[ 23 ]
முந்தையநாள் அந்தியில் தோளில் புரண்ட புழுதிபடிந்த திரிசடைகளும் செம்பித்து சடைக்கத்தொடங்கிய நீண்ட தாடியும் தன்னுள் ஆழ்ந்து நோக்கிழந்தவை போலிருந்த விழிகளும் சற்றே தளர்ந்த நடையுமாக தூமக்கிரகம் என்னும் அச்சிற்றூரின் முள்மரக்கோட்டை வாயிலில் வந்து நின்று “அயலவன் நான். ஒருநாள் தங்க ஒப்புதல் கோருகிறேன்” என்று கூறி நின்ற அர்ஜுனனுக்கும் அவர்கள் அளித்த எல்லைச்சிறுகுடிலில் காலையில் எழுந்து வெளிவந்த அர்ஜுனனுக்கும் இருந்த வேறுபாட்டை அவனைக் கண்ட ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.
தருக்கி நிமிர்ந்த தலையும் எதிரே வருபவரை நோக்காமலேயே அளவிடும் பார்வையும் மறுத்துரை கேட்க விழையாத கூரிய சொற்களுமாக அவன் குருதிமேல் நடந்து அரியணை அமர்ந்து ஆளும் அரசன் போலிருந்தான். காலையில் அவனுக்கு இன்நீருடன் வந்த அச்சிற்றூரின் ஊர்ப்பணியாளனை தாழ்ந்த முழவொலிக் குரலால் அருகழைத்து “நான் நீராடி முடிசீரமைக்க வேண்டும். நறுமண நீரும் முடிதிருத்துபவனும் சித்தமாக இருக்கட்டும்” என்று ஆணையிட்டான்.
ஆணைகளை இயல்பாக இடுபவர் அதற்குரிய குரலை அடைந்துவிட்டவர். அக்குரலே பணியாளனை உடல் வளைத்து “ஆணை” என்று சொல்லவைத்தது. “விரைக!” என்று அர்ஜுனன் சொன்னான். இன்நீரை அருகே வைத்துவிட்டு அவன் பாய்ந்து ஊர்த்தலைவரிடம் சென்று “நீராட நறுமணநீரும் முடிதிருத்துபவனும் சித்தமாக இருக்க ஆணையிட்டிருக்கிறார்” என்றான். ஊர்த்தலைவர் “யார்?” என்றார். “நேற்று வந்தவர். அவர் அரசர்” என்றான் பணியாளன். “எப்படி தெரியும் உனக்கு?’’ என்றபடி ஊர்த்தலைவர் எழுந்தார்.
ஊர்மன்றில் அவருடன் சொல்லாடிக் கொண்டிருந்த குலமூத்தவர்கள் மூவரும் உடன் எழுந்தனர். “ஐயமே இல்லை, அவர் பேரரசர். படைகளை சொற்களால் நடத்தக்கற்றவர்” என்றான் பணியாள். “நீ இதற்கு முன் பேரரசரை பார்த்திருக்கிறாயா?” என்றார் ஒருவர். “பார்த்ததில்லை. ஆனால் தன்னை குடிமகனாக உணரும் ஒவ்வொருவரும் பேரரசர்களை புரிந்துகொள்ள முடியும்” என்றான் பணியாளன். “சிம்மத்தின் குரலை மான்கள் அறியும் என்று ஒரு பழமொழி உண்டு” என்றார் ஒரு குலமூத்தார்.
ஊர்த்தலைவர் நீராட்டுக்கும் முடிதிருத்துவதற்கும் ஏற்பாடுசெய்ய தன் இளையோருக்கு ஆணையிட்ட பின் “அவருக்கு காலை உணவென எது?” என்று கேட்டார். பணியாள் “அறியேன். எதுவாயினும் அது அரசர்களுக்குரிய உணவு” என்று சொல்லி வெளியேறி கொல்லைநோக்கி ஓடிச்சென்றான். “நாமே சென்று பார்த்துவிடுவோம். யார் என்று அவரிடமே கேட்போம்” என்றார் குலமூத்தார் ஒருவர்.
