சிறுகதைகள் என் மதிப்பீடு -3

Madhavan_Elango
சிறுகதைகளைப்பற்றி நான் சொன்ன கருத்துக்கள் சார்ந்து எதிர்வினைகள் என ஏதும் வரவில்லை. ஆசிரியர்கள் இதை கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

மாதவன் இளங்கோவின் முடி சிறுகதை சிறுகதைக்குரிய வரையறுக்கப்பட்ட வடிவத்தை இயல்பாக சென்றடைந்திருக்கிறது. ஒன்று குவிமையம். முடி என்பதில் தொடங்கும் கதை இறுதிச் சொல் வரை திசை மாறாமல் நேராக வளர்ந்து செல்கிறது. இரண்டாவதாகக் கதை சொல்லியின் விவரணைகள் சூழலையோ கதாபாத்திரங்களையோ அறிமுகம் செய்யும் போது சொல்லிச் செல்லல் நினைவோட்டல் என்ற முறையில் அலைபாயவில்லை. மூன்றாவதாக கதை இறுதி வரியில் திரும்பி வலுவான ஒரு முடிச்சை உருவாக்குகிறது. அவ்வகையில் வாசிக்கத்தக்க சுவாரசியமான ஒரு கதை இது.

ஒரு மனிதனின் இயல்புக்கும் அவனுடைய தனி வாழ்க்கைக்குமான தொடர்பு அதில் உள்ள முரண்பாடு சிறுகதைக்கு என்றும் ஒரு முக்கியமான கதைக்கருவே. உதாரணமாக வண்ணதாசனின் கதை ஒன்றில் அலுவலகத்துக்கு வந்தவுடனேயே கழிப்பறையையும் தன் மேஜையையும் தூய்மை செய்யக்கூடிய ஒருவர், ஒழுங்கையும் கச்சிதத்தன்மையையும் ஒரு வெறியுடன் கடைப்பிடிக்கும் ஒருவர் ,அவருடைய இல்லத்தில் அதற்கு எந்தவகையிலும் சாத்தியமில்லாத ஒரு வாழ்க்கை வாழ நேர்கிறதென்பதை காட்டியிருப்பார்.

இத்தகைய சித்தரிப்பினூடாக வாசகன் வாழ்க்கை நிகழும் விதிகளில் ஒன்றை சென்று தொடமுடிகிறது. அதில் அவன் தன் சொந்த அனுபவத்தை பொருத்திக் கொள்கிறான். வாசித்த கதைச் சூழலில் விடுபட்ட விஷயங்களை நிறைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஓயாது தன் கீழ் ஊழியர்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுத்து அவர்களை முடி உதிர வைக்கும் மேலதிகாரி இல்லத்தில் புற்றுநோய் கொண்ட மனைவியை வைத்திருக்கிறார். பேரன்புடன் அவளுக்கு பணிவிடை புரிகிறார். அவள் முற்றிலும் முடியை இழந்துவிட்டிருக்கிறாள் என்பது மேலோட்டமாக நோக்கினால் ஒரு முடிச்சு மட்டுமே. ஆனால் துயரடைந்த ஒருவர் பிறருக்கு ஏன் துயரை அளிக்கிறார்? பேரன்பு கொண்ட ஒருவர் ஏன் அதை குடும்பத்திற்கு வெளியே அளிக்க முடியவில்லை? ஒருபுள்ளியில் மிகக்கனிந்து உச்சத்திற்கு செல்பவர் இன்னொரு புள்ளியில் ஏன் இறுக்கம் கொள்கிறார்? — என்பது போன்ற வாழ்க்கை சார்ந்த பல கேள்விகளை இக்கதை சார்ந்து எழுப்பிக் கொள்ள முடிகிறது.

இது நாம் அன்றாட வாழ்க்கையில் பார்ப்பது தான். இந்தியாவின் பெரும்பாலான அலுவலகங்களில் நடுவயது கடந்த பெண்கள் அதிகாரிகளாகவோ ஊழியர்களாகவோ இருந்தார்கள் என்றால் மிகக்கடுமையானவர்களாகவும் குரூரமானவர்களாகவும் இருப்பதைப்பார்க்கிறேன். எந்நிலையிலும் ஒரு சிறு கனிவைக்கூட அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பொதுவெளியில் இத்தகைய முகத்தைக் காட்டும் பெண்கள் இல்லத்தில் மிகக்கனிந்த அன்னையராக இருப்பார்கள். இதற்கு நேர்மாறாக பொறுமையும் கனிவும் குறைந்த பொதுவெளி முகங்கொண்ட ஆண்கள் இல்லத்தில் மிகக்குரூரமானவர்களாகவும் கறாரான தந்தையராகவும் இருக்கிறார்கள்.

