வறுமையில் இறந்தாரா சுஜாதா?

untitled

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெமோ

ஒருசின்ன சந்தேகம், நீங்கள் எந்திரன்2 படத்தில் பணியாற்றியதை அறிந்ததனால் இதை எழுதுகிறேன். எந்திரன் 1 உட்பட நிறையபடங்களில் பணியாற்றிய சுஜாதா போதிய பணம் இல்லாமல் வறுமையில் இருந்ததாக இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

சுஜாதாவின் மனைவி அளித்த பேட்டிகளில் இறுதித்தருவாயில் நான் உனக்கு ஒன்றுமே சேர்த்துவைக்காமல் போகிறேன்என்று வருந்தியதாகவும் அவரது இறுதிக்கால மருத்துவச்செலவுக்குக்கூட கமல்ஹாசனும் மணிரத்தினமும்தான் சிறிய தொகை கொடுத்து உதவினார்கள் என்றும் சொல்கிறார்.

உங்கள் அனுபவம் என்ன? உங்களுக்கு அங்கே போதிய பணம் அளிக்கப்படுகிறதா?

சுந்தர்

 

அன்புள்ள சுந்தர்

முதலில், சுஜாதா வறுமையில் வாடினாரா என்பது பற்றி. இப்படி எழுதுபவர்களில் கணிசமானவர்கள் வெறும் கணிநிரல் எழுத்தர்கள். அவர்கள் ஒரு பகற்கனவில் ஆசைப்படக்கூடிய உச்சகட்ட பதவி ஒன்றில் இருந்தவர் சுஜாதா. இந்திய மின்னணு நிறுவனம் [BEL]-ல் இயக்குநர் அளவில் பதவி வகித்தவர். ஓர் இந்தியர் அரசுசார் துறையில் அடையக்கூடிய உச்சகட்ட பதவி, உச்சகட்ட ஊதியம். அந்தப்பதவியிலேயே வறுமைதான் என்றால் பிரணாப் முகர்ஜியின் பதவிதான் வறுமைக்கு அப்பாற்பட்டது.

அப்பதவியில் இருந்தபடியே சுஜாதா வாரம் ஒன்றுக்கு ஏழு தொடர்கதைகள் எழுதினார், மனைவி பேரில். தனக்கு வார இதழ்கள் பெரும் பணம் தந்திருக்கிறார்கள் என அவர் குறைந்தது பத்து இடங்களிலாவது எழுத்தில் சொல்லியிருக்கிறார்

அவரது ஆரம்பகட்டத்திலேயே அவர் கதைகள் சினிமாவாக ஆரம்பித்துவிட்டன. இது எப்படி இருக்கு, ப்ரியா எல்லாமே உரிய பணம் கொடுத்து வாங்கப்பட்ட கதைகள். கொடுக்கப்பட்ட பணம் என்ன என்று சுஜாதாவே சொல்லியிருக்கிறார். அன்று ஒரு நல்ல கார் வாங்கும் அளவுக்குப் பணம். அதன்பின் சினிமாவுக்கு வந்தார். தமிழ் சினிமாவில் மிக அதிகமாகப் பணம் வாங்கிய வசனகர்த்தா அவர்தான். ஏனென்றால் அவர் எழுதியவை பெரும்பாலும் நட்சத்திரப்படங்கள்.

அவர் எழுதிய எந்தப்படத்திலும் அவருடைய தனித்திறன் வெளிப்பட இடமிருக்கவில்லை. அவை இயக்குநர்படங்கள் என்பது ஓர் உண்மை. ஆனால் அவருடைய பெயர் அவற்றின் வணிகமதிப்புக்கு உதவியது என்பது முக்கியமானது. ஆகவே அவருக்குப் பணம் அளிக்காமலிருக்க முடியாது

கண்டிப்பாக ரஜினிகாந்தோ கமலஹாசனோ வாங்கும் பணம் அல்ல அது. ஆனால் அது குறைவான பணமும் அல்ல. இப்படிச்சொல்கிறேன். அவர் உயரதிகாரியாக ஒருவருடம் முழுக்க ஈட்டிய ஊதியத்தைவிட அதிகமாக ஒரு படத்திற்கு வாங்கிக்கொண்டிருந்தார். வருடம் மூன்று படம் செய்தார், கடைசிநாள்வரை. அவருக்கு என்ன அளிக்கப்பட்டது என்று எனக்குத்தெரியும். சொல்லப்போனால் நான் என்ன வாங்கவேண்டுமென்று அவர் எனக்கு அறிவுரையும் சொன்னார்.

சுஜாதா பணத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல. நின்றுபோன படங்களுக்கான ஊதியத்தைக்கூட அவர் பலமுறை கேட்டு வாங்கிக்கொண்டது எனக்குத்தெரியும். என்னிடம் அப்படித்தான் செய்யவேண்டும் என சொன்னார். நான் அப்படி எவரிடமும் கேட்பதில்லை. ஆனால் இன்றுவரை சினிமாவில் எனக்கு வராதபணம் என ஏதுமில்லை. வரவேண்டிய பணத்தை நான் நினைவுகொள்வதே இல்லை. படநிறுவனமே என்னைக்கூப்பிட்டு பணம் கொடுப்பதே வழக்கம்.