அவர்கள் விருந்தினர்குடிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த மூங்கில் ஒன்றை வெட்டி கூர்த்து அம்புகளை செய்துகொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு தயங்கினர். அருகே ஒரு மரத்தில் மாட்டப்பட்டிருந்தது காண்டீபம். மெல்லிய குரலில் “நேற்று அவரைப் பார்த்தபோதே இந்த வில் அரிதானது என்று எண்ணினேன்” என்றார் குலத்தலைவர் ஒருவர். “எப்படி?” என்று இன்னொருவர் கேட்டார். “பார்வைக்கு பழைய மூங்கிலால் செய்யப்பட்ட எளிய வில் என்று தோன்றுகிறது. எந்த வேடனும் கைக்கொள்ளத்தக்கது. ஆனால் அதன் கணுக்களை பாருங்கள்! மும்மடங்கு பெரிதாக இழுத்து நீட்டுவதற்குரியது அது. மூங்கிலால் ஆனதல்ல. அரியதோர் உலோகத்தால் ஆனது.”
“இடக்கையில் எளிதாக அவர் அதை வைத்திருப்பதைப் பார்க்கையில் எடையற்றதென்று தோன்றியது. ஆனால் ஒருமுறை அதை மண்ணில் ஊன்றி அவர் எடுத்தபோது விழுந்த தடத்தைப் பார்த்தேன். நம்மால் இருகைகளாலும் தூக்கமுடியாத அளவுக்கு எடைகொண்டது.” அச்சத்துடன் “யார் அவர்?” என்றார் இன்னொருவர். “எனது எண்ணம் பிழையற்றதென்றால் காடுபுகுந்த பாண்டவர்களில் இளையவர்.”
பிற அனைவரும் அவரை நோக்கி திரும்பி “அர்ஜுனரா?” என்றனர். “ஆம்” என்றார். “அவரா நம் சிற்றூருக்கு வந்திருக்கிறார்?” என்று ஒருவர் வியந்தார். “மெல்ல” என்றார் இன்னொருவர். “நான் அவ்வாறு சொல்லவில்லை. ஒருவேளை அவர் அஸ்வத்தாமனாக இருக்கலாம். ஜயத்ரதனாகக்கூட இருக்கலாம். கர்ணன் அல்ல. அவர் மிக உயரமானவர் என்று கேட்டிருக்கிறேன்.”
“அர்ஜுனர்தான்” என்றார் குலத்தலைவர். “எப்படி தெரியும்?” என்று ஒருவர் கேட்டார். “நேற்று அவரை முதற்கணம் பார்த்தபோதே என் உள்ளத்தில் அவ்வெண்ணம் வந்து சென்றது. அது எவ்வாறு இயலும் என்று அதை அப்போது விலக்கித் தள்ளினேன். இப்போது உறுதியாயிற்று.” அவர்கள் இணைந்து பெருமூச்சு விட்டனர். “அவர் அர்ஜுனர் என்றால் நம் ஊர் இனி எவரையும் அஞ்சுவதற்கில்லை. வில்லவர்கோன் கால் பட்ட மண்ணை பிறர் எண்ணவும் அஞ்சுவர்” என்றார் ஊர்த்தலைவர். “ஆம்” என்றனர் அவர்கள்.
அவர்கள் வணங்கியபடி அணுக அர்ஜுனன் திரும்பி “நான் இன்றே இச்சிற்றூரிலிருந்து கிளம்புகிறேன், மூத்தவர்களே. இங்கு எனக்கு அளிக்கப்பட்ட ஏற்புக்கு நன்றி” என்றான். “அது எங்கள் நல்லூழ்” என்றார் குலத்தலைவர். “பாண்டவகுலத்து இளவரசர் இச்சிற்றூரில் ஒருநாள் தங்கினார் என்பதை எங்கள் தலைமுறைகள் நினைவில் நிறுத்தும். இனி இந்தச் சிறுகுடில் எங்கள் ஆலயங்களில் ஒன்று.”