மனிதர்கள் வெவ்வேறு வேடங்கள் வழியாக வாழ்க்கைக் களங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் இவை அவர்களுடைய இயல்புகளே அல்ல அவர்களின் நடிப்புகள் மட்டுமே ஒரு பூட்டுக்குள் நுழையும்போது தன்னை உருமாற்றிக் கொள்ளும் ஈயச்சாவி போன்றது மனித இயல்பு .இல்லத்தில் கனிவையும் பெருந்தன்மை கொண்ட தந்தையாக இருக்கும் அந்த அதிகாரி அலுவலகத்தில் வேலை வெறி பிடித்த குரூரமானவராக இருக்கும் போது தராசின் இன்னொரு தட்டு நிகர் செய்யப்படுகிறது. அது அவருக்கு தேவையாக இருக்கிறது.

ஒருவகையில் சாதாரணமானவர்கள் எதிரில் சென்று தொட்டு அடையாளப்படுத்தப்படும் ஒரு கதைக்கருவை எடுத்து பிசகின்றி அதை சொன்னதிலும் மாதவன் இளங்கோ வெற்றி பெறுகிறார்.

இக்கதையின் குறைபாடுகள் என்ன? முதன்மையாக இதன் நடை இலக்கிய வாசகனுக்கு மிக ஒவ்வாமையை அளிப்பது .மாதவன் இளங்கோவின் வாசிப்பு பெரும்பகுதி விகடன், குமுதம் வகைக் கதைகளைச் சார்ந்தது என்றும் ஆழமான இலக்கிய எழுத்தின் பாதிப்பு அவருக்கு இல்லையென்றும் இந்த நடை காட்டுகிறது. ஒரு இலக்கிய படைப்பில் இன்று ”அது மட்டுமா?” ”சொன்னால் நம்ப மாட்டீர்கள்” போன்ற வார்த்தைகளோ ”எவரையும் விட்டு வைப்பதில்லை இந்த மனிதர்” போன்ற ஒற்றை வரிகளோ ”இவையெல்லாம் எதற்குச் சொல்கிறேன்” என்றால் என்பது போன்ற தொடக்கங்களோ பயின்று வருவதில்லை. அதை ஒரு பழமையான மொழி நடையின் பகுதிகள் என்று கருதப்படுகின்றன. சொல்லப்போனால் வார இதழ்களில் அடித்து தேய்த்து காயப்போட்ட ஒரு வகையான மொழி நடை அது.

’இன்னும் சில நாட்களில் மொத்தமாக கொட்டி தீர்ந்துவிடும்’ என்னும் ஒற்றை வரியால் ஒரு கதையை தொடங்குவது கூட தேய்வழக்கே. ஒரு சிறுகதையின் முதல் வரி ஒரு தேய்வழக்காக அமைவது மிக சோர்வூட்டக்கூடியது. இந்தக் கதையை தன்னிச்சையாக நான் சென்றடைந்திருந்தால் இந்த ஒரு வரிக்கு அப்பால் உறுதியாக மேற்கொண்டு படிக்க மாட்டேன். முதல் வரி என்பது அந்த மொத்த கதையின் உணர்வு நிலையையும் பார்வையையும் ஏதோ ஒரு வகையில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

தமிழ் சிறுகதையின் அழகிய முதல் வரிகள் பல ஒரு வாசகன் நினைவில் நின்றிருக்கும். சுந்தர ராமசாமியின் பிரசாதம் ‘எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான்’ என்று ஆரம்பிக்கும். ஒரு எண்ணாக சுருங்கிவிட்ட காவலர் ஒருவரின் வாழ்க்கையை பற்றிய ஒரு பார்வை அதில் உள்ளது. கூடவே அந்தக் கதை முழுக்க ஓடும் இனிய பிரியமான பகடியின் ஒலியும் அதில் உள்ளது. சரியான முதல்வரிக்காக சிறுகதை ஆசிரியன் காத்திருக்கத்தான் வேண்டும். அந்த வரி அமையுமென்றால் கதையின் ஒட்டுமொத்த மொழிநடையையும் அது தீர்மானித்துவிடும்.

