மணி ரத்னத்தின் ஆணையை ஏற்று அனைத்தையும் தானே செய்து அஜிதன் எடுத்த குறும்படம் இது. ஆனால் அவனுக்குப்பிடித்தமான டெரன்ஸ் மாலிக் போல என்ன ஏது என்று தெரியாமல் படிமங்களாகவே இருக்கிறது. வழக்கமான குறும்பட, திரைப்பட ரசிகர்களுக்குரியது அல்ல. திரைப்படம் சிறுகதை, நாவல் ஆகியவற்றுக்கு நெருக்கமானது அல்ல அது நவீனக் கவிதைக்கு அணுக்கமான என்று எண்ணும் பள்ளி இது. இது ஒருவகை காட்சிக்கவிதை . நவீனக்கவிதைக்குரிய எதிர்மறை அழகியலும் அராஜகத்தன்மையும் இருண்மையும் கொண்டது.
மணிரத்னத்தை இலக்காக்கி எடுக்கப்பட்டது இது. அவருக்கு கொண்டுபோய் போட்டுக்காட்டினான். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு உலகைவென்ற நிறைவுடன் படம் தூக்கிப் போடப்பட்டது. நான் வற்புறுத்தி வலையேற்றச் செய்தேன்.
அஜிதனின் கல்லூரி நண்பன் தாமரை காமிரா பற்ற உதவினான். ஒரே ஒரு 5டி காமிரா அன்றி பிற கருவிகள் இல்லை. விளக்குகள் காமிராவை நகரச்செய்யும் கருவிகள் ஏதும் இல்லை.படப்ப்பிடிப்புக்குழு தாமரையும் அஜிதனும் மட்டுமே. ஒலிச்சேர்ப்பு, படத்தொகுப்பு உட்பட அனைத்துத் தொழில்நுட்பங்களும் இலவச மென்பொருட்களால் அஜிதனால் வீட்டிலேயே செய்யப்பட்டன. நடிகர்களுக்கான ‘ஊதியம்’ உடபட மொத்தச்செலவும் ரூ 6000.
இதை வலையேற்றி இச்செலவையும் இதை எடுத்த முறையையும் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் மாற்றுத் திரைப்படங்களை அனேகமாக முற்றிலும் பணச்செலவில்லாமலேயே எடுத்துவிடமுடியும் என்பதற்காகத்தான். சிற்றிதழ் இயக்கம் போல சினிமா இயக்கமும் நிகழமுடியும். அது நமக்குரிய கலையாக அமையக்கூடும்
===========================================
ஜெயமோகன் நீர் நிலம் நெருப்பு ஆவணப்படம்