்து சிலிர்த்து நின்றன. பெருகுக பெருகுக பெருகுக என்று இந்திரனின் ஆலயமணி முழங்கிக்கொண்டிருந்தது. அத்திரள் நடுவே பிரசண்டர் அலைந்தார். காமம் எத்தனை சொற்களை கோருகிறதென்று அவர் எண்ணிக்கொண்டதுண்டு. எத்தனை விரைவாக சொற்களைத் துறக்கிறது என்று அப்போது உணர்ந்தார்.
அப்போதுதான் அவர் அந்தப் பிச்சாண்டவரை மீண்டும் கண்டார். தொலைவில் ஒரு கூரைக்கு அடியில் அவர் குந்தி அமர்ந்திருந்தார். தன் முன் பெருகிய உடற்கொந்தளிப்பை அவர் காணவில்லை என்று தோன்றியது. பின் எழுந்து அக்கூட்டத்தினூடாக நடந்தார். பிறர் விழிகாணமுடியாது ஊடே நடப்பவர்போல. மழைநீர் விழுந்ததும் அவர் உடலில் இருந்து அக்குருதிப்பொடி கரையலாயிற்று. சற்றுநேரத்தில் செங்குருதி மூடிய உடலுடன் அவர் அவர்கள் நடுவே நடந்துசென்றார்.
நூறு தலைமுறைகளுக்கு முன்பு ஒருமுறை இந்திரவிழவின் உச்சிப்பொழுதுப் பூசெய்கையின்போது ஒரு முதுபூசகரில் சன்னதம்கொண்டெழுந்த தொல்தெய்வம் ஒன்று சொன்னது “இந்திரன் தாதைக்கொலை செய்தவன். அவன் கையால் மைந்தர் மலர்கொள்ளலாகாது. அவன் நீரை கன்னியர் கொள்ளலாகாது. அவன் முன் அரசனின் செங்கோல் வைக்கப்படலாகாது.” அங்கே துள்ளிக் கொந்தளித்த பெருந்திரள் அக்குரல் கேட்டு அமைதியடைந்தது. அரசன் கைகூப்பி “ஆம், ஆணை” என்றான்.
இந்திரனின் ஆலயத்திற்கு வெளியே நகரின் தெற்குமூலையில் ஒரு வளரும் சிதல்புற்றாக விருத்திரன் கோயில்கொண்டிருந்தான். ஓலைவேய்ந்த கொட்டகைக்குள் பன்னிரு முகடுகொண்டு நின்றிருந்த அந்தப் புற்றின்மேல் வெள்ளியாலான அவன் முகம் பதிக்கப்பட்டிருந்தது. மூதாதைதெய்வத்திற்கு அங்கே குருதிபலியும் கொடையும் பூசெய்கையும் நிகழ்ந்தன. ஐங்குலத்து அன்னையரும் அங்கேதான் மைந்தரை அவன் காலடியில் கிடத்தி அருள்கொண்டனர். இளமகளிர் மஞ்சள்நீர் கொண்டனர். அங்குள்ள ஒரு பேராலமரத்திலிருந்து செந்நிற அரக்கு என வழிந்துகொண்டே இருந்தது விருத்திரனின் குருதி. அதைத்தொட்டு நெற்றியிலணிந்து அவன் அருள்பெற்றனர்.
“விருத்திரனின் குருதியுடன் மஞ்சள்பொடியும் அரிசிப்பொடியும் மலரும் கலந்து ஒரு கூடையில் எடுத்துச்சென்று இந்திரனுக்கு படைத்தனர். அதன்பின்னரே இந்திரனுக்குரிய பூசெய்கை தொடங்கியது. அங்கே காமம்கொண்ட இளையோரும் களம்புகும் மறவரும் மட்டுமே மலர்கொண்டு இந்திரனின் அருள்பெற்றனர்” என்றான் சண்டன். “இந்திரனின் ஆலயத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் மலர்கொண்டுவந்து விருத்திரனின் காலடியில் வைக்கப்பட்டு பூசைசெய்யப்பட்டது. தாதாபராதபூசை என அது அழைக்கப்பட்டடது.”