அல்லது அசோகமித்திரனின் பல கதைகளில் மிக எளிய இயல்பான ஒரு ஆரம்பம் இருக்கும். நான் பெரிதாக ஒன்றும் சொல்லவரவில்லை என்னும் திட்டமிட்ட பாவனை அது. கதை அந்தப்பாவனைக்கு அப்பால் எங்கோ தான் இருக்கும்.

இக்கதையின் இரண்டாவது குறை இயல்பென்பது ஒரு குணச்சித்திரத்தையோ அது சார்ந்த நிகழ்வையோ மிக விரிவாக விளக்குவது. பார்க் போலன் என்னும் மேலதிகாரி தன் முடி கொட்டுவதற்கான காரணம் என்று சொல்லும் கதைசொல்லி அதன் பிறகு அவருடைய கறாரான குரூரமான இயல்புகளைப்பற்றி விளக்கி விளக்கிச் சொல்லிக்கொண்டே செல்கிறான்

சிறுகதைகளை அடிக்கடி படிக்கும் பழக்கமுடியவர்கள் அந்த பல பத்திகளை எளிதில் கடந்து சென்று விடுவார்கள். பார்க்போலன் வேலை வெறிபிடித்தவ, இரக்கமற்ற ஒரு அதிகாரி என்றால் அதைச் சொல்வதற்கு ஒரு பத்தி போதும் வேலைக்கு முன்னதாக வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார் ,கிளம்பிச்சென்றால் குறை சொல்வார்,செய்ய முடியாத வேலைகளை சுமத்துவார்- இவை அனைத்தையுமே ஒரு பத்தியில் சொல்ல முடியும்., குரூரமான அதிகாரி அப்படித்தானே இருப்பார். புதிதாக என்ன?

மேலதிகமாக கதைக்குள் அவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறதென்றால் அவருடைய குணாதிசயத்தின் தனிச்சிறப்புகள், சாதாரணமாகக் காணமுடியாத தன்மைகள் சொல்லப்படிருக்க வேண்டும். பார்க் போலனுடைய இயல்புகளாகச் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே எந்த ஒரு குரூரமான மேலதிகாரிக்கும் பொருந்தக்கூடிய பொது இயல்புகள் மட்டுமே. அந்தப்பொது இயல்புகளை பெரிதாக பட்டியலிட்டுச் செல்லும் போது கதை மிக சோர்வூட்டக்கூடியதாக உள்ளது.

கதை எழுதிப்பயிலும்போது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இது. எனது மனைவி சந்தேகப்பிராணி என்று சொல்லிவிட்டால் அது ஒரு ‘மாதிரி\ கதாபாத்திரம் . இன்னின்ன வகையாக சந்தேகப்படுவாள் என்பதற்கு இரண்டோ அல்லது மூன்றோ வரிகளில் உதாரணம் காட்டிக் கடந்து சென்றுவிடலாம். இதுவரைக்கும் எவரும் சொல்லாத ஒரு குணாதிசயம் அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் மட்டுமே பலபத்திகளுக்கு அவளுடைய இயல்புகள் சொல்லப்படவேண்டும். மற்றபடி அவள் சந்தேகப்படும் விதங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக் கொண்டு செல்வது வாசகனுடைய கற்பனையை நம்பாமல் இருப்பது மட்டுமே.

இன்னொன்று ,இத்தகைய கதாபாத்திரங்களை விவரிக்கும் போது நான் சாயங்காலம் வேலையை விட்டுக் கிளம்பும்போது அவர் இப்படிச்சொல்வார் என்றெல்லாம் வரும் ஒற்றை வரிகள் எந்த வகையிலும் உதவாது. அது ஒரு நிகழ்வாக ஆக வேண்டும். நிகழ்வுக்கு ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும்.

