சிறுகதைகள் கடிதங்கள் – 9

images

 

இனிய ஜெயம்,

 

வெண்முரசு கலந்துரையாடல் மையத்துக்குள் நுழையும்போதே,  ”கமண்ட் அடித்து அடி வாங்கிய கமேண்டோ சீனு அவர்களே வருக வருக” என வரவேற்ப்பு குரல், யாருய்யா அது எனப் பார்த்தால், ”ஜெயமோகனின் எதிர்கால எதிரி நம்பர் மூணு” என்றபடி கை காட்டினார் சுனில்.

 

உங்கள் சொல்லை ஒவ்வொருவரும் வித விதமாக எதிர்கொள்கிறார்கள். எனக்கு உங்கள் சொல் எனக்கான கல்வி.  லௌகீகமான புள்ளியில்  தொடர் இலக்கிய வாசகன் எனும் நிலைக்கு எந்த பெரிய முக்கியத் துவமும் இல்லை. ஆனால் உள்முகமாக எனக்கு அது ஆத்மீகமான தேடலுக்கு  ஒரு கருவி. அக் கருவி மழுங்காமல் இருக்க, என் செயல்பாடுகள் நோக்கிய சொற்களே சாணைக்கல்.

 

ஆம் கொஞ்சம் இலக்கியத்துக்கு எதிரான மனநிலைக்குத்தான் திரும்பவிருந்தேன்.  கொஞ்ச நாள் முகநூல் மடத்தனங்களில் திளைத்துக் கிடந்தேன்.  கொஞ்சநாட்களாக வாசித்துத் தள்ளிய மொழிபெயர்ப்பு நாவல்கள்.  குறிப்பாக  நீல நிலா என்றொரு மொழிபெயர்ப்பு நாவல். தமிழ் தவிர வேறு மொழி அறியா , தீவிர இலக்கிய வாசகன் இதை வாசித்தால் அது தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கொள்வான். இப்படி ஒரு உலகம்.  நிறைய சிறுகதைகள் வெளிஎடும் ”இலக்கிய ” இதழ். ஒரு பக்கம்  வண்ணதாசன் போன்ற ஆளுமைகளின் ஆழமான கதை. மறு பக்கம்  எத்தனை சலுகை அளித்தாலும் இலக்கியத்தின் எந்த வரம்புக்குள்ளும் சேராத பாடாவதி கதை. இரண்டும் ஒரே இதழில். ஆக ஒரு இதழின் பெயரை நம்பி அதன் அத்தனை கதைகளையும் வாசிக்க முடியாது.  சமகால நாவல்கள் ஒரு பக்கம்  சோ தர்மனின் தூர்வை, சயந்தனின் ஆதிரை, கௌதம சன்னாவின் குறத்தியாறு போன்ற நல்ல நாவல்களை வந்தடைய,  இலக்கிய வைதரணியை  கடக்க வேண்டும்.

 

இவையெல்லாம் கூடி உருவாக்கிய புற நிலை, அகத்தில்  இவன்லாம் எழுதுறானே என்றொரு எரிச்சல்,  நாங்கல்லாம் வாசக கொம்பாக்கும் காட்டு வாசிச்சு அபிப்ராயம் சொல்றேன் என்றொரு நிலை. மட்டுறுத்தலில்  என்னை நானே உள்முகமாக காணும் நிலை வாய்த்தது.  இனி சூழலை புரிந்து கொள்ள முயல்வேன், கொம்பு மனநிலையை உதிர்க்க வேண்டும்.  இனி எந்த நிலையிலும் ஒரு கதையை வாசிக்கையில்  நபர்கள் சார்பற்று, இலக்கிய ஆசிரியன் இலக்கிய வாசகன் உறவில் மட்டுமே நிற்க முயல்வேன்.

 

வாசகர் மதிப்பீடுகளில் உங்கள் வாசகி ப்ரியம்வதா அவர்களின் கடிதங்கள் மகிழ்வளித்தது.  உண்மையில் இலக்கிய வாசிப்பு  எனும் களத்தை பெண்கள்தான்  வென்று  ஆள வேண்டும்.. மடத்து வீடு  குறித்த உங்கள் பார்வை,  நான் விரிய வேண்டிய எல்லைகளை தயாராக வேண்டிய களங்களை எனக்குக் காட்டியது,  உண்மையில் இது நல்லதொரு பயிற்சி.      நன்றி.

 

 

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

புதிய சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் என்ன எழுதவேண்டும், என்னென்ன எழுதக்கூடாது என்பதைப் பயில்வதற்காக. தில்லையம்மா போன்ற கதையை எழுதவேகூடாது என நினைத்துக்கொண்டேன். மிகமிகச்சாதாரணமான கதை. சாதாரணமான கதை என்பதக்கு என்ன அர்த்தம்? அது நிறையமுறை சொல்லிச்சலித்துவிட்டது என்பதுதான். அதை மீண்டும் ஒரு கதாசிரியன் சொல்கிரான் என்றால் அவனுக்கு ஒன்று நுண்ணுணர்வு இல்லை. அதையே மீண்டும் எழுதக்கூடாது என தெரியவில்லை. அல்லது அவன் முன்னால் எழுதப்பட்ட கதைகளை வாசிக்கவில்லை. இவை இரண்டுமே மேற்கொண்டு அவனை நான் வாசிக்கவேண்டாம் என்பதற்கான ஆதாரம்

 

இந்தக்கதை நம் வார இதழ்களின் டெம்ப்ளேட் கொண்டது. ஆனால் அனோஜன் பாலகிருஷ்ணனின் கதை சிற்றிதழ்களில் வரும் கதைகளின் டெம்ப்ளேட் கொண்டது. உயிர்மையில் உடனடியாகப்பிரசுரமாகிவிடும். ஏனென்றால் கொஞ்சம் செக்ஸ் கொஞ்சம் உருவகம். போதும். அதுக்குமேலே கதைக்கு என்ன? அமராவதியின் பூனைகள் என்னும் கதை ஞாபகம் வருகிறது. சமீபத்தில் பூனைகள் ஒருபெண்ணைத் தின்றதைப்பற்றிய முரகாமியின் கதையும் இதற்கு இன்ஸ்பிரேஷன் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தக்கதையே சாதாரணமான கதைதான்

 

கலைச்செல்வியின் கதை மஞ்சுக்குட்டியும் ஒரு டெம்லேட் கதைதான். மனிதாபிமானம் என்பது என்ன? அது ஒரு வேல்யூ என்றால் அதை ஏன் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்? மனிதாபிமானம் வெளிப்படும் இடங்களைத்தான் சொல்லிச் சொல்லிச் சலித்தாயிற்றே? மனித மனதின் ஆழமும் வெளிப்படவேண்டும் அல்லவா? நவீன இலக்கியத்தின் ஆழம் என்பது கோணலாக மட்டுமே சென்று அடையக்கூடிய ஒன்று என்று சுந்தரராமசாமி சொல்லியிருக்கிறார். பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாதிரி ஒரு நீதியுணர்ச்சியுடன் அங்கே செல்லமுடியாது

 

பாஸிட்டிவாக கதை எழுதலாம். ஆனால் அதில் நெகட்டிவ் அவ்வளவு வலிமையாக இருக்கவேண்டும்.

 

மனோகர்

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

முந்தைய கட்டுரைநமது முகங்கள் -கடிதங்கள் -1
அடுத்த கட்டுரைமோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்