வசைகளின் நடுவே…

11

ஜெ

உங்கள் தளத்தில் வரும் சிறுகதைப் பயிற்சியை சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரிடம் காட்டினேன். அவன் இவன் என உங்களை வாயில் தோன்றியபடி வசைபாட ஆரம்பித்துவிட்டார். இந்த வகையாக விமர்சனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது என நினைக்கிறேன்.

ஒரு சின்ன விஷயம் என்றாலும் கூட உச்சகட்ட கொதிப்பு அடைந்து உங்களை வசைபாடித் தள்ளுவதைப் பார்க்கிறேன். எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் கீழிறங்குகிறார்கள். கொலை கொள்ளை கற்பழிப்பு செய்தவர்கள் கூட கொஞ்சம் மரியாதையாகப் பேசப்பட்டார்கள். உங்களைப் பற்றி பேசுவதைக் கேட்க மனம் புண்படுகிறது.

அருண் குமாரசாமி

*

அன்புள்ள அருண்,

இது எப்போதும் நிகழ்கிறது. ஓர் அரசியல்கருத்தில் முரண்படுகிறார், ஒரு கதையை வேறாக மதிப்பிடுகிறார் என்பதுபோன்ற காரணத்துக்காக ஒருவன் எழுத்தாளர் ஒருவரை மரியாதையில்லா சொற்களில் வசைபாடுகிறான், பொதுவெளியில் அவமதிக்கிறான் என்றால் பிரச்சினை கருத்துக்களில் இல்லை.

தமிழகத்தில் மிகக்கணிசமானவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் ஆழமான அவமதிப்பே உள்ளூர உள்ளது. அது அவர்களின் பண்பாட்டுச் சூழலில் இருந்து வருவது. அது ஒருவகை அறிவு எதிர்ப்பு. கிராமத்தில் பார்க்கலாம், கொஞ்சம் அறிவாகப் பேசுபவனை, செய்தித்தாள் வாசிப்பவனை எதிரியாகவே பார்ப்பார்கள். அகராதி புடிச்சவன் என்னும் சொல்லாட்சியே உண்டு

உள்ளூர உறைந்து கிடக்கும் இந்தக் கல்வி எதிர்ப்பு மனநிலை ஏதேனும் காரணம் கிடைத்தால் வெளிப்படுகிறது. சொல்லப்படும் காரணம் எல்லாம் சும்மாதான். இங்கே எவரும் எந்த அரசியலுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்து அதிதீவிரமாக எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. வசைபாட ஒரு காரணம் தேடுகிறார்கள், அவ்வளவுதான்

இந்தக் கும்பல் நடுவேதான் புதுமைப்பித்தன் முதல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறோம். வேறுவழி இல்லை. வாசகன் இந்த முடைநாற்றத்தினூடாகத்தான் தேடி வந்தாகவேண்டும்

ஜெ

download (1)

 

ஜெ,

இணையத்தில் உங்களை திடீர் திடீர் என வசைபாடும் கும்பல் எழுவதுண்டு. எப்போதுமே இடதுசாரிகள், தமிழ்த்தேசியர்கள் உண்டு. இஸ்லாமியர் என்றால் கேட்கவே வேண்டாம். எந்தத் தரப்பிலிருந்தாலும் அவர்களுக்கு ஒரே குரல்தான்.

சோட்டா எழுத்தாளர்களின் கரிப்பு எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். அது நீங்கள் எழுதும் இலக்கிய விமர்சனங்களால்.

இப்போது சமீபமாக இந்துத்துவர்கள் வசையும் நக்கலுமாக எழுதுகிறார்கள். நீங்கள் பிராமண விரோதி என்றெல்லாம் கூட எழுதியதைப் பார்த்தேன்

என்னதான் நடக்கிறது?

ராஜ்

*

அன்புள்ள ராஜ்,

மற்றவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெளிவு உருவாகிவிடுகிறது. இந்துத்துவர்கள், பிராமணர்கள் ஒரு சிக்கலில் இருக்கிறார்கள்

நான் இந்திய தேசியத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவன். அது அரசியல் நம்பிக்கை அல்ல. இந்த தேசத்தில் நேரடியாகப் பயணம் செய்து இவ்வாழ்க்கையை அறிந்தமையால் அடைந்த தெளிவு.