உதாரணமாக எனக்குத் தெரிந்த மேலதிகாரி ஒருவர் வேலையைவிட்டு ஒருமணி நேரம் பிந்தியே வீட்டுக்குக் கிளம்பும் ஊழியரைப்பார்த்து மிக இயல்பாக அவர் அன்று முடித்திராத ஒரு வேலையைப்பற்றிக் கேட்பார். அந்தக் குற்ற உணர்வை உருவாக்கியே அவரை வீட்டுக்கு அனுப்புவார். அன்று மதியத்திலேயே அவர் அவ்வூழியர் அந்த வேலையை முடித்திருக்க மாட்டார் என்று குறித்து வைத்திருப்பார். அவர் அப்படிக் கேட்பதல்ல முக்கியம், அவர் அதை முன்னதாகவே திட்டமிட்டிருக்கிறார் என்பதுதான். இத்தகைய ஒரு நுட்பமான இரு இயல்பை ஒரு தனித்தன்மையை சொல்லும் போது மட்டும்தான் அந்தக் கதபாத்திரம் வாசகனுடைய மனதுக்குள் நுழைகிறது.

அதே போன்று பார்க் போலனின் குணச்சித்திரத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. ஆகவே அவருடைய உடல் தோற்றம் என்ன என்பது இந்தக் கதைக்கு முக்கியமானது. பதற்றம் கொள்பவரா? பொறுமையாக வேலை செய்து கொண்டிருப்பவரா? பேசும்போது அவரது குரல் திக்குமா? அல்லது ஓங்கி ஒலிக்குமா? திட்டும்போது அவருடைய முகம் சிவக்குமா? கண்கள் ஈரமாகுமா? அவருடைய கைகளின் அசைவுகள் என்ன? முக பாவனைகள் என்ன? அவர் எப்படி உடையணிந்து வருவார்? கவனமற்ற பொருத்தமற்றவை ஆடையா? அல்லது எண்ணி அமைக்கப்பட்ட கச்சிதமான ஆடையா?

இவை அனைத்தும் இந்தக் கதை முடியும் போது வரும் அவருடைய குணச்சித்திரத்தை வாசகன் அணுக்கமாக உணர்வதற்கு மிக முக்கியமானவை. அவரை அவன் கண்ணால் பார்க்கவேண்டும். நேரில் அப்ழகிய அனுபவத்தை அடையவேண்டும். ஆசிரியன் அல்லது கதைசொல்லி சொல்லி அறிந்த செய்தியாக இருக்கக்கூடாது. இதில் எந்த தகவலும் இந்தக் கதைக்குள் இல்லை. ஆகவே வெறும் ஒரு பெயராகவே அந்தக் கதாபாத்திரம் இருக்கிறது என்று தோன்றுகிறது.

கதையை கதை சொல்லியே கதைக்குள் சொல்வது போல் அமைக்கும்போது மொத்தக்கதைக்கும் ஒரு ஒழுங்கும் ஒருமையும் வந்துவிடுகிறது .ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் வெறும் கூற்றுகளாகவே ஆகிவிடும் அபாயம் உண்டு. சிறுகதை விதிகளில் ஒன்று ‘ கதையை சொல்லாதே ,காட்டு’ என்பதுதான். இந்தக்கதை காட்டப்படவே இல்லை. நான் கதைக்கு உள்ளே வரும்போதே அந்த அலுவலகத்தின் சித்திரம் என்ன என அறிய விரும்புவேன். ஒருகதைமுழுக்க நான் அங்கே வாழவேண்டும் அல்லவா? அந்த அலுவலகம் அனைத்து ஊழியர்களையும் மேலதிகாரி ஒரே பார்வையில் பார்க்கும்படியான பெரும் கூடமா? கண்ணாடித்தடுப்புகள் கொண்டதா? எப்படி மேலதிகாரி ஊழியர்களைக் கண்காணித்தார்? உள்ளே வரும்போது கார்டுகளை பயன்படுத்தவேண்டுமா?

அந்த அலுவலகத்தைக் கண்ணால் பார்க்காதவரை இந்தக் கதை மிக மிக குறைவுபட்ட ஒன்றாகவே தெரியும். கதை என்னில் நிகழவேண்டும் ஆகவே காட்டப்படவேண்டும் கதையை வாசகன் தெரிந்து கொள்ள கூடாது, அவனும் உள்ளே சென்று வாழவேண்டும். இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் மிகக் குறுகிய சித்தரிப்பாக அமைந்துள்ளது இந்தக் கதை.

