இன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்

einstein1_7

 

அன்புள்ள ஜெ.

பி நாகராஜன் படங்கள் குறித்தும் புராணங்களை அதன் தத்துவ அம்சனங்களை களைந்து எளிய குடும்ப பிரச்சனை சார்ந்த கதைகளாக மாற்றும் படங்களை குறித்து சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் இதுபோன்ற படங்களால், சிந்தனைகளால் ஒரு வித பின்னடைவும் ஏற்பட்டுள்ளதோ என அஞ்சுகிறேன். தான் சமூகத்தின் ஒரு பகுதி, தனக்கென அடையாளம் இல்லை என வாழ்ந்த மக்கள் திரளிடையே மதம், நம்பிக்கைகள் என்பதெல்லாம் வேண்டாம்.. உன்னை நம்பு, நீ என்பது உன் சிந்தனைதான் என நாத்திகம் சொல்லிக்கொடுத்தது… பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் இது குறித்து நிறைய பேசி ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்கினார்கள்.. ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என அண்ணா அந்த சிந்தனையை அழகாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அவருக்குப்பின் பகுத்தறிவு சிந்தனையில் மிகப்பெரிய தேக்கம் நிலவுகிறதோ என தோன்றுகிறது.

ஏபி நாகராஜன் வகை படங்களைப் பார்த்து விட்டு, அதையே ஆன்மிகம் என நினைத்துக்க்கொண்டு, அதற்கு பதில் சொல்வதுதான் “பகுத்தறிவு” என நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்களோ, அதனால்தான் நாத்திக சிந்தனை பரிணாம வளர்ச்சி காணவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது

உலகை காக்கும் கடவுள் குடும்பத்தில் ஏன் குழப்பங்கள்? சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்கள் சில விபத்துக்குள்ளாவதை கடவுள் ஏன் தடுக்கவில்லை…? சரஸ்வதிதேவி சிலர் நாவில் வசிப்பதாக சொல்கிறார்கள். அவள் எங்கு டாய்லெட் போவாள் என்பது போன்ற வெகு எளிய கேள்விகளையே மிகப்பெரிய சிந்தனைகளாக இன்றும் சிலர் நினைப்பது வருத்தம் அளிக்கிறது.. அந்த காலத்தில் இப்படி கேட்ட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றும் அதே கேள்விகள் என்றால் என்ன செய்வது..

ஆனால் ஆன்மீகம் பேசுபவர்கள் வெகுவாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதை பார்க்க முடிகிறது.. கடவுள் என தனியாக ஒருவர் இல்லை கடவுள் தன்மை என்றுதான் உண்டு என்றெல்லாம் பேசுகிறார்கள்

இதற்கு நிகராக எதிர் விசையாக வளர்ந்திருக்க வேண்டிய நாத்திக வாதம் வளராமைக்கு திருவிளையாடல் போன்ற படங்களின் செல்வாக்குதான் காரணமா.. அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா

அன்புடன்

பிச்சைக்காரன்

*

NORWAY DALAI LAMA

அன்புள்ள பிச்சைக்காரன்,

நாத்திகம் ஆத்திகம் இரண்டுக்கும் இரண்டுவகையான அறிவுத்தளங்கள் உள்ளன. அடிப்படையில் நாத்திகன் இப்பிரபஞ்ச இயக்கத்தை அதைச்சார்ந்த புறவயமான விதிகளாகத் தொகுத்துக்கொள்ள விழைகிறான். ஆத்திகன் பிரபஞ்சத்தை தன்னைவைத்து அகவயமான அறிதல்களாகத் தொகுத்துக் கொள்கிறான். அவன் சொல்லும் கடவுள் என்பது அவனுடைய அகவயமான ஓர் அறிதல் மட்டுமே. அவன் அறியும் பிரபஞ்சத்தின் காரணமும் மையமும் செயல்விசையும் ஆக அது இருக்கிறது.

ஆகவேதான் நாத்திகமும் ஆத்திகமும் எப்போதும் மோதிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவற்றுக்கு நடுவே உரையாடலும் நிகழமுடியாமலிருக்கிறது. அகவயமான தன் அறிதலை ஆத்திகன் சொல்லும்போது அதை புறவயமாக நிரூபித்துக்காட்டும்படி நாத்திகன் அறைகூவுகிறான். நாத்திகன் கூறும் புறவயத்தர்க்கத்தின் இடைவெளிகளை சுட்டிக்காட்டி அவன் அணுகுமுறையையே ஆத்திகன் நிராகரிக்கிறான்.

