சிறுகதைகள் கடிதங்கள் – 3

r

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். தங்கள் தளத்தில் வெளியான சிறுகதைகள் குறித்து என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். மொத்தம் ஐந்து கதைகள் படித்தேன். அதில் நான்கு கதைகள் பற்றி எழுதியுள்ளேன்.

நன்றி,

சங்கர்

1.மடத்து வீடு – ராம் செந்தில்

வாசகசாலை அமைப்பு சென்னையில் மாதம் இருமுறை சிறு பத்திரிக்கைகள், இடைநிலை இதழ்கள் ஆகியவற்றில் வெளியாகும் சிறுகதைகள் குறித்து உரையாடல் நடத்துவார்கள். நான் இரு முறை கலந்துகொண்டேன். இரு முறையும் சிறுகதையின் வடிவம், வாசிக்கப் பெற்றவை சிறுகதையா இல்லையா என்றே விவாதம் சென்று முடியும். அப்படி ஒரு விவாதத்தில் தோழி ஒருவர் சொன்னது – “எனக்கு சிறுகதைன்னா படிச்சு முடிச்சவுடன புத்திசாலித்தனமான ஏமாற்றம் ஏற்படணும்”. பல நேரங்களில் சிறுகதைக்கான விளக்கங்களில் கதையின் முதல் வரியிலிருந்தே கதை தொடங்க வேண்டும், கதையின் முடிவிலிருந்து வாசகனை வேறு தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் நாம் பேசுவோம். ஆக தொடர் வாசிப்பின் மூலம் நமக்கென்று ஒரு டெபனிசன் உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் படைப்பை மதிப்பிடுவோம். அதுவே எழுத அமரும்போது நமக்கு ஒரு டெம்ப்ளேட் உருவாக்கித் தரும். மடத்து வீடு சிறுகதை அத்தகைய டெம்ப்ளேட்டில் எழுதப்பட்டு அதற்குள்ளேயே சிக்கிக்கொண்டுவிட்டது என்று தோன்றுகிறது.

முதற் பாதியில் விவரணைகள் மேல் கவனம், பிற்பாடு தனியாக இருக்கும் பெண்களின் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை, கடைசியில் பெரியவரின் காமம் என கதை அமைந்துள்ளது. பல கிளைகளாக விரிவது நாவல். பல கிளைகளில் பயணித்து நம் கண்களுக்குத் தெரியாத ஆணி வேரை நோக்கிச் செல்வது சிறுகதை. இது என்னுடைய டெபனிசன். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் அவர்களைப் பார்ப்பதற்கு மூன்று பேர் போகிறார்கள் என்ற உடனேயே நமக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. கதையும் அதற்கேற்றாற்போல்தான் பயணிக்கிறது. கடைசியில் நாம் எதிர்ப்பார்க்காத ஒன்றை ஆசிரியர் வைத்தாக வேண்டும். எனவே அவர் ஒரு முடிவைத் தருகிறார். அதைத் தொடர்ந்து ஒரு சுபம் கார்டு – பெரியவரால் ஏற்படும் பிரச்சனைகளால் அப்பெண்கள் படும் வேதனையைப் பார்த்து மூன்று ஆண்களும் வழியும் கண்ணீரை ஒருவருக்கொருவர் தெரியாமல் துடைத்துக்கொள்கிறார்கள்.

சிறுகதைக்கான காலம் குறைவு. அதைக் கருத்தில் கொண்டே கதை முதல் வரியிலிருந்தே தொடங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எனவே விவரணைகளைக் குறைத்து நேரடியாக வீட்டிற்குள் கதை சென்றிருக்கலாம்.

உத்தி தெரிந்திருக்கிறது. படைப்பு அதை மீறி செல்ல வேண்டும். அப்பொழுதுதான் மனதைத் தொடும். அது இக்கதையில் ஆசிரியருக்கு கை கூடவில்லை.