“வேள்விதோறும் அவிகொள்பவன் எந்தை இந்திரன். அவனை தந்தைக்கொலை செய்தவன் என்று நூலேதும் சொல்வதில்லை” என்றான் ஜைமினி. “சொல்லும் நூல்களும் உள்ளன” என்றான் சண்டன். ஜைமினி “வேதமுதல்வன் இந்திரனே. ஏனென்றால் அவன் விழைவுகளின் அரசன். இப்புவியிலுள்ள ஒவ்வொன்றும் விழைவுகொண்டுள்ளன, விழைவெனவே விண்ணிருப்புகள் உயிர்களை அறிகின்றன. சூதரே, உயிரென்பதே சலிக்காத, தேயாத விழைவுமட்டும்தான்” என்றான்.
“ஏழு விழைவுகள். மூலத்தின் காமம், சுவாதிட்டானத்தின் பசி, மணிபூரகத்தின் மூச்சு, அனாகதத்தின் இதயம், விசுத்தியின் சொல், ஆக்கினையின் எண்ணம், சகஸ்ரத்தின் முழுமைநாட்டம் அனைத்தும் ஒற்றை விழைவின் ஏழுபடிநிலைகள் மட்டுமே” என்று ஜைமினி சொன்னான். “ஆகவே வேட்டலே உயிர்களுக்குரிய செயல். இங்கு உயிர்களாற்றும் செயலனைத்தும் வேட்டல்தான். அதை சொல்லென்றும் செயலென்றும் அமைப்பென்றும் முறையென்றும் வழக்கென்றும் முறைப்படுத்தியமைத்தனர் மூதாதையர். அதுவே வேள்வி.”
“வேள்வி என்பது மதலை அன்னையை நோக்கி அழுவது. அன்னை முலைகனிந்தாகவேண்டும். வேள்வி துலாவின் இப்பக்கத்தட்டு. மறுதட்டு நிகர்கொண்டாகவேண்டும். வேள்வி என்பது சொல். எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே” என்று ஜைமினி தொடர்ந்தான். “ஆம், தொல்வேதம் அசுரர்களிடமிருந்து வந்தது. ஆனால் மரப்பட்டை நூறாயிரம் முறை அறைவாங்கி நூறுநாள் நீரிலூறி சக்கை களைந்து ஒளிகொண்ட சரடென மட்டுமே எஞ்சும்போதுதான் அது மரவுரியாகிறது. வேள்விக்கு இனிய தேன் தேனீக்களின் மிச்சிலே. ஆனால் அது மலர்களில் ஊறியதென்பதே மெய்.”
“வேர்கள் உண்ணும் பொருட்களால் ஆனதே கனி. ஆனால் வேர்களுண்பனவற்றை எல்லாம் விலங்குகளும் உண்பதில்லை” என்று ஜைமினி தொடர்ந்தான். “இங்கு வந்த உயிர்களில் நெறிநின்றவை வாழ்ந்தன. தங்களை மேலேற்றிக்கொண்டவை வென்றன. வென்றதனால் வேதம் உருவானது. மீண்டும் வெற்றிக்கு அது நெறியென்றாகியது. வேதம் மாபெரும் அடர்களம் ஒன்றின் வெற்றிமுரசு” என்றான் ஜைமினி.
உணர்வெழுச்சியுடன் அவன் சொன்னான் “ஆம், அது குருதிபடிந்ததே. வேதமுரசு குருதிச்செந்நிறம் கொண்டது. தாதையர் குருதியா? ஆம். தனயரின் குருதியென்றாலும் ஆம். அயலவரின் குருதியென்று நீங்கள் சொல்லலாம். அதேயளவே நம்மவரின் குருதியும் ஆகும். ஆனால் இப்புவியில் அறமென ஒன்றை நிறுத்தி வாழ்வை வளர்ப்பதனாலேயே அது தேவர்களுக்கு இனியதாகிறது. ஓசைகளில் தூயதும் சொற்களில் அரியதும் எண்ணங்களில் முழுமைகொண்டதும் என்றும் அழியாததும் ஆகிறது. அது வாழ்க!” கைகளைக் கூப்பி “ஓம் ஓம் ஓம்” என்று அவன் தொழுதான். பின்னர் முன்னால் நடந்து மறைந்தான்.
