ஜெ
கெய்ஷாக்களைப்பற்றி தமிழிலேயே ஒரு நாவல் வந்துள்ளது. இது அதைப்பற்றிய பதிவு
ஆனால் உங்கள் சிறுகதை வேறுவகையானது. மேலே சொல்லப்பட்ட நாவல் நம்பகமான ஒரு பதிவு மட்டும்தான். இந்தச் சிறுகதையில் உண்மையில் கெய்ஷா வந்தாளா இவனே விக்கிபீடியா பக்கம் வழியாக வாசித்துக் கற்பனை செய்துகொண்டதா என்று தெரியாத மயக்கம் உள்ளது
வருபவள் கெய்ஷாவா இல்லையா என்பது இன்னொரு மயக்கம். அவள் இவனுக்குப் பிடித்தமானவள். இவன் விரும்பும்படி இலக்கியமெல்லாம் பேசுபவள். இவனுக்கு இவனுக்கு உண்மையில் என்ன தேவை என்று சொல்லிவிட்டுச்செல்கிறாள்.
அவளுடைய அந்த மாறுவேடங்கள்தான் இந்தக்கதையின் அற்புதம். கெய்ஷாவாக இருக்கிறாள். அது அவனுக்குப்பிடிக்கும். அவள் கெய்ஷா அல்ல என்று ஒரு சோகக்கதை சொல்கிறாள். அதுவும் அவனுக்குப் பிடிக்கும். கெய்ஷாவாக இருக்கிறாள். அதுவும் பிடிக்கும். கோபம் அடைகிறாள் அதுவும் அவனுக்கான நாடகம். தன்னிரக்கம் கொள்கிறாள் அதுவும் அவனுக்காக
மாறிமாறி நடிக்கிறாள். அப்படியே அவனை வெளியே இழுத்துப்போட்டு அவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். கெய்ஷா ஒரு யக்ஷி என்று நீங்கள் எழுதியிருந்தாலும் சரியாகத்தான் இருந்திருக்கும். தெய்வம் வந்து மனுஷனுடன் ஆடிவிட்டுச்செல்வதுபோல இருக்கிறது
சாரதி
***
ஜெ
கெய்ஷாவைப்பற்றி எழுதக்கூடாது, என்ன வருகிறது என்று பார்ப்போம் என்று நினைத்தேன். வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள் பல வாசகர்கள் பல கோணங்களில் நுட்பமாக வாசித்திருப்பதைக் காட்டுகின்றன. எனக்கு பல திறப்புகள் வந்தன
முக்கியமான விஷயம், ஆண் பெண் உறவு பற்றித்தான். இத்தனைக்குப்பின்னரும் ஆண் பெண் உறவு சலிக்குமா என்பதுதான்
ரொம்பநாளைக்கு முன்னால் தாஜ்மகால் போனேன். அப்போது ஒரு அலுவலக நண்பரும் உடனிருந்தார். ஷாஜகானுக்கு மும்தாஜ் பல மனைவிகளில் ஒருத்திதான். மொகலாய அரசர்கள் காமத்தில் ஆடிச்சலித்திருப்பார்கள். அப்படியென்றால் அவளிடம் என்னதான் கண்டார்?
அவர்கள் அனைவரும் கொடுக்கமுடியாத ஒன்றை. அதுதான் உண்மையான காமம். காமம் காமத்தைவிட மேலான ஒன்றின் அடையாளமாக ஆகவேண்டும். அதைத்தான் கெய்ஷா அவனுக்குச் சுட்டிக்காட்டிவிட்டுச் செல்கிறாள்
சாரங்கன்