பகுதி ஐந்து : மாகேந்திரம்
[ 1 ]
உணவருந்திவிட்டு ஜைமினியும் பைலனும் சுமந்துவும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். “அன்னசாலை உணவுகள் இனியவை” என்றான் சுமந்து. “ஏனென்றால் உரிய பசியுடன் நாம் அவற்றை அணுகுகிறோம்.” பைலன் “வேதசாலை உணவுகள் ஆன்மாவுக்கானவை” என்றபின் ஜைமினியை நோக்கி புன்னகை செய்தான். “நான் பெரும்பசியுடன் சென்றுகொண்டிருக்கிறேன். ஆகவே ஆசிரியர் சுவையானவராகவே இருப்பார் என நம்புகிறேன்” என்றான் சுமந்து.
“வியாசர் வாழ்வது தெற்கே என்று எவர் சொன்னார்கள் உம்மிடம்?” என்று பைலன் கேட்டான். “நான் அவரைப்பற்றி மட்டுமே கேட்டுக்கொண்டு செல்கிறேன். ஒவ்வொருவரும் அவரைப்பற்றி ஒவ்வொரு செய்தியை சொல்கிறார்கள். திரௌபதியை ஐவரும் மணம்புரிந்துகொண்டபோது அவர் பாஞ்சாலத்தில் தோன்றி ஐவரையும் ஒருத்தி மணப்பது பிழையல்ல என்று பாண்டவர்களுக்கு அறிவுறுத்தினார் என்று ஒரு சூதன் பாடினான். அஸ்தினபுரியின் அவைக்களத்தில் நாற்களமாடல் நிகழ்வதற்கு முன்னர் அவர் அங்கே சென்று அது கூடாதென்று வலியுறுத்திச் சொன்னார் என்கிறார்கள்.”
“ஆம், அத்தனை கதைகளிலும் அவர் உரிய தருணங்களில் எல்லாம் தோன்றி அறிவுரை சொல்கிறார்” என்றான் பைலன். “அதை உண்மையெனக்கொண்டால் அவர் அஸ்தினபுரியின் நிலவறை ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.” சுமந்து சிரித்துக்கொண்டு “ஆனால் அவர் காட்டில் பாண்டவர்கள் வாழ்ந்தபோதும் நேரில் தோன்றி செல்வழி சொல்லியிருக்கிறார்” என்றான். “உண்மையில் திருதராஷ்டிரரும் பாண்டுவும் பிறப்பதற்கு முன்னரே அவர் அஸ்தினபுரிவிட்டு விலகிச்சென்றுவிட்டார். அவருடைய நுண்ணறிவு நிகழ்வதனைத்தையும் காட்டியமையால் அவர் தனிமையிலமர்ந்து தவம்செய்யச் சென்றார் என்கிறார்கள்.”
“அல்லது குற்றவுணர்ச்சியாகவும் இருக்கலாம்” என்றான் பைலன். “இருக்கலாம். குற்றவுணர்ச்சியிலிருந்துதான் பெருங்காவியங்கள் தோன்றுகின்றன” என்று சுமந்து சொன்னான். “புற்றுறைமுனிவரின் குற்றவுணர்ச்சியே முதற்காவியம்” என்றான் ஜைமினி. “நான் அவருடைய காவியத்தின் பகுதிகளை இளமையிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். மொழியென நானறிந்ததே அவருடைய சொற்களைத்தான். அவரிடமன்றி எங்கும் என் சித்தம் அமையாதென்று தோன்றியது” என்றான் சுமந்து.
ஜைமினி “அது அவரென்று எவருக்குத் தெரியும்? பெருந்தவளை என அவர் நீருள் எங்கோ மூழ்கியிருக்கிறார், குமிழிகளென காவியங்கள் மட்டும் கிளம்பிவருகின்றன என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அனைத்தும் சூதர்சொல்லாகவும் இருக்கலாமே?” என்றான். “இல்லை, அது அவர் சொற்களே” என்றான் சுமந்து. “அவருடைய சொற்களை என்னால் பல்லாயிரம் சொற்களுக்கு நடுவே முதல்செவியிலேயே சொல்லிவிடமுடியும். அவரன்றி பிறர் அந்த உயரத்திற்கு செல்லமுடியாது. தோழரே, விண்ணிலிருந்து செம்பருந்து உதிர்க்கும் ஒற்றை இறகு போதும், அது அங்கே அளாவிய முகிலையும் ஒளியையும் நாம் அறிவதற்கு.”