கதையின் மிக முக்கியமான இன்னொரு குறைபாடென்பது முடியை பற்றிய அதனுடைய சித்தரிப்பில் தேவையில்லாத வரும் விளம்பரங்களைப்பற்றிய குறிப்பு. ஒரு கதை தொடங்கும்போது முடியைப்பற்றியதாக இருந்தால் முடிக்கும் அவனுக்குமான உறவென்ன, முடி அவனை எப்படிக் காட்டுகிறது, எப்படி அவனுடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதுமட்டுமே அந்தக் கதைக்கு முக்கியமே ஒழிய அந்த விளம்பர உலகம் அல்ல. ஒருவகையில் அது கதைக்கு தேவையில்லாத திசை திரும்பலாகவே அமையும்

உதாரணமாக முடி தன்னை இளமையாகக் காட்டும்என்று அவன் நினைக்கிறான் என்று கொள்வோம். முடி தன்னை அதிகாரம் உடையவனாகக் காட்டும் என்று அவன் நினைக்கலாம். முடியைப் பேணுவதற்கு அவன் என்னென்ன செலவழித்திருக்கிறான் என்று காட்டலாம். அவனுக்கு மேல் இழைக்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிராக அவன் பேணிக்கொள்ள விரும்பும் ஒன்றாக முடி இருக்கும் போது அது ஒரு குறியீடு அவனுடைய தன்மானத்தின், சுயத்தின் அடையாளம் அது என்னும் போது அந்த அடையாளம் அந்த முடிக்கு அளிக்கப்பட்டு சித்தரிப்பு அமைந்திருக்க வேண்டும்.

தன் முடியை அவன் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் ஒரு காட்சி, ஒவ்வொரு நாளும் உதிர்ந்த முடியை அவன் பார்த்துக் கொள்ளும் ஒரு தருணம் இதற்குள் இருந்திருந்தால் இக்கதை குறியீட்டுத்தன்மை கொண்டு மேலே சென்றிருக்கும். எத்தனை சித்திரங்கள் அப்படிச் சாத்தியம்! உதிர்ந்தமுடி காற்றில் சுருண்டு சுருள்களாக அவன் அறை முழுக்க விழுந்து கிடக்கிறது ,உதிர்ந்த மயிரில்லாமல் ஒரு கவளம் சோறு கூட அவனால் உண்ணப்படவில்லை என்றெல்லாம் எழுதப்படுமென்றால் அந்தக் கதையினுடைய அர்த்தம் வேறு அல்லவா. இக்கதையில் முடி வேறு எவ்வகையிலும் பொருள் வளர்க்கப்படவில்லை.

இறுதியாக பார்க் போலனின் இல்லத்தைப்பற்றிய சித்திரம் அந்தப்பெண்களைப்பற்றிய சித்திரம் குறைவான சொற்களில் அவற்றை அளித்திருப்பது சரியானது. ஆனால் மேலதிகமான ஒன்று அதில் இருந்திருக்க வேண்டும். அவர் அங்கு அலுவலகத்துக்கு நேர்மாறான மனிதராக இருக்கிறார் என்பதுதான் நமது அனுபவங்களைப்பார்த்தால் தெரியும் கணிசமான அரசு அதிகாரிகள் அவர்களது இல்லத்திற்கு சென்றால் உருவம் சிறியவர்களாகத் தோன்றுவார்கள். தோள்க்குறுகலோ உடல்த் தளர்ச்சியோ கொண்டவர்களாகத் தோன்றுவார்கள். அந்த மாற்றம் மிக முக்கியமான விஷயம். எப்படி பார்க் போலன் அவர் இல்லத்தில் வேறு மாதிரி தோற்றம் அளித்தார் என்ற சித்திரம் இந்தக் கதைக்குள் வரவே இல்லை.

