ஆ.மாதவனின் தெருமனிதர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். மிகக்குறைவாக வணிகர்கள். அதைவிடக்குறைவாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள். இந்த மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பதன் வழியாக அவர் உத்தேசிப்பதென்ன? ஒரு நல்ல கலைஞன் ஒருபோதும் ஒரு பகுதி வாழ்க்கையை ஒரு துண்டு வாழ்க்கையைச் சொல்ல முற்பட மாட்டான். அவன் சொல்ல விழைவது வாழ்க்கையை. அதற்கான முகாந்திரமாக, அதற்கான உதாரணமாகவே அவன் அந்த வெட்டிஎடுக்கப்பட்ட வாழ்க்கையை கையாள்கிறான்.
கடைத்தெருவைச் சித்தரிப்பதல்ல ஆ.மாதவனின் இலக்கு. கடைத்தெரு மேல் அவருக்கு எந்தவகையான சமூகவியல் சார்ந்த ஆர்வமும் இல்லை என்பதை வாசகன் காணமுடியும். அவரது இலக்கு என்பது வாழ்க்கையை அறிவதே. சொல்வதன் மூலம் அறிவதே இலக்கியத்தின் கலை. ஆகவே இந்த தெருவில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு தடமும் வாழ்க்கையின் சாராம்சமான ஒன்றை தேடிச்செல்லும் நோக்குடன் மட்டுமே இலக்கியமாற்றம் அடைந்து பதிவாகிறதென்றே கொள்ளவேண்டும்.
ஆ.மாதவனை இயல்புவாத அழகியல் கொண்டவர் என்றேன். இயல்புவாதம் வாழ்க்கையை சுருக்கிப்பார்க்கிறது. முடிந்தவரை இறுக்கி அழுத்தி என்ன மிச்சமென்று பார்க்கிறது. உலகமெங்கும் அதன் விடை என்பது மனிதர்கள் காமகுரோதமோகங்களால் மட்டுமே ஆனவர்கள் என்பதே. மனிதன் என்ற விலங்கு தன் சமூகபாவனைகளுக்கு அடியில் அடிபப்டை விலங்கிச்சைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதே. ஆ.மாதவனுன் அதையே தன் ஆக்கங்கள் வழியாகச் சொல்கிறார். அவரது கதைகள் அனேகமாக அனைத்துமே காமத்தாலும் வன்முறையாலும் பசியாலும் ஏமாற்றுவித்தைகளாலும் தீர்மானிக்கப்படும் வாழ்க்கைத்தருணங்களாக உள்ளன.
அந்த நோக்கத்துக்காக அவர் தெருவைப்பார்க்கும்போது அதற்கு வணிகர்கள் உதவுவதில்லை என்பதை எளிதில் கண்டிருப்பார். கொள்கைப்படி அந்த வணிகவாழ்க்கையும் அடிப்படை மானுட உந்துதல்கள் மட்டும் கொண்ட ஒன்றேயாகும். ஆனாலும் அடித்தள மக்களின் வாழ்க்கை என்பது நேரடியாகவே அந்த அடிபப்டை சக்திகள் வெளிப்படும் தன்மை கொண்டது. ஆகவேதான் சாலைத்தெரு அடித்தளமக்களை மட்டுமே கொண்டதாக அவரது புனைவுலகில் வருகிறது.
சாலைத்தெருவின் மனிதர்களைப்பார்க்கையில் பல நுட்பமான விஷயங்கள் நமக்கு தெரியவருகின்றன. அங்கே மனிதர்களுக்கு பலசமயம் அடைமொழிகள் இருக்கின்றன. உதாரணம், ஜாளி மணியன், ஊச்சாளி வாசு கண்டன்வாசு, தலைக்கட்டு வேலப்பன். பலசமயம் பெயர்களே அடைமொழிகளாக இருக்கின்றன. உதாரணம், சாளைப் பட்டாணி. எனேன்றால் இங்கே மனிதர்கள் அவர்களின் சமூக அடையாளங்களால் நினைவுகொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு பாரம்பரியமோ இட அடையாளமோ இல்லை. அவர்களின் மாறாத அடையாளம் என்பது அவர்களின் குணச்சித்திரமே. அவர்கள் அந்தக்குணச்சித்திரத்தாலேயே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்!
பல்வேறு வாழ்க்கைப்புள்ளிகளீல் இருந்து ஊறி வந்து அந்த பள்ளத்தில் தேங்கிக்கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள். அவர்களின் பிறப்பிடம் அவர்களுடைய குணச்சித்திரங்களை தீர்மானிக்கிறது. ஆனால் சாலைத்தெரு அவர்களை மெல்லமெல்ல உருமாற்றுகிறது. அவர்கள் அனைவருக்குமே ஒரு பொதுவான இயல்பு ருவாகிறது. அந்த உருமாற்றத்தை பல்வேறு கதைகள் வழியாக அழுத்தமாகச் சித்தரிக்கிறார் ஆ.மாதவன்.