அர்ஜுனன் விழிகளில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அம்புகளை கூர் செதுக்கி அம்புத்தூளி நோக்கி எறிந்தபடி “ஆம். நான் இங்கு வர நேர்ந்தது” என்றான். “இங்கிருந்து தாங்கள் செல்ல விழையும் இடம் எதுவோ? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை செய்கிறோம்” என்றார் குலத்தலைவர். “எங்கு செல்ல வேண்டுமென்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நான்கு திசைகளும் என்னைச் சுற்றி திறந்துள்ளன. நான்கையும் நான் வென்றாக வேண்டும். முதல் திசை எதுவென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
ஒருவர் “அதிலென்ன ஐயம்? தங்கள் தந்தையின் திசையாகிய கிழக்கு” என்றார். அர்ஜுனன் அவரை பொருளில்லா நோக்குடன் திரும்பி நோக்கிவிட்டு பிறிதொரு அம்பை கூர் தீட்டினான். இரண்டு இளைஞர்கள் வந்து வணங்கி “அரசே, இளவெந்நீர் காத்திருக்கிறது. நீராட்டுக்குரிய அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டோம். முடிதிருத்துபவன் காத்திருக்கிறான்” என்றனர். “நன்று” என்றபடி அர்ஜுனன் திரும்பி நடந்தான்.
குலமூத்தாரில் ஒருவர் “அந்த வில்லை ஒருமுறை தொட்டுப்பார்க்கவேண்டும் என்று என் விருப்பம்” என்றார். “எடுத்துப்பாருங்கள்! அதற்கென்ன?” என்றார் இன்னொருவர். “பிழையாக ஆகிவிடாதல்லவா?” என்றார் மூன்றாமவர். குலத்தலைவர் “மரத்திலிருந்து சரிந்தது என்று சொல்வோம். எடுத்துப்பாருங்கள், நாமும் அதை தொட்டோம் என்பதே நாளை நம் இளையோருக்கு கதையாக சொல்லத் தக்கதல்லவா?” என்றார்.
அவர்கள் ஆர்வமும் பதற்றமுமாக ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அது ஒரு தெய்வம். இப்பாரதவர்ஷத்தை வென்று திசைதிருப்புவதற்கென்று மண்ணிலெழுந்தது என்கின்றனர் சூதர்.” ஒருவர் சென்று மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த அந்த வில்லைப்பற்றி தூக்க முயன்றார். அவர் கைகளிலும் கழுத்திலும் தசைநார்கள் இழுபட்டன. “என்ன?” என்றார் இன்னொருவர். “எடை, இத்தனை எடையிருக்கும் என்று எண்ணவேயில்லை” என்றார்.
“அது வேண்டுமென்றே தன் எடையை கூட்டிக் கொள்கிறதா?” என்று இன்னொருவர் சென்று அவருக்கு உதவினார். “எடை மாறிக்கொண்டே இருக்கிறதா?” இருவரும் அதைத் தூக்கி அருகே வைத்தனர். நடன மங்கையென உடல் வளைத்து சிறுவிம்மலோசையுடன் அது நிமிர பிடித்திருந்த இருவரும் இருதிசைகளிலாக நிலைதடுமாறி விழுந்தனர். அவர்கள் மேல் சரிந்து விழுந்து அவ்விசையிலேயே துள்ளிப் புரண்டு அப்பால் சென்றது.
கையூன்றி எழுந்து “இது உயிருள்ளது” என்றார் ஒருவர். “இளம்புரவியென துள்ளுகிறது” என்றார் மற்றவர். “அதற்குள் நாமறியா தெய்வங்கள் குடிகொள்கின்றன” என்று குலத்தலைவர் சொல்ல ஒருவர் பின்னடைந்தபடி அஞ்சிய விழிகளுடன் “அது நம் சொற்களை கேட்டுக்கொண்டிருக்கிறது” என்றார்.
“அதில் வாழும் தெய்வங்கள் நாம் தொடுவதை விரும்பவில்லை போலும்” என்றார் ஊர்த்தலைவர். இளையவனொருவன் “அது கலிங்கச் சிற்பிகளின் நுண் பொறி. அதற்குள் நாமறியாத இழுவிற்கள் உள்ளன. அவற்றை அறியாதவர் அவ்வில்லை ஏந்த முடியாது” என்றான். “இதை யார் எடுத்து திரும்ப வைப்பது? நாம் அதைத் தொட்டதை அவர் அறிந்தால் சினம் கொள்வார்” என்றார்.
