‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15

[ 20 ]

வெண்சுண்ணத்தால் ஆனது அர்ஜுனன் தவம் செய்துகொண்டிருந்த குகை. அதன் மேல்வளைவிலிருந்து பன்றியின் முலைக்கொத்துபோல் தொங்கிய சுண்ணக் குவைகளில் நீர் ஊறித்துளித்து சொட்டிக் கொண்டிருந்தது. குகையின் ஊழ்கநுண்சொல் என அது தாளம் கொண்டிருந்தது. அர்ஜுனன் சாய்ந்து அமர்ந்திருந்த சுண்ணக்கல் பீடத்திற்கு நேர்முன்னால் குத்தி உருவி எடுத்த கத்தி நுனியிலிருந்து சொட்டும் கொழுங்குருதி போல நீர் உதிர்வதை அவன் பல்லாயிரம் வருடங்களாக நோக்கிக் கொண்டிருந்தான்.

நகரங்கள் எழுந்து பொலிந்து போரிட்டு புழுதியாகி மறைந்தன. மக்கள்திரள்கள் பிறந்து குடிதிரட்டி முறைமையாகி வழக்கமாகி சொல்லாகி நூலாகி நூல்நிறை சொல்லை மட்டுமே எஞ்சவிட்டு நினைவாகி அழிந்தன. துளி ஒவ்வொன்றும் ஒரு புவி. ஒவ்வொன்றும் ஒரு கணம். கணங்களைக் கோத்து உருவாக்கப்பட்ட விழிமணிமாலை.  கோக்கும் சரடென்பது அவை ஒன்றை ஒன்று ஈர்த்திருக்கும் விசை. சென்றுகொண்டிருந்தது விழிகளின் காலம். அறிவிழிகள். அறியாமின்கள். நுண்சொற்கள். அமைதிச்செறிவுகள். விண்மீன்களின் நீள்சரடு என ஆகிய வானம். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு சென்றுகொண்டிருந்த பொருளின்மை. ஒன்று மற்றொன்றிடம் கொள்ளும் பொருள்.

ஒளி கொண்டு நுண்மின் கொண்டு நலுங்கிய நீள்குவை நுனித்துளி உதிராது நடுங்குவதை அவன் கண்டான்.  அவ்வொளி மேலும் சுடர்கொண்டு சுண்ணக்குவை நீட்சியை மென்மையாக மின்ன வைத்தது. நோக்கி இருக்கையிலேயே குகையின் சுண்ண நெகிழ்வுகள் அனைத்தும் மிளிரலாயின. குகைக்குள் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்த சிறிய ஓடை ஒன்று நீரொளி கொண்டது. காற்று ஒளியால் நனைந்தது. அதற்கு எதிர்வினையென அவன் உள்ளம் மலர்வடைந்தது.

புன்னகைக்கும் முகத்துடன் திரும்பி குகைவாயிலை நோக்கியபோது அங்கு நின்றிருந்த நெடிய உருவை அவன் கண்டான். உவகையுடன் முகமனுரைத்து எழ முயன்றாலும் நெடுங்காலத்துக்கு முன்னரே முற்றிலும் மறந்துவிட்டிருந்த மொழி நாவை வந்தடைவதற்காக அவனுள் எங்கோ நின்று தவித்தது. விழிகளில் மட்டும் உணர்வுகள் கூர் கொண்டெழ அவன் உடல் அசையாமல் அமர்ந்திருந்தது.

நீண்ட கால்களை சுண்ணப்பரப்பின்மீது எடுத்து வைத்து அவர் அவனருகே வந்து நின்றார். அவருடன் தொற்றிக்கொண்டதென வெளியிலிருந்து உள்ளே வந்த வெண்ணிற ஒளி குகையறையை நிறைத்து ஒவ்வொரு நீர்த்துளியையும் வெண்சுடராக்கியது. “அருகன் அடி வாழ்க!” என்று இனிய மென்குரலில் அவர் சொன்னார். “அருகர் சொல் வாழ்க!”

எண்ணியிராத கணத்தில் தடையுடைத்து நாவிலிருந்து தெறித்தது அவன் மொழி. “தூயவரே! தாங்களா…? தங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று அவன் சொன்னான். நேமிநாதர் புன்னகையுடன் “நீ இங்கிருப்பதை அறிந்தேன். நாம் மீண்டும் சந்திக்கவேண்டிய இடம் இது” என்று சொன்னார்.

