சிறுகதைகள் கடிதங்கள் – 8

14523112_1115341355218551_1996447982702617932_n

அன்புள்ள ஜெ,

நீங்கள் சுட்டி கொடுத்திருக்கிற கதைகளை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு இருக்கிறேன். இதற்குமேல் கதை வேண்டாம் என்று சொல்கிற அளவிற்கு சூழலில் சிறுகதை எழுத்தாளர்கள் பெருகி விட்டார்கள் என்பது ஆச்சரியம்தான். எல்லோருக்கும் ஒரு கவனிப்பு தேவைப்படுவதும் உண்மைதான். அதற்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற வாய்ப்புக்கு நன்றி. கதைகளைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட பார்வையை பகிர்ந்துகொள்கிறேன்.

******

ராம்செந்திலின் மடத்துவீடு:

இளம்பெண் இருக்கும் வீட்டிற்குப் போகும் இளைஞர்கள் காமம் சார்ந்து பேசுகிறார்கள். அந்தப் பெண் அதை வெட்கப்பட்டு ரசிக்கிறாள். ஆனால் அவளுடைய அப்பாவிற்கு காமம் சார்ந்த ஆசை வருகிறபொழுது அவள் அதை எதிர்க்கிறாள். இங்கே அவளுடைய எதிர்ப்பிற்கு இரு காரணங்களே இருக்க முடியும். ஒன்று அவளது சுயம் அவளது அப்பாவின் செயல்பாடால் சுற்றத்தாரால் காயப்படுத்தப்படுகிறது அல்லது அவளுக்கு இருபத்தி ஐந்து வயதாகியும் கிடைக்காத காமம் பற்றி கவலைகொள்ளாத அப்பா மீது கோபம் வருகிறது. இதுதான் கதை பேசும் விஷயம். ஆனால் கதையை எப்படியாவது முடிக்கவேண்டும் என்பதால் இளைஞர்கள் மனந்திருந்துகிறாற்போல் முடிப்பதில் எனக்கு உவப்பில்லை.

சித்தாந்தனின் புத்தனின் கண்ணீர்:

போர் அதிகாரங்களுக்கிடையிலானது, மக்களுக்கு இடையிலானது அல்ல என சொல்லும் கதை.விரித்தெழுதும் சாத்தியக்கூறுகளைப் புறக்கணித்து சம்பவ விவரிப்பாக மட்டும் நின்றுவிடுகிறது. சோகம் ஏற்படுத்தும் செய்திக்குறிப்பாக போய்விட்டது.

காளி பிரசாத்தின் விடிவு:

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ஒரு பக்கம் குழப்ப ,மறுபக்கம் கதை சொல்லல்முறை தெளிவின்றிப் போகிறது. மிகச்சாதாரணமான கதை.

சுனீல் கிருஷ்ணனின் ருசி:

தன்னுடைய பணத்தை ஏமாற்றியவனை பிடிக்க ரயிலில் போகும் நாயகன் தனக்குப் பிடித்த உணவுப்பண்டத்தை ஒரு நிலையத்தில் வாங்கிப் பையில் வைக்கிறான். அதை உண்ணாலாமென்றால் எதிரே இரு குழந்தைகள். உண்மையில் நாயகன் அந்த உணவுப்பண்டம் முழுவதுமாய் தனக்கு வேண்டுமென நினைக்கிறான். அதை அவன் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. அதற்காய் அவன் பல வழிகளை முயல்கிறான். முடிவில் நாயகன், பணம் பறித்தவனை தன்னிடத்தில் வைத்து, தன்னையே பணம் பறித்தவனாக உருவகம் செய்கிறான். நாயகனுக்கு உணவின் ருசி. பணம் பறித்தவனுக்கு பண ருசி. இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். கதையின் முடிவில் நாயகனில் ஏற்படும் மாற்றம் அதனாலென்றே நினைக்கிறேன். நல்ல கதை. நல்ல நடை.

