அ.மார்க்ஸ்;கடிதம்

அன்புள்ள அ.மார்க்ஸ் அவர்களுக்கு,

தாங்கள் வழக்கமான பண்புடன் எழுதிய பதிலைக் கண்டேன். ஒரு சிறந்த வழக்கறிஞராக உங்கள் தரப்பை சீராக எடுத்து வைத்திருக்கிறீர்கள். எதிரித்தரப்பை உங்களுக்கேற்றாற்போல வளைத்தபின் வாதிட ஆரம்பிக்கும் உங்கள் தனிதிறன் இதிலும் வெளிப்படக்கண்டு களியுவகை எய்தப்பெற்றேன். மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சூடானாலும் வெண்மைதரும்.

தங்கள் சமேதம் ஓர் எளிய தகவலை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். நான் படித்த காலத்தில் ஆங்கிலத்துக்கு 26 எழுத்துக்கள் இருந்தன. இப்போதும் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே நானும் ஓரளவு ஆங்கில இதழ்களையும் இணையதளங்களையும் தொடர்ச்சியாக எழுத்துகூட்டி வாசித்துவருகிறேன். ஆகவே காஷ்மீர் குறித்தும், பாகிஸ்தானின் சிறுபான்மை பேணல் குறித்தும் நீங்கள் சொன்னவையெல்லாம் முழுத்திரிபுகள் என்று என்னால் சொல்லமுடியும். அவற்றைப்பற்றி நான் இங்கே பேச விரும்பவில்லை, என்னைப்போலவே ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப்படிக்கும் எவரும் இரண்டுநாள் இணையத்தில் மெனக்கெட்டால் படிக்கக்கூடிய விஷயங்கள் மட்டுமே. 

நான் தேசியம் என்று குறிப்பிடுவது மத,இன, மொழி அடிபடையில் வரலாற்றுப்பின்புலம் கற்பிக்கப்பட்டு உருவாக்கப்படும் புனித கட்டமைப்புகளை அல்ல. அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக பெரும் மக்கள்பரிவர்த்தனை நிகழ்ந்தன்மூலம் இயல்பாக உருவான தேசியமானது பிரிட்டிஷாரால் அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் ஒரு நவீன தேசியமாக காந்தி- நேரு-அம்பேத்கார் போன்றவர்களால் வடிவமைக்கபப்ட்டது.

ஐயா, இந்தத் தேசிய அமைப்பை விட மேலான ஒன்றுக்காக மட்டுமே இதை இழக்க முடியும். மத, மொழி, இனப்பிரிவினைகளை முன்வைக்கும் குறுகிய தேசிய உருவகங்கள் இங்கே மோதல்களை உருவாக்கி கோடிக்கணக்கான எளியமக்களின் அழிவுக்கு மட்டுமே காரணமாகும். பிரிவினையை தேசம் எதிர்கொள்ளும்போது உருவாகும் வன்முறையைவிட பிரிவினைகள் நிகழ்ந்தால் உருவாகும் வன்முறை பலநூறு மடங்கு உக்கிரமானதாக இருக்கும். அதன்மூலம் இந்நாட்டின் அன்னிய எதிரிகளுக்கும் உங்களைப்போன்றவர்களுக்கும் அன்றி எவருக்கும் நன்மை கிடையாது.

இந்தத் தேசிய அமைப்புக்குள் வாழும் மக்கள் ஒத்திசைந்து, உலகியல் முன்னேற்றம் அடைந்து, மேலான ஒரு வாழ்க்கையை வாழவேண்டுமென்ற விருப்பமே என் நோக்கில் தேசபக்தி. அதற்கு இந்த நாட்டின் ஜனநாயக அமைப்புக்குள் எல்லாவகையான உரிமைப்போராட்டங்களுக்கும் அனுமதி இருக்க வேண்டுமென எண்ணுவதே நான் சொல்லும் தேசபக்தி. அத்தகைய பக்தி இல்லாத நாடு உலகில் இல்லை. இதையெல்லாம் என் இணையதளத்தில் பன்னிப்பன்னிச் சொல்லியிருக்கிறேன். தாங்கள் ஓயாத ஆங்கில வாசிப்பு நடுவே தமிழிலும் அவ்வப்போது படிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.தமிழும் ஒரு நல்ல மொழிதான்.

தல்ஸ்தோயையெல்லாம் – எழுத்துக்கூட்டித்தான் –  நானும் படித்திருக்கிறேன் என்று பணிவுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சர்வதேசியத்தை அவரைப்போன்றவர்கள் தேசியத்துக்கு மாற்றாக வைத்தார்களே ஒழிய ஒருங்கிணைவுடன் வாழும் தேசிய அமைப்புகளை சிதைக்கும் வன்மங்களை அல்ல. தந்தையர் நாடு என்ற சொல்லாட்சியை தல்ஸ்தோயில் பலநூறுமுறை காணமுடியும்.