அவன் “எத்தனை காலமாக இங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. இங்கு வந்தது எதற்கென்பதை இப்போது மறந்துவிட்டேன். இங்கிருக்கும் இக்கணத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அது அவ்வாறுதான். ஊழ்கமென்பது பல்லாயிரம் மடங்கு களிஎழும் மயக்கு” என்று அவர் சிரித்தபோது வெண்பற்கள் பளீரிட்டன.

மயிர் அகற்றப்பட்ட வெண்ணிறத்தலை ஒளிபட்டு நீலநரம்புகளுடன் மண்டையோட்டு வளைவுகளுடன் வெண்பளிங்கு உருள்கல்போல தெரிந்தது. வடித்து நீட்டப்பட்ட காது தோள் தொட்டு தழைந்தது. கூர்கொண்ட நீள்மூக்கு. செவ்விதழ் குமிண் உதடு. இறுகிய பெருந்தோள்கள். தாள்தொட நீண்டிறங்கிய கைகள்.  குறுகிய இடை அகன்று நீண்டு நிலம் தொட்டு நின்றிருந்த நெடுங்கால்கள். அருகர்களுக்குரிய உடல். அவ்வுடலிலேயே அவர்கள் நிகழமுடியும்.

“தங்களை ரைவத மலையில் பார்த்து மீண்டபோது இருந்த அதே தோற்றத்தில் இருக்கிறீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “இது நான் வீடுபேறடைந்தபோது இருந்த தோற்றம். விழையும்போது இத்தோற்றத்துக்குள் நான் புகுந்துகொள்ள முடியும்” என்றார் நேமிநாதர். “தாங்கள் எங்கிருக்கிறீர்கள் இப்போது?” என்று அர்ஜுனன் கேட்டான். “கால இடத்தில் இருந்த எல்லை உதிர்த்து இப்புடவி முழுக்க பரவி எங்குமிலாதிருக்கிறேன். எங்குமிருக்கும் ஒன்றாகவும் இருக்கிறேன். இது என் வானத்தோற்றம். என்னில் எழுந்தது துளி வானம்” என்று அவர் சொன்னார்.

அர்ஜுனன் கைகூப்பினான். அவர் அர்ஜுனனின் அருகில் அமர்ந்தார். “இங்கு நீ வந்திருப்பது படைக்கலம் பெறுவதற்காக. இளைய பாண்டவனே, இந்திரகீலம் என்னும் இம்மலையைப்பற்றி நீ அறிந்திருக்கிறாயா? மண்ணில் இருந்து நெடுந்தொலைவில் இரண்டின்மை பெருகிப்பரந்த விண்ணுக்கருகே அமைந்துள்ளது இம்மலைமுடி. இதை அத்வைதகம் என்பார்கள். இங்கு ஒரு கை ஓசை மட்டுமே எழும். எவ்வொலிக்கும் எதிரொலி இல்லா உச்சம் இது.”

அப்போதுதான் அதை அர்ஜுனன் உணர்ந்தான். “ஆம், இங்கு வந்தது முதல் அவ்வேறுபாட்டை நான் உணர்ந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் தெளிந்தேன்” என்றான். “ஊடும் பாவுமென பின்னி கீழே புடவிப்பெருக்கை நெய்துள்ளன விசையிருமைகள். இருளும் ஒளியும், கருணையும் கொலையும், நன்றும் தீதும், அறமும் மறமும், இருத்தலும் இன்மையுமென இருபால் திரிபால் ஆனது அப்புவி. இங்கு அவற்றில் ஒன்று மட்டுமே உள்ளது. ஒளி, கருணை, நன்று, அறம், அன்பு ஆதல். இங்கு நீ எதையும் வெல்வதற்கும் கொள்வதற்கும் இல்லை. இங்கு உனக்கு எதிர்நிலையே இல்லை.”

“இம்முழுமையை வந்தடைந்தபின் திரும்பிப்பார்த்தால் அங்குள்ள வாழ்க்கை வீண் கனவென்று தெரியும். வருக!” என்றார். அர்ஜுனன் “நான் எந்தையைப் பார்க்கும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றான். “ஆம், இது இந்திரனின் நிலம். ஆனால் இங்கு எழுந்தருளும் இந்திரன் விழைவின் தெய்வம். இங்கு இவ்வாறு அமைவதனால்தான் அங்கு அவ்வாறு அமைகிறான்” என்றார் நேமிநாதர். “என்னுடன் வருக! கீழே என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று நான் உனக்குக் காட்டுகிறேன்” என்றார். அர்ஜுனன் தயங்க அவர் தன்  கைகளை நீட்டி அவனைப் பற்றினார். “எழுக!” என்றார். அவன் எழுந்துகொண்டான்.