எனக்கும் சினிமாவில் நான் நிறைவடையும் அளவுக்கு ஊதியம் இருக்கிறது. கண்டிப்பாக அது நட்சத்திரங்கள் பெறும் பணம் அல்ல. ஆனால் அது ஏதேனும் துறையில் மாதச்சம்பளம் வாங்குபவர்கள் சற்று பொறாமைகொள்ளும் ஊதியம்தான். அத்தனையும் வெள்ளைப்பணம்தான். வருடம்தோறும் டிடிஎஸ் கட்டி மீட்டுக்கொள்கிறேன்.

சுஜாதா ஓய்வுக்குப்பின் மூன்று நிறுவனங்களில் உச்சகட்ட பதவி வகித்தார். குமுதத்தில். பின்னர் மின்னம்பலம் இணைய நிறுவனத்தில். பின்னர் ஒரு திரைநிறுவனத்தில். மூன்றிலுமே பெரும் சம்பளம் வாங்கினார். கூடவே சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டிருந்தார்.

சுஜாதாவின் மருத்துவச்செலவுக்கு உதவ மணி ரத்னமும் கமலஹாசனும் முன்வந்திருக்கலாம். ஏனென்றால் இன்றுகூட அவர்கள் அவரைப்பற்றி மிக நெகிழ்ச்சியுடன் மதிப்புடன் நினைவுகூர்கிறார்கள். அவரைப்பற்றி பேசாமல் ஓர் உரையாடல் இதுவரை நிகழ்ந்ததில்லை. அவர் அவர்களுக்கு தொழில்கூட்டாளி மட்டும் அல்ல. குடும்ப நண்பர், அந்தரங்கமான விஷயங்களில்கூட வழிகாட்டி. குறிப்பாக கமல் சுஜாதாமேல் கொண்டிருக்கும் நட்பும் மதிப்பும் நம் சூழலில் மிக அபூர்வமானவை.

சுஜாதா எதையும் கோட்டைவிட்டவர் அல்ல. நன்றாக பணம் ஈட்டினார். முறையாக வருமானவரி கட்டியாகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதை மற்றவர்களுக்கும் வலியுறுத்தினார். அவருக்கிருந்த உடல்நிலைக்குறைவு அவரது தோரணையைச் சற்று குறைக்கும் என்பதனால் அதைப்பற்றிய பேச்சையே தவிர்த்தவர் அவர். ஒரு சம்பிரதாயமான நலம் விசாரிப்பையே விரும்பாதவராக இருந்தார்.

சுஜாதா எங்கும், எவர்முன்னாலும் ஒருபடியேனும் கீழிறங்கியவர் அல்ல. மரியாதையை எங்கும் எதிர்பார்க்கும் பழைய பாணி மனிதர் அவர். அது அவருக்கு எங்கும் கிடைத்தது. நானே ஒரு மூத்த மாமாவிடம் கொள்ளும் விலக்கம் , மரியாதையுடன் மட்டுமே அவரிடம் பேசுவது வழக்கம். அதாவது அவர் பேசுவார், நான் கேட்டுக்கொண்டிருப்பேன்

சினிமாவில் வழக்கமாக உள்ள எதன்வழியாகவும் அவர் தன்மதிப்பை குறைத்துக்கொள்ளவில்லை. நான் சுஜாதாவிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான அம்சம் இது. அவர் வாழ்ந்த வரை திரையுலகிலும் ஒரு பிதாமகனுக்கான இடம் அவருக்கிருந்தது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் பெருமதிப்புடன் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

சுஜாதாவின் இரு மகன்களும் மிகவசதியான பதவிகளில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு அவர் வறுமையில் இறந்தார், மனைவி நிராதரவாக இருக்கிறார்கள் என்றால் அவரது மகன்களிடம்தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம் வரும். அந்த அம்மாள் ஒன்றும் புரியாமல் பேசுகிறார்கள். அவர்களை எனக்கு ஓரளவு தெரியும். அவர்களால் அவர்களின் சொற்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என ஊகிக்கமுடியல்லை

அவர்களை பேசவிட்டு அந்தச் சொற்களைக்கொண்டு சுஜாதாவின் ஆளுமையை கீழிறக்க ஊடகவியலாளர் முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. சுஜாதா எதையாவது மனமார வெறுத்தார் என்றால் அவரை பரிவுடன் பிறர் பார்ப்பதைத்தான். அது அந்தக்கால மனிதர்களின் இயல்பு. மதிப்புடன் மட்டுமே பார்க்கப்பட விரும்பியவர்கள் அவர்கள்.

அந்த மதிப்பை நாம் அவருக்கு அளிக்கவேண்டும். அவரை விமர்சிக்கலாம், அவர் அதைப் புரிந்துகொண்டவர்தான். கிண்டல் செய்யலாம், அவருக்கு அது உண்மையில் மிகவும் பிடிக்கும். அனுதாபப் படவேண்டாம். அவரது புகழிருப்புக்கு அது இழிவு.

ஜெ

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் -11
அடுத்த கட்டுரைஊடகமாயை -2