பைலன் சிரித்து “நீர் கவிஞர்” என்றான். “ஆம், நான் வியாசனின் மாணவன். தலைமுறைகள் என் சொற்களைப் பாடும், ஐயமே இல்லை அதில்” என்றான் சுமந்து. அந்தக் குரலில் எழுந்த நம்பிக்கையை உணர்ந்து பைலன் திரும்பி அவனைப் பார்த்தான். சுமந்துவின் முகம் அனல்கொண்டது போலிருந்தது. பைலன் பெருமூச்சுடன் “நீர் எவரென அறிந்திருக்கிறீர். நான் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
அவர்கள் கொட்டகையை அடைந்தபோது சண்டனின் முழவின் உறைமட்டும் இருந்தது. “சூதர் எங்கே?” என்றான் பைலன். “யார்?” என்று சுமந்து கேட்டான். “எங்களுடன் வந்தவர். சூதர்களில் அவர் ஒரு பிட்சாடனர்” என்றான் பைலன். “ஆசாரங்களில்லாதவர். எதையும் அத்துமீறி மட்டுமே நோக்கும் துடுக்கர். ஆனால் கற்றவர். சொல்தேர்ந்தவர்” என்றான் ஜைமினி. “கற்று சொல்தேர்ந்தவர் அப்படித்தான் இருக்கமுடியும் போலும்” என்று சுமந்து சிரித்தான். “ஏன் முறைமைகொண்டு ஒழுகும் முனிவர்கள் இல்லையா?” என்றான் ஜைமினி சினத்துடன். “ஓர் அமைப்பை ஒட்டி ஒழுகும் எவரும் முனிவர்கள் அல்ல” என்றான் சுமந்து. ஜைமினி அவனை சிலகணங்கள் நோக்கிவிட்டு விழிதிருப்பிக்கொண்டான்.
“அமைப்புகளை விரும்புபவர்கள் எளிய மனிதர்கள். அவர்கள் தெப்பத்தைப் பற்றிக்கொண்டு நீந்த விழையும் கைதளர்ந்தோர். அமைப்பை பொருள்படுத்திக்கொள்ள அமைப்புமனிதர்களை அவர்கள் முனிவர்களென ஆக்கிக்கொள்கிறார்கள்” என்றான் சுமந்து. “ஜைமின்யரே, இங்குள்ள ஒவ்வொரு வேதநிலையிலும் ஒரு முனிவர் இருக்கிறார். நெறிநின்று இயங்கும் ஓர் உடல். மரபில் பொருந்தி இருந்துகொண்டிருக்கும் ஓர் உள்ளம். அதற்கப்பால் அவர்கள் ஏதுமில்லை. வயது முதிர்ந்தால் நாம் எவரையும் முனிவர் என சொல்லத் தொடங்கிவிடலாம். நமக்கு முதுமைமீது இருக்கும் அச்சமும் கனிவுமே அவரை அப்படி காட்டத்தொடங்கிவிடும்.”
“அறிதலென்பது மீறலால் அன்றி நிகழமுடியாது. தனித்து அன்றி அதை கொள்ள முடியாது. தன் தனிமையைப் பகிர்பவரிடமன்றி அதை அளிக்கவும் முடியாது” என்றான் சுமந்து. பின்னாலிருந்து முழவுடன் வந்த சண்டன் “முழவின் தோலை அடுப்புநெருப்பில் காட்டி சற்று காயவைத்தேன்” என்றான். “நாளைக் காலைக்குள் காய்ந்துவிடுமே, ஏன் உடனே?” என்றான் பைலன். “இங்கே வணிகர்கள் இருக்கிறார்கள். என்னை பாடச்சொல்வார்கள். வேறு சூதர்களும் இல்லை என்பதை நோக்கினேன்” என்றபின் “இவர் யார்?” என்றான்.
சுமந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டதும் அவன் உரக்க நகைத்து “நன்று, ஓடைகள் நதிதேடிச் செல்லும் என்கின்றது தொல்மொழி” என்றான். “நதி ஓடி ஓடி உருவாக்கும் ஆழமென்பது ஓடைகளுக்கான பொறியே.” பைலன் “நாங்கள் அர்ஜுனனின் திசைவெற்றி குறித்த கதைகளைத்தான் பேசிக்கொண்டே வந்தோம்” என்றான். ஜைமினி “அவை பெரும்பாலும் புனைவுகள். கவிஞர் தங்களுக்குத் தோன்றியதை சொல்லிவைக்கிறார்கள்” என்றான். சுமந்து “ஆம், நானும் அக்கதைகளைக் கேட்டபடியே வந்தேன். மேற்குக்கடற்கரையில் காண்டீபத்துடன் நின்றிருக்கும் பார்த்தனை எதிர்க்க வெண்ணிறப் பிடரிமயிர் கொண்ட பன்னிரண்டாயிரம் நீலப்புரவிகளிள் பெரும்படையுடன் வருணன் வந்த சித்திரம் எனக்கே பேரெழுச்சியை ஏற்படுத்தியது” என்றான்.