மிகச்சிறந்த உதாரணம் என்றால் விசுவரூபம் கதைதான். ஏக்கியம்மா அவளுடைய பூர்வீகத்தில் இருந்து அடக்கத்தையும் தணிந்தபோக்கையும் கொண்டு வந்திருகிறாள். கணவனால் கைவிடப்பட்டபின் இரவுபகலாக மளிகை மொத்தக்கடையில் பலசரக்குகளை புடைத்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை. ஆனால் ஒரு சந்தர்ப்பம் வருகிறது, எவனோ ஒருவன் அவள்மேல் சைக்கிளில் தட்டிவிட்டு போய்விட்டான். அவள் கொஞ்சம் பணம் தேற்றிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். அவளுடைய ஆளுமையே சட்டென்று இன்னொன்றாக வெளிப்படுகிறது.
டேய் பொடிப்பயலே சைக்கிளை மேலே ஏத்திஎன்னையும் என் பிள்ளையையும் கொல்லவாடா பாத்தே சிறுக்கிப்பய மவனே. நில்லுடா அப்டி…என் பிள்ளைக்கும் எனக்கும் பதில் சொல்லிட்டு உன் ஓட்டை சைக்கிளை கொண்டுட்டு போனாபோரும்’ என அவள் குரல் எழும்போது அவள் இன்னொன்றாக வெளிப்படுகிறாள். அந்த விஸ்வரூபம் ஒருசேரிப்பெண்ணுக்குரியது. சாலைத்தெருவுக்கு வந்துசேரும் எல்லாருமே அவ்வாறு சட்டென்று விஸ்வரூபம் கொள்கிறார்கள்.
இந்தம்மக்களைக் கவனிக்கையில் இவர்கள் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள் என்ற எண்ணம் எழுகிறது. நேற்று இல்லாத நாளை இல்லாத மக்கள். ஆகவே இன்று என்பது சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒரு கொண்டாட்டம்தான். ஜாளி மணியன் என்ற பெயரே அந்த சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. சாளைப்பட்டாணியின் வாழ்க்கை என்பதே எத்திச்சேர்க்கும் பணத்தை தின்றும் குடித்தும் போகித்தும் கொண்டாடித்தீர்ப்பதுதான்.
கதைகள் முழுக்க சாலைத்தெரு மக்கள் ஒருவரை ஒருவர் கிண்டல்செய்துகொண்டே இருக்கிறார்கள். சிரிக்கிறார்கள். ‘அப்புக்குட்டா நீ பலே ஆளுதான். டேய் உன் வலையிலே விழாதவங்க ஆரு இருக்கா. உம் நடத்திக்கோ’ என்று ஒலிக்கும் குரலில் இருப்பது ஒருவரை ஒருவர் ஆழமாக அடையாளம் கண்டுகொள்ளும் சாலைத்தெருவின் இரு மைந்தர்களின் மனம்தான்.
ஆனால் இன்னொருபக்கம் சாலைத்தெரு மக்கள் அத்தனைபேரும் தன்னந்தனிமையில் இருக்கிறார்கள். சாலையில் அலையும் தெருநாய்களுக்குரிய தனிமை அது. உறவுகள் உண்டு, ஆனால் ஆன்மா தனித்திருக்கிறது. அது தன்னைப்பகிர்வதற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. பிணைப்பறாத துணைக்காக தேடிக்கொண்டிருக்கிறது. அந்த தனிமையால்தான் சாலைத்தெரு மக்கள் மிருகங்களை நோக்கிச் செல்கிறார்கள். பாச்சி என்ற தெருநாயிடம் நாணு மேஸ்திரி கொள்ளும் உறவு ஆழமான ஆன்மபந்தம். அதை அவரன்றி எவரும் உணரமுடிவதில்லை. அந்த துயரை பகிர்ந்துகொள்ளக்கூட அவருக்கு சாலைத்தெருவில் துணையில்லை.
சாலைத்தெருவில் பாலுறவுக்கு பஞ்சமே இல்லை. பசியைப்போலவே காமமும் எரிந்துகொண்டே இருக்கிறது. பசித்த விபச்சாரிகள் உலவும் தெரு. ஆனால் ஜாளி மணியனுக்கு உண்மையான ‘பெண் துணையாக’ அமைவது கோமதி என்ற மலட்டு தெருப்பசுதான். கோமதிக்கும் மணியனுக்குமான உறவின் தீவிரம், அவனுடைய உணர்ச்சிகளின் சூடு சாலைத்தெருவில் வைத்து மட்டுமே புரிந்துகொள்ளத்தக்கது.