“நீ இங்கு வந்தது நன்று. ஏழு பிறவிகளில் எய்திய நிலைகளின் உச்சம் இது. நீ இங்கு வருவது முன்பு ரைவத மலைக்கு வந்தபோதே முன்குறிக்கப்பட்டுவிட்டது. பாண்டவனே, விற்தொழில் கற்று கடந்து அதன் எல்லையை அன்றே நீ அறிந்திருந்தாய். தன் படைக்கலம் பொருளற்றதாக ஆவதை ஒரு கணத்தில் உணர்ந்த பின்னரே பெருவீரன் பிறக்கிறான்.”

அர்ஜுனன் “ஆம், அன்று அறிந்தேன். கொல்லாமை என்பதே கொலைத்தொழிலின் உச்சம் என்று. அன்று தொடங்கியது இப்பயணம்” என்றான். “முதற்காலடி ரைவதத்திலிருந்து எடுத்து வைத்தாய். இறுதிக்காலடியை இங்கு வைத்திருக்கிறாய். வருக, அங்கு உனக்காக காத்திருக்கிறார்கள்.” “எவர்?” என்று அவன் நடுங்கும் குரலில் கேட்டான். “வருக!” என்றபின் மீண்டும் புன்னகைத்தார்.

அவரது கைப்பிடிக்குள் அடங்கியது அவன் கை. அவன் எழுந்து நடந்தான். நீர் ஓடி தசைப்பரப்பென வெம்மையும் வழுவழுப்பும் கொண்டிருந்த சுண்ணப்பாறைகளினூடாக அவன் நடந்தான். நீராவி நிறைந்திருந்த  குகைக்குள்ளிருந்து வெளியே சென்று நீராவி குளிர்ந்து புகையென்றாகிச் சூழ்ந்த ஊற்று விளிம்பைக் கடந்ததும் இந்திரகீலத்தின் மீது வளைந்து நின்றிருந்த ஏழுவண்ண விண்வில்லை பார்த்தான்.

“எந்தையின் வில்” என்று சொல்லி இரு கைகளையும் விரித்தான் அர்ஜுனன். உவகையில் விழிநீர் துளிர்த்தது. “எந்தையின் பேருருவம்” என்றான். “வருக!” என்று அவனைத் தொட்டு அழைத்தார் நேமிநாதர். பன்னிரு முறை காலெடுத்து வைத்ததும் அவ்வானவில் மலையடுக்குக்குக் கீழே மாபெரும் வட்டமாக மாறிவிட்டிருப்பதை கண்டான். திகைத்து சொல்மறந்து நின்றான். கைகள் சோர்ந்து விழுந்தன.

“இந்திரனின் முற்றுருவம் இது. முடிவிலா ஆழிச்சுழற்சி. தன் விழைவுத் தோற்றத்தை துறவுத்தோற்றத்தால் முழுமை செய்து கொண்டிருக்கிறான்” என்றார் நேமிநாதர். அவர்களுக்கு இருபுறமும் ஒளிகொண்டு நின்றிருந்த வெண்முகில்திரைகளுக்கு அப்பாலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

உவகையும் பதற்றமும் நிலைகொள்ளாமையுமாக அவன் அம்முகங்களை மாறிமாறி நோக்கினான். “இங்கிருக்கிறார்களா இவர்கள் அனைவரும்…?” என்றான். அவர் புன்னகைத்து “எங்குமிருக்க அவர்களால் இயலும். இங்கிருப்பதும் அவ்வாறே” என்றார். ஒளிமிக்க முகங்கள். கருணை மலர்ந்த விழிகள். கைகூப்பி “எந்தையரே” என்றான். “நீ வந்திருக்கும் இடம் இனியது. உன்னுள் எஞ்சியிருக்கும் அனைத்து படைக்கலங்களையும் கைவிடு. அந்த ஒளிரும் ஆழியை ஏந்தி முழுமை கொள்” என்று நேமிநாதர் சொன்னார்.

அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த முகங்களை மாறிமாறி நோக்கியபடி பலமுறை சொல்லெடுக்க முயன்றான். “துறந்து தணிந்து மறைந்து அருகர்கள் அடைவதை அடைந்து வென்று நின்று நீ எய்தினாய். கடந்தவனையே மாவீரன் என்கின்றனர்” என்றார் நேமிநாதர். “இங்கு அமைவது மண் எழுந்து மலைமுடியாவதுபோல.”

அவன் உள்ளத்தில் நால்வரும் கடந்துசென்றனர். அதை அறிந்தவர்போல “இங்கு வருக! இங்கிருந்து மூன்றடி தொலைவு அந்த பொன்னிறவரிக்கு. முதலடியில் உன் படைக்கலங்களை கைவிடுக! இரண்டாவது அடியில் அப்படைக்கலங்களை தக்கவைத்திருக்கும் அச்சத்தை கைவிடுக! மூன்றாவது காலடியில் அவ்வச்சமென தன்னை காட்டிக் கொண்டிருக்கும் ஆணவத்தை கைவிடுக! அங்கு கீழே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்று உனக்குக் காட்டுகிறேன்” என்று அவன் தோளில் அவர் கையை வைத்தார். “திரும்புக, நோக்குக!”

அறியாது தலைதிருப்பி அதற்கு முந்தைய கணமே திரும்பிக்கொண்டு “இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “நான் அங்கு நோக்க விழையவில்லை.” அவர் “நீ வாழ்ந்த உலகு அது. அங்கிருந்து எழுந்துள்ளாய்” என்றார். “நான் அங்கு மீளவே விழைகிறேன். அது பொருளிழப்பதை விரும்பவில்லை.” நேமிநாதர் “இனியவனே, இங்கிருந்து மீண்டு அங்கு செல்வதென்பது மடமை” என்றார்.

அர்ஜுனன் “ஆம், இங்கிருந்து திரும்புவது பெரும் வீழ்ச்சி. ஆனால் சில தருணங்களில் நாம் சிறியவற்றையே தெரிவுசெய்கிறோம்” என்றான். நேமிநாதர் “அங்கு உன்னை கவர்வதென்ன? இவையனைத்தையும் துறந்து அங்கு நீ சென்று மகிழப்போவதுதான் எது?” என்றார்.

“அங்கு என் தோழர் இருக்கிறார்” என்று அவன் சொன்னான். நேமிநாதர் புன்னகையில் அவன் நன்கு அறிந்த ஓர் ஒளி கடந்துசென்றது. “இப்பெருநிலையையும் நான் அவருக்காக உதறவே விரும்புகிறேன்.” அவர் “அவன் உழலும் ஆழிச்சுழற்சியை நீ அறியமாட்டாய். அங்கு எய்துவதென்பது ஏதுமில்லை. இழத்தல் என்பதே அவன் ஊழென்று முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது” என்றார்.

“நான் அவருடன் இருக்கவும் இழக்கவுமே விழைகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். கனிந்த கண்களுடன் விண்ணிலிருந்து என நேமிநாதர் அவன் மேல் குனிந்து கேட்டார் “நீ இழக்கவிருப்பது என்னவென்றறிவாயா?” அர்ஜுனன் “ஆம், இழப்பு என்பது ஒரு தொடக்கமே. ஓர் இழப்பு பிறிதொன்றை கொண்டு வருகிறது, நீர் நீருக்கு வழியமைப்பதுபோல. நான் அனைத்தையும் இழப்பேன் என்று அறிகிறேன்” என்றான்.

அவர் கண்கள் மேலும் கனிந்தன. “ஆம், அவன் முற்றிலும் இழப்பான். அவன் இழப்புக்கு இணையானதே உனக்கும் நிகழும்.” அர்ஜுனன் “அவருக்கு இணையாக எனக்கும்  நிகழவேண்டுமென்பதே என் விழைவு” என்று சொன்னான். அவர் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டார். “அருள்க, அருகரே!” என்றான் அர்ஜுனன். “நான்  இங்கு வந்ததே அவருக்கு நிகரானவனாக ஆகும்பொருட்டுதான்.”

இங்கு நீ கொள்ள வந்த படைக்கலம் எது?” என்று அவர் கேட்டார். “எப்படைக்கலம் அவருக்கு இணையாக என்னை நிறுத்துமோ அது. ஒருகணமேனும் அவர் முன் என்னை தணியச் செய்யாத ஆற்றலுள்ளது” என்றான். அவர் புன்னகைத்து “அது உனக்கு அமைவதாக!” என்றார். அர்ஜுனன் கைகூப்ப ஒளிரும் விழிகளுடன் அவர்கள் அவனை வாழ்த்தினர்.