இந்து ஞானமரபில் நம்பிக்கை கொண்டவன். அது என் தேடலும் என் ஆசிரியர்களும் அளித்த ஞானம்

ஆகவே என்னை இந்துத்துவர் என்று சிலர் சொல்கிறார்கள். ஒருவனின் கருத்துக்கள் என்பவை அவன் அரசியல் நிலைப்பாடு மட்டுமே, ஏதோ லாபத்துக்காக அதைச் சொல்கிறான் என்றுமட்டுமே புரிந்து கொள்ளும் பேதைகள் அவர்கள். ஏனென்றால் அவர்கள் அப்படித்தான்

என் கருத்துக்களை எதிர்கொள்ளும் எளியவழி என்பது அப்படி முத்திரை குத்தி விவாதிப்பது. அப்படித்தான் அவர்களால் பேசமுடியும். அவர்களிடமிருப்பது அந்தச் சண்டைக்கான ஆயுதம் மட்டுமே.

நான் ஒரு இனத்தை, சாதியை வசைபாடுவதை ஏற்காதவன். ஆகவே தமிழகத்தில் உள்ள பிராமண எதிர்ப்பை ஒரு மனநோயாகவே பார்க்கிறேன். அது சாதிவெறியின், ஆதிக்கத்தின் பழியில் இருந்து தான் தப்பிப்பதற்காக போடப்படும் ஒரு நுணுக்கமான நாடகம். கடந்தகால ஒடுக்குமுறைகளுக்காக பிராமணரை மட்டும் பழி சுமத்தினால் சாதிவெறியனாகவும் புரட்சியாளனாகவும் ஒரேசமயம் திகழமுடியும்.

ஒரு சாதி என்ற அளவிலேயே கூட பிராமணர்கள் இந்துமரபுக்கு பெரும்பங்களிப்பாற்றியவர்கள். ஸ்மார்த்தர் என்று சொல்லப்படும் அமைப்பே இந்துமரபை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. அதற்காக அவர்கள் இழந்த நலன்களும் அனுபவித்த துயரங்களும் மிக அதிகம் என்பதே வரலாறு

இந்த மரபின் அறிவார்ந்த மையத்தை தொடர்ச்சியாக நிலைநிறுத்தியதில், கடும் எதிர்மறைச் சூழலில் இதன் அமைப்புக்களை காப்பாற்றியதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. இந்து என தன்னை உணரும் ஒருவன் அவர்க்ளுக்குக் கடன்பட்டிருக்கிறான்.

இன்றும் ஒரு சமூகம் என்னும் அளவில் சமரசத்தை உருவாக்குவது, மரபைப்பேணுவது, கல்வியை கொண்டு செல்வது என்னும் அளவில் அவர்களின் இடம் முக்கியமானது. அவர்கள் இந்தியாவுக்குச் செய்யவேண்டிய பணிகளும் அதிகம்.

இந்துமதத்திலுள்ள மூடநம்பிக்கைகள், மேலாதிக்கம் போன்றவற்றுக்கு அதிலுள்ள அனைவருக்கும் இணையான பங்குண்டு, அதே பங்குதான் பிராமணர்களுக்கும். ஆனால் அவர்களுடைய ஆக்கபூர்வமான பங்களிப்பு அவர்களின் தனிக்கொடை – இது என் நம்பிக்கை.

இதை நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆகவே என்னை பார்ப்பன அடிவருடி என ஒரு கும்பல் சொல்லும். இயல்புதான். வசையே அவர்களின் கருத்தியல்.

என்னிடம் வருபவர்களில் கணிசமானவர்கள் இந்த வசைகள் வழியாக வருபவர்கள். இந்துத்துவர்களில் ஒருசாரார் நான் இந்துத்துவன் என நம்பி வருகிறார்கள். பிராமணர்களில் ஒருசாரார் நான் பிராமணர்களின் சாதியநோக்கை, பழமைவாதத்தை ஆதரிப்பவன் என எண்ணி வருகிறார்கள்

வந்தபின் மெல்லமெல்ல அப்படி அல்ல என உணர்கிறார்கள். நான் இந்திய தேசியத்தையும், இந்து மரபையும் ஆதரிப்பவன். ஆனால் இந்துத்துவ அரசியலின் வெறுப்பு நோக்கை, பிளவுப் பணிகளை, தெருமுனைப் பூசல்களை கடுமையாக எதிர்ப்பவன்.