சண்டன் மறுத்தொரு சொல்லும் சொல்லாமல் தன் முழவுடன் தலைகுனிந்து நடந்தான். உடன்சென்ற சுமந்து “சொல்தேர்ந்திருக்கிறார் ஜைமின்யர்” என்றான். “அவர் தேடும் ஆசிரியர் அவருக்கு அமைக!” என்றான் பைலன். “மூன்று பாதைகள், மூன்று ஆசிரியர்கள்” என்று சுமந்து சொன்னான். “மாணவர்கள் முளைத்து அவர்களால் தேடப்படுவதாலேயே உரிய ஆசிரியன் எங்கோ திகைந்துவிட்டான் என்று பொருள் என என்னிடம் உஜ்ஜயினியில் ஒரு அந்தணன் சொன்னான்.” சுமந்து “மூன்றுமுகம் கொண்ட ஒருவரா?” என்றான். சண்டன் நகைத்தான்.
சற்றுதொலைவில் ஜைமினி நின்றிருப்பதை அவர்கள் கண்டனர். “அவர் சென்றுவிடமாட்டார் என நான் அறிவேன்” என்றான் பைலன். “அவர் நம்மால் மட்டுமே தன் இடைவெளிகளை நிறைவுசெய்யமுடியும்.” சுமந்து “அவர் நம்மை விரும்புகிறார் என்றே எனக்கும் தோன்றிக்கொண்டிருந்தது” என்றான். அவர்கள் அணுகியபோது ஜைமினி புன்னகையுடன் அவர்களை நோக்காது வேறுதிசை நோக்கி நின்றிருந்தான். சண்டன் அருகே வந்ததும் ‘‘செல்வோம், அந்தணரே” என்றான்.
“நான் என் நிலைமீறி சொல்லாடிவிட்டேனா, சண்டரே?” என்றான் ஜைமினி. “உங்களை வசைபாடினேன். உங்களை வெறுக்க நான் செய்த முயற்சி அது. உங்களை விட்டு விலகிச்செல்லும்போது எண்ணிக்கொண்டேன் இத்தனை அகன்றும் என்னுள் என்ன எஞ்சியிருக்கிறது என்று. புழுதிபடிந்த உங்கள் கால்கள்தான் நினைவில் நின்றன. அவை சென்றுமீண்ட தொலைவுகளே உங்கள் சொற்களுக்கு பொருளாகின்றன. நான் இளையவன். என்னையறியாமலேயே எனக்கு அளிக்கப்பட்டவற்றால் ஆனவன். பிழைசொல்லிவிட்டேன் என்றால் பொறுத்தருள்க!”
சண்டன் சிரித்தபடி “விதையில் மணமென கனிப்பெருக்கு உள்ளது என ஒரு சூதர்பாடல் சொல்கிறது” என்றான். “நீங்கள் பற்றிக்கொண்டிருப்பவற்றால் முழுமையாக பற்றப்படுங்கள், அந்தணரே. அதைவிடப் பெரிய நல்லூழ் ஏதும் மானுடனுக்கில்லை.” ஜைமினி பெருமூச்சு விட்டு “உங்கள் சொல் நிலைக்கட்டும், சூதரே” என்றான். எழ உன்னிய ஆழ்சொற்களின் விசையால் முகம் கொந்தளிக்க தலைகுனிந்து சண்டன் நடக்க அவர்கள் உடன் சென்றனர். அவர்களின் காலடிகள் மட்டும் ஒலித்தன.
சண்டன் ஒரு சொல் உந்தியெழுந்த அதிர்வில் கைகள் பதைக்க உடல்தவிக்க நின்றான். நடுங்கும் குரலில் “அந்தணரே, வேதமுரசு குறித்து நீங்கள் சொன்னது உண்மை. அன்றும் இன்றும் அது குருதியொழுகும் செம்முரசே. ஆனால் சொல்சென்று தொடும் அறியாத் தொலைவெளி ஒன்றில் தூயவெண்முரசு ஒலிப்பதை நான் கேட்கிறேன்” என்றான். தாளமுடியாத ஒன்றை சொல்வதுபோல அவன் கண்கள் கலங்கின. முகம் சிவந்து இதழ்கள் துடித்தன.