“அது விழுந்துவிட்டதென்றே இருக்கட்டும்” என்று ஒரு முதியவர் சொன்னார். “அவர் நீராடி வரட்டும். உணவருந்தட்டும். கிளம்புகையில் தலைவணங்கி விடைகொடுப்போம்” என்றார். பின் நிரையில் எவரோ “அவர் இன்றே கிளம்புகிறார் என்பது நன்று” என்றார். அனைவரும் அவரை நோக்கி திரும்பினர். “நான் அவர் விழிகளைப் பார்த்தபின் சொல்கிறேன். கொல்லவரும் புலியின் நோக்கு அவற்றில் உள்ளது. நம்மை அது அறிந்திருக்கும் என்று தெரியும். ஆனால் அவ்விழிகள் நம்மை நோக்காது” என்றார் அவர்.
அங்கிருந்த அனைவரிடமும் மெல்லிய அமைதியின்மை ஒன்று பரவியது. “நாம் இம்மலைக்காட்டுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சிற்றூர்மாந்தர். பெரியவை எவற்றையும் நாம் அறிந்ததில்லை. நமது தெய்வங்களும் சிறியவையே. அஞ்சுவது ஒன்றே நாம் அறிந்தது. நாம் எதற்கு இதைப்பற்றியெல்லாம் பேசவேண்டும்?” என்று குலமுதியவர் ஒருவர் சொன்னார். “யானை கடந்து சென்றால் நாணல்கள் சரிவதில்லை.” பெருமூச்சுடன் “ஆம்” என்றார் ஊர்த்தலைவர்.
அர்ஜுனன் சடைகளை வெட்டி அகற்றி, தாடி திருத்தி, மீசையை மெழுகிட்டு கூர்மைப்படுத்தி நீராடி புதிய மான் தோலாடை இடையில் அணிந்து ஊர்மன்றுக்கு வந்தபோது அங்கு அச்சிற்றூரின் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். குழந்தைகளை இடையிலேந்திய பெண்கள் உடல் நெருக்கி கைகளால் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒற்றை உடலென நின்றனர். அவர்களின் உள்ளமும் ஒற்றைப்பெருக்கென சென்றது.
அவன் உள்ளே நுழைந்ததுமே அத்தனை விழிகளும் சென்று அவன் உடல்மேல் பதிந்தன. உடல்கள் முறுக்கப்பட்டவைபோல அசைய பெருமூச்சுகள் ஒலித்தன. அவன் நடந்து மன்றுக்கு வந்து அங்கு போடப்பட்டிருந்த புதிய மரவுரி விரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும் ஒற்றை நீள்மூச்சு எழுந்து மெல்ல உடல் தளர்ந்தனர் பெண்டிர்.
அன்னையரின் உள்ளத்தை எவ்வண்ணமோ உணர்ந்து அவர்கள் இடையிலிருந்த ஆண் குழவிகள் ஓசையிட்டன. அன்னையரின் கன்னங்களைப் பிடித்து தங்களிடம் திருப்ப முயன்றன. இடைகளில் கால்களை உதைத்து எம்பிக் குதித்தன. அர்ஜுனனை நோக்கி கைநீட்டி நாதிருந்தாக் குரல் எழுப்பின.
அன்னையர் அவற்றை மெல்ல அடித்தும் இறுக்கிப் பிடித்தும் “ஓசையின்றி இரு” “அமைதி கொள்” என்று ஆழ்குரலில் அடக்கினர். அச்சொல்லிலும் தொடுகையிலும் இருந்த அயல்தன்மையால் குழந்தைகள் மேலும் சினம் கொண்டு ஓசையிட்டன. அன்னையர் அவற்றை அதட்டுவதும் கன்னியர் திரும்பி விழியுருட்டி அடக்குவதும் கலந்து பெண்கள் நிரையே கலைந்து ஒலித்தது.