பிராமணர்கள் மேல் மதிப்பு கொண்டவன். ஆனால் அவர்களின் சாதிமேட்டிமை நோக்கையோ, பழமையான ஆசாரவாதத்தையோ, மானுட எதிர்ப்புகொண்ட குறுக்கல் போக்கையோ ஏற்றுக்கொள்பவன் அல்ல. பிறப்பால் ஒருபடி மேலானவன் என எண்ணுவதும் சரி, கடந்தகாலத்தின் மானுட எதிர்ப்பு நோக்குகளை ஆசாரமெனத் தூக்கிப்பிடிப்பதும் சரி இழிவு என்றே நினைப்பவன்.

2000 முதல் இணையத்தில் பதிந்துள்ள என் எல்லா கட்டுரைகளிலும் இந்தக் கடுமையான கண்டனங்கள் இருக்கும். அவை எவரும் வாசிக்கத்தக்கவை

உள்ளே வரும் இந்துத்துவர்களும் மேட்டிமை நோக்குள்ள பிராமணர்களும் அதன் பின்னர்தான் முழுமையாக வாசிக்கிறார்கள். உண்மையில் நான் சொல்வதென்ன என்று புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அதற்குள் தனிப்பட்ட நண்பர்களாகிவிடுகிறார்கள். சிக்கிக்கொள்கிறார்கள்.

என் கருத்துக்கள் அவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கின்றன. ஆனாலும் நட்புச்சூழலை உதறமுடியாமல், என்மீதான பிரியத்தை கடக்கமுடியாமல் கொஞ்சநாள் அல்லாடுவார்கள். புழுங்குவார்கள். சின்னச் சின்னக் குறைகளாக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள், எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதைச் சொல்லமாட்டார்கள்.

வெளியே இருந்து அவர்களைப் போன்ற தீவிரர்களின் அழுத்தம் அவர்கள் மேல் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் முன்பு புழங்கிய சூழல் அது. என்னை அவர்களிடம் நியாயப்படுத்த முடியாமல், என்னிடமும் விவாதிக்கமுடியாமல் குழம்பிக்கொண்டே இருப்பார்கள். இந்த ஊசலாட்டம் ஓரிரு ஆண்டுகள்கூட நீடிக்கும்.

மிகச்சிலரே என்னுடன் விவாதிப்பவர்கள். என்னுடன் இணைபவர்கள் அவர்கள். எஞ்சியவர்கள் வெறுமே ரகசியமாக மனம்கொந்தளிப்பார்கள். நட்புவட்டத்துக்குள்ளாகவே ஒரு சிறிய வட்டத்தை தாங்கள் உருவாக்கிக் கொள்வார்கள். அதற்குள் பேசிக்கொள்வார்கள்.

ஒரு புள்ளி வந்ததும் உடைத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அதற்கு உடனடியான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்வார்கள். பகைமையின் முழுப்பொறுப்பையும் என் மேல் சுமத்திவிடலாம். நான் மாறிவிட்டேன் என்பார்கள். ஏமாற்றிவிட்டேன் என்பார்கள். அதைமுன்வைத்து வன்மத்தையும் கசப்பையும் உருவாக்கிக் கொண்டால் ஒரு பெரிய விடுதலை.

அதுவரை இருந்த ஒரு சுமை இறங்குகிறது. நேராக பழைய நண்பர்களுடன் சென்று சேர்ந்து கொள்கிறார்கள். மீண்டுவந்த மைந்தன்! பாவத்தைக் கழுவிக் கொள்ளும் பொருட்டு நாலைந்து கட்டுரைகள், முகநூல் நக்கல்கள். அவர்கள் அங்கே தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டுமே. நன்று, அதுவே அவர்களுக்கும் நிம்மதி.