மறுகணமே தன்னை மீட்டுக்கொண்டு “ஓர் இனிய கனவு. அது துரத்தவில்லை என்றால் எப்படி இத்தனை தொலைவு நடக்கமுடியும்? நடக்காமல் அமர்ந்துவாழும் ஊழ் இப்பிறப்பில் இல்லை. என்ன செய்வது?” என்றான். தலைதூக்கி உரக்க நகைத்தபடி “இளையோருடன் இருப்பதன் பயனை இப்போது அறிகிறேன். எத்தனை மூடக்கனவையும் இல்லாப்பொய்யையும் துணிந்து அவர்களிடம் சொல்லலாகும்” என்றான்.
ஆனால் அவர்கள் நீர்மைபடிந்த விழிகளுடன் அவனை நோக்கியபடி நடந்தனர். “பெண்களிடமும் கனவையும் பொய்யையும் சொல்லலாம். ஆனால் அவை அவர்களைப் பற்றியவையாக இருக்கவேண்டும். பிற கனவுகள் அவர்களுக்கு பிள்ளைவிளையாட்டென்றே படும்” என்றபின் சண்டன் மீண்டும் நகைத்தான். இளையவர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். பைலன் அவனை வெளியே கொண்டுவர விரும்பி “தந்தைப்பழி கொண்டவன் இந்திரன் என்பதே அவனை வல்லமை மிக்கவனாக்குகிறது என்று ஒரு வரி காவியத்தில் வருகிறது, சூதரே” என்றான்.
“ஆம்” என்று சண்டன் சொன்னான். “தந்தைப்பழி கொள்ளாமல் தன்னைக் கடப்பவன் இல்லை.” அவர்கள் மேலும் சொல்லின்றி ஒவ்வொருவரும் தங்கள் தனிமையில் நடந்தனர். ஜைமினி தலைநிமிர்ந்து “சண்டரே, நான் நல்லாசிரியராகிய தங்கள் கால்களைத் தொட்டு வாழ்த்துபெற விழைகிறேன்” என்றான். சண்டன் எந்த முகமாற்றமும் இல்லாமல் “அவ்வாறே” என்றான். ஜைமினி அவன் கால்களைத்தொட்டு அப்புழுதியை சென்னி சூடினான். “நெறிகளென அறியப்படுவதே மீறலென்றும் அறியப்படுகிறது. அறியப்படும்வகையில் அது எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சண்டன் சொன்னான்.
[ 2 ]
அந்திவெளிச்சம் சிவக்கத் தொடங்குகையில் அவர்கள் பாறை ஒன்றை வந்தணைந்தனர். “இது அடர்வற்ற காடு. புலிகள் வேட்டையாடுவதற்கு ஏற்றது. இங்கு நாம் அனல்சூடியே இரவமைய முடியும்” என்றான் சண்டன். அந்தப் பாறைமேல் ஏறி அனல்மூட்டி அதைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். இருள் விரைவிலேயே எழுந்து சூழ்ந்துகொண்டது. குளிரும் வந்து பொதிந்தது. சேர்த்துவந்த கிழங்குகளை தீயில் சுட்டு பாறையில் வைத்து உடைத்து அவர்கள் உண்டனர். தேன்தட்டுகளை மூங்கில்கூடையில் சேர்த்துக்கொண்டு வந்திருந்தான் சண்டன். கிழங்குடன் அதையும் சேர்த்து ஜைமினி உண்டான். “அடுமனை உணவை உண்ண நா வழங்காமலாகிவிடுவோம் என ஐயுறுகிறேன், சூதரே” என்றான்.
விண்ணில் மீன்கள் நிறைந்திருந்தன. புகையில் அவை நீர்ப்பாவைகள் போல அலைபாய்ந்தன. சண்டன் தன் முழவை மெல்ல மீட்டத்தொடங்கினான். அது வேழாம்பல்போல விம்மலோசை எழுப்பியது. பின் புரவித்தாளமாகியது. அவன் ஆழ்ந்தகுரல் எழுந்தது.
