வணக்கம். நலமா?
மண்ணு வீசும் வாசனையும் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த மூன்று பாடல்களும் தஞ்சாவூர் சின்னப்பொண்ணு பாடியவை. வைகை பிரபா என்பதும் அவரது பெயர்தான் என்றால் மன்னிக்கவும்.
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடலை எழுதியவர் கதிரை நீலமேகம் என்ற அறிந்துகொள்ள நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. த.மு.எ.ச. நடத்திய கலை இரவு நிகழ்ச்சியொன்றில் ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகளுக்கும் முன்னால் அப்பாடலை மதுரை சந்திரன் பாடக்கேட்டு கண்கலங்கியது இன்னும் பசுமையாக ஞாபகமிருக்கிறது.
தினந்தோறும் நான் கேட்கும் இருபது பாடல்களில் அதுவுமொன்றாய் இருந்துவருகிறது. அந்தளவுக்கு கொடிய வறுமையை நான் அனுபவிக்காவிட்டாலும் அதனை அருகிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன். பள்ளிநாட்கள் தொடங்கி இன்று நான் பயின்றுகொண்டிருக்கும் பல்கலைக் கழகம் வரை அனைத்துமே அரசு நிறுவனங்கள் என்பதே அதன் காரணம். மேலும் என்னை ஏதோவொரு வகையில் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவருகிறது என்பதும் ஒரு கூடுதல் காரணம்.
நன்றி.
செல்வ புவியரசன்
அன்புள்ள செல்வபுவியரசன்
அந்த குறுந்தட்டின்மேல் வைகை பிரபா என்றுதான் இருந்தது. இருவரும் ஒருவர்தானா என்று தெரியவில்லை. வைகை பிரபா சமீபத்தில் உலகத்தமிழ்மாநாட்டில்கூட பாடியிருக்கிறார்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
அண்மையில் படித்துறை படத்துக்காக இளையராஜா இசை அமைத்த பாடல்களைக் கேட்டேன். அதில் ஒரு பாடல் என்னை உலுக்கியது. நம்ம ஊர் கணியான் கூத்தில் வாசிக்கப்படும் மகுடத்தையும் மந்தத்தையும் வாசிக்க விட்டு, தேனுகா ராகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடலைக் கேட்ட போது என்னால் ஆடாமல் இருக்க முடியவில்லை. நாட்டுப்புறப் பாடல் அளிக்கும் உக்கிரமான ஒரு மன நிலையை அன்று அடைந்தேன். மிதமான போதையில் எங்கள் ஊர் சுடலை மாடன் கோவில் கொடை விழாவில் கேட்ட கணியான் பாட்டு காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கோவில்பட்டியில் நீங்கள் கேட்ட நாட்டுபுறப் பாடலைப் பற்றி படித்ததும் இதை எழுதுகிறேன்.
கோலப்பன்
அன்புள்ள கோலப்பன்,
நானும் அந்தப்பாட்டைக்கேட்டேன். அந்தப்பாடல் நம்மூர் அம்மன்கோயில் கொடை குறித்த மனப்பிம்பங்களைஎ ழுப்பியது. ராஜா அதன் வழியாக நெல்லைக்குள் இயல்பாக நுழைந்திருந்தார்
ஜெ
//அந்த பெயரின் வரலாறு மட்டும்தான் மர்மமாக இருக்கிறது’
அன்புள்ள ஜெ,
சாரங்கபாணி என்று ஒரு பெயர் உண்டு. அது விஷ்ணுவைக்குறிக்கும்.
சார்ங்கபாணி என்று ஒரு பெயர் உண்டு அது சிவனைக்குறிக்கும்.
சார்ங்கம் என்பது மான். அதை கையில் ஏந்திய சிவன் என்று பொருள்படும்.
அதன் தமிழ் உருவம் தான் “மான்பூண்டிய” (மான்பூண்ட)என்பது என்று நம்புகிறேன்.
-ராம்.