எளியேன் பேசிய ஒரு விஷயத்தை மட்டும் மீண்டும் சொல்லி முடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழில் வெளிவரும் ஏராளமான இஸ்லாமிய இதழ்களில் ஏறத்தாழ அனைத்திலுமே ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசில் மட்டுமே இஸ்லாமியருக்கு நீதி கிடைக்கமுடியுமென்றும் அத்தகைய இஸ்லாமிய நாட்டுக்காக போராடவேண்டும் என்றும் பல்வேறு சொற்களில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அவர்களுக்கு உங்களைப்போன்றோரின் எழுத்துக்கள்தான் ஆதாரமாக உள்ளன. நான் எழுதிய கட்டுரை அதைப்பற்றி மட்டுமே. அதை அவர்களே மழுப்புவது இல்லை. தங்களைப்போன்ற வழக்கறிஞர்கள் கட்சிக்காரர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு நிலைபாடு எடுப்பதல்லவா நல்லது?

இந்தநாட்டில் மக்களிடையே பிரிவினைகளையும் வெறுப்பையும் உருவாக்கும் எல்லா தரப்பினரையும் கடுமையாக விமரிசனம்செய்துவருகிறேன் என்பதையும் அதில் இந்துத்துவ வெறியர்களையே அதிகமும் காய்ந்து வருகிறேன் என்பதையும் தங்கள் மேலான பார்வைக்குக் கொண்டு வருகிறேன். குண்டு வைக்கும் தீவிரவாதிகளின் மனித உரிமைகாகக் குரல்கொடுக்கும் முற்போக்கில் மட்டும் ‘ஜனநாயகக் குண்டு, ஜனநாயகக்குண்டு’ என்று தினம் நூற்றெட்டுமுறை சொல்லி தியானமெல்லாம் செய்து பார்த்தும்கூட எனக்கு நம்பிக்கை வரவில்லை என்பதற்கு மன்னிக்க வேண்டும். புத்ததேவ் தாஸ் குப்தாவுக்கே குண்டு வைக்கப்பட்டபின் என் தரப்பில் மார்க்ஸியர்களும் சேர்ந்து கொள்ளக்கூடும்.

நீங்கள் நடுநிலை தவறாமல் மாலேகான் குண்டுவெடிப்பு  இந்துத்தீவிரவாதிகளின் மனித உரிமைக்காகவும் போராடக்கூடும் என நான் அறிவேன். அதன்மூலம் எளிய இஸ்லாமியர்களிடமும் பிறரிடமும் இந்த தேசத்தைப்பற்றியும், இங்குள்ள கோடானுகோடி மக்களைப்பற்றியும் முழுமையான அவநம்பிக்கையை உருவாக்கவும், வன்மங்களை வளர்க்கவும்தான் தாங்கள் அல்லும்பகலும் பாடுபடுகிறீர்கள் என்று நான் எண்ணுவதை நீங்கள் பொய்யாக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

ஐயா, இந்த நாட்டில் என்றாவது ரத்தப்பெருக்கு நிகழுமென்றால் இங்குள்ள இந்துத்துவவெறியர்கள், இஸ்லாமியவெறியர்கள் அளவுக்கே உங்களைப்போன்ற கலகப்பிரியர்களுக்கும் அதில் பங்கிருக்குமென்று சொல்லிக்கொள்கிறேன். அதில் தங்களுக்கு மகிழ்ச்சியே இருக்கும். வரலாற்றில் இடம் கிடைக்கிறதல்லவா? வெறும் முன்னுரைவாசிப்பாளரும், தழுவல்கட்டுரையாளரும்தான் என விஷமிகளால் குற்றம்சாட்டப்படும் உங்களைப்போன்றவர்களுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு அது! மேலும் நீங்கள் அதில் பாதிக்கப்ப்படவும் போவதில்லை.  இன,மதக் கலகங்களால் மட்கி அழியும் ஆப்ரிக்க,ஆசிய நாடுகளில் அவ்வெறுப்புகளையும் வன்மங்களையும் பயிர்ட்டு வளர்த்த அறிவுஜீவிகள் பாதிக்கப்பட்டதில்லை என்ற சமகால வரலாறு ஆங்கிலஞானம் மிகுந்த உங்களுக்கா தெரியாது?

கடைசியாக ஒன்று, உங்கள் கடும் வேலைப்பளு நடுவே ஒரு சிறுவேலையை மட்டும் நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். இஸ்லாமியர்களுக்கு எதிரிகள் யாரென்பதை மட்டுமாவது அவர்களே கண்டுபிடித்துக்கொள்ளட்டும். கொஞ்சம் முயற்சிசெய்தால் அவர்களாலேயே அதைச் செய்யமுடியும் என்றுதான் தோன்றுகிறது. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே.

காஷ்மீரிலிருந்து திரும்பி கந்தமாலுக்கு கிளம்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

அன்புடன்
ஜெயமோகன்

பிகு: கணக்கைச் சொல்லும்போது செலவை மட்டுமல்ல வரவையும் சொல்வது மரபு

 

அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்

எனது இந்தியா

முந்தைய கட்டுரைதோன்றாத்துணை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈழ இலக்கியம்:ஒரு கடிதம்