ஆத்திகம் அகவய அறிதல் என்பதனாலேயே அதற்கு படிமங்களே முக்கியமான ஊடகங்கள். பண்பாட்டின் தொடக்கம் முதலே மானுட உள்ளத்தை நிறைத்திருக்கும் ஆழ்படிமங்களை அவன் தன் அகவய அறிதல்களைச் சொல்ல பயன்படுத்துகிறான். அவற்றை சட்டகமாக கொண்டு மேலும் மேலும் படிமங்களை உருவாக்கியபடியே செல்கிறான்.

சூரியனோ சந்திரனோ கடலோ மின்னலோ அவ்வாறுதான் படிமங்களாகின்றன. ஆலமரமோ, நாகமோ அவ்வாறுதான் அந்த அகவய உலகுக்கு வெளிப்பாடு ஆகின்றன. படிமங்கள் தங்களுக்குள் இணைந்து ஒரு வலையாக ஆகின்றன. அதைத்தான் நாம் புராணங்கள் என்கிறோம். எல்லாப் பழங்குடிகளிடமும் அவர்களுக்கான மெய்யியல் புராணவடிவிலேதான் இருக்கும். பெரிய தொல்பண்பாடுகளில் அந்தப்புராணம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்திருக்கும்.

நாத்திகர்களில் அறிவார்ந்தவர்கள் ஆத்திகர்களின் இந்தப்புராணவெளியை குறியீடுகளின் ஊடுபாவாகவே காண்பார்கள். சமூகவியல், வரலாறு, உளவியலைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ள முயல்வார்கள். ஜோசஃப் கேம்பல் முதல் டி. டி. கோசாம்பி வரையிலான ஆய்வாளர்களின் வழி அது. அவர்கள் அகவய அறிதல் முறையை எள்ளி நகையாடி நிராகரிக்க மாட்டார்கள், புரிந்துகொள்ள முயல்வார்கள்.

எளிய நாத்திகர்கள், அதாவது அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ நுண்ணறிவோ அற்றவர்கள் ஆத்திகர்களின் அகவய அறிதல்களை, அவை வெளிப்படும் படிமவெளியை தங்கள் எளிய அன்றாடப் புத்தியைக்கொண்டு அணுகுவார்கள். அவற்றை வெறும் ‘மூடநம்பிக்கைகள்’ என வாதிடுவார்கள். நாம் இங்கே நாத்திகர்கள் என்று அறிபவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்டவர்கள்.

ஒரு கணக்குப்பிள்ளை கவிதையை ஆராய்ச்சி செய்தால் என்ன ஆகும். அதேதான் நிகழ்கிறது. நீங்கள் சொன்னதுபோல சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எப்படிப் பிள்ளை பிறக்கமுடியும் போன்ற ‘அறிவியல்’ கேள்விகளை கேட்பவர்கள் இவர்கள்தான். கோசாம்பியோ கே.தாமோதரனோ அதைக் கேட்பதில்லை.

நம் துரதிருஷ்டம் நமக்கு வாய்த்தது திராவிடர் கழகம்தான். அவர்களுக்கு எளிய தரைதட்டி நாத்திகம் மட்டுமே தெரியும். அவர்களிடம் அறிவார்ந்த ஆய்வுமுறைமைகள் ஏதுமில்லை.

வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராயும் மாபெரும் அறிவுக்கருவியாகிய மார்க்ஸியத்தைக் கையில் வைத்திருக்கும் இடதுசாரிகள் இங்கு திராவிடர் கழகத்தைவிட கீழிறங்கி பேசுகிறார்கள். ஒருமுறை ச.தமிழ்ச்செல்வன் உரை கேட்டேன். அதற்கு திருச்சி செல்வேந்திரன் எவ்வளவோ மேல்.

எளிய ஆத்திகர்கள் எளிய நாத்திகர்களைப்போலவே உலகியலை, அன்றாடத்தை மட்டுமே அறிந்தவர்கள். கெட்டகாலம் வந்தால் சனீஸ்வரனுக்கு விளக்குபோடவேண்டும் என்ற அளவில் மட்டும் ஆத்திகத்தை அறிந்து வைத்திருப்பவர்கள். எளிய பக்தியாக மட்டுமே ஆன்மீகத்தை கொண்டிருப்பவர்கள்.