மாதவன் இளங்கோவின் முடி:

சமகாலப் பிரச்சனையைப் பேசியிருக்கிறார். மென்பொருள் துறையிலிருக்கும் என் நண்பர்களும் முடிப் பிரச்சனையால் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் மன அழுத்தமாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். சுவாரசியமான கதை சொல்லல் முறை. பாஸ், நாயகனை தனது மனைவியின் பிம்பமாக நினைக்கிறார், மனைவியின் மீதான கோபத்தை, மனைவியின் பிரச்சனையை சரி செய்ய முடியாத வெறுப்பை, ஏறக்குறைய அதே குறையுள்ள நாயகன் மீது காட்டுகிறார் எனக் கொள்ளலாம். மற்றபடி எதுவும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

சிவா கிருஷ்ணமூர்த்தியின் What a wonderful world:

ஐந்தாம் வகுப்பில் கார்த்திக்கு பிடித்த சைக்கிள் ஏழாம் வகுப்பில் பிடிக்கவில்லை. உணவு உண்ணும்போது கார்த்தி அவன் அப்பாவை சத்தம்போடாமல் சாப்பிட சொல்கிறான். ஆக சிறுவயதிலேயே சூழலைப் பார்த்து எழும் மாற்றங்கள் விவரிக்கப்பட்டு அதன் விளைவுகளில் ஒன்றாக கார்த்தியின் ஓட்டம் சுட்டப்படுகிறது. எல்வினின் ஓட்டத்தையும், கறுப்பின மனிதர் பாடும் பாட்டின் வரிகளையும் ” அவங்க இன்னும் மாறலைல” எனும் செல்வேந்திரனின் வரியோடு ஒப்பிடும்போது கதை சொல்லும் விஷயம் புலப்படுகிறது. நில விவரணையும், நடையும் ,கதை சொல்லலும் சிறப்பு. இவரிடமிருந்து சிறந்த கதைகள் வெளிப்பட்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது

கே.ஜே அசோக்குமாரின் பாம்புவேட்டை:

கதையின் ஆரம்பம் ஏற்படுத்தும் சுவாரசியம் இரண்டாவது பத்தியிலேயே போய்விடுகிறது. கதையாகாமல் வெறும் சம்பவ விவரிப்பாகப் போய்விட்டது. மனித இயல்பைப் பற்றி கதை பேசும் விஷயமும் மிகவும் பழையது, சாதாரணமானது.

மகேந்திரனின் யாதும் காமமாகி நின்றாய்:

காதல் பித்து பிடித்தவராய் இருப்பார் போலிருக்கிறது. கதையா, கவிதையா எனும் சந்தேகம் வந்துவிடுகிறது. வருணனைகளை இட்டு நிரப்பிய சம்பவ விவரிப்பு. தபுசங்கரின் கவிதைகள் போல் ஒரு கதை. ஆனால் கதையாகவே இல்லை. மிகச்சாதாரணமான கரு. காதல் கவிஞராகும் வாய்ப்புகள் ஏராளம்.

தூயனின் தில்லையம்மா:

இந்தக் கதையை தூயன் ஏன் அனுப்பினாரென்றே தெரியவில்லை. தூயனின் மிகவும் துவக்ககால கதை. மிக மிகச் சாதாரணமான கதை. இன்றைக்கு தூயன் இதைவிட எவ்வளவோ நன்றாக எழுதுகிறார். ஆனால் இந்தக்கதை குடும்பமலர் தரத்திலான கதை.

மோனிகா மாறனின் தச்சன்:

பிம்பங்களின் பின்னாலிருக்கும் வாழ்வைச் சொல்ல முயலுகிறது. நேசத்திற்கும், கடவுளின் அழைப்பிற்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் இயேசு. கதை சொல்லப்பட்ட சூழலைத் தவிர்த்துவிட்டால் கதைக்கரு சாதாரணமானது. பெரிய தாக்கம் எதுவுமில்லை.

தருணாதித்தனின் பருவமழை:

ஆரம்பத்தில் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிய கதை .ராமசந்தரின் ராஜினாமாவுக்குப் பிறகு கதை சொல்லும் முறையே மாறுகிறது. எந்த உரையாடலும் இன்றி வெகுவேகமாக சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. வித்தியாசமான கரு என்றாலும் இலக்கியத் தரத்தில் இல்லை. ஷங்கரின் படம் பார்ப்பதுபோல் இருக்கிறது.சுஜாதா ரக கதை.