ஏமாற்றுவதென்பது பிழைப்பின் ஒருபகுதியாகவே உள்ளது. ஒருவகை வனநியாயம். சிறிதை பெரியது உண்கிறது. பெரியதை அதைவிடப்பெரியது. வாழ்வதொன்றே அனைத்தையும் நியாயப்படுத்தும் காரணமாக ஆகிறது. தன்னை நம்பி கைக்காசை ஒப்படைக்கும் வேசியிடமிருந்து அதை அபகரித்துக்கொண்டு செல்லும் அப்புக்குட்டன் சொந்த வார்த்தைகளில் அந்த நியாயத்தை சொல்லிக்கொள்கிறான். ஒருவன் இன்னொருவனிடமிருந்துதானே பணத்தை பறிக்கிறான், அவனிடமிருந்து நான் பறித்துக்கொள்வதில் என்ன தவறு?[பறிமுதல்]
சாலைத்தெருவின் தர்க்கங்கள் சாலைக்குள் வைத்து மட்டுமே புரிந்துகொள்ளத்தக்கவை. மறவனால் கற்பழிக்கப்பட்டு தற்கொலைசெய்துகொண்ட மனைவியைப்பற்றி நினைக்கும் வீரய்யன் அவளுடைய சாவால் தனக்கு வந்த அவப்பெயர் பற்றியே நினைக்கிறான். இதற்கெல்லாம் சாவாளா ஒருத்தி? எனக்கென்ன கைகால் பலம் இல்லையா, கற்பழித்தவனை ஒருகை பார்த்திருக்க மாட்டேனா? போலீஸைப்பொறுத்தவரை எல்லா சேரிப்பெண்களும் தேவடியாள்கள்தான். மானத்துக்காக செத்தவள் உட்பட. பின்னெதற்குச் சாகவேண்டும்? [பதினாலுமுறி]
சாலையில் தார்பிப்பாயில் விழுந்து செத்த பிள்ளைக்கு கிடைக்கும் நஷ்ட ஈட்டுப்பணத்தை உரிமைகொண்டாடும் அம்மா ஓர் எல்லை என்றால் என்ன கிடைத்தாலும் தவறான ஒரு விஷயத்துக்கு துணைநிற்க முடியாதென்று பிடிவாதம் கொள்ளும் வாட்ச்மேன் முஸ்தபா இன்னொரு எல்லை. இரண்டுக்கும் நடுவே கிடக்கின்றது கடைத்தெருவின் உலகம். இங்கே வல்லமை மிக்க ஒன்று வீழும்போது அதை கொத்திக்கொத்தி தின்கின்றன சிறியவை. சாளைப்பட்டாணியின் சாவு கடைத்தெருவில் ஒரு குதிரை அடிபட்டு விழுந்து சாகக்கிடக்கும் அதே சித்திரத்தையே அளிக்கிறது. காக்கை கொத்தி நாய் கடித்திழுத்து மெல்லமெல்ல அழுகிச்சாகும் மரணம்.
அங்கும் உறவுகளின் வலி உள்ளது. பசி பசி என்று இரவுபகலாக தன்னை படுத்தும் தாய்க்கு விஷத்தைக் கொடுக்கும் மாடசாமியை நாம் ஒருவேளை தெருவுக்கு வெளியே காணாமுடியாது. பூச்சிமருந்து பாச்சா மருந்து விற்ற சொற்பணத்தில் தன் வயிற்றுக்கே சோறில்லாதபோது அவனுக்கு வேறுவழியில்லைதான். ஆனால் அவனால் சாதாரணமாக தூங்க முடிவதில்லை. சிலநாள் அவன் இரவில் கண்விழித்து அழக்கூடும். பின்னர் மறந்து அந்த மகாமயானத்தின் கொந்தளிப்புகளுக்குள் மூழ்கிவிடக்கூடும்.ஆனால் அவனால் அந்தச்சிலநாள் தூங்கமுடிவதில்லை என்பதே அவன் மனிதன் என்பதற்கான சான்று
ஒன்றுடன் ஒன்று முண்டியடித்து சுருண்டுகொண்டிருக்கும் புழுக்களின் ஒரு கொத்தை குனிந்து பார்ப்பதுபோன்ற உணர்வை எழுப்புகின்றது ஆ.மாதவனின் கதையுலகம். சாலைத்தெரு புழுக்கள் அடைந்த ஒரு சதைபோலிருக்கிறது. தெருவைத்தான் அந்தபுழுக்கள் உண்டுகொண்டிருக்கின்றன. அத்துடன் ஒன்றையொன்றும் உண்ணுகின்றன. இருத்தல் என்பதைத்தவிர எந்த நோக்கமும் இல்லா உயிர்கள். இருத்தல் என்பதே நெளிதலாக ஆன உயிர்கள்.
அந்தப்புழுக்கூட்டத்தை நாமாகவும் உணரச்செய்கிறார் என்பதனால்தான் ஆ.மாதவன் கலைஞராகிறார். ஏதோ ஒருபுள்ளியில் அந்த புழுக்கூட்டம் இந்த பூமிப்பந்தாகவே தோன்ற ஆரம்பிக்கிறதென்பதே அவரது மையத்தரிசனத்தை நமக்குக் காட்டுகிறது.