அவர்களுக்கும் நாத்திகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்மைச்சூழ்ந்திருக்கும் இப்புவி புறவய உலகை தர்க்கபூர்வமாக அணுகியவர்களால் உருவாக்கப்பட்டது. முதல் சக்கரத்தை வடிவமைத்தவன் முதல் கணிப்பொறியை அமைத்தவன் வரை புறவுலகை நோக்கியவர்கள்தான்.

அறிவியலாளர்களின் தனிப்பட்ட நம்பிக்கை எதுவாக இருப்பினும் அறிவியல் தன்னளவில் நாத்திகத்தைச் சார்ந்தது. அதில் அறிதல்கள் புறவயமான விதிகள் கொண்டவை. புறவயமாக அவை தொகுக்கப்பட்டு ஒற்றைப்பேருருவாக ஆக்கப்படுகின்றன. அதில் அறியப்படாதவை முடிவிலாதிருக்கலாம். அறியப்பட்டவையே அதன் வெற்றிக்குச் சான்றாகும்

ஆனால் எளிய ஆத்திகர்கள் ஒட்டுமொத்தமாக நாத்திகத்தைப் புறந்தள்ளுவார்கள். அறிவியலின் சாதனைகளைப் பயன்படுத்தியபடியே அறிவியலை குறைத்துப்பேசுவார்கள். அறிவியல் இன்னமும் அறியாதவற்றைச் சுட்டிக்காட்டி அறிவியலின் இயக்கத்தையே சிறுமைசெய்வார்கள். அறிவியல் தன்னை அனைத்தும் அறிந்தது என்று சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அது அறியமுடியும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையை மானுடனுக்கு அளிப்பது.

ஆத்திகத்தின் கேவலமான கீழெல்லை என்பது அறிவியலின் அடிப்படையே புறவயவிதிகள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அறிவியலை ஆத்திகத்துக்குச் சாட்சிசொல்ல அழைப்பதுதான். தன் அகவய அறிதலுக்கு ஒருவன் புறவய அறிவுத்துறையின் விதிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போதே தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான் என்பதை அவர்கள் அறிவதில்லை

நாத்திகமும் ஆத்திகமும் இணைய முடியாது, அவற்றின் அணுகுமுறைகளே வேறு வேறு என்பதனால் விவாதிக்கவும் முடியாது. நாத்திகம் ஆத்திகத்தையும் ஆத்திகம் நாத்திகத்தையும் மறுக்கும், அவற்றின் இயல்பு அது. ஆனால் அவை ஒன்றை ஒன்று பொய்யென்றும் பிழையென்றும் நிரூபிக்க முடியாது.

பல ஆண்டுகளுக்குமுன் ஃப்ரிஜோ காப்ராவின் டாவோ ஆஃப் பிஸிக்ஸ் என்னும் நூலை நிராகரித்து நித்ய சைதன்ய யதி எழுதிய கட்டுரையிலும் உரையிலும் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். அந்நூல் அறிவியலைக்கொண்டு ஆன்மிகத்தின் அகவய உருவகங்களை ‘நிரூபிக்க’ முயலும் முயற்சி என நித்யா சொன்னார்.

ஆன்மிக தத்துவத்தின் கொள்கைகளும் உருவகங்களும் அறிவியலுக்குள் எந்த மதிப்பையும் பெறமுடியாது. அவற்றின் அகவயமதிப்பை முழுமையாக அழித்து தர்க்கப்படுத்தாமல் அவற்றை நாம் அறிவியல் கொள்கைகளாக ஆக்கமுடியாது. அது சுத்தியலாக சிற்பத்தைப் பயன்படுத்துவதுபோல. செய்யலாம், அதன் மதிப்பு அதுவல்ல.

ஆனால் ஆத்திகம் ஆத்திகத்தின் அணுகுமுறையைக் கொண்டே நாத்திகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அறிவியலின் அறிதல்களை ஓர் ஆத்திகன் பயன்படுத்திக்கொண்டு அவற்றில் மேலேறிச்சென்று தன் அகவய அறிதல்களை கூர்மைப்படுத்திக்கொள்ள முடியும். நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் நிலவியலும் உளவியலும் பயின்ற அறிவியலாளர்களே. அவர்கள் ஆத்திகர்களும்கூட

அதேபோலவே நாத்திகம் தன் புறவயத்தருக்கத்தின் விதிகளைக்கொண்டே ஆத்திகம் செயல்படும் அகவயமான நுண்தளங்களை மதிப்பிடமுடியும். படிமங்களை, அதீத உளவியலை நுணுகி ஆராயமுடியும்.