“பிறகு?” என்றான் பைலன். “அலைகளின் முடிவின்மையால் வருணன் எதிர்க்க கரைமணல்களை அம்புகளாக்கி அர்ஜுனன் அவனுடன் போரிட்டான். அலைகள் வல்லமை மிக்கவை. ஆனால் மணல்களின் எண்ணிக்கைக்கும் ஒருமைக்கும் முன் அவை தோற்றே ஆகவேண்டும். வருணனை வென்று கயிற்றம்பைக் கொண்டு அர்ஜுனன் மீண்டான்” என்றான் சுமந்து. “ஆம், நல்ல கற்பனையே” என்றான் பைலன். “குபேரனை அவன் வென்றது எடைமிக்க கற்பாறைகளால் என்று அந்தக் கதையில் வந்தது. குபேரனின் படைக்கலங்களான பொன்னும் வெள்ளியும் இரும்பும் அழிபவை. அழிவற்ற கல்லை அவற்றால் வெல்லமுடியவில்லை” என்றான் சுமந்து.
பைலன் “யமனை எப்படி வென்றான்?” என்றான். “ஒரு புல்வேரை அவன் தன் படைக்கலமாக ஆக்கினானாம். யமன் இப்புவியில் எதை அழித்தாலும் புல்லை அழிக்கமுடியாது. புல்வேரின் முன் யமனின் அனைத்துப் படைக்கலங்களும் பொருளிழந்தன. அவனுடைய தண்டத்தை அம்பெனக் கொண்டு அர்ஜுனன் புவிமீண்டான்” என்றான் சுமந்து. சண்டன் “நன்று, கவிஞர்கள் கற்பனைசெய்யத் தேறியிருக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனனின் வெற்றிக்கதையை கேட்டுக்கேட்டு மக்களுக்கு சலிக்கவில்லை” என்றான் ஜைமினி. “சூதர்களின் சொல்லில் வாழும் அர்ஜுனர்கள் பல்லாயிரம்பேர். அத்தனைபேரின் எடையையும் தாங்கி மண்ணில் வாழ்கிறான் அவ்வெளிய மனிதன்” என்றான் சண்டன்.
வணிகர்களில் ஒருவன் “சூதரே, உங்களுக்காகவே காத்திருக்கிறோம்” என்றான். “முழவு நா கொண்டுவிட்டதல்லவா?” என்றான் இன்னொருவன். “நா தளர்ந்திருந்ததென்றால் சற்று யவன மதுவை அதன்மேல் பூசுக! நா துடித்து எழக்காண்பீர்” என்றான் பிறிதொருவன். அவர்கள் நகைத்தனர். உணவுக்குப்பின் அனைவருமே வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தனர். வெளியே மழைக்காற்று சுழன்று வீசியது. சிலர் மரக்கட்டில்களில் பொதிகளை தலைக்கு வைத்துக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். சண்டன் எழுந்து அவர்களை அணுகி “என்ன கதை சொல்ல?” என்றான். “இளைய பாண்டவரின் கதைதான். அவர் திசைவென்ற வரலாறு” என்றான் ஒருவன்.
“கேட்டுக்கேட்டு சலித்துவிட்டேன்… புதிய கதை ஏதேனும் சொல்!” என்றான் முதிய வணிகன் ஒருவன். “விருத்திராசுரனை இந்திரன் வென்ற கதையைச் சொல்லும், சண்டரே” என்றான் பைலன். “விருத்திராசுரன் கதையா? அது மிகமிகத் தொன்மையானதல்லவா? ஏட்டுக்கல்விக்கு முன்னரே கேட்டறிந்த கதை” என்றான் ஒரு வணிகன். “என்ன கதை கேட்டீர்கள்?” என்றான் சண்டன். “மாமுனிவராகிய காசியப பிரஜாபதிக்குப் பிறந்தவன் விருத்திரன். அவர் தனு என்னும் மனைவியில் பெற்றெடுத்த தானவர்களில் ஒருவன்” என்றார் ஒரு வணிகர். “அல்ல, அவன் த்வஷ்டாவால் உருவாக்கப்பட்டவன்” என்றார் இன்னொரு வணிகர்.
சண்டன் நகைத்து “ஊருக்கொரு கதை உண்டு, வணிகர்களே. விருத்திராசுரனை இந்திரன் கொன்றான் என்பதில் மட்டும் பிறிதொரு கருத்தில்லை” என்றான். “நீரே சொல்லும்” என்றான் ஒரு வணிகன். சண்டன் “கதை என்பது நீர் போல. நேற்று அருந்திய நதி இன்றுள்ளது அல்ல. நேற்றிருந்த விருத்திரன் அல்ல இன்று வாழ்பவன். சொல் நாளும் வளர்வது, வணிகர்களே” என்றான். “ஆகவே சொல்லை ஓம்புக! சொல் வேள்வியெரி போல. நெய்யும் அவியும் சமித்துமிட்டுப் பேணுபவர்களிடமே அது வாழும்.” வணிகர்களில் மூத்தவர் நகைத்து “எந்தக் கதையும் நாணய ஒலியில் இருந்தே தொடங்குமென நாங்கள் அறிவோம், சூதரே” என்றார்.
