இந்தியா குறித்த ஏளனம் – பதில் 2

 

10-new-delhi

 

அன்புள்ள ஜெ எம்

இந்தியா குறித்த ஏளனம் கடிதமும் [இந்தியா குறித்த ஏளனம்] அதன் எதிர்வினைகளும் வாசித்தேன் [ மாதவன் இளங்கோ பதில்]

இந்த தலைப்பில் திரு மாதவன் இளங்கோ கூறியுள்ள கருத்துக்களை நான் உறுதியாக பின் மொழிகிறேன்.

ஓரளவு படித்த வெள்ளையர்கள் இந்த ஏளனம் செய்வதில்லை. நம் உணவை வெறுப்பதில்லை. நம் உணவில் உள்ள காரம் கொஞ்சம் அவர்களை அஞ்ச வைக்கும். அனால் நம் உணவைப் பழகி விட்டால், அவர்கள் சுவைக்கு அடிமை. தீபாவளி சமயம் என் அமெரிக்க நம்பர்கள் 30 பேருக்கு நான் விருந்து கொடுக்கிறேன். நம் உணவுதான் நல்ல காரம் சேர்த்து. எல்லாவற்றையும் காலி செய்து விடுவார்கள்.

திரு பிரகாஷ் கூறியது போல் நம் நாடு குறித்தான ஏளன எண்ணம் இருக்குமானால் நாமும் காரணம். பல இந்தியர்கள் நம் நாட்டைப் பற்றி மிக கேவலமான விமர்சனங்களையும் பிம்பங்களையும் வெள்ளையர் முன் வைப்பதுதான். தான் ஒரு ஹிந்து என்று சொல்லக் கூட வெட்கப்படும் பலரை நான் கண்டு வெட்கி நொந்து இருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த நாடு கேவலம், ஆனால் நான் அப்படி இல்லை, உயர்ந்து வளர்ந்து உங்களுக்கு சமம் ஆகி விட்டேன்” என்று சொல்லாமல் சொல்லி அவர்களிடம் இருந்து அங்கீகாரம் பெற ஒரு புழுத்த முயற்சி.

சரி, இந்த மக்கள் இந்தியர்கள் நடுவில் இருக்கும்போது என்ன சொல்கிறார்கள்? வெள்ளைக்காரன் உணவு கற்காலத்திய உணவு. ஒழுக்கம் இல்லாதவன், பெண்கள் எல்லாரும் சோரம் போனவர்கள் என்று.

இவர்கள் ஒரு பெரிய கூட்டம் இங்கே இப்படி தனித்து இருக்கிறது. இந்த மனப்பான்மையே இவர்களை இந்த நாட்டில் அந்நியமாக்கி வைத்து உள்ளது. தங்களை தாமே அந்நியமாக்கி விட்டு வெள்ளையனை குறை சொல்வது தவறு.

யாதும் ஊரே யாவரும் கேளிர் – இன்னும் நடை முறை ஆகவில்லை.

சிவா சக்திவேல்

முந்தைய கட்டுரைகன்யாகுமரி வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் என் மதிப்பீடு -6