சிறுகதைகள் கடிதங்கள் – 2

images

 

 

மடத்து வீடு சிறுகதை பற்றிய குறிப்புகள் –

நமது குரலை நாமே ரெக்கோர்டிங்கில் கேட்பது (அல்லது காணொளியில் நம்மை நாமே பார்ப்பது) எப்பவும் சற்று நிலைகுலையச்செய்யும் அனுபவம். “இது நான் தான்” என்று மனம் ஒப்புக் கொள்ள மறுக்கும். ஆனால் அது முக்கியமான நிகழ்வு. It is a reality check about ourselves.

”மடத்து வீடு” கதையில் முதியவரின் நடத்தையைப் பற்றி கேட்கையில் இளைஞர்களுக்கு ஏற்படுவது கிட்டத்தட்ட இதே அனுபவம் தான். முக்கியமாக, பெண்களை “objectify” செய்யும் ராஜேஷ் மீது தான் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவனைப் பற்றிய மனக்காட்சியும் நிஜமும் பிளவு பட்டு கண்முன் நிற்கின்றன.

ஆனால் இந்த மையச்சரடு கதையில் ஒரு பின்குறிப்பு போலத்தான் தென்படுகிறது. கதையில் அழுத்தம் இல்லை. முடிச்சவிழ்ந்த மூட்டைப்போல சிதறிக் கிடக்கின்றது.

தேவைக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் கவனத்தைக் குலையச் செய்கின்றன. உதாரணத்திற்கு, இது narrative-ஆகவே எழுதக்கூடிய கதை. கதைக்கூறுபவரும் ஒரு கதாப்பாத்திரமாக வருவதைத் தவிர்த்திருக்கலாம். அவனுடைய கதாப்பாத்திரம் கதைக்கு எதையுமே அளிக்க வில்லை.

Macro வருணனையிலிர்ந்து ஆரம்பித்து, பின்னர் அந்த வீட்டைப் பற்றி, உறுப்பினர்களைப் பற்றி பேசிய பின்னர்தான் கதாப்பாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. அதற்குப் பிறகு திரும்பி வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறோம். மாறாக, கீழே குறிப்பிட்டிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.”

அது வாசகர் மனதில் உடனே வீட்டைப் பற்றி, பெண்களைப் பற்றி கேள்விகளை எழுப்பும். அவர்கள் நடந்து செல்லச் செல்ல அந்த இடத்தை பற்றிய, வீட்டைப் பற்றிய வருணனைகளைக் சொல்வதற்கு வலிமையான கட்டத்தை உருவாக்கியிருக்கும். கதைக்கூறுபவரும் வாசிப்பவரும் சக பயணிகளாகச் செல்ல வழிவகுக்கும். இப்பொழுதிருக்கும் வடிவத்தில் தான் ஏற்கனவே கண்டு அறிந்ததை நமக்குத் தெரிவிப்பது போல இருக்கிறது. It makes the first person narrative redundant.

எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.

வித்யா மூலம் கூறுவதைக்காட்டிலும் இதை ஒரு நிகழ்வாக எழுதியிருந்தால் கதையின் மையம் வலிமையாக முன்வந்திருக்கும்,

மேலும், அப்பாவின் இத்தகைய நடத்தையை அறிந்த பெண்களுக்கு ஆண்கள் மீது பொதுவான கசப்பு அல்லது கோவம் அல்லது அருவருப்பு எஞ்சுவதே பெரும்பாலும் நேரக்கூடியது. ராஜேஷின் அசட்டுத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் நடத்தை இயல்பாகத் தெரியவில்லை.

ப்ரியம்வதா

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

இத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பதிவிட்டிருந்த சிறுகதைகள் பற்றி என் விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். இது எனக்கும் எளியபயிற்சியாக இருக்மென்பதால் செய்து பார்த்தேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணனின் ‘ருசி’ சிறுகதை: http://padhaakai.com/2014/03/02/ruchi-2/

இதேத் தளத்தில் அவரின் ‘வாசுதேவன்’ என்கிற கதையைப் வாசித்ததாக ஞாபகம். நோய்மையை சுமந்து வாழ்வினை துக்கத்தோடுஅனுகும் ஒரு மனிதனைக் காணச்செல்கிறவர்களைப் பற்றியது என நினைக்கிறேன். (கதையின் தலைப்பு மட்டும் நன்றாக நினைவிருக்கிறது).அதொரு நல்ல சிறுகதையாக இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்புகூடியதாலே இக்கதையை வாசித்தேன்.