அவர்கள் அளித்த நாணயங்களை வாங்கி தன் மடிச்சீலையில் பொதிந்து செருகிக்கொண்ட பின்னர் சண்டன் கதையை தொடங்கினான். “அழிக்கப்பட்ட ஒன்று அழிவற்றதாகும் விந்தை என்ன? வணிகர்களே, அழியாது பேணி நெஞ்சோடு சேர்த்து மானுடம் கொண்டுசெல்வதுதான் என்ன? அழிவன சூழ்ந்தது இப்புவி. அழிவென அழிவென கூவிக்கொண்டிருக்கிறது காலம். சூழ்ந்து பறக்கும் பெருங்காற்று கற்பாறைகளை கரைத்துக்கொண்டிருக்கிறது. ஒளியற்ற வெம்மையற்ற நெருப்பொன்றில் எரிந்துகொண்டிருக்கின்றன அனைத்தும்.”
“இப்புவியில் முற்றழிவது எது? பிழையுணர்வு வளர்கிறது. தன்னிரக்கம் குமைகிறது. வெற்றிக்களிப்பு மிகுகிறது. வஞ்சம் கரந்து ஊறிப்பெருகுகிறது. அழிவதுதான் என்ன? அழிவின்மை என்பது நலனா தீதா? வணிகர்களே, இங்கு அழியாதது இருளா ஒளியா? அழிந்தழிந்து செல்லும் வாழ்வுக்குமேல் அழியாமல் நின்றிருக்கும் தெய்வங்களின் பிறப்புவாயில் என்ன? ஓடும்நதிமேல் படர்ந்த விண்முகில்களென தனிவழி சென்றுகொண்டிருக்கின்றன தெய்வங்கள். தெய்வங்களை வழிபடுக! அவை நம் அச்சங்களின் கூர். நம் ஐயங்களின் இருள். நம் வஞ்சங்களின் கசப்பு. நம் துயர்களின் எடை. அவை வாழ்க!”
[ 2 ]
பிரம்மகபாலம் என்னும் மலைப்பாறைக்கு மேலிருந்த குகையொன்றில் ஒரு மழைக்குளிர்காலத்தில் மூவர் சந்தித்துக்கொண்டனர். ஒருவர் மெய்ச்சாம்பல்பூசி கரித்தோலுடுத்து மூவிழிதிறந்து முப்புரிவேல் ஏந்திய பெயரற்ற பிச்சாண்டவர். இன்னொருவர் தருப்பைச்சுருளும் துணிப்பொதியும் கைக்கோலும் கொண்டு அயலூர் செல்லும் வைதிகர். பிரசாந்தர் என்பது அவர் பெயர். மூன்றாமவன் முழவேந்தி கொம்பு இடைகட்டி கழியில் தொங்கும் பொதியுடன் வழிநடைசெல்லும் சூதன். அவன் பெயர் பிரசண்டன்.
குகைக்கு வெளியே இளமழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளே காட்டுவிறகை அடுக்கி எரிமூட்டி வெப்பத்தை நிறைத்தான் சூதன். வெளிக்குளிர் உள்ளே நுழையாமலிருக்க மரக்கிளைகளை வெட்டிச் சாய்த்து அதன்மேல் தழைகளை அடுக்கி கதவமைத்திருந்தனர். செவ்வொளியே குளிரை விரட்டியது. குகைச்சுவர்கள் அனல்கொண்டதும் அவர்களின் இறுகிய உடல்கள் தழைந்தன.
மெல்லிய சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டு தரைப்புழுதிமேல் தன் ஆடையை விரித்து படுத்துக்கொண்ட பிரசாந்தர் “இனியபொழுது. இவ்விரவில் தெய்வங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்பதாக!” என்றார். அச்சொல் முடிவதற்குள் கதவுத்திரையின் இடைவெளியினூடாக குகையின் ஆழங்களனைத்தும் ஒளிகொண்டதிர மின்னலொன்று வெட்டி அதிர்ந்து அணைந்தது. இடியோசை எழுந்து குகைக்குள் பெருமுழக்கமொன்று முழவின் ரீங்காரமென நீடித்தது.
பிரசாந்தர் திரும்பி நோக்கி “இக்குகை மேலும் பலகாதம் உள்ளே செல்கிறது போலும்” என்றார். “இது குகையல்ல அந்தணரே, பிலம். மண்ணுக்குள் ஓடும் பேர்விரிசல் இது. இதற்குள் ஆறுகள் ஓடக்கூடும். பலநூறு கிளைகளுடன் இது விரிந்து செல்லக்கூடும்.” பிறிதொரு மின்னல் அந்தணரை ஒளிர்ந்தணையச் செய்தது. திரும்பிநோக்கி இடியோசைக்காக அவர் காத்திருந்தார். இடியெழுந்து அவ்வோசை இருளுக்குள் உருண்டோடிச் செல்வதை கண்டார். “நெடுந்தொலைவு” என்றார். “ஆம், இருளுக்குள் ஓசை சென்றுகொண்டே இருக்கிறது, மீளவில்லை” என்றான் சூதன்.