“அனைத்தையும் தழுவும் என் பாடல்
இசைவுகொண்டு எழுந்து
இந்திரனை நாடுகின்றன
பெருமைக்குரிய அவனை
கணவனைத் தழுவும் இளம் மணமகள்போல
ஆரத்தழுவுகின்றன
அடைக்கலம் கோருகின்றன
இந்திரனே, அழகனே
ஆண்களில் முதல்வனே
உன்னைப்பற்றும் என் உள்ளம்
வேறெங்கும் விலகுவதேயில்லை
உன்னில் நிலைக்கிறது என் காதல்
என் அரசனைப்போல் வந்தமர்க இந்த தர்ப்பையில்
அருந்துக என் இனிய சோமமதுவை!
என் விடாயை போக்குக
அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனே
வெண்களிறுமேல் ஊர்பவனே
ஏழு ஆறுகளால் செழிப்புறுகின்றது என் நிலம்”
ரிக் வேதப்பாடலின் ஒலி அந்த இருண்ட காட்டில் முதன்முறை அது ஒலித்த அந்த அறியாக்காட்டிலென அப்போதும் தூய்மைகொண்டிருந்தது. சண்டன் பாடி நிறுத்தி விரல்களால் தன் முழவை தடவிக்கொண்டிருந்தான். பின்னர் தாழ்ந்த குரலில் சொல்லத்தொடங்கினான் “விண்ணளாவியவனின் மைந்தன் பிரம்மன். பிரம்மனின் உடலில் தோன்றிய பிரஜாபதிகளில் முதல்வர் மரீசி. மரீசியின் மைந்தனும் குலங்களுக்கு விதையுமான கசியபரை வணங்குவோம். கசியபர் தட்சப்பிரஜாபதியின் மகளாகிய அதிதியில் ஈன்ற மைந்தர்கள் ஆதித்யர்கள். தாதா, ஆரியமா, மித்ரன், ருத்ரன், வருணன், சூரியன், பகன் விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு என்னும் பன்னிரு ஆதித்யர்களின் முதல்வன் அவனே. அவனை தேவர்களின் அரசன் என்றும் ஆதித்யர்களின் தலைவன் என்றும் வேதங்கள் வணங்குகின்றன.”
முற்காலத்தில் புவிமேல் மலைகளுக்கு சிறகுகள் இருந்தன. இரவுகளில் அவை ஓசையின்றி எழுந்து பெருங்கடல்களின்மேல் பறந்தலைந்தன. முகில்களுடன் கலந்து விளையாடின. நிலவுபரவிய இரவுகளில் எழுந்து வானை நோக்கியவர்கள் பறக்கும் மலைகளின் நிழல்கள் நிலத்தில் நீலத்திரைபோல, ஈரப்பரப்புபோல ஒழுகிச்செல்வதையே கண்டனர். அவற்றிலிருந்த பறவைகளின் ஒலிகள் கலைந்து அவர்களின் தலைக்குமேல் ஒழுகிச்சென்றன. அங்கே குடியிருந்த மலைமக்கள் நிலவொளியில் சுடர்கொண்டிருந்த முகில்களை கைகளால் அள்ளி அளைந்து களித்தனர்.
ஒருமுறை வைதிகர் ஒருவர் காட்டுக்குள் தர்ப்பை வெட்டும்பொருட்டு சென்றபோது அங்கே பொன்னிற மான் ஒன்றைக் கண்டார். வியந்து அருகணைந்தபோது அதைப் பிடிக்கவந்த மலைமகனாகிய சிறுவனின் உடலும் பொன்னிறமாக ஒளிவிடுவதைக் கண்டு திகைத்தார். அது எப்படி நிகழ்ந்தது என்று அவர் அவனிடம் நயந்து கேட்டார். அவன் அவர்களின் குடில்கள் அமைந்த மலை இரவில் எழுந்து வானில் பறப்பதாகவும் மண்ணிலிருந்து எழுந்த புகை மலைகளை அடைந்து மரங்களின் நடுவே செறிந்து குடில்களை முகில்களென மூடியிருப்பதாகவும் சொன்னான். என்ன நிகழ்ந்தது என்று அவர் உய்த்தறிந்தார்.
அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த அதிராத்ர வேள்வியின் அவிகொண்டு விண்ணிலெழுந்த புகையை அதைக் கடந்துசென்ற அந்த மலையின் மக்கள் நுகர்ந்தனர். அதன் இனிமையை அறிந்ததும் நாளும் அங்குவந்து விண்ணில்நின்று வேள்விப்புகையை புசித்தனர். தேவர்களுக்கு அளிக்கப்பட்ட அவியே அவர்களை ஒளிகொள்ளச் செய்தது. அந்தணர் அதை தன் தோழர்களிடம் சொன்னார். அன்று இரவில் அவர்கள் வெளியே சென்று நோக்கியபோது பறக்கும் மாமலைகளுக்கு மேல் அம்மக்கள் நின்று புகைமாந்துவதைக் கண்டனர்.
அவர்கள் தேவர்க்கரசனை வேள்விக்களத்தில் எழுந்த அனலில் வரவழைத்து முறையிட்டனர். வேள்வித்தலைவரான புலஸ்தியர் ஆணையிட்டார் “இனி எங்கள் வேள்விப்புகையில் ஒருமிடறும் அவர்கள் அருந்தலாகாது. இனி அவர்களின் நிழல் எங்கள் தலைக்குமேல் படலாகாது!” ஆணையை பணிந்து ஏற்று இந்திரன் எழுந்தான். தன் வைரவாளை வீசியபடி இடிமுரசொலிக்க விண்ணிலெழுந்தான். வெள்ளையானை மேல் அமர்ந்து பறக்கும் மலைகளை வேட்டையாடினான். அவற்றின் சிறகுகளை அரிந்து வீழ்த்தினான். குருதி வழிய அவை சரிந்து மண்ணில் விழுந்தன. அந்த அதிர்வில் இல்லங்களுக்குள் துயின்றவர்கள் திகைத்து விழித்தெழுந்தார்கள். அவர்களின் முற்றத்து மரங்கள் இலையுதிர்த்து நிற்பதை காலையில் கண்டார்கள்.
விண்ணில் மிதந்த மலைகள் அனைத்தும் சிறகற்று சரிந்தும் கவிழ்ந்தும் மண்ணில் விழுந்து ஆழப்பதிந்தன. சில மலைகள் வெடித்தன. சில மலைகள் உடைந்து பிளந்தன. சில சிதறிப்பரவின. மலைகளின் குருதி பாறைகள் மேல் சிவந்த வரிகளாக விழுந்தது. மலையடிவாரங்களில் மலைகளின் நிணம் செம்பாறைகளாக சிதறிக்கிடந்தது. மலைகளின் வலித்துடிப்பைக் கண்டு அவற்றின் களித்தோழர்களாகிய முகில்கள் கண்ணீர்விட்டன. அது இளமழையென மலைகளுக்கு மேல் பொழிந்தது.
மைனாகம் என்னும் இளைய மலைமட்டும் இந்திரனிடமிருந்து தப்பியது. அதன் சிறகுகள் கருநீல நிறம்கொண்டிருந்தன. எனவே அதை இந்திரன் பார்க்கவில்லை. மைனாகம் பறந்துசென்று வளியிறைவனிடம் தன்னை காக்கும்படி கோரியது. “நீ என்னை பலமுறை சிறகுவருடி வாழ்த்தியிருக்கிறாய். நான் உன் மைந்தன். என்னை காத்தருள்க!” என்று மன்றாடியது. வளியிறைவன் அதை அள்ளி எடுத்துக்கொண்டு சென்றான். அதைக் கண்ட இந்திரன் தன் வைரவாளுடன் துரத்திவந்தான். வளி அதை வருணனிடம் கொடுத்து “நீரிறையே, இவன் உன் மைந்தன் எனக்கொள்க!” என்றான்.
நீரிறைவன் அதை தன் ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டான். அது சிறகுள்ள வெண்மலையென நீருக்குள் புகுந்து நீந்தியது. மைனாகத்தைத் தொடர்ந்து ஓடிவந்த இந்திரன் குருதிபடிந்த வாளுடன் நின்று அறைகூவினான் “அவனை வெளியே விடு… அவன் சிறகுகளை வெட்டியாகவேண்டும். இது என் வஞ்சினம்.” வருணன் பெருங்குரலில் நகைத்து “விலகிச்செல், இந்திரனே! உன்னால் என் விரிவை வெல்லமுடியாது. இவன் என்றும் என் காவலிலேயே இருப்பான்” என்றான். “உன்னை ஒருநாள் வெல்வேன். ஒருநாள் நீ அவனை காத்தமைக்காக வருந்துவாய்” என்றான் இந்திரன். வருணன் உரக்க நகைத்தான். சினத்துடன் இந்திரன் திரும்பினான்.