ருசி கதை அன்றாட மனித அகவுலகம் சார்ந்த எளிய கதைதான். கதையின் மையம் அவனுக்கு அக்கணத்தின் தோன்றியிருக்கும் பழையஏமாற்றமானää பலியுணர்வுள்ள ஒரு உணர்ச்சி. அது யார்மீது என்பதை யூகிக்க விடாமலோ அல்லது அதைப்பற்றிய அவனின் எண்ணங்களைகுவிக்காமலோ கதை வௌ;வேறு தகவல்களில் அலைகிறது. பின்னால் மூட்டைப்பூச்சிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அதையும்உடைத்துவிடுகிறார். ருசி என்ற தீவிர உணர்வை, எண்ணத்தை இன்னும் நுட்பமாக பதிவுவிட்டு கதையின் கருவுடன் இணைத்திருக்கலாம்.இரயிலின் அன்றாட வாழ்வு விவரிப்புகளைச் சொல்லிக்கொண்டும்போகும்போது ‘சரி  அடுத்து என்ன’ என்று நகரும்போது கதைமுடிந்துவிடுகிறது. வாசகனை கணிக்க விடக்கூடிய சாத்தியங்கள் சேர்க்கபடவில்லை.

மடத்துவீடு: மடத்துவீடு 

எளிய கருத்துச்சொல்லல் வகையைச் சார்ந்த கதைதான் இது. ஆண் துணையற்று தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் இளைஞர்கள்ஒருகணத்தில் சட்டென திருந்துவதுபோன்ற கதைகள் வழக்கொழிந்து நாளாகிவிட்டது. மனம் திருந்துவதெல்லாம் இப்போது யாரும் கிடையாது.சரிதான் என்று விலகிவிடுவதோடு சரி. கதை அங்கிருந்து எதிர்புறமாகவோ அல்லது அப்பெரியவரின் மனநிலையிலோ வேண்டுமானால்எழுதிப்பார்த்திருக்கலாம். நடையும், உரையாடல்களும் செறிவாகவும், நவீனத்துக்குறியதாக இருக்கின்றன. திரு. ராம் செந்தில் அவர்களுக்குகதைக்கான மொழி அழகாக வருகிறது புதிய கருவுடன் இணைந்தால் நல்ல சிறுகதையாக வருமென நினைக்கிறேன்.

விடிவு: http://solvanam.com/?p=46758

 

எதிர்பாராமல் நிகழும் சம்பவமும் அதனால் அழுத்தும் குற்றவுணர்வைப் பற்றிய கொண்ட தொடக்கநிலை கதைதான் இதுவும்.சிறுகதைக்கு முடிவு எவ்வளவு முக்கியமானதோ அதுபோல அதன் தொடக்கமும் வாசகனை சட்டென கதைக்குள் உள்ளிழுக்கச் செய்யவேண்டும். இக்கதை அதைச் செய்யவில்லை. உள்ளே செல்வதற்குள் நேரமும், அயற்சியும் அடைந்துவிட்டேன். அலுவலகம் சார்ந்த பரிவாரவிவரனைகள் இவ்வளவு தேவையில்லை. உதாரணமாக ‘சார்’ போன்றவை. இவை வாசகனை அலுப்பூட்டும் பகுதிகள். ரவிக்கும் ராஜாவுக்குமானநட்பு ஆழமாக சொல்லப்படாதபோது கதையில் அதன் இழப்பும், அவனின் குற்றவுணர்வும் சரியாக கடத்தப்படவில்லை. அழுத்தமாககூறியிருந்தால் கதையின் மையத்தை இன்னும் வலுவாக்கியிருக்கும். வெறும் சம்பவமாக நின்றுவிடுகிறது. கதையின் முடிவை வாசிக்கத்தொடங்கியதுமே யூகித்துவிடமுடிகிறது. காரணம் நட்பு, இழப்பு போன்ற ஒரே வகை மாதிரிகளால். ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளாகஇருந்தாலும் இன்றைய வாசகன் அதை வேறு வடிவமாகவோ, வெறொரு பார்வையிலோ சொல்வதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.திரு காளிபிரசாத்தின் முதல் கதை என்பதற்கான மொழி தடைகள் ஏதுமில்லாமல் வேகமாகவே கொண்டு செல்வதில் பாராட்டுகிறேன்.