பிச்சாண்டவர் அங்கிலாதவர் போல அமர்ந்திருந்தார். அவர் கையில் சிவமூலிகை புகைந்துகொண்டிருந்தது. விழிகள் அதன் அனலுடன் இணைந்து கனன்றணைந்தன. “பாதாளம்வரை செல்லும்போல” என்று பிரசாந்தர் புன்னகைத்தார். “ஆம், பாதாளமூர்த்திகள் வெளியே வரும் வழியாக இருக்கலாம்” என்றான் சூதன். பிரசாந்தர் அச்சத்துடன் “வெறும்கதைகள்” என்றார். “பாதாளமென்று ஒன்று இருந்தால் அது வெளிவந்துதானே ஆகவேண்டும்?” என்றான் சூதன். அந்தணர் சரியாக புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றார்.
“அனைத்தும் புதைந்துகொண்டே இருக்கின்றன, அந்தணரே. புதைந்தவை சென்றடையும் ஆழம் ஒன்று இருக்கும். மிச்சமின்றிப் புதைபவை அங்கே முழுதமையக்கூடும். மிச்சமென சில கொண்டவை அவற்றை விதைமுளையெனக் கொண்டு மேலெழுந்து வரும்.” பிரசாந்தர் விழிகள் அசைவிழந்திருக்க சூதனை நோக்கியபின் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். பிச்சாண்டவர் அங்கு நிகழ்ந்த சொற்களுடன் தொடர்பற்றவர்போல வெடித்து நகைத்து இருமி உடல்குலுங்கி அமைந்து மீண்டும் புகையை ஆழ இழுத்தார்.
மீண்டுமொரு மின்னல் எழுந்து குகைக்குள் தழைநிழல்களின் காடு ஒன்றை கூத்தாட வைத்து அணைந்தது. குகைச்சுவரில் பதிந்திருந்த கற்களின் மேல் மின்னலின் ஒளி சற்றுநேரம் எஞ்சி விழிகளென தெரிந்து அணைந்தது. பிரசாந்தர் “இந்திரனே, மருத்வானே, பிதௌஜஸே, பாகசாசனனே, விருத்தசிரவஸே, சுனாசீரனே, புருஹூதனே, புரந்தரனே, ஜிஷ்ணுவே, லேகர்ஷபனே, சக்ரனே, சதமன்யூவே, திவஸ்பதியே, சுத்ரமாவே, கோத்ரஃபித்துவே, வஜ்ரியே, வாசவனே உன்னை வணங்குகிறேன்” என்று சொல்லி தன் தலைமேல் கைகளால் மும்முறை குட்டிக்கொண்டார்.
இடி உறுமியது. மின்னல் கூர்வாள்கள்போல குகையிருளில் நீண்டு சுழன்றணைந்தது. மேலும் உரத்த குரலில் “நீ விருதஹா, விருஷா, வாஸ்தோஷ்பதி, சுரபதி, வலராதி, சசீபதி, ஜம்பஃபேதி, ஹரிஹயன், ஸ்வராட், நமுசிசூதனன், சம்கிரந்தனன், துஞ்ச்யவனன். நீ வாழ்க!” என்றார். தலைக்குமேல் கைகளைக் கூப்பி “துராஷாடன் அல்லவா நீ? மேகவாகனனே, ஆகண்டலனே, சகஸ்ராக்ஷனே, ருஃபுக்ஷாவே என்னை காத்தருள்க! எங்களுக்கு துணைநின்றருள்க!” என்றார்.
சூதன் “இந்திரநாமங்கள்” என்றான். “ஆம், இடிமின்னலில் இருந்து அவை நம்மை காக்கின்றன” என்றார் பிரசாந்தர். சூதன் நகைத்துக்கொண்டு “அஸ்தினபுரியின் குடிகள் இந்திரன் மைந்தனாகிய அர்ஜுனனின் பெயர்களை சொன்னால் போதுமென நினைக்கிறார்கள்” என்றான். அந்தணர் “பண்டு விருத்திராசுரனைக் கொன்று பிளந்த மின்படை அவன் கையிலுள்ளது. சூதரே, இதோ மின்னி அணைவது அதன் ஒளிதான்” என்றார்.
“இருளே உருவான அரக்கன். அவனைக் கொன்றது மின்னலெனும் வாள். அவன் இடியோசையென ஒலியெழுப்பி விழுந்தான். இருளுக்குள் கரைந்து மறைந்தான். இருள்செறியும் இடங்களில் அவன் எழுந்து வருகிறான். அப்போது விளக்கென, வேள்விச்சுடரென இந்திரனை ஏற்றுவோம். அவன் நம்மை அவன் மடியில் வைத்துக் காப்பான்” என்றார் பிரசாந்தர்.
