க.நா.சுவின் காலகட்டத்தில் எது சிறுகதை என்பதைப்பற்றி ஒரு தொடர்விவாதம் நடந்தது. அனைவருமே எழுதியிருக்கிறார்கள். அதன்பிறகு இப்போதுதான் இந்த விரிந்த அளவில் சிறுகதையின் வடிவம் பற்றியும் சிறுகதை எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஒரு பொதுவிவாதம் நிகழ்கிறது என நினைக்கிறேன். மிகமிக முக்கியமான ஒரு இலக்கியநிகழ்வு இது
ஆனால் எத்தனைபேர் இதைக்கவனிக்கிறார்கள் என்று பார்த்தால் வருத்தம்தான். சிறுகதைகள் எழுதும் என் நண்பர்கள் பலர் உண்டு. எவருமே வாசிக்கவில்லை. ஆர்வமில்லை. நீளமாக இருக்கிறது என்கிறார்கள்:. ஃபேஸ்புக் போய் பார்த்தேன். ஒருவர் கூட இதைப்பற்றி எழுதவில்லை
முந்நூறு காப்பி அச்சிடும் இதழ்களில் எழுதியபோது க.நா.சுவுக்கு இன்னும் அதிகமான கவனிப்பு இருந்திருக்கும்போல
பாலசுப்ரமணியம். ஆ
அன்புள்ள ஜெ
வந்திருக்கும் சிறுகதைகளில் எவருடைய பாதிப்பெல்லாம் இருக்கிறது என்றுபார்த்தேன். தருணாதித்தன் கதைகளில் தி. ஜானகிராமன் பாதிப்பு இருக்கிறது. அதாவது மனிதகுணம் என்னும் கதை அப்படியே தி ஜா பாணி. மற்றபடி பெரும்பாலும் அசோகமித்திரனின் பாணி. மோனிகா மாறன் கதை பழைய உருவகக்கதைகளுக்குரிய மொழி. என் ஆர் தாசன் என்பவர் அப்படி எழுதிக்கொண்டிருந்தார். உரைவீச்சு என அதைப்பற்றி அவர் அன்றைக்குச் சொன்னார்.
கதைக்குரிய மொழி அல்ல அது. ஒரு வகையான வசனகவிதை. ஆனால் ரொம்பவே ரொமாண்டிக் ஆக உள்ளது. நேரடியான உணர்ச்சிகள் வெளிப்பட்டால் அப்படித்தான் இருக்கும். அவற்றை பிரைவேட் இமோஷன் ஆகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மக்தலீனை அவர் சித்தரித்துக்காட்டவே இல்லை
மனோகர்
ஜெ
வெண்முரசு என்னும் பெரிய படைப்பை நாள் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூடவே கருப்புப்பணம் பற்றிய சண்டையிலும் ஈடுபட்டு 20 பக்கத்துக்கு எழுதினீர்கள். [வாட்ஸப் வழியாக ஒருலட்சம் முறையாவது அது பரவியிருக்கும். என்னுடைய சாதாரணமான நண்பர்களும் உறவினர்களும் எல்லாருமே அதை வாசித்திருக்கிறார்கள்] நடுவே சிறுகதைகளை வாசித்து இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்
இந்த ஆறுதொகுதிகளில் உள்ள கதைகளில் அனோஜன் பாலகிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, தருணாதித்தன் ஆகிய மூவரும்தான் சிறந்த எழுத்தாளர்கள் என நினைக்கிறேன். சுவாரசியமாக எழுதுவதுதான் முதல் அடிப்படை. எதையும் சுவாரசியப்படுத்துவதும் சுவாரசியத்தை கண்டுகொள்வதும் எழுத்தாளனுக்கு அவசியம். பிற எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.
மேலே சொன்ன மூன்றுஎழுத்தாளர்களும் வாழ்க்கையிலுள்ள வேடிக்கையான அல்லது வேறுபட்ட அல்லது கவனம்தரவேண்டிய விசயங்களைத் தொட்டு எடுத்து சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் இந்த அம்சம் இல்லாவிட்டால் அது வாசகனுக்கு முக்கியமில்லை என நினைக்கிறேன்
சுனீல் கிருஷ்ணனின் கதை நுட்பமாக எழுத முயர்சிசெய்யப்பட்டது. அதேபோல மோனிகா மாரனின் கதையும். ரெண்டுமே சுவாரசியமான ஒரு விஷயத்தையும் சொல்ல முயலவில்லை. ஆசிரியன் எதை எண்ணி நெகிழ்கிறானோ சிரிக்கிறானோ அதைமட்டும் எழுத முயன்றாலே போதும் என நினைக்கிறேன்
ஆர். கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள ஜெ
சிறுகதைகளை வாசித்தேன். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையை உங்கள் குறிப்புக்குப்பின்னர்தான் வாசிக்கமுடிந்தது. முக்கியமான கதை என நினைக்கிறேன். அந்த முடிச்சு ஒரு வலுவான கலரில் இருப்பதனால் அதை மையமாகக்கொண்டு அந்தக்கதையை வாசித்து அது இனவாதம் பற்றிய கதை என்று எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அது அகதிகளின் அன்னியர்களின் அடாப்டேஷன் பிரச்சினைகளைப்பற்றிய கதை.
பிரிட்டிஷ்க் கலாச்சாரத்தில் இவர்கள் எதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்., எதை கவனிப்பதே இல்லை என்பதைப்பற்றிய கதை. அங்குள்ள முன்னேறும்வாய்ப்பான கல்வி அரசியல் எல்லாமெ தெரியும் கலாச்சாரம் அறிமுகமே இல்லை. அதைத்தான் இந்தக்கதை சொல்கிறதென நினைக்கிறேன்
முக்கியமான கதை. சிவா கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்துவாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்
செல்வா முருகேசன்
அன்புள்ள ஜெ
கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாளுக்கு ஒரு கதைவீதம். தருணாதித்தனின் கதைகள் நல்ல படைப்புகள். சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் நன்றாகவே உள்ளது.
இக்கதைகளின் பிரச்சினை எல்லாருமே சம்பிரதாயமாக எழுத முயற்சிசெய்திருக்கிறார்கள் என்பதுதான். கதைவடிவம் தமிழில் ஆனந்தவிகடன் பாணிக்கதைகளில் வரும் வழக்கமான ரூபத்திலேயே உள்ளது. எந்தப்பரிசோதனையும் செய்யப்படவில்லை. எந்தவகையிலும் கதைகள் மேம்படுத்தப்படவில்லை.
ஒருசிறுகதையைக் கொஞ்சநாள் வைத்திருந்து மேம்படுத்தவேண்டும். திரும்ப எழுதி கூர்மையாக ஆக்கவேண்டும். இன்றைய ஃபேஸ்புக் சூழலில் அதைச்செய்யாமல் அப்படியே வலையேற்றிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே ஒரு வகையான பிசிறுகள் இருக்கின்றன. சொல்லாட்சிகளும் நடையும் எல்லாமே பிசிறுகளுடன் மட்டுமே இருக்கின்றன.
நல்ல கதை நூறாண்டுக்காலம் நிற்பது. அதை போகிறபோக்கிலே எழுதிவிடக்கூடாது என இவர்கள் உணரவேண்டும். வாசகன் என்பவனை இவர்கள் இப்போதுதான் சந்திக்கிறார்கள். வாசகன் எப்படிக்குரூரமாக இருப்பான் என்பதைப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறே
சண்முகம்
==============================================================================
==============================================================================
சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி
சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்
சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்
சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி
சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்
சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்
==============================