மைனாகம் வருணனின் ஆட்சியில் நீருக்குள் வாழ்ந்தது. அது ஒளியை காணவேயில்லை. அங்கே அது தனிமையை உணர்ந்தமையால் வருணன் அதன் நீர்ப்பாவையை ஒரு பெண்ணாக்கினான். அவர்கள் புணர்ந்து மீன்மலைகளைப் பெற்றனர். அவை மீன்களாயினும் நீருள் மூச்சுவிடும் கலையை கற்கவில்லை. பெருஞ்சிறகுகளை வீசியபடி உடல்வளைவுகளில் நீர்ப்பெருக்கு வழிந்திறங்க வெள்ளி ஒளி வீசி அவை நீருக்குமேல் எழுந்தன. அந்த அலையெழுந்து விரிந்து பெருங்கலங்களை தள்ளாடச்செய்தது. வாலசைவால் கலங்களைச் சிதறடிக்கும் பேருருவும் ஆற்றலும் கொண்டிருந்தன அவை.
அவற்றை காற்றரசன் தன் இளமைந்தர்களென எண்ணினான். வெள்ளி மரம்போல நீரைத் துப்பியபடி அவை பாய்ந்தெழுந்து காற்றின் மடியில் விழுந்து திளைத்தாடின. அமுதென காற்றை அள்ளி உண்டன. அவை காற்றுறிஞ்சும் சீறலோசை மரக்கலக்காரர்களை அஞ்சவைத்தது. அவை சீறும் ஒலி எரிமலை எழுவதுபோல கேட்டது. அவை நகைக்கும் ஒலி காற்றிலேறி நெடுந்தொலைவு சென்று நாவாய்களில் இருந்தவர்களை கைகளைக்கூப்பி “மைனாக மைந்தர்களே, அருள்க! நெடுங்கடலின் உரிமையாளர்களே, பெருங்காற்றுகளால் பேணப்படுபவர்களே, உங்களுக்கே அடைக்கலம்” என்று கூவச்செய்தது. மைனாகமைந்தர் மானுடர் மேல் கனிவுகொண்டவர்கள் என்று நூல்கள் வாழ்த்தின.
மண்மேல் ஒரு மலையைமட்டும் இந்திரன் சிறகுடன் விட்டுவைத்தான். அதை அவன் இந்திரகீலம் என்று அழைத்தான். அவன் மண்ணுக்கு வரும்போது அவன் ஊர்தியென்றாகி அவனைச் சுமந்து விண்ணில் பறந்தது அது. அதன் குளிர்ச்சோலைகளில் அவன் அரம்பையருடன் காதலாடினான். தேவர்களுடன் விளையாடினான். அது அமர்ந்துசென்ற இடங்களில் அதைப் பார்த்தவர்கள் அது அங்கிருப்பதாக நினைத்துக்கொண்டனர். ஆகவே நூற்றெட்டு இந்திரகீலங்கள் இருப்பதாக தொல்கதைகள் சொல்லின. ஆனால் உண்மையில் அது கிழக்கே சூரியக்கதிர் படியும் முதல் எல்லையில் இந்திரனால் நிறுத்தப்பட்டது.
“வேள்வியமுதை முதலில் பெறுபவன், வேதச்சொல்லால் ஆளப்படுபவன் இந்திரன். தன் இளையோனாகிய த்வஷ்டாவால் அமைக்கப்பட்ட மின்கதிர்படைக்கலம் சூடியவன். அகி, துஷ்ணன், சம்பரன், வலவன் போன்ற அசுரர்களை வென்றவன். சசியென்றும் புலோமசை என்றும் அழைக்கப்படும் இந்திராணியை மணந்தவன், கிழக்குதிசையை ஆள்பவன். இந்திரனால் புரக்கப்படுகிறது இப்புவியும் அவ்விண்ணும். அவன் வாழ்க!” என்றான் சண்டன்.