குலமூத்தார் ஒருவர் திரும்பி “என்ன அங்கு ஓசை? அமைதி” என்றார். அனைவரும் குழவிகளை அவரை நோக்கித் திருப்பி “பார், தாத்தா உன்னை திட்டப்போகிறார்” என்று மிரட்டினர். குழந்தைகள் அவரை அரைக்கணம் நம்பிக்கையின்மையுடன் நோக்கியபின் மீண்டும் அர்ஜுனனையே பார்த்தன. அப்போதுதான் விழிஒளி கொண்ட குழந்தைக்குக் கூட அங்கு எவரை நோக்க வேண்டுமென்று தெரிந்திருந்தது.
அர்ஜுனனுக்கு இருபக்கமும் ஊரின் குலமூத்தார் நிரை வகுக்க அப்பால் இளைஞர்கள் கைகள் கட்டி நின்றனர். அர்ஜுனன் முன் உயரமற்ற பீடத்தில் மரவுரி விரிக்கப்பட்டிருந்தது. ஊர்த்தலைவர் “இன்னுணவு கொள்க, அரசே!” என்றார். அவன் தலையசைத்ததும் தட்டில் சுட்ட கிழங்கும் தேனும் எண்ணையில் பொரித்த ஊனும் இலையில் பொதிந்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அப்பங்களும் மூங்கில் குவளை நிறைய மஞ்சளிட்டு கொதிக்க வைக்கப்பட்ட பாலும் பரிமாறப்பட்டது.
“அருந்துங்கள், அரசே! எங்கள் இச்சிற்றூரில் பேரரசர்களுக்குகூட இவ்வெளிய உணவையே அளிக்க முடியும்” என்றார் ஊர்த்தலைவர். அர்ஜுனன் மறுமுகமன் சொல்லாமல் அதை உண்டான். அவன் உணவுண்பதை நோக்கியபடி அவர்கள் அசைவற்று நின்றனர். அவ்வப்போது வளையொலியும் ஆடையொலியும் மூச்சுக்கசங்கலும் மென்குரல் முனகல்களும் எழுந்துகொண்டிருந்தன.
ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒற்றை எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. இவன் இளைய பாண்டவன் அர்ஜுனன். இளமை நாள் முதல் அவர்கள் கதைகளில் கேட்டறிந்தவன். சிம்மத்துடன் ஆடிய பரதனுக்கும் ரகுகுல ராமனுக்கும் அனல்குலத்து பரசுராமனுக்கும் துவாரகையின் இளைய யாதவனுக்கும் உரிய உலகில் வாழ்பவன். ராவணனும் இரணியனும் இவனுடன் வாழ்பவர்கள்.
அப்படியென்றால் கதைகளில் வாழ்பவர்கள் அனைவரும் உடல் கொண்டவர்களே! கால் கொண்டு நடந்து கை கொண்டு செயலாற்றி கண்முன் வந்து அமரத்தக்கவர்களே! அவை பொய்யல்ல, அவர்கள் ஆற்றிய குருதிப்பெருக்கெழும் பெரும்போர்கள், விண்ணும் மண்ணும் வென்று கடந்துசெல்லும் மாயப்பயணங்கள் அனைத்தும் உண்மை. அவர்களின் எரியெழும் உளக்குமுறல்கள், வஞ்சங்கள், அழியாத்துயர்கள் அனைத்தும் நிகழத்தக்கவையே. தேவர்களும் அசுரர்களும் மூன்று தெய்வங்களும் அனைத்தும் அந்த ஊர்மன்று போல் அங்கிட்ட பீடம் போல் உண்மையானவை.
அவற்றின் மேல் அமர்ந்திருக்கும் அந்த மனிதன் இருகைகளையும் விரித்துச் சிறகாக்கி விண்ணில் எழக்கூடும். வெண்புகையென காற்றில் பரவிச் செல்லக்கூடும். வெறுமொரு சொல்லென எண்ணமென ஆகி அங்கு எஞ்சவும் கூடும். தொல்கதைகளில் இருந்து ஊறிச்சொட்டி வந்து விழுந்திருக்கும் ஒரு துளி. இங்கிருந்து வளர்ந்து தொல்கதைகளுக்கு அது மீளும். எத்தனை நோக்கியும் அவன் எனும் விந்தை அழியவில்லை. எத்தனை விழிசிமிட்டிய பின்னரும் அவன் அங்குதான் இருந்தான்.