பிச்சாண்டவர் மீண்டும் உரக்க நகைத்து இருமினார். “இவர் துயில்வதே இல்லை. இந்த அனலை உண்டபடி எப்போதும் செவ்விழி திறந்து விழித்திருக்கிறார்” என்றார் அந்தணர். “அவர் மூன்றாம் விழி துயிலும்போலும்” என்றான் சூதன். மின்னுடன் இடியோசை எழ பிரசாந்தர் உடலை குறுக்கிக்கொண்டு “மழைக்கால இடிக்கு இத்தனை ஒலியிருக்காது. இன்று வான்கிழிவதுபோல முழங்குகிறது” என்றார்.
“அந்தணரே, விருத்திரனை வெல்ல ஒருபோதும் இந்திரனால் முடியாது என்று அறிக! அவர்கள் என்றுமிருப்பார்கள். அப்போர் முடிவடைவதேயில்லை” என்றான். “விருத்திரன் கொல்லப்பட்டான் என்பதே தொல்கதை” என்றார் பிரசாந்தர். “சொல்க, அக்கதை என்ன?” என்றான் சூதன். “முன்பு இப்புவியை ஆண்டிருந்த சித்ரகேது என்னும் ஷத்ரிய அரசனின் மறுபிறப்பே விருத்திரன்” என்றார் பிரசாந்தர். “சொல்க!” என்று சூதன் சொன்னான்.
“சித்ரபாகம் என்னும் நாட்டை அவன் ஆண்டுவந்தான். ஏழாண்டுகள் இல்லறம் கண்டபின்னரும் அவன் தேவி கிருத்யத்யூதி கருவுறவில்லை. கொடையும் நோன்பும் இயற்றியும் பயனிருக்கவில்லை. அவர்கள் மாமுனிவராகிய அங்கிரசரிடம் சென்று தங்களுக்கு மைந்தனை அளிக்கவேண்டுமென கோரினர். மைந்தன் இல்லாது தன் நாடும் குடியும் அழியுமென்றால் மூதாதையருக்கு பழிசேரும் என்றும் அதை தவிர்க்கும்பொருட்டு உயிர்துறந்து பேயென அலைவதே மேலென்று எண்ணுவதாகவும் சித்ரகேது கண்ணீருடன் சொன்னான்” அந்தணர் சொல்லலானார்.
அங்கிரசர் அவர்களிடம் சொன்னார் “மைந்தனை அளிப்பதும் எடுப்பதும் மானுடரால் இயல்வதல்ல. தெய்வங்களை கோருவோம். உயிருக்கு இறைவனை அழைக்கிறேன். அவனிடம் கேள்!” சித்ரகேது இயற்றிய பெருவேள்வியில் எழுந்த யமன் “நான் எடுப்பவன், அளிப்பவன் அல்ல. உயிரளிக்கும் ஆற்றல்கொண்டவர் ஒருவரே. படைப்பு முதல்வனாகிய பிரம்மனிடம் கோருக!” என்றான்.
வேள்வி தொடர்ந்தது. அவியுண்டு எழுந்த நெருப்பில் தோன்றிய பிரம்மன் “பிறப்பும் இறப்பும் துலாநிகர் கொண்டது, முனிவரே. அந்நெறிகளை பிரம்மனும் மீறமுடியாதென்றறிக! இவன் குருதியில் மைந்தர் பிறக்கமுடியாது. இவனது முற்பிறவிகளிலேயே அது வகுக்கப்பட்டுவிட்டது” என்றார். “மாட்டேன், மைந்தன் பிறக்காமல் அமையமாட்டேன். அருவேள்வி எதுவானாலும் செய்யுங்கள். என் இறுதிச்செல்வத்தையும் ஈடுவைக்கிறேன். கடுந்தவம் எதுவானாலும் என் இறுதிக்குருதிவரை அளிக்கிறேன்” என்று சித்ரகேது கூவினான்.
“வேறுவழியில்லை, அரசே” என்றார் அங்கிரசர். “அதை நானறியவேண்டியதில்லை. நான் விழைவது மைந்தனை” என்று அவன் சொன்னான். “விழைவுகளின் அரசன் இந்திரனே. வேள்விக்கு கட்டுப்பட்டவன். அவனிடம் கோரலாம்” என்றார் அங்கிரசர். வேள்விமரத்தில் மின்னெனப் பாய்ந்து எரியென எழுந்த இந்திரனிடம் அரசனின் விழைவை அவர் உரைத்தார். “தேவர்க்கரசே, அளிகொள்க! அரசனுக்கு அருள்க!” என்றார்.
“படைக்கப்படாததை உருவாக்க இயலாது என்னால்” என்றான் இந்திரன். “அளிகொள்க! அரசே, அளிகொள்க” என்று சித்ரகேது கூவியபடி மண்டியிட்டு கைநீட்டி இரந்தான். “விண்ணாளும் தேவர்களில் ஒருவனை இவன் மைந்தன் என மண்ணுக்கு அனுப்புகிறேன். இவன் தேவியிடம் அவன் ஊனுடல்கொண்டு பிறப்பான். மண்ணில் அறுபதாண்டுகாலம் வாழ்ந்து சிறந்து விண்மீள்வான்” என்றான் இந்திரன். “ஆனால் இவன் என் மைந்தன் என ஒருகணமும் நீ எண்ணலாகாது. எண்ணும் அக்கணம் அம்மைந்தன் உயிர்நீப்பான்.”