“விடைகொடுங்கள்! நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்று குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவன் தலைமேல் கைவைத்து “நன்று! படைக்கலங்களில் முதன்மையானது இன்று உன்னால் அடையப்பட்டது. அது படைக்கலங்களில் இறுதியாகவே எடுக்கப்படவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆணை” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் திரும்பி வெம்மை கொண்டு நின்ற சுண்ணப்பாறைகள் மேல் கால்வைத்து தாவி நடந்து முகில் திரைக்குள் மறைந்தார்.  முகிலொளிக்குள் அவர்கள் ஒவ்வொருவராக கரைந்தழிந்தனர்.

அவர் காலடி பட்ட பாறைகளில் பதிந்த ஈரம் விழிமுன் உலர்ந்து மறைவதை அவன் கண்டான். அது முன்னரே கண்ட பாதத்தடமென எண்ணி அவன் உள்ளம் துணுக்குற்றது. பின்பு வழுக்கும் பாறைகளில் கால் வைத்து தடுமாறி ஓரிரு முறை முழங்கால் அடிபட விழுந்து எழுந்து மீண்டும் அக்குகைக்குள்ளேயே சென்றான். கருவறைக்குள் மீளப்புகுந்தது போல் அவன் உள்ளம் இளைப்பாறல் கொண்டது. விழி சொக்கும் துயில் வந்து மேலே படிந்தது. உடலின் அனைத்து தசைகளும் விசையழிந்தன.

கைகளை ஊன்றியபடி விலங்குபோல் நடந்து தன் பீடத்தை அடைந்தான். அமர்ந்தமர்ந்து அவன் உடல்வடிவில் பள்ளம் கொண்டிருந்தது. அவன் எழுந்து சென்றதும் அவ்வின்மையை தன்னில் வைத்திருந்தது. அதை அவன் உடல் நிறைத்ததும் வெண்பஞ்சுச் சேக்கையென குழைந்து அவனை வாங்கிக்கொண்டது. கால்களை நீட்டி கைகளை மடியில் வைத்து உடலை மெல்லத் தளர்த்தியபோது இமைகள் தளர்ந்து மூடிக் கொண்டன.

மெல்ல துயில் வந்து மேலே மென்மையான எடையுடன்  விழுந்துகொண்டே இருந்தது. அவன் அருகே கந்தர்வனின் குரல் கேட்டது. “இங்கு அவரே இந்திரனென வருகிறார்.” அவன் விழி திறந்தான். “யார்?” என்றான். பிரபாஹாசன் “அவர் சற்றுமுன் தன்னை அவ்வாறு காட்டி மீண்டார்” என்றான்.

அவன் கந்தர்வனின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். “நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம், இளைய பாண்டவரே. உங்கள் படைக்கலங்கள் நான்கு திசைகளிலும் கனிந்துள்ளன. சென்று அவற்றை கொள்க! நிலத்தமைவதையெல்லாம் வெல்க!” என்றான் கந்தர்வன்.

[ 21 ]

கந்தர்வனாகிய பிரபாஹாசனால் நாரை வடிவில் வழிகாட்டப்பட்டு இந்திரகீல மலையிலிருந்து அர்ஜுனன் கீழிறங்கி வந்தான். இறகென உதிர்வதுபோலவும் நீர்த்துளியென மண் நோக்கி தொடுக்கப்பட்டிருப்பதாகவும் உணர்ந்தான். அவன் தன்னை அறிந்தபோது நீலாக்ரத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்தான். வாழ்த்துரைக்கும் ஒற்றைச்சொல்லுடன் வானில் அவனைக் கடந்து சென்றான் நாரை வடிவ கந்தர்வன்.

உச்சித் தலையை குளிர் ஒன்று முட்டி விதிர்க்கவைக்க தான் இருக்கும் இடத்தை உணர்ந்து எதிரே எழுந்து முன்பக்கமிருந்த இந்திரகீலத்தை பார்த்தான். அங்கு நிகழ்ந்தவை அனைத்தும் கனவுக் காட்சிகள் என ஒன்றன்மேல் ஒன்று படிந்து நீர்ப்பாவைகள் போல் குழைந்து சுழியாகி புள்ளியாகி ஒளிந்தணைந்தன. ஆம் என்றது சித்தச்சொல். ஆம் ஆம் ஆம் என்றது அதன் அடியிலிருந்த ஆழம்.

மலைகளிலிருந்து  இறங்கி மண்ணுக்கு வந்தான். நிலம் தொட்டபோது அவன் ஏறிய ஆறு மலைகளும் வெறும் உளமயக்கோ என பின்னால் அலை எழுந்து வான் வருடி நின்றன. இடையில் கைவைத்து அந்த மலைகளை நோக்கினான்.  நீலமலைகள். காற்றில் அலைபாயும் திரைகள். புயல்பட்டால் சுருண்டெழுந்து பறந்துவிடக்கூடியவை. மாபெரும் நீலமலர் ஒன்றின் இதழ்கள்.

மலைகளை ஏறி உச்சி செல்லும்படி தன்னை உந்தியது எது என்று வினவிக்கொண்டான். தொலைவில் எங்கிருந்தோ விழவு ஒன்றின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. முழவோசையும் அணியும் கலந்த இசைமேல் துடித்தன  குரல்கள். வாழ்வின் ஓசை. அதிலிருந்து தப்பிச்சென்றிருக்கிறேன். இங்குளவற்றின் மெய்மை அங்குள்ளது என்று எவர் சொன்னது? இங்கு அது கலந்து பின்னி சிக்கி அறியவொண்ணாமை கொண்டுள்ளது. எனவே அங்கு அது தூயதென இருக்கவேண்டும் என எண்ணுகிறது போலும் மானுடம். இங்கு பெருநதியாவது அங்கே சிறு ஊற்றாக இருப்பது போல. வானில் கிளைவிரிவாவது மண்ணுக்குள் விதைத்துளியாவதுபோல.

ஒவ்வொரு அடியையும் வாழ்வைத் துறந்து துறந்து வைத்து மண்ணை அறியாத அவ்வுச்சிக்கு சென்று நின்றேன். அங்கிருந்த தேவனிடம் மண்ணைத் துறக்கமாட்டேன் என்று வஞ்சினம் உரைத்து மீண்டிருக்கிறேன். எண்ணியிராத கணத்தில் அவன் வெடித்து நகைக்கத் தொடங்கினான். அந்நகைப்பொலி சூழ்ந்திருந்த பாறைகளில் பட்டு எதிரொலித்து அவனைச் சூழ்ந்தபோது மேலும் மேலும் நகைப்பு பொங்கி எழுந்தது.

அவனே அதைக்கேட்டு துணுக்குற்றபோதிலும்கூட அவனால் அதை நிறுத்த முடியவில்லை. கைகளால் தொடையையும் அருகிருந்த மரத்தையும் அறைந்து வயிற்றை பற்றிக்கொண்டு குனிந்தும் நிமிர்ந்தும் உரக்க நகைத்தான். தளர்ந்து கையூன்றி நிலத்தில் அமர்ந்து வானை நோக்கியபடி சிரித்து உடல் அதிர்ந்தான். மூச்சு ஒழிந்தபோது நகைப்பை நிறுத்தி மெல்ல எழுந்து மீண்டும் நகைப்பெழ ஓசையின்றி உடல் குலுங்கினான்.

ஓய்ந்து தளர்ந்து அவ்வூர் நோக்கி செல்கையில் அவ்வப்போது எழுந்த சிரிப்பை தன்னுடலில் இருந்து எழுந்ததென அறியாதவன்போல் திகைப்புடன் அவனே பார்த்தான். சிரிப்பது எதற்காக? அவ்வாறு எண்ணியதுமே அவ்வெண்ணமே சிரிப்பாக வெளிப்படுவது எவ்வாறு?

ஊரிலிருந்து மலைகளை நோக்கி வந்த ஒற்றையடிப்பாதையில் அருகே காட்டுக்குள் கனிந்திருந்த பழங்களையும் மரக்கிளையில்  எருமையகிடெனத் தொங்கிய தேன் கூடொன்றையும் கொய்து உண்டபடி அவன் நடந்தான். எதிரே இளமுனிவனொருவன் நடந்து வருவதைக் கண்டான். அவன் நடையிலிருந்த துடிப்பும் முகத்தில் தெரிந்த துறவின் இறுக்கமும் அவன் செல்வதெங்கு என்று காட்டியது. சற்று ஓய்ந்திருந்த சிரிப்பு வெளிப்படத்தொடங்கியது.