இறுதியாக பார்க்போலன் அவருடைய குரூரத்தையோ கோபத்தையோ சொல்லி மன்னிப்புக் கேட்பது போல எழுதப்பட்ட இந்தக் கதை எளிமையான மனமாற்றத்தின் கதையாக வாசகனால் வாசிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அந்தக் கடைசிக் காட்சியை அமைதியாக, வெளிப்படையாக எதுவும் சொல்லாததாக, போகிறபோக்கில் வருவதாக அமைப்பதுதான் ஆசிரியரின் வெற்றி

வாழ்க்கையின் ஒரு தருணத்தை தொட்டெடுத்த கதையை கூறு முறையால் சாதாரணமாக ஆக்கி முன்வைத்திருக்கிறார் என்று தோன்றியது. மாதவன் இளங்கோவின் பலம் வாழ்க்கைத் தருணங்களை தெருப்பது. பலவீனம் பயிற்சியற்றதும் வார இதழ்களின் பொதுவாசகப்பரப்புக்கு உரியதுமான மொழிநடையும் சித்தரிப்பில்லாமல் கதையைச் சொல்லிவைக்கும் முறையும்.

download
சிவா கிருஷ்ணமூர்த்தியின் what an wonderful world. தொடர்ந்து எழுதிப்பழகி வருவதன் திறன்கொண்ட சரளம் கைகூடிய கதை. ஓர் அறிமுக எழுத்தாளர் என்றோ தொடக்க நிலை எழுத்து என்றோ இதைச் சொல்ல முடியாது. தொகுப்பு வெளியிட்டு தமிழ் இலக்கிய எழுத்தின் பட்டியலுக்குள் அவர் இன்னும் வரவில்லை என்றாலும் எழுத்தாளர்களில் ஒருவராகவே அவரைக்காண வேண்டும். ஆரம்ப கட்ட எழுத்தின் சிக்கல்கள் எதுவுமே இந்தக் கதையில் இல்லை என்று சொல்லலாம்.

ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்ட முதிர்ந்த எழுத்தாளர் எடுத்துக் கொள்ளும் நுட்பமான சவால் ஒன்று உள்ள சிறுகதை இது. அதாவது இச்சிறுகதை ஆரம்ப கட்ட எழுத்தாளர் எழுதும் சிறுகதை போல ஒற்றை சரடு கொண்டது அல்ல. குறைந்தது மூன்று வெவ்வேறு கதைகள் இதில் உள்ளன. மூன்று கதைகளும் சொல்லப்படாமலேயே குறிப்புணர்த்தப்படுகின்றன. மூன்றும் திறமையுடன் பின்னி ஒற்றை கதையாக ஆக்கப்பட்டுள்ளன.

கதை சொல்லிக்கும் அவனுடைய மகனுக்குமான உறவு ஒரு கதை .மகன் ஒரு மேலை நாட்டுச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். அங்குள்ள சபை நாகரிகம் மேஜை நாகரிகம் ஆகியவற்றை இயல்பென ஏற்றவன். அங்குள்ள ஆடம்பரம் சமூக கௌரவம் போன்றவற்றை உணரத் தொடங்கிவிட்டவன். அதனூடாக தன் தந்தையிடம் இருந்து விலகிச்செல்லத் தொடங்கிவிட்டான். ஒரு கட்டத்தில் தந்தை பழமையானவராகவும் பொருத்தமற்றவராகவும் வேறு ஒரு உலகத்தைச் சார்ந்தவராகவும் அவனுக்குத் தோன்றத்தொடங்குகிறார்

இன்னொரு கதை, புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரின் வாழ்க்கை. பல்வேறு இடங்களில் முட்டி மோதி லண்டனுக்கு வந்து வசதியான வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொண்டவர். அதை அவர் இலங்கையில் அடைந்திருக்க முடியாது அவரது ஜாகுவார் கார் இலங்கையில் பெரும் தொழிலதிபர்கள் வாங்கக்கூடியது. ஆனால் தான் பாதிக்கப்பட்டவர், இழப்பை ச்சந்தித்தவர் என்ற பாவனையை அவர் விரும்புகிறார். அதே சமயம் இலங்கை மேல் ஒரு ஆணித்தரமான விலக்கமும் இங்கிலாந்து மேல் மிகப்பெரிய மோகமும் கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் வாழ்க்கை பற்றிய நுட்பமான தகவல் தெரிந்து வைத்திருக்கிறார். எந்தப்பள்ளி மேன்மையானது, எந்தப்பள்ளி பழமையானது எந்தப்போட்டி முக்கியமானது என்றெல்லாம் அவருக்கு அத்துபடி