அவர்கள் அவனை தொட்டுப்பார்க்க விழைந்தனர். அவன் செல்லும்போது உடன் சென்றால் இளமையின் ஒளி பரவிய அத்தொல்கதைகளுக்குள் சென்றுவிடமுடியுமென்று எண்ணிக் கொண்டனர். அவன் வெற்றிகளை நினைவுகூர்ந்தனர் இளையோர். அவன் கொண்ட காதலிகளை நினைத்துப்பார்த்தனர் பெண்டிர். மெய்நாடி அவன் சென்ற பயணங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருந்தனர் முதியோர்.
பின்னர் அவர்கள் மெல்லிய ஏமாற்றம் ஒன்றை அடைந்தனர். இவன் மனிதன், அந்தக் கதைகளில் வாழும் சொற்தலைவர்களைப்போல் அல்ல, வெறும் மனிதன். அப்படியென்றால் இளைய யாதவரும் மனிதனே. ரகுராமனும் பரசுராமனும் மனிதனே. இந்திரனும் எமனும் இவர்களை போன்றவர்களே. மூன்று தெய்வங்களும்கூட மானுடத்தன்மை கொண்டவர்கள்தான்.
கதைகளை சொல்லிச் சொல்லி தாங்கள் களைந்திட்டது மானுடத்தன்மையை என்று அவர்கள் உணர்ந்தனர். அம்மானுடத்தன்மையே ஆகி வந்து அமர்ந்திருக்கும் அவனை மீண்டும் கதைகளுக்குள் செலுத்த விழைந்தனர். அங்கிருந்து அவன் காற்றின் திரை விலக்கி உள்ளே சென்று மறைந்துவிடவேண்டும். விண்ணிலிருந்து ஒளிச்சிறகுகளுடன் கந்தர்வர்கள் வந்து அவனை தூக்கிச் செல்லவேண்டும். அவனைச் சுமந்து செல்ல பொன்னிற வாருடன் புரவி வந்து நிற்க வேண்டும்.
உணவருந்தி அவன் எழுந்தவுடன் ஊர்த்தலைவர் “எங்கள் இளையோரை வாழ்த்துக. அரசே! தங்கள் வில்திறன் சற்றேனும் இங்கு திகழ்க!” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “குழந்தைகளை கொண்டுவாருங்கள்” என்று முதியவர் பெண்களை நோக்கி சொன்னவுடன் அவர்கள் கால் தளர்ந்து நெஞ்சு படபடக்க பின்னடைந்தனர். “என்ன அங்கே? விரைந்து வாருங்கள். அவர் கிளம்பவிருக்கிறார்” என்றார் முதியவர்.
“செல்லடி” என்று ஒருத்தி இன்னொருத்தியை தள்ளினாள். “ஐயோ!” என்று அவள் பின்னடைந்தாள். “போடி” என்று இன்னொருத்தி முன்னால் வந்தாள். “என்னால் முடியாது” என்ற அவள் இருவரை ஊடுருவி பின்னால் சென்று ஒளிந்துகொண்டாள். ஒருவரோடொருவர் முட்டி மோதியபடி அவர்கள் அங்கேயே நின்று ததும்பினர். உள்ளங்கால் வியர்த்து வழுக்கிவிழுந்துவிடுவோம் என அஞ்சினர்.
இளம்பெண்ணொருத்தி அருகிருந்த இன்னொருத்தி வைத்திருந்த குழந்தையைப் பிடுங்கி தன் இடையில் எடுத்துக்கொண்டு உறுதியுடன் காலடி வைத்து முன்னால் சென்று அர்ஜுனன் முன் நின்றாள். “இது யார் குழந்தை?” என்றார் குலத்தலைவர் புருவங்களை சுருக்கியபடி. முந்தானையால் வியர்த்த முகம் துடைத்து உரத்த குரலில் “என் அக்காள் குழந்தை. எனவே என் குழந்தையேதான்” என்று அவள் சொன்னாள். அவளுடைய நிமிர்வையும் துடுக்கையும் கண்டு பிற பெண்கள் கூசி சிலிர்த்து தங்களுக்குள் சிரித்தனர். அவளாகி அங்கே அவர்களே நடித்தனர்.
அர்ஜுனன் அவள் கையிலிருந்து அம்மைந்தனை வாங்கி அவன் வலது கையை விரித்து அதில் தன் வலது கையை வைத்து “வில் சிறக்கட்டும்” என்று வாழ்த்தினான். குழவியை திருப்பி அளித்தபோது அவன் விரல்கள் அப்பெண்ணின் விரல்களை தொட்டன. அதுவரை அவள் நடித்துக் கொண்டிருந்த நிமிர்வும் துடுக்கும் அகல கால் தளர்ந்து மெய்குழைந்து அவள் தலைகுனிந்தாள். “செல்க, அடுத்த குழந்தை வரட்டும்” என்றார் ஊர் முதியவர்.
அவள் அவனைப் பார்த்தபடியே கால்களை பின்னெடுத்து வைத்து நின்றாள். மூக்கு நுனியும் மேலுதடும் வேர்க்க கழுத்து ஈரம் குளிர்ந்து பளபளக்க மூச்சில் முலைகள் எழுந்து அமர அங்கேயே நின்றாள். அவள் நிலையை தன் உடலால், உள்ளமைந்த ஆணெனும் சிறுதுளியால் உணர்ந்த குழவி இருகைகளால் அவளை முகத்தில் அடித்து கால்களை உதறி சிணுங்கியது. உடல் திருப்பி தன் அன்னையை நோக்கி கைநீட்டி “அம்மா! அம்மா!” என்றது. அவள் அங்கு நின்றே கைகளை நீட்டி “வா!” என்று அதை அழைக்க தாவியபடி அம்மா என்று வீறிட்டது. “செல்லடி! அடுத்தவர் வரட்டும்” என்றார் குலமுதியவர்.
அவள் தலைகுனிந்து கனவிலென மெல்ல நடந்து கூட்டத்திற்கு திரும்பினாள். குழவியை அதன் அன்னை அள்ளி எடுத்துக் கொண்டாள். சினத்துடன் திரும்பி தங்கையிடம் “என்ன துடுக்கு உனக்கு? உன்னைப்பற்றி இங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்றாள். அவள் அச்சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. பெருமூச்சு விட்டபடி சிவந்த கண்களுடன் வெம்மை தளதளத்த உதடுகளுடன் சற்றே திரும்பி அர்ஜுனனுக்கு தோள்காட்டி தொலைவை நோக்கி நின்றாள்.
அதன்பின் ஒவ்வொரு பெண்ணும் குழந்தையுடன் ஒருவரையொருவர் முந்தியும் தங்களுக்குள் ஒட்டியும் அர்ஜுனனை நோக்கி சென்றனர். அவன் ஒவ்வொரு குழந்தையாக எடுத்து அவற்றின் வலக்கையில் தன் கையை வைத்து “வில் சூடுக!” என்று வாழ்த்தினான். குழந்தைகள் கையில் இல்லாத பெண்கள் குழந்தை ஏந்திய பெண்களின் தோளை அணைத்தபடி உடன் சென்றனர். அர்ஜுனன் முன் சென்று நின்று அவன் உடலை தங்கள் விழிகளால் முழுதும் தொட்டு நோக்கினர். அவன் உடலில் இருந்த வடுக்கள் பாலுறுப்பு என அவர்களை கிளரச் செய்தன.
பெண்கள் நிரை முடிந்ததும் இளையோரிடம் சென்று “படைக்கலம் கொள்க!” என்றார் குலமுதியவர். ஒரு கூடை நிறைய அம்புகளும் குறுவாட்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அக்குலத்து இளையோர் சென்று அர்ஜுனன் முன் பணிந்து அவன் கால்களைத் தொட்டு சென்னி சூடினர். அவன் அம்பையோ குறுவாளையோ எடுத்து அவர்களிடம் கொடுத்து “வெற்றி திகழ்க!” என்று வாழ்த்தினான். அவன் கையில் இருந்து வாள் பெற்றவர்கள் அது எடை மிக்கது என்பது போல் தசை அதிரப் பெற்றனர். சிலர் உளம் பொங்கி விழிநீர் மல்கினர். சிலர் மீண்டும் ஒரு முறை குனிந்து அவன் கால்களைத் தொட்டு வணங்கினர். அவன் கைகள் தங்கள் கைகளில் பட்டபோது மெய்விதிர்ப்பு கொண்டனர்.
வாழ்த்துக்கள் முடிந்ததும் அர்ஜுனன் கைகூப்பி “நன்று திகழ்க! இச்சிற்றூரில் ஒருநாள் உணவருந்தியிருக்கிறேன். நானும் எங்கள் குலமும் உங்கள் ஊருக்கு கடன்பட்டவர்கள். நான் செல்கையில் இச்சிற்றூரின் வெளியே நிற்கும் கொன்றை மரத்தில் என் இலச்சினையை பொறித்துவிட்டுச் செல்வேன். இச்சிற்றூருக்குள் நுழையும் யாரும் இது எனது மண் என உணரவேண்டும். இனி இச்சிற்றூர் எவ்வரசுக்கும் திறை அளிக்கலாகாது. எனது ஆணை கொண்டு இங்கு அமர்ந்திருக்கும் இவ்வூர்த்தலைவரை மீறி இச்சிற்றூருக்குள் நுழைபவன் எவராயினும், இவர் விரும்பாததைச் செய்பவன் யாராயினும், இந்திரப்பிரஸ்தத்தின் பகைமையை ஈட்டிக்கொள்கிறான். அவனை வென்று குலமறுக்கும் என் சொல். என் குலத்தின் இறுதி மைந்தன் இருக்கும்வரை என் சொல் வாழும்” என்றான்.
குலத்தலைவர் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கி அடைத்த குரலில் “வெல்க! வெல்க பார்த்தன் புகழ்!” என்றார். உடனே உளம் உடைந்து தேம்பி அழத்தொடங்கினார். “எங்கள் குடி இனி வென்று பெருகும். தெய்வங்களே, இதற்குமேல் நாங்கள் ஈட்டுவதற்கேதுமில்லை. எங்கள் மூதாதையர் செய்த நல்லூழால் இது எய்தப்பெற்றது” என்றார் ஒருவர். முதியவர்களும் பெண்களும் விழிநீர் பெருக நெஞ்சில் கைவைத்து நின்றனர்.
அர்ஜுனன் மன்றிலிருந்து இறங்கி முற்றத்திற்கு வந்தபோது அவன்முன் முதலில் வந்துநின்ற பெண் கைதூக்கி உரத்த குரலில் “தென்றிசைக்குச் செல்க!” என்றாள். அவன் திரும்பி நோக்க அவள் விழிகள் உருள கைகள் விரைத்து உடலுடன் ஒட்டியிருக்க “தென்றிசையினை வெல்க!” என்றாள். அவள் கருவிழிகள் மேலேறியிருக்க கண்கள் வெண்ணிறப்புள்ளிகளாகத் தெரிந்தன.
“ராதை, என்ன இது?” என அவள் அன்னை அருகே கைநீட்டியபடி செல்ல அவள் “உம்” என்றாள். அவ்வொலியில் அன்னை திகைத்து பின்னடைந்தாள். அவளைச் சூழ்ந்து நின்ற அனைவரும் விலகி வழிவிட்டார்கள். அவள் இறுகிய கால்களுடன் படியிறங்கி வந்தாள். “மூதாதையரை வெல்லாதவனுக்கு புதிய வழிகள் இல்லை. குலம்பழிக்க வாழ்பவர்களுக்குரியது தெய்வங்களின் படைக்கலம்” என்றாள்.
அர்ஜுனன் அவளை நோக்கி நின்றான். அவள் சென்று காண்டீபத்தை இடக்கையால் எடுத்துவந்து அவனிடம் நீட்டி “கொள்க!” என்றாள். அவன் தலைவணங்கி அதை இருகைகளாலும் பெற்றுக்கொண்டான்.