தருணாதித்தனின் மனிதக்குணம்:

மிகச்சாதாரணமான கதை. தலைப்பை நியாயப்படுத்த இப்படியொரு முடிவா என்று கேள்வி எழுகிறது. காசியைப் பற்றி சொல்லியிருக்கும் இடங்களைத் தவிர கதையில் பெரிதாக ஒன்றுமில்லை.

அனோஜனின் அசங்கா:

ஒவ்வொரு கல்லாக வைத்து வீட்டைக் கட்டமைப்பதுபோல் ஒரு கதையிலும் சரியான வார்த்தைகளை இட்டு நிரப்பி கட்டமைக்க வேண்டும். கட்டுவது ஓட்டு வீடா, மாடி வீடா என்பதைவிட அது எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது முக்கியம். மோசமாக கட்டப்பட்டது மாடி வீடாகவே இருந்தாலும் அதைக் காணச் சகிக்காது. அனோஜனின் இந்தக் கதை அழகாக கட்டப்பட்ட மாடிவீடு. ஒருவரியிலிருந்து இன்னொரு வரிக்கு கதையை எடுத்துச்செல்வதில் அனோஜன் பெருவெற்றி பெறுகிறார். எல்லாமே ஏற்கனவே பேசப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் பேசியதையே பேசவேண்டி இருந்தாலும் அதை எப்படிச் சொல்லவேண்டும் என மிகத் தெளிவாக அனோஜனுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் நான் முன்னர் படித்த பச்சை நரம்பு கதையும், இந்தக் கதையும் காமம்தான் பேசுகிறது. காமம் தவிர்த்த மற்ற வகைபாடுகளில் அனோஜனின் கதைகளைப் படிக்க ஆர்வமாயிருக்கிறேன்.

சதீஷ் ராஜமோகனின் 10.5 நொடிகள்:

எந்த லாஜிக்கையும் யோசிக்காமல் எழுதப்பட்ட வணிகக்கதை. அறிவியல் கட்டுரையாக எழுதியிருந்திருக்கலாம். எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாத மிகச் சாதாரணமான கதை.

கலைச்செல்வியின் மஞ்சுக்குட்டி:

முறையற்ற காமமாக சமூகத்தால் வரையறுக்கப்பட்டவை பற்றிய கதை. இதைப்போல் எத்தனை கதை படிப்பது? கடைசியில் வழக்கம்போல ஒரு மனந்திருந்தல் அல்லது தியாகம். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்ட கதை.

***************
சிறுகதை எழுதியிருக்கும் அத்தனைபேருமே பாராட்டுக்குரியவர்கள்தான். அவர்கள் எழுதுவதற்கான முயற்சிகளை செய்திருக்கிற வகையில். நானும் ஒரு கதை எழுதிவிட்டு எழுதும்கலை கை வந்துவிட்டதாகவே நினைத்துக்கொள்வேன். அதன்மேல் எழும் விமர்சனங்களுக்கும் கடும்கோபம் வரும். ஆனால் பிறகு அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் விமர்சனத்தில் குறைந்தபட்ச உண்மையிருந்தாலும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. அதிலிருந்து நல்ல கதை சொல்லல் நோக்கி நாம் நகர்வோம். நல்ல விமர்சகன் எப்போதும் நல்ல கலையை எதிர்பார்ப்பதாலே விமர்சிக்கிறான் என்ற புரிதலே தேவையானது என நினைக்கிறேன். என் படைப்பின் மேலான உண்மையான விமர்சனங்களுக்கு நான் அதைத்தான் என் மனதிடம் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்,
அகில் குமார்.

***

 

 

=================================

சிலசிறுகதைகள் 6

சில சிறுகதைகள் 5

சிலசிறுகதைகள் 4

சிலசிறுகதகள் 3

சிலசிறுகதைகள் 2

சில சிறுகதைகள் 1

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதைகள் கடிதங்கள் 4

சிறுகதை விமர்சனம் 5

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
அடுத்த கட்டுரைஅப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்