மீண்டும் மீண்டும் என சிரிப்பு அவன் உடலை உலுக்கியது. அவன் சிரிப்பொலியை தொலைவிலேயே கேட்ட இளமுனிவன் நடை தாழ்த்தாமல் விழிவிலக்கி அணுகி வந்தான். குரல் தொடும் தொலைவுக்கு அவன் வந்ததும் “உத்தமரே, தாங்கள் மலைகளுக்கா செல்கிறீர்கள்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவன் கடந்து செல்ல அவன் முதுகை நோக்கி “மலைகளில் மெய்மை கனிந்திருக்கிறது. குறவர்கள் அதை மலைத்தேன் என்கிறார்கள். கரடிகள் அதை இனிமை என்கின்றன. முனிவர்கள் அதன் கீழ் கால்மடித்து அமர்ந்து கைகுவித்து அது உதிர்க்காத தேனை அருந்துகிறார்கள்” என்றான்.

இளமுனிவன் நடை தளர்வதை அர்ஜுனன் கண்டான். “ஏழு மலைகள், உத்தமரே. ஏழாவது மலைமேல் உள்ளது மாற்றில்லாத மெய்மை. மாற்றில்லாத மெய்மையால் மெய்மையை அறியமுடியாதென்பதனால் அதுவே முழுமை என்றறிக!” முனிவனின் கால் சற்று தடுக்கியதுபோல் தெரிந்தது. வெடித்துச் சிரித்தபடி அர்ஜுனன் அங்கேயே நின்று கையாட்டி “வென்று வருக, முனிவரே! அங்கு பிரபாஹாசன் என்னும் கந்தர்வன் இருக்கிறான். இந்திரனின் தோழன். அங்கு உங்களுக்கு வேண்டிய ஒருவராக மாற்றுருக்கொண்டு இந்திரன் எழுகிறான். உங்கள் தந்தையாக இருக்கக்கூடும் அது. இறங்கி ஊருக்குச் சென்று மணம் செய்துகொண்டு மனைவாழ்வு நாடு மூடா என்று அவர் சொல்வதே மெய்மை என்று உணர்க!” என்றான்.

முனிவன் ஒலிவட்டத்தைக் கடந்து அப்பால் சென்று மறைவது வரை குனிந்து அவன் சிரித்துக் கொண்டிருந்தான். பின்பு தள்ளாடும் நடையுடன் களைத்த உடலுடன்  மலையடிவாரத்தில் தேவதாருக்கள் சூழ அமைந்திருந்த ஹிமவாகம் என்னும் சிற்றூரை சென்றடைந்தான். அங்கு ஒரு திருமண விழா நடந்து கொண்டிருந்தது. எடைமிக்க மயிராடையையும் தோல்காலுறைகளையும் அணிந்த இளையோர்  முழவுகளையும் கொம்புகளையும் இசைத்தபடி ஊர்ச் சதுக்கத்தில் நடனமிட்டுக் கொண்டிருந்தனர்.

வட்டவடிவ முற்றம் அது. அதைச் சூழ்ந்திருந்தன வட்டக்கூம்பு வடிவிலான அவர்களின் குடில்கள். அவற்றின் மையத்து உச்சியில் செந்நிறமும் வெண்ணிறமும்கொண்ட கொடிகள் காற்றில் படபடத்தன. கால்கள் சீராக அமைய சுற்றிவந்து ஆடுபவர்களுக்கு நடுவே மரத்தாலான பீடத்தில் மணமகனும் மணமகளும் செம்மயிர்த் தோலாடையும் வெண்மயிர்த்தொப்பியும் பெரிய காலுறைகளும் அணிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் தலையணியில் பெரிய மலைப்பூக்கள் சூட்டப்பட்டிருந்தன.

அவ்வூரைச் சுற்றி தேவதாரு மரங்களை முட்கொடிகளால் இணைத்துக் கட்டப்பட்ட வேலி இருந்தது. அர்ஜுனன் அதன் மூங்கில் வாயில்படலைப் பற்றியபடி நின்று உள்ளே பார்த்தான். அப்பால் காட்டெருது ஒன்றை தோலுரித்து முக்காலியில் தலைகீழாகக் கட்டி எழாதெரிந்த அனலில் சுட்டுக்கொண்டிருந்தனர். எருதின் உடலை திருப்பித் திருப்பி காட்டி அனலில் