சிறுகதைகள் கடிதங்கள் -11

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடைசி ஐந்து கதைகளைப் பற்றி

பருவமழை

கலை போலவே அறிவியலுக்கும் நம் நாட்டில் அளிக்கப்படும் மதிப்பு குறைவுதான். அவற்றில் உடனடி பயனைத் தேடும் கூட்டம் தான் அதிகம். இந்த கருவைத் துழாவுகின்றது பருவமழை.

எழுத்துமுறையின் சிக்கல்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கையில் இந்தக் கதையில் மூலப் பிரச்சினை என்பது ராமச்சந்திரனுள் செல்லாமல் மேலோட்டமாக நிகழ்வுகளை மட்டும் அளிப்பதுதான். சராசரி மனிதனுக்கு அறிவியலின் முக்கியத்துவம் புரிபடாமல் இருக்கலாம். ஆனால் அதிலேயே ஊரிப்போன ஒருவரால், தான் கடை பிடிக்கும் அறிவியலின் நேர்மைக் காத்து வேலையிலிருந்து நீங்குபவரால் (வேண்டிய பதிலைக்கொடுத்து வேலையைத் தக்க வைத்துக்கொன்டிருக்க முடியும்) சலனமே இல்லாமல் எப்படி ஜோதிடம் என்ற அரைகுறை அறிவியலுக்குள் நுழைய முடியும்? பருவமாற்றம் போல அவருடைய வாழ்க்கையும் மாற்றம் அடைவது அவர் தெரிவிக்கும் எதிர்ப்பா, அல்லது பிழைப்பதன் கட்டாயமா? இவ்வீழ்ச்சியைப் பின் தொடர்ந்திருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருந்திருக்கக் கூடும்.

மனிதக்குணம்

இவ்வரிசையில் ருசி/நகர்வு பற்றிப் பேசும் இரண்டாவது கதை. சுவாரஸ்யமான ஆரம்பம், இயல்பான வர்ணனைகள் மூலம் கதைக்கூறும் இடங்களின் வண்ணங்களையும் உயிரோட்டத்தையும் அளிக்கிறார் ஆசிரியர். நுகர்வு நாட்டத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் நடுவில் சிக்கிக் கொண்டுள்ள பெரியவர், அதை புரிந்துகொள்ளக் கூடிய விருந்தாளி – இவை தான் கதையின் முக்கிய அம்சங்கள்.

கதை வீழும் இடங்கள் – (1) தலைப்பு போலவே மிக மிக வெளிப்படையாக, நேர்முகமாக சிதம்பரம் அய்யாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வது. கதைத் தானாக அந்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டும். (2) கடைசியில் பெரியவரின் செயலை, ஒரு கணத்தில் நிகழ்கிற தடுமாற்றமாக அளிக்காமல் தினமும் நிகழும் ஏமாற்றம் போல அமைத்தது.

மஞ்சுக்குட்டி

தில்லையம்மா போல இதுவும் மெல்லுணர்வு சார்ந்த கதை. பெரும்பாலும் ஒற்றைப்படையான சித்தரிப்புகள், மஞ்சுளா குடித்த பிறகு சற்று மாறுகிறது. காதல், கள்ளக்காதல் – இவற்றை மையமாக கொண்ட கதைகள் சலிப்பூட்டுகின்றன. எழுத்துமுறையின் இன்னொரு பிரச்சினை மஞ்சுளாவின் காதலனின் பார்வையிலிருந்து சொல்ல ஆரம்பித்து, மஞ்சுளாவின் குரலில் முடிகிறது. கதையில் குறிப்பிடத்தக்க ஒன்று – முதல் பத்தியில் சாப்பாட்டைப் பற்றிய விவரிப்பு உண்மையிலேயே பசியைக் கிளப்பியது.

10.5

விறுவிறுப்பாக நகர்கிறது ஆனால் ஆழமான எதையுமே தேட முயற்சிக்காத கதை. சொல்லவந்ததை பெரும்பாலான தமிழ்ப் படங்கள் போல climax dialogue தெரிவிக்கிறது.

அசங்கா

முறைமீறிய உறவு சராசரி மனிதனுள் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதில் எதிர்பாராதது எதுவும் இல்லை. குற்ற உணர்ச்சியையும் மனசாட்சியையும் குறியீடுகள் மூலம் முன்வைப்பது பின்தங்கிய உத்தி போல தோன்றுகிறது (பழைய படங்களில் முத்தங்களை குடை அல்லது பூவின் பின் மறைப்பது போல). நவீன இலக்கியம் இதை நேர்முக்மாகவே அணுகலாம்.