எவராயினும் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து மாறுவது எளிதே அல்ல. அதற்கு கூரிய நேர்மை தேவையாகிறது. அடிப்படையான தேடலும் நிறைய கண்ணீரும் வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் அப்படித்தான். மற்றவர்கள் எளிதாக தங்களை மறைத்துக்கொள்ள தமிழ்ச்சூழலின் பாவனைகள் உதவுகின்றன. பிராமணர்களுக்கு அந்த வசதி இல்லை. அவர்கள் எப்போதும் கூண்டில் நிற்கிறார்கள்

என் பார்வையில் பெரும்பாலும் வலுவான குரு ஒருவருக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அதன் வழியாகத் தன்னை அவர் உடைக்க அனுமதித்து, அந்தப்பாதையில் முன்செல்பவர்களால் மீள முடிகிறது. [ஆனால் நானறிந்த பிராமணர்களில் பலர் அந்தக்குருவும் ஒரு பிராமணனாக இருந்தாகவேண்டும் என நினைப்பவர்கள்] அது ஆன்மீகமான ஒரு சுத்திகரிப்புப் பயணம். அவர்கள் தங்கள் பிறப்பும் சூழலும் அளிக்கும் மனப்பயிற்சிகளில் இருந்து விடுபடுகிறார்கள். மேலானவற்றை அடைகிறார்கள்.

தன்னை உடைத்து வார்க்காதவனுக்கு ஆன்மிகம் இல்லை. மேட்டிமை நோக்கிலிருந்தும் வெற்றாசாரங்களில் இருந்தும் இன மொழி மதச் சாதிக் காழ்ப்புகளில் இருந்தும் வெளிவராதவனுக்கு எளிய கவிதையின் இன்பம் கூட இல்லை

அரசியலால் அந்த மீட்பு நிகழ்வதில்லை. அரசியலை நம்பி வருபவர்கள் மேல்த்தோலை மட்டும்தான் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சாதிமறுப்பு, ஆசாரமறுப்பு எல்லாமே நிலைபாடுகள்தான், சுயமாற்றங்கள் அல்ல. தொடர்ந்து எதிரிகளைக் கண்டடைந்து கசப்பைக் கொட்டியபடி மட்டுமே அந்நிலைபாட்டில் நீடிக்கவும் முடியும்.

இலக்கியம் ஓரளவே மாற்றத்தை உருவாக்குகிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் இலக்கியவாதிக்கு இங்கே பெரிய மதிப்பு இல்லை. அவனை ஆசிரியனாக எவரும் கொள்வதில்லை. அவன் இங்கே கேளிக்கையாளன் அல்லது பிரச்சாரகன் மட்டுமே.

இலக்கியப்படைப்பை சொந்த வாழ்க்கையைக் கொண்டு பரிசீலிப்பவர், ஆழ்மன உணர்வுகளை அதைக்கொண்டு மீட்டிக்கொள்பவர் இங்கு குறைவே. இலக்கியப்படைப்பு தன்னை உடைத்து மறுவார்ப்பு செய்ய பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தன் சுவைக்கும் கருத்திற்கும் ஏற்ப படைப்பு இருந்தாகவேண்டும் என விரும்புபவர்கள், வாதிடுபவர்கள், இல்லையேல் நிராகரிப்பவர்களே நம் வாசகர்கள்.

இலக்கியம் அவர்களுக்கு மெய்மையின் பாதை என இளமையிலேயே கற்பிக்கப்பட்டிருப்பதில்லை. அங்கே மதநூல்களே வைக்கப்பட்டுள்ளன. இலக்கியம் என்றால் ஏதோ ஒருவகையில் ஒரு கேளிக்கைதான். ‘கதைபடித்தல்’ என்பது ஒருவகை ‘கதையடித்தல்’ ஆகவே நம் குடும்பங்களில் கற்பிக்கப்படுகிறது. அம்மனநிலையே நம்மவருக்குள் நீடிக்கிறது.

ஆகவே நான் விரும்புவதைச் சொல், நான் மகிழும்படி எழுது என்றே இங்கே எழுத்தாளனிடம் கோருகிறார்கள். இல்லாவிட்டால் மொட்டை வசை. ஆகவே ஆழமான பாதிப்பை இலக்கியமும் இலக்கியவாதியும் உருவாக்க முடியாமலாகிறது.

வேறுவழியில்லை. வசைகள் நல்லதுதான். குறைந்தபட்சம் நமக்கு ஆன்மிகமான ஒரு பயிற்சி அது

ஜெ

 

வசைபட வாழ்தல்

 

வசைகள்

 

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் 19
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45