சிறுகதைகள் கடிதங்கள் -10

11
ரியாஸ்

 

ஜெ,

தில்லையம்மா தூயனுடைய ஆரம்பகாலச் சிறுகதை.
இப்போது தூயன் எழுதும் கதைகள் செறிவானவை என்பது எண்ணம். ஆனால் தில்லையம்மா கதைக்கு வரும் விமர்சனங்கள் அதை எழுதியவருக்கு தர்மசங்கடத்தை அளிக்கும் என்றே நினைக்கிறேன்.

அக்கதையைப் பற்றிய விமர்சனமாக மட்டும் அதைக் கொள்ளலாம் தான், ஆனால் ஆரம்பகாலத்தில் எழுதிய முதிர்ச்சியற்ற கதைக்கு இப்போது வரும் விமர்சனங்கள், அந்த கதையை எழுதியவரை பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுமோ என்று ஐயுறுகிறேன். நான் தூயன் மற்ற கதைகள் எதையும் படித்திராமல் உங்கள் தளத்தில் வெளியிடப்பட்ட தில்லையம்மாள் கதையின் வழியாகவோ அல்லது அதற்கு வந்த விமர்சனங்களின் வழியாகவோ அறிமுகமாயிருந்தால் தூயனின் மற்ற கதைகள் எதையும் படித்துப் பார்ப்பதைப் பற்றி யோசிக்க மாட்டேன்.

ஆனால் நான் தூயனின் மற்ற கதைகளை படித்திருப்பதால் தூயனின் எழுத்தைப் பற்றி ஒரு புரிதல் இருக்கிறது. அந்த ஒரு கதையை வைத்தே தூயனின் மற்ற கதைகளையும் எடை போடும் நிலைக்கு வந்துவிட வேண்டாம் என்பதே என்னுடைய எண்ணம்.

முகம்மது ரியாஸ்

***

அன்புள்ள ஜெ

சிறுகதைகள் குறித்த உங்களின் பார்வைகளை வாசித்துவருகிறேன். அக்கதைகளுக்கு நான் எழுதியவற்றோடு ஒப்பிடும்போது நான் ஓரளவேனும் சரியாக சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

நண்பர் மனோகர் தில்லையம்மா கதையைப் பற்றி குமுறியிருக்கிறார். உண்மையில் இன்று வாசகனுக்கு ஏற்படுகிற கோவம். எனக்குமட்டுமல்ல சுனில், கே.ஜே.அசோக்குமார் போன்றவர்களுக்கும் இங்கிருப்பது தொடக்கக்காலக் கதைகள் தான். இன்று அவர்களை தொடர்ந்து வாசிப்பவனாக என்னால் அதைச் சொல்ல முடியும். என்னுடை கதையும் தொடக்கத்தில் எழுதியதே .

மிகச்சாதாரணமானதுதான். கல்லூரியில் படிக்கும்போது டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிக்கெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறேன். கல்கியில் வந்திருக்கிறது. இலக்கியத்தில் தீவிர வாசிப்பில் இருந்தபோது தினமணியில் பிரசுரமானதும் நானே சற்று நெளியத்தான் செய்தேன்.

ஆனால் இங்கு அச்சுட்டியைக் கண்டதும் பேரதிர்ச்சி. இன்று நான் எழுதுவதும் அவதானிப்பதும் இது அல்ல. நண்பர் சுனில், அகில் குமார், காளி ப்ரசாத் போன்றவர்கள் குறிப்பிட்டிருப்பதில் காணலாம். இலக்கியத்திற்கும் எழுத்துக்காக மட்டுமே என் எண்ணங்கள். உங்கள் கடிதங்களிலே குறிப்பிட்டிருக்கிறேன்.

சமீபத்திய கதையொன்றை அனுப்பி விமர்சனம் கோரலாமென்கிற ஆவலில் இருந்தேன். அதற்குள் ‘முற்றும்’ போட்டுவிட்டீற்கள்.

பரவாயில்லை மனோகர்* போன்றவர்களுக்கு ‘இதுபோன்று எழுதக்கூடாது’ என்கிற அளவுகோலுக்கு இருக்கட்டும்.