ஆனால் அடிப்படையில், காதல் அல்லது முறைமீறிய உறவு போன்றவை நல்ல இலக்கியத்திற்கு உகந்த கதைக்கருக்கள் அல்ல என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவை எல்லோரிடமும் பெரும்பாலும் ஒரே மாதிரியான (homogeneous) உணர்வெழுச்சிகளையே உருவாக்குகின்றன. எதிர்மறையான அல்லது புதிதான கருத்துக்களுக்கு மிகச் சிறிய இடம் தான் அளிக்கின்றன. அதனால் இவற்றை மையமாகக் கொள்ளும் மஞ்சுக்குட்டி, அசங்கா போன்ற கதைகள் சோர்வடையச்செய்கின்றன.

இதைக் கடந்து எழுதக்கூடியவராக தெரிகிறார் அனோஜன்.

ப்ரியம்வதா

***

அன்புள்ள ஜெ

சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல சிவாகிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைதான் இந்த வரிசையிலேயே முக்கியமான ஒன்று. இந்தப் படைப்பாளியை இதுவரை கவனிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். உண்மையில் அந்தச்சிறுகதையின் முடிச்சு ஒன்றும் பெரிய விஷயமில்லை. அதை வைத்துக் கதையை வாசித்தால் கதை சரியாகப்பிடி கிடைக்காமலும் போகக்கூடும். அந்தக்கதை நெடுகவும் உள்ள மென்மையான பண்பாட்டுக் குறிப்புகள்தான் மேலும் முக்கியமானவை.

குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு அந்தப்புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள ஆர்வம் என்ன என்பது. அவர்களுக்கு அந்த நாட்டின் பண்பாடு அரசியல் கேளிக்கை ஒன்றுமே முக்கியம் கிடையாது. அவர்கள் பார்ப்பதெல்லாமே அந்தநாட்டிலே எப்படி மேலே தொற்றிக்கொண்டு செல்லலாம் என்று மட்டும்தான். அதைத்தான் செல்வேந்திரனிடமும் காண்கிறோம். அவர் படிப்பு சம்பந்தமான எல்லா தகவல்களையும் கையில் வைத்திருக்கிறார். இதை அமெரிக்க தமிழர்களிடமும் பார்க்கமுடியும்

முடி சாதாரணமான கதை. இந்தக்கதைக்கு பெல்ஜியப் பின்னணியும் விளம்பரம் பற்ற்யத் தகவல்களும் எதற்கு என்று புரியவில்லை. அப்படி மேலதிகமான தகவல்களைத்தந்து அதையெல்லாம் வாசகன் கவனிக்கவேண்டும் என்று ஆசிரியன் நினைத்தால் கதைக்குள் அதற்கான பின்புலத்தேவை இருக்கவேண்டும். இல்லை குறியீட்டுத்தேவை இருக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் எனக்கு இதுதான் தெரியும் என்பதனால் எழுதினேன் என்று சொன்னால் அது பெரிய தவறு. இந்தக்கதையை மைலாப்பூர் பின்னணியிலேயே எழுதியிருக்கமுடியும்

அனோஜன் பாலகிருஷ்ணனின் கதையும் அதேபோல தேவையில்லாமல் நிறைய தகவல்களைத் தந்துகொண்டே செல்கிறது. அந்தத்தகவல்களுக்கெல்லாம் கதைக்குள் என்ன தேவை என்பது எனக்குப்பிடி கிடைக்கவில்லை. அந்தப்பெண் சிங்களப்பெண் என்பதனால் அந்த உறவுக்கு கூடுதலாக என்ன கனம் கிடைக்கிறது? அந்தப்பூனை சிங்கம் என்று வாசிக்கவேண்டுமா?

ரகுநாதன் பாலகிருஷ்ணன்

பிகு கூக்ள் டைப் பண்ணினேன் பிழை திருத்தி வாசிக்கவும்

 

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

 

முந்தைய கட்டுரைசலபதியின் ஆங்கிலம்
அடுத்த கட்டுரைவறுமையில் இறந்தாரா சுஜாதா?