சித்ரகேது “ஆம், ஆணை! அவ்வாறே, ஆணை!” என்று கூவினான். அங்கிரசர் “எண்ணிச்செய்க, அரசே!” என்றார். “இல்லை, இது எனக்களிக்கப்படும் பேரருள்…” என்றான் சித்ரகேது. “அரசே, நாம் மாந்தர். தேவர்கள் அல்ல. அவர்களுடைய வாள்முனைகளின் உலகு” என்றார் அங்கிரசர். “ஆம், வாள்முனையில் எறும்பு ஊரும். அது அஞ்சவேண்டியதில்லை” என்றான் சித்ரகேது. “தேவர்க்கரசே, இதோ சொல்லளித்தேன். எனக்கு மைந்தனை அருள்க!” இந்திரன் “அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி மீண்டான்.
சித்ரகேதுவின் மனைவி கருவுற்று மைந்தன் ஒருவனை ஈன்றாள். சர்வஜித் என்று அவனுக்கு பெயரிட்டனர். பொன்னொளிகொண்ட உடலும் மணிவிழிகளும் கொண்ட அழகனாக இருந்தான் அம்மைந்தன். அவன் பிறந்த கணமே வயற்றாட்டியரால் அங்கிருந்து விலக்கப்பட்டான். அன்னைக்கு அவன் முகமே காட்டப்படவில்லை. அவனுக்கு அமுதூட்ட முலைததும்பும் செவிலியர் வெளியே காத்துநின்றிருந்தனர்.
அரசனும் தேவியும் அவனை ஒருபோதும் நேரில் பார்க்கவேயில்லை. ஒருகணமேனும் தன் மகன் அவன் என எண்ணிக்கொள்ளலாகாதென்பதை அவன் கருவில் இருந்தபோதே தங்களுக்குள் சொல்லி உறுதிகொண்டு அதையே தவமெனச் செய்து அகத்தை பயிற்றுவித்திருந்தனர். அம்மைந்தனைப் பற்றிய ஒரு செய்தியும் தங்கள் செவிக்கு வரக்கூடாதென்று அவர்கள் ஆணையிட்டிருந்தனர். அவன் அறியாமலும் அவர்களின் விழிமுன் சென்றுவிடக்கூடாதென்று அனைவரும் நெறிகொண்டிருந்தனர்.
மைந்தனை மறக்க அரசன் அரசப்பணிகளில் கணமிடைவெளியின்றி மூழ்கினான். மாலையில் களைத்து தளர்நடையிட்டுச் சென்று படுக்கையில் விழுந்து அக்கணமே துயின்றான். காலையில் அலுவல்செய்தியொன்றுடன் தன்னை எழுப்பவேண்டுமென அமைச்சர்களுக்கு அவன் ஆணையிட்டிருந்தான்.
மைந்தனை எண்ணாமல் கடக்க தேவி ஒரு வழி கண்டுகொண்டாள். ஒரு மரப்பாவையை அவள் தன் மகன் என எண்ணினாள். அதற்கும் சர்வஜித் என்று பெயரிட்டாள். அந்தப் பாவையை நெஞ்சோடணைத்து அமுதூட்டினாள். கொஞ்சிக் கனிந்து குதலை பேசினாள். ஆடையும் அணியும் அணிவித்து மடியிருத்திக்கொண்டாள். அருகே படுக்கவைத்து துயின்றாள். அதையே கனவிலும் கண்டாள். பாவை அவளுக்குள் ஊறிய முலைப்பால் அனைத்தையும் உண்டது. அவள் உதடுகளில் எழுந்த முத்தங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டது. அவள் கனவிலும் அதுவே வந்தது. அவள் மெல்ல தன் மைந்தன் இருப்பையே மறந்தவளானாள்.
அகத்தளத்தில் அன்னையையும் தந்தையையும் அறியாமல் வளர்ந்தான் சர்வஜித். அவனுக்கு ஒரு வயதானபோது ஒருநாள் சேடியொருத்தி அவனை கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்றாள். அங்கே விளையாடிக்கொண்டிருந்த மைந்தன் அவ்வழி சென்ற நாயொன்றைக் கண்டு அதைத் துரத்தியபடி வெளியே சென்றான். மறுதிசையில் சேடியர் தேடிப்பதைத்து கூச்சலிட்டுக்கொண்டிருக்க மையச்சாலையில் இறங்கி அவன் கூட்டத்தில் கலந்தான். கூட்டத்தின் அலையால் உந்திச்செல்லப்பட்ட மைந்தன் அதில் மகிழ்ந்து துள்ளிக்கொண்டிருந்தான்.
