அன்புள்ள ஜெ,
நலம் என்றறிகிறேன். இரண்டு நாள்களுக்கு முன்பு உங்களின் ‘ஏழாம் உலகம்’ வாசித்தேன். நான் பள்ளியில் படித்தபோதே அதை நூலகத்திலிருந்து எடுத்து வாசித்துப் பார்த்திருக்கிறேன். அப்போது அதன் மொழியும் கதைக்களமும் என்னால் புரிந்துகொள்ள முடியாதபடி இருந்தது. பத்து பக்கத்துக்கு மேல் படிக்கமுடியாமல் வைத்துவிட்டேன்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதை மீண்டும் எடுத்து ஒரே இரவில் படித்து முடித்தேன். சில அத்தியாயங்களில் சில வரிகள் அடுத்த வரிக்கு எடுத்துப் போகாமல் என்னை அங்கேயே விட்டுவிடுவதுண்டு. அந்த குறிப்பிட்ட ஒற்றை வரியில் சில நேரம் எண்ணம் குத்தி நிற்கும். மீண்டும் தொடர்ந்தேன்.
அதை படிக்கத் தொடங்கும் முன் எனக்கு இரண்டு பயம் இருந்தன.
- போத்திவேலு பண்டாரம் வரும்போதெல்லாம் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் உருவம் வந்து தொலைக்குமோ என்பது.
- இது ஜெயமோகன் நாவல். அவர் எழுதுகிறார் என்ற பிரக்ஞைஇருக்குமோ என்பது.
நல்ல வேளை! முதல் பயம் அறவே பொய்யானது. ஒரு இடத்தில் கூட ராஜேந்திரனின் சாயலை ஒப்புமைப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் அந்தக் கதாபாத்திரம் ஒற்றைப் பரிமாணத்தில் இருக்கும். நாவலில் அப்படியல்ல. அவருக்குள்ளும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டாரமே அலறி ஓடும் குழந்தைகளை உருமாற்றும் இடமும், தன் பெண்ணுக்கு வளையல் வாங்கும் இடமும், பழனி உண்டியலில் பணத்தைத் திணிக்கும் இடமும் அவர் ஒற்றைப் பரிமாண ஆள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டுகள்.
அதே போல் படத்தில் அவரை எதிர்த்து யாரும் பேசமாட்டார்கள். ஆனால், நாவலில் ராமப்பனும், குய்யனும் சில சமயம் அவரை வம்பளக்கும்போது அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தன்னுடைய ஒரு பெண் ஓடிப்போனதையும் அந்தக் குடும்பம் இயல்பாக எடுத்துக்கொள்கிறது. அவரும் பெரிய தயக்கம் எதுவும் இல்லாமல் அதைப்பற்றி மற்றவர்களிடம் பேசுகிறார்.
அதே சமயம், தான் பிற உயிர்களை வைத்துதான் பணம் செய்கிறோம் என்பதை அவர் எந்த இடத்திலும் உணர்வதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது அவருக்கு இரக்கம் என்பது துளியும் இல்லை, ஒரே ஒரு இடத்தைத் தவிர. (திருமணத்தில் இன்னும் மீத சாப்பாடு இருந்தால் பார்சல் கட்டச் சொல்கிறார். தன்னிடம் உள்ள உருப்படிகளுக்கு கொடுக்கலாம் என்று. அதற்குள் மாப்பிள்ளையின் நண்பர்கள் வந்துவிடுகிறார்கள்)
பெண்கள் கதாபாத்திரங்களான ஏக்கியம்மை, முத்தம்மை இருவரில் முத்தம்மை ஆழமான பாதிப்பை உண்டுபண்ணிவிட்டாள். இறுதியில் அவளுடைய ஓலம் இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கிறது. இந்த சமூகத்தில் வாழும் நானும் ஏதோ ஒரு வகையில் முத்தம்மைக்கு துரோகம் செய்திருக்கிறேன் என்று ஒரு குற்றவுணர்ச்சி உண்டாகிறது.
புற வர்ணனைகள் பெரிதும் இல்லாமல் (இல்லவே இல்லை என்றுகூடச் சொல்லலாம்) கதை நகர்ந்தாலும் (பெரும்பாலும் உரையாடல்கள் வழியாகவே நகர்கிறது) ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது. அதுதான் உங்கள் எழுத்தின் வெற்றி என்று தோன்றுகிறது.
இரண்டாவது பயம் 60 பக்கங்கள் வரை தொடர்ந்தது. ‘இது ஜெயமோகன் எழுத்து’ என்பது தோன்றிக்கொண்டே இருந்தது. அதன்பின் தான் உங்களை மறந்து கதை மாந்தர்களுடன் உரையாட ஆரம்பித்தேன்.
நல்வினை, தீவினை என்று இரண்டு வினைகள் கிடையாது. வினை என்ற ஒன்றுதான் இருக்கிறது என்பார்கள். அதுபோல் கடவுள், சாத்தான் என்று கிடையாது. எல்லாம் ஒன்றே. கருவறைக்குள் கடவுள் சிலை; வெளியில் குரூரமான ஒரு உலகம். இரண்டும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் இது தனி அனுபவம். பயங்கரமான அனுபவம். காந்தியும், காமராஜரும், கலாமும் மக்களுக்காகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வை பயன்படுத்தியவர்கள் மற்றவர்கள்தான். அதேபோல்தான் – சுப்பம்மை, எருக்கு, ராமப்பன், அகமது என்று ஒவ்வொருவரின் பிறப்பும், வாழ்வும் (அங்கே என்ன வாழ்வு இருக்கிறது?) மற்றவர்களுக்காகவே இருந்து முடிந்தும் போகிறது. ஆனால், இவர்கள் மகாத்மாக்கள் அல்ல. நம் உன்னதமான உலக மொழியில் ‘உருப்படிகள்’.
ஓர் இரவில் படித்து முடித்தாலும் அந்த ஓர் இரவு மட்டும் அல்ல; இன்று வரை மூன்று இரவுகளை எடுத்துக்கொண்டது ‘ஏழாம் உலகம்’.
வாழ்த்துகள் ஜெ.
தீனதயாளன். மு
கனவுகளும் கலைப்புகளும்: தீனதயாளன் இணையப்பக்கம்