எப்படி இலங்கையில் இருந்து முற்றிலும் வெட்டிக் கொண்டு இங்கிலாந்தின் வாழ்க்கைக்குள் முழுமையாகத் தன்னை திணித்துக் கொள்வது என்று அவருக்குத் தெரியும். ஒரு தலைமுறைக்குள் தன் பிள்ளைகளைக் கொண்டு வந்து அந்த வாழ்க்கையின் உச்சியில் நிறுத்தவும் அவரால் முடியும். ஆனால் வேறு வழியில்லாமல் அங்கிருப்பதாக ஒரு மெல்லிய தன்னிரக்கத்தை அவர் நடிக்க வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டே 2009-ல் இலங்கையில் நடந்த இறுதிப்போரையும் அதன் அழிவுகளையும் தனது சொந்த துக்கம் போல் அவர் காட்டுகிறார்.

மூன்றாவது கதை இவ்விருவருக்கும் அனுமதியில்லாத அங்கிருக்கும் ஒரு வாழ்க்கை. ஒரு கண்ணாடித் தடுப்புக்கு இப்பால் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அவர்கள் நுழைய முயன்றால் அந்தக்கண்ணாடித்தடுப்பு அவர்களைத்தடுத்து வெளியே நிறுத்தும்.அதை தெரிந்து கொள்ளலாம், ஈடுபடமுடியாது. தங்கள் அடுத்த தலைமுறை அதை வெல்வதை இப்பால் இருந்து பார்க்க முடியும். ஒவ்வொரு கணமும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும் விமர்சனம் என்ன மதிப்புகள் என்ன என்பது கதையின் உச்சமாக அமைகிறது.

கரிய தோற்றமும், இலங்கை உச்சரிப்பு கொண்ட தமிழும், முற்றிலும் அந்நியமான ஒரு நிலத்திலிருந்து வந்த பழக்கவழக்கங்கள் கொண்ட இலங்கைத்தமிழருக்கு கறுப்பர்கள் ஏறத்தாழ குரங்குகள் என்று சொல்ல மனத்தடை இல்லை. அவர் அதனை ஏன் சொல்கிறார் என்பது கதைக்கு வெளியே சென்று யோசிக்கவேண்டியது. தன்னை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்வதற்காக சொல்லலாம். அவர்களில் ஒருவன் தான் என்று அவர்கள் எண்ணிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையாக இருக்கலாம். இலங்கையிலிருந்து லண்டனுக்கு வந்து அதன் அடித்தட்டில் தன்னை பொருத்திக் கொண்டமையால் தானிருந்த அடித்தட்டை விலக்கி மேலே செல்லும் யத்தனமாக இருக்கலாம். மேட்டிமை வாதத்தை வெளிப்படையாக முன்வைப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த சுய இரக்கம் ஒண்றையும் உள்ளே கொண்டிருப்பார்கள்.

இந்த மூன்று வெவ்வேறு கதைகளை மகனுடன் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று அங்கு நடக்கும் கோடை விழாவில் கலந்து கொள்வது என்ற ஒற்றை சம்பவம் வழியாக மிக இயல்பாக கடக்க சிவா கிருஷ்ணமூர்த்தியால் முடிந்திருக்கிறது. ஆகவே இது ஒரு முக்கியமான சிறுகதையாக அமைகிறது. இந்த மூன்று கதைகளுக்குள்ளும் ஒன்றுக்கொன்று கோடுகளை இழுத்துக் கொள்ள வாசகனுக்கு வாய்ப்பிருக்கிறது. செல்வேந்திரன் மிக இயல்பாக கறுப்பு நிறத்தவரைப்பற்றிச் சொல்வதை என்றேனும் ஒருநாள் கதை சொல்லியின் மகனும் தந்தையைப்பற்றி சொல்லக்கூடும். செல்வேந்திரனுக்கு மகனுக்கு அந்தக் களியாட்டத்தில் ஈடுபடுவதற்குரிய அடையாளமென்ன? அவன் தன்னை எப்படிக் கருதிக்கொள்கிறான்?