  1. புத்தரின் கண்ணீர் – உதயன் சித்தாந்தன்

நல்ல கதை. எனக்கு இக்கதைப் பிடித்திருந்தது. போரை விரும்பாத தந்தை, போருக்குப் போகும் மகனை நினைத்துக் கவலைக்கொள்ளுதல், போரில் தன் மகன் வீரத்துடன் செயல்பட்டான் என்று கேள்விப்படும்போது மகிழ்தல், தன் மகனின் நலனுக்காக பிரார்த்தித்தல் பின் மீண்டும் தன் மகன் செய்த போர்க்குற்றங்களை நினைத்து வருந்துதல் என ஒரு சராசரி மனிதனின் உண்மையான உணர்வுகளை அழகாக படம்பிடித்துக்காட்டுகிறது. கதை எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. அம்மா, அப்பா, தங்கை என வாழும் சராசரி மனிதன் போருக்குச் சென்றவுடன் மிகக்கொடூரமான முறையில் குற்றங்கள் செய்கிறான். அவனை அவ்வாறு மாற்றுவது எது, போர்க்களத்தில் எது தர்மம்? எது அதர்மம்? அன்றாட வாழ்க்கையில் இருக்கும் நியாய தர்மங்கள் அங்கு செல்லுபடியாகுமா? எப்பொழுது சாவோம் என்று தெரியாமல் ஒவ்வொரு நொடியும் கடக்கும் ஒருவனிடம் என்னென்ன நல்லொழுக்கங்களை எதிர்பார்க்கிறோம்? எதிர்ப்பார்க்கலாம்? போரே குற்றம் எனில் போர்க்குற்றங்கள் எனக் கூறி தண்டனைக் கூறுவது ஏமாற்று செயல் ஆகாதா? என இக்கதை விரிந்திருந்தால் பெரிய உயரத்தை எட்டியிருக்கும். அதற்கான எல்லா சாத்தியங்களும் இக்கதையில் உள்ளன. ஒரு வேளை ஒரு நெடுங்கதையாகவோ அல்லது குறு நாவலாகவோ எழுதப்பட்டிருந்தால் அது சாத்தியமாகியிருக்கும். சிறுகதையாக்க வேண்டும் என்பதால் சட்டென்று, சினிமாவில் க்ளைமேக்சில் ஒரே காட்சியில் மனம் திருந்தும் வில்லனைப் போல் மகன் மனமுடைவது கதையைக் கீழிறக்கிவிட்டது. இருந்தும் இது ஒரு நல்ல கதையே.

  1. விடிவு – காளி பிரசாத்

கதையின் முடிவில் கண்ணீர் எட்டிப்பார்த்துவிட்டது. குற்ற உணர்வுக்கு ஆளான ஒருவர் எதிர்பார்ப்பது ஒரிரு ஆறுதலான வார்த்தைகள்தான். அப்படியிருக்க பாதிக்கப்பட்டவர்களே கையைப் பிடித்துக்கொண்டு அழுவது மிகவும் நெகிழ வைக்கும் தருணம். அவ்வுணர்வு நம்மிடையே கடத்தப்படுவதில் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் விவரணைகளை ஆரம்பத்தில் குறைத்திருக்கலாம். ரவி குற்றவுணர்வுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாவதை இன்னும் முன்னரே காட்டத் தொடங்கியிருக்கலாம். இதுவும் ஒரு நல்ல கதை.

  1. முடி– மாதவன் இளங்கோ

நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் இதைப் போல் பல கதைகள் படித்துவிட்டதால் பெரிய பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை. நேராக நடந்து ஒரு திருப்பத்தில் மறைந்து போகிறது. மனைவியின் நோயினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பாஸ் கதை சொல்லியையும் மற்றவர்களையும் திட்டிக்கொண்டே இருக்கிறார். கதை சொல்லிக்கு தலை முடி கொட்டுவது பிரச்சனை. இரண்டையும் இணைக்கும் இடமாக கடைசி வரியில் பாஸ்ஸின் மனைவிக்கு தலையில் முடி இல்லை என்று வருகிறது. சம்பந்தம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை பாஸ்ஸிற்கு தலையில் முடியில்லை அதனால் முடி இருப்பவர்களைப் பார்த்தால் திட்டுகிறார் என்று இருந்திருந்தால் எதாவது சம்பந்தம் இருந்திருக்கும். வேறேனும் கதையில் இருக்கிறதா என்று கூர்ந்து பார்க்க இயலவில்லை. கதை வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. ஆரம்ப நிலைக் கதையாக பார்க்கலாம்.

சங்கர் விஸ்வநாதன்

***

அன்புள்ள ஜெ

நீங்கள் வெளியிட்ட கதைகளில் அனைத்தையும் வாசித்தேன். புத்தரின் கண்ணீர் கதையின் பிரச்சினை என்ன? ஒன்று கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்கள் ஆசிரியராலேயே நேரடியாகச் சொல்லப்படுகின்றன. அவற்றில் எந்தப் புதுமையும் இல்லை. வழக்கமான டைப் கதாபாத்திரங்கள். முடிவும் டைப் முடிவு.

அந்தக்கதை எனக்கு ஆசி கந்தராஜாவின் ஒரு கதையை ஞாபகப்படுத்தியது. ஒருவர் செல்லமாக நாய் வள்ர்க்கிறார். தொழில் நிமித்தமாக அவர் கொரியா செல்கிறார். அங்கே நாய் இறைச்சி சாப்பிட நேர்கிறது. திரும்பி வந்தால் அவரது நாய்கள் அவரை பக்கமே விடவில்லை

இந்தக்கதை அந்த சிங்களச்சிப்பாய்க்கும் அவன் அம்மாவுக்கும் அல்லது தங்கைக்குமான உறவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அவன் அவர்களுடைய டார்லிங் பாய். ஆனால் போர்முனையில் ஒரு கற்பழிப்புக்கு துணை நிற்கிறான். இதில் வருவதுபோல அவன் அப்படிச்செய்யும் வீடியோவை அவர்கள் பார்க்கவில்லை. பார்த்தபின் அவர்கள் விலகிச்செல்வதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அவர்களுக்கு இவனுடைய முகத்தைப்பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அவனை கற்பழிப்பவனாகவே பார்க்கிறார்கள். பார்த்ததுமே நடுங்குகிறார்கள். அதைவிட அவனுக்கும் அவர்கள் வெறும் சதையாகவே தெரிகிறார்கள். இது ஒரு நல்ல கதையாக இருந்திருக்கும்