புத்தரின் வீடு: http://tarunam.blogspot.com/2016/04/sirukathai.html

சமீபத்திய ஈழ சிறுகதைகளை வாசித்த வகையில் இச்சிறுகதை சற்று மாறுதலான ஒன்றை எடுத்திருக்கிறது.  ஆனால் எல்லா ஈழசிறுகதைகளை போன்றே வாசிக்கின்றபோது தோன்றும் முன்கணிப்பு இதிலும் சரியாக ஏற்பட்டுவிடுகிறது.  மாறுதலாக கதை சிங்களதரப்பிலிருந்து தொடங்குகிறது ஆனால் அதுவும் உரையாடல், மொழிநடையில் ஏனோ ஈழத்தமிழர்களையே நினைவுப்படுத்துகிறது. புத்தகொள்கையோடு வாழ்ந்திருக்கும் ஒரு எளிய மனிதனின் அறம் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்போதும், அவனின் அடுத்த தலைமுறைக்குமேசென்று சேர்வதில்லை என்கிற மையத்தை சுற்றி சுழல்கிறது. ஆனால் போரின்போது ஏற்படும் குரூரங்களும், வன்மங்களும் மனிதகுணங்களுக்கு இயல்பானதே. சிங்கள இராவணுத்தின் போக்கு அப்படித்தான் இருக்குமென அவருக்கு அப்போதுதான் தெரிகிறதா? மேலும்போர்ச்சூழலைப்பற்றிய அழுத்தமான ஏதேனும் சில வரிகள் இல்லை. போர் முடிந்து வரும் மகன் திருந்துகின்ற இடத்தை யூகித்த பின்பும் கதைநீண்டுகொண்டே செல்கிறது.

கதையின் தொடக்கமும் கருவும் மிகச்சிறந்த சிறுகதைக்கான கூறுகளை கொண்டிருந்தும் முழுச்சித்தரமாக மாறவில்லை. சமீபத்திய ஈழசிறுகதைகளிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது.

ஜெ இவைகள் என் வாசிப்பின் வழியும் இத்தளத்தினை தொடர்ந்து வாசிப்பதாலும் அமைந்த என் தனிப்பட்ட பார்வைதான். இதுசரியானதா என தெரியவில்லை. ஆனால் இவ்விமர்சனத்தினூடே என்னையும் வளர்த்துக்கொள்ள முடியுமென நம்புகிறேன். உங்களின் கருத்தைதெரிந்துகொள்ள ஆவல்.

அன்புடன்

தூயன்

 

புதுக்கோட்டை

 

அன்புள்ள ஜெமோ

 

கதைகளை வாசித்தேன். இரண்டு கதைகளிலுமே பொதுவான சிந்தனைகள்தான் இருந்தன. ராம் செந்தில் கதையில் பெண்களை வெறும் காமமாகவே ஆண்கள் பார்ப்பது பற்றிய பரவலான சிந்தனை வெளிப்பட்டது. இலங்கைக்கதையில் சிங்களர்களில் பௌத்தமரபைப்பின்பற்றுபவர்களுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சி. ஆனால் நவீன இலக்கியத்துக்கு இது போதாது. ஒரு சூழலில் பொதுவாகப்பேசப்படுவதை கதையாக ஆக்கினால் அதற்கு இலக்கிய மதிப்பு இல்லை. கதை என்றால் அதில் ஒரு சாட்டை இருக்கவேண்டு. அதிர்ச்சி நிலைகுலைவு என எதையாவது நல்ல சிறுகதை தரவேண்டும். சரிதானே என்று நினைக்கவைத்தால் போதது. இந்தக்கதைகளின் முக்கியமான பிரச்சினையே இதுதான்

 

சத்யா

 

முந்தைய கட்டுரைநீர் நிலம் நெருப்பு – ஆவணப்படம் பதிவுகள்
அடுத்த கட்டுரைமா.அரங்கநாதன் கதைகள் பற்றி…