அப்போது குலத்தாரின் அவைக்கூட்டம் முடித்து அவ்வழியே தேவியுடன் சென்ற சித்ரகேதுவின் தேர்முன் அவன் வந்தான். தேவி அறியாமல் பதறி எழுந்து “என் மகன்!” என்று கூவினாள். அவள் மடியிலிருந்த பாவை கீழே விழுந்தது. அதை காலால் தட்டி வீசிவிட்டு பாய்ந்து ஓடும் தேரிலிருந்து இறங்கி அவனை அள்ளி நெஞ்சோடணைத்து முத்தமிட்டு “என் மகன்! என்மகன்!” என்று அவள் அழுதாள். அருகே நின்ற சித்ரகேது கைகால்கள் பதற தேரை பற்றிக்கொண்டான்.
அன்றிரவே அம்மைந்தன் கடும்சுரம் கண்டு இறந்தான். அவன் சடலத்தருகே நெஞ்சறைந்து தலைமோதி கதறிக்கொண்டிருந்தாள் அன்னை. பித்தனைப்போல வெறித்து நின்றிருந்த சித்ரகேது ஒரு கணத்தில் பாய்ந்து மைந்தனை கையிலெடுத்துக்கொண்டு ஓடினான். “அரசே! அரசே” என்று கூவியபடி அமைச்சரும் பிறரும் பின்னால் ஓடினர். தேரிலேறி “செலுத்துக, காட்டுக்கு!” என்று ஆணையிட்டான். “விரைக! விரைக!” என்று கூவிக்கொண்டே இருந்தான்.
தேர் சென்று அங்கிரசரின் குருநிலை முன் நின்றது. இறங்கி ஓடி மைந்தனின் உடலை முனிவர் முன் இட்டு அவன் கூவினான் “நான் ஒருகணமும் எண்ணவில்லை. ஒருகணமும் இவனை உரிமைகொள்ளவில்லை. இவன் உயிருடலை நான் தொடவே இல்லை.” அங்கிரசர் “ஆம்” என்றார். “என் துணைவி செய்த பிழைக்கு என்னை ஏன் தண்டிக்கின்றான் தேவர்க்கிறைவன்? நான் எண்ணவில்லை. மைந்தன் என்று இவனை கொள்ளவே இல்லை.” நெஞ்சில் ஓங்கி அறைந்து அவன் கண்ணீருடன் அலறினான். “தெய்வங்கள் சொல்க! அறமென நின்றிருக்கும் மூதாதையர் சொல்க! தேவர்க்கரசன் அறமுள்ளவன் என்றால் இங்கெழுக… நான் எண்ணவே இல்லை.”
“ஆனால் அவள் உன் அறத்துணைவி. அவள் எண்ணியது நீ எண்ணியதேயாகும்” என்றார் அங்கிரசர். “அவ்வண்ணமென்றால் அவளை நான் நீங்குகிறேன். அவள் என் துணைவியல்ல என்று இப்போதே அறிவிக்கிறேன். இந்த அனல் சான்றாகுக! அவள் என் துணைவியல்ல என்று தெய்வங்கள் அறிக! அவள் என் துணைவி அல்ல என்று மூதாதையர் அறிக! அவள் என் துணைவியல்ல என்று குலமும் குடியும் சுற்றமும் அறிக! ஆம் ஆம் ஆம்” என்றான். நெருப்பு எழுந்து தழலாடி அதை ஏற்றது.
“தேவர்க்கரசே, இது உனக்கு ஏற்புடையதென்றால் இம்மைந்தன் எழுவானாக!” என்றார் அங்கிரசர். துயிலில் இருந்து என மைந்தன் எழுந்து தந்தையை நோக்கினான். அவனை நோக்காமல் திரும்பி அப்பால் சென்ற சித்ரகேது “அவனை அகத்தளத்திற்கு கொண்டுசெல்க!” என ஆணையிட்டான். “வேந்தே, நீ அரசமுனிவனாக ஆகமுடியுமென்று உன் பிறவிநூல் சொல்கிறது. பற்றறுத்து மீளாமல் உனக்கு அது இயல்வதல்ல என்பதனாலேயே இது நிகழ்ந்தது என்று கொள்க! பற்றுவனவற்றில் பெரும்பற்று மைந்தனே. அதை வென்றாய். இனி நீ அடைவன முடிவற்றவை. நீ வாழ்க!” என்றார் அங்கிரசர்.
“அங்கிரசரின் சொல் நிலைத்தது. அவன் முடிவின்மையை அடைந்தான்” என்றார் பிரசாந்தர். “முடிவின்மை என்பது இப்பெரும் ஊசலின் இருபக்கங்களிலும் உள்ளது. அவன் ஒளிர்ந்து அதை அடையவில்லை. இருண்டு அடைந்தான். அவன் தேடியது திரண்டு அவன் தெய்வமாகவில்லை. அவன் கரந்தது கூர்ந்து அவன் அசுரன் ஆனான். அவனே விருத்திராசுரனாகப் பிறந்தான் என்கின்றனர் தொல்நூலோர்.”