அன்புடன்
தூயன்

***

அன்புள்ள ரியாஸ் மற்றும் தூயன்

தூயன் அவரே அக்கதையின் சுட்டியை எனக்கு அனுப்பியிருந்தமையால்தான் பிரசுரமாகியது. நான் என் மின்னஞ்சலுக்கு வந்த கதைகளை மட்டுமே அளித்திருந்தேன்

அந்தக்கடிதமும் அதற்கு முன்னால் அத்தனை கதைகளையும் அமெச்சூர் கதை என்று சொல்லி வந்த கடிதமும் என்னைப்பொறுத்தவரை உசிதமானவை அல்ல. ஆனால் அவற்றை பிரசுரம் செய்தமைக்கு ஒருகாரணம் உண்டு. வாசகன் என்றால் யார் என்பதை காட்ட.

வாசகன் என நாம் சொல்வது ஒரு பெரிய கூட்டுநனவிலி. கட்டற்றது. பலவகையான உணர்வுகள் கலந்தது. ஆர்வம் அகந்தை தாழ்வுணர்ச்சி என . கிண்டல் வியப்பு ரசிப்பு நெகிழ்ச்சி என அது வெளிப்படும் விதங்களும் பலவகையானவை. ஒர் எழுத்தாளன் இந்த விராடவடிவை எதிர்கொள்ளவேண்டும். தான் எதிர்கொள்பவர்களைப்பற்றி அவனுக்கு ஒரு புரிதல் ஏற்படுவது மிக முக்கியமானது.

எதிர்பாராத உவகைகள் நெகிழ்வுகள் அதில் உண்டு. கசப்பும் வருத்தமும் அளிக்கும் தருணங்களும். நான் எனக்கு நேர்ந்த பல விஷயங்களை இவ்விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். அசோகமித்திரன் அளித்த அறிவுரையையும்

என் கதைகளில் 8 கதைகள் இன்று எவருக்கும் வாசிக்கக்கிடைக்காது. பழைய தீபம் இதழில் எழுதியவை. அவற்றில் ஒன்று [தஸ்தயேவ்ஸ்கியின் முகம்]எவராலோ கண்டெடுத்து வெளியிடப்பட்டது. வெளிவந்தபோது மூத்த எழுத்தாளர்களால் நிராகரிக்கப்பட்டவை. நானும் அவை சரியாக வரவில்லை என எண்ணி தவிர்த்துவிட்டேன்.

ஏனென்றால் அத்தகைய ஒரு கதையைக்கொண்டு நம் படைப்பித்திறனை குறைத்துமதிப்பிட வாய்ப்பிருந்தது. இனிமேல் அப்படி இல்லை. என் முக்கியமான ஆக்கங்கள் எவை என எல்லாருக்கும் தெரியும். இன்று அவை ஆய்வுப்பொருளாக மட்டுமே கருதப்படும்

இதுவும் எழுத்துப்பயிற்சியின் ஒருபகுதி. எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்

ஜெ

***

சார்

வணக்கம்.

இலக்கியம் படைக்கப்படுவது அக சீண்டலுக்கான வடிகால் என்று கூறிக் கொண்டாலும் அது படிக்கப்படுவதிலும் விமர்சிக்கப்படுவதிலும் தனது இன்பானுபவத்தை நீட்டித்துக் கொள்கிறது. தனது படைப்பை குறித்த விமர்சனம் எதுவாகினும் அதன் மீதான கவனத்தை கூர்த்தீட்டியே படைப்பு மனம் வைத்திருக்கிறது. காலச்சூழல் அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருக்கும் நிலையில் இத்தனை எளிமையாக பல படிகள் கீழிறங்கி படித்து.. விமர்சிப்பது என்பது தமிழ்சூழலுக்கும் படைப்பாளிகளுக்கும் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. சொல்லும் கருத்துகள் இனிப்பு கலவாது இருப்பதென்பது தங்களின் பாணி. மற்றபடி தங்கள் விமர்சனத்தின் மீது விமர்சனம் வைக்க இயலாது என்பதில் so called எதிரிகளுக்கும் மாற்று கருத்து இருக்க இயலாது என்றே கருதுகிறேன். நுண்ணுணர்வான கலை மனம் வாய்க்க பெறுவதே ஒரு வரம்தான். வாய்த்ததை பகிர்வதும் ஒரு மேன் நிலைதான். மாற்றமேதுமில்லை.

அன்புடன்

கலைச்செல்வி.

*

அன்புள்ள கலைச்செல்வி,

இங்கே நான் முன்வைக்க விரும்புவது ஒரு விவாதத்தை மட்டுமே,விவாதத்தின் எல்லா சாத்தியங்களும் நிகழட்டும் என்பதே என் எண்ணம்

ஜெ

 

 

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33
அடுத்த கட்டுரைதொழிற்சங்கம் தேவையா-கடிதங்கள்