நல்லகதை தேவையான விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மிச்சத்தை எல்லாம் வெட்டி வீசிவிடும். அது இதில் இல்லை. எல்லாமே அள்ளி வைக்கப்பட்டிருக்கிறது

மடத்துவீடு கதையின் பெரிய பிரச்சினை அந்தப்பையன்கள் ஆபாசமாகப்பேசுவதை அந்தப்பெண்கள் என்கரேஜ் செய்வதாக அதில் வருவதுதான். அப்படி அவர்கள் செய்வதாக இருந்தால் அவர்களின் பிரச்சினை, கட்டாயம் என்ன? அப்படிச்செய்தபின்னரும் அவர்களின் உள்மனசின் நோக்கம் என்ன? இதெல்லாம்தான் கதை

அந்தப்பெண்கள் இந்தப்பையன்கள் பேசுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு துணி தைத்துக்கொடுப்பது மாதிரியான வேலைகள் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் உள்ளூர அவர்கள் மனம் வெதும்புகிறார்கள் என்றாவது கதை இருந்திருக்கலாம்

விடிவு ஒரு ஆரம்பநிலைக் கதை. கதையில் ஃபோக்கல் பாய்ண்ட் இரண்டு. ஒன்று கிளைமாக்ஸ். இன்னொன்று கிளைமாக்ஸை மறைக்கும் ஒரு விஷயம். இதில் ரெண்டுமே இல்லை. கதையில் எல்லாருமே கதைசொல்லியை ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்பதற்கான முகாந்திரம் இல்லை. இதையும் நான் இப்படிச் சொல்லிப்பார்ப்பேன். உண்மையிலேயே கதைசொல்லி செய்யும் தவறுதான் அந்தப்பையன் சாகக் காரணம். அவன் குற்றவுணர்ச்சியால் குமுறிக்கொண்டிருந்தாலும் மறைக்கிறான். அது அந்த அம்மாவுக்குத் தெரிந்தாலும் மன்னிக்கிறாள். ஏனென்றால் தன் மகனின் தோழனாக அவள் அவனைப்பார்க்கிறாள்

அப்படி என்றாலும் அசோகமித்திரனின் அவனுக்குப்பிடித்தமான நட்சத்திரம் அப்பாவின் தோழர் போன்ற பல கதைகளில் அசோகமித்திரன் இதை எழுதிவிட்டார்

ஆனந்த் சீனிவாசன்

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

புத்தரின் கண்ணீர், வடிவு பற்றி எனது குறிப்புகள்:

புத்தரின் கண்ணீர்

சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின் இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள் ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது. பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது. அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.

கவனத்தை ஈர்க்கும் தொடக்கம். பிரம்மாண்டமான, வரலாறு சார்ந்த புனைவை எதிர்பார்க்கச் செய்தது.

ஆனால் நான்காவது பத்தியிலேயே கதையின் முடிச்சு பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உச்சக்கட்டத்தை எதிர்நோக்கி நின்றிருக்க, கதை அப்படியே முடிந்து விடுகிறது. மலையேறச் சென்றவனுக்கு முடிவற்ற சமவெளியில் சிக்கிக்கொண்ட அனுபவத்தைத் தான் அளிக்கிறது புத்தரின் கண்ணீர்.

சந்தன சராசரி இளைஞனிலிருந்து புலிகளை அழிக்கத் துடிப்பவனாகவும் பின்னர் வன்மம் மிக்கவனாகவும் மாறுகிறான். இது சொல்லப்படுகிறதே தவிர ஆராயப்படவில்லை. எனவே கதையே வெறும் செய்தியாக தங்கிவிட்டது.

இருந்தாலும் மொழியும் அழகுணர்ச்சியும், சலிப்படையாமல் கதையின் கடைசி வரை செல்ல உதவியது. எழுதிப்பழகிய கை என்று நினைக்கிறேன்.

விடிவு

விடிவு கதையின் வடிவமே பெறவில்லை. நடந்ததும் நினைத்ததும் அப்படியே பதிவு செய்யப்பட்டது போல காட்சி அளிக்கின்றது. ரவியின் குற்ற உணர்வு, துயரத்திலும் சமநிலை இழக்காத தாயினூடாக அடையும் விடுவிப்பு – நல்ல சிறுகதை முளைக்க இந்த கதைக்கருவில் போதுமான வலிமை உள்ளதா என்ற ஐயம் எழுகிறது.

பல கதாப்பாத்திரங்களை நீக்கலாம் (கோதண்டராமன், சாரி, மோகன்…) எண்ண ஓட்டங்களை வடிகட்டி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க நிறைய வாய்ப்பு உள்ளது. கதையின் மையத்தை வெளிச்சத்தில் காட்ட உதவும்.

ப்ரியம்வதா

முந்தைய கட்டுரைதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!
அடுத்த கட்டுரைசில சிறுகதைகள் – 5