தமிழ்நாட்டில் அடிப்படை நாத்திகம் ஆத்திகத்தின் மேல் தொடுத்தத் தாக்குதல் காரணமாக ஒரு சிறுபான்மையினர் ஆத்திகத்தின் அறிவார்ந்த தளம் நோக்கிச் சென்றனர். அவர்களுக்குரிய ஆசிரியர்களும் நூல்களும் உருவாகி வந்தன. ஆன்மீகத்தை தத்துவமாகவும் கலையாகவும் மீஉளவியலாகவும் பார்க்கும் பார்வைகள் எழுந்தன

ஆனால் மறுபக்கம் நம் நாத்திகம் அறிவியல்துறைகளை உள்ளடக்கி விரிவடையவே இல்லை. அது ஒருவகைத் தெருப்பூசலாகவே நின்றுவிட்டது. திராவிட இயக்கம் நிரூபணவாதத்தை, தொழில்நுட்பத்தை மட்டும் அறிவியலாகக் கருதும் பாமரப்பார்வை கொண்டது. தன் அதி உச்ச நிலையிலேயே கூட தொ. பரமசிவம் போன்ற எளிய காழ்ப்புகள் மட்டும் கொண்ட அப்பாவியைத்தான் அதனால் உருவாக்கமுடியும்

ஆனால் அறிவியலின் அனைத்துத்துறைகளையும் தழுவி விரியும் பார்வை கொண்டது மார்க்ஸியம். வரலாற்றையும் பண்பாட்டையும் புறவயமாக அதனால் வகுத்தறிய முடியும். நமக்கு மார்க்ஸியம் கற்ற நாத்திகர்கள் இருந்தனர், அவர்கள் முன்னிலைப்படவில்லை.

அறிவியல் அதன் முழுமையான வீச்சுடன் முன்வைக்கப்படுவதே உண்மையான நாத்திகம். அறிவியல் இங்கே கற்றுக் கொடுக்கப்படுவதே இல்லை. இங்கு பாடங்கள்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, அறிதல்முறை அல்ல. ஆகவேதான் நாத்திகம் இத்தனை சூம்பிப் போயிருக்கிறது.

பல ஆண்டுகளுக்குமுன் நான் இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் என்னும் நூலை எழுதினேன். அதற்கு நான் சொன்ன முதன்மைக்காரணமே இந்துமரபிலுள்ள நாத்திக தரிசனங்கள் மேலெழுந்து இணையாக வந்து நிற்கவேண்டும் என்பதுதான். இல்லையேல் ஆத்திகமும் சூம்பிப்போகும்

இன்று அறிவார்ந்த நாத்திகத்திற்கான தேவை உச்சத்தில் இருக்கிறது இங்கு. நாத்திகம் என இங்கே பேசப்படுவது எளிய சாதிக்காழ்ப்பும் மொழிவெறியும் இனப்பற்றும்தான். அறிவியல் நோக்கில் அவை மதப்பற்றைவிடக் கீழானவையாகவே கருதப்படும். மெய்யான அறிவியல் என்னைப் பொறுத்தவரை மெய்யான ஆன்மீகம் அளவுக்கே புனிதமானது

இளமையில் நான் ‘படு சீரியஸாக’ இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது நித்யா சொன்னார். “இறுகப்பிடித்தால் நழுவக்கூடிய ஒன்று இது. மெய்யியலில் சிரிக்காமல் சொல்லப்படும் அனைத்தும் பொய்யே”

ஜெ

 

இந்துமதமும் நாத்திகமும் 

நாத்திகமும் தத்துவமும் 

இங்கிருந்து தொடங்குவோம்

கடவுள் குழந்தைகள் ஒருவினா

மதங்களின் தொகுப்புத்தன்மை

கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 1

கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 2

கல்வாழை நாத்திகவாதம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் 3

முந்தைய கட்டுரைதற்பிரிந்து அருள்புரி தருமம்
அடுத்த கட்டுரைஏன் பதறுகிறார்கள்?