ஒரு பன்மைத்துவ சமூகத்தின் இக்கட்டுகளையும் சிக்கல்களையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சொல்ல சிவா கிருஷ்ணமூர்த்தியால் முடிந்திருக்கிறது. ஒரு கோடைக் கொண்டாட்டத்தில் வெள்ளையர்களின் பண்பாட்டு வெளிப்பாடுக்கு நிகராகவே கறுப்பின பாடலொன்று அதே முக்கியத்துவதுடன் அங்கு பாடப்படுகிறது. பல தலைமுறைகளுக்கு முன் அங்கு வந்தவர்கள் என்பதனாலேயே கறுப்பினர்கள் அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஒரு தலைமுறைக்கு முன் அங்கு சென்றதனாலேயே அந்தப்பண்பாட்டின் பகுதியாக ஆகாமல் இவர்கள் வெளியே நிற்கிறார்கள்.

தங்களது சொந்த ஊரை, ஆடைகள் களைந்திட்டு நீரில் குதிப்பது போல் அந்தப்பண்பாட்டில் குதிக்க அவர்களால் முடியவில்லை. அந்த தயக்கத்தையே இனவெறுப்பாக மாற்றி சொல்கிறார்கள். இன்னும் நுட்பமாக பார்த்தால் இலங்கைத்தமிழரான செல்வேந்திரன் இன்னொரு தமிழனாக கதை சொல்லியை அடையாளம் காண்கிறார். நம்மவர் என்ற வட்டத்தைப்போட்டுக் கொள்கிறார். ஆனால் அந்த வட்டத்துக்குள்ளே பிறர் என்று அவரை இந்தியத் தமிழனாக அடையாளம் காணவும் செய்கிறார்.இந்த ஒதுக்கம், வட்டம் போட்டுக்கொள்வது ஒரு தற்காப்பு உத்தி .தன்னிரக்கம் கொண்ட பாவனை செய்வது போலவே இந்த வளையத்தையும் அவர் பாவனை செய்கிறார்.

மிகச் சாதாரணமான நிகழ்வுகள் கொண்ட ஒரு கதையை தொடும் ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஒரு வாழ்க்கையின் நுணுக்கம் எழுந்து வருவது என்பது இலக்கியத்தின் வெற்றி என்றே சொல்லத்தோன்றுகிறது.

இக்கதையின் குறைபாடுகள் என்று சொல்லத்தக்கவை மிகச்சிலவே முக்கியமானது கதையின் முதல்சில பத்திகள் ஒரு பொய்யான தொடக்கத்தை வாசகர்களுக்கு அளிக்கலாம் என்பது. சைக்கிளில் மகனுடன் பள்ளி நடக்கும் கோடை விழாவுக்குப்போகும் தந்தை என்பது தந்தைக்கும் மகனுக்குமான உறவைப்பற்றிச் பேசி முடிவடைக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதற்கேற்ப மகனின் குணச்சித்திரமும் தந்தைக்கும் மேல் அவன் கொண்டிருக்கும் விலக்கமும் சுட்டப்படுகிறது. அதன் பின்னரே செல்வேந்திரன் வருகிறார். கதை உச்சம் அவரில்தான்

இது தடுக்கச் சாத்தியமான ஒரு சிறிய இடர் மட்டுமே. கதைத்தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடலிலேயே, அவர்களுக்கான இடைவெளியை சொல்லும்போதே, அதற்குள் செல்வேந்திரன் ஒரு பேசுபொருளாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் போதும். கதை தொடக்க வரி செல்வேந்திரனை குறித்ததாக இருந்திருந்தால் போதும்

இப்போது இருக்கும் வடிவில் இருந்து இக்கதை இன்னொரு மெல்லிய உயரத்தை எப்படி அடையலாம் என்றால் உரையாடல்களை அதை இப்போதிருக்கும் மிகச் சரளமான அன்றாடத்தளத்திலிருந்து சற்று விலக்கி கொஞ்சம் நகைச்சுவை கலந்ததாக அமைத்திருந்தால். உரையாடல் முழுக்க மெல்லிய புன்னகை ஒன்று ஊடாடியிருந்தால் இக்கதை தமிழின் முதன்மையான கதைகளில் ஒன்றாக ஆகியிருக்கும்.

ஐயமின்றி சிவா கிருஷ்ணமூர்த்தியை தமிழில் தொடர்ந்து எழுத வேண்டிய முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக இக்கதை எனக்கு அடையாளம் காட்டுகிறது.

 

 

=========================================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

 

=================================================================================

 

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

 

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

 

முந்தைய கட்டுரைதொழிற்சங்கம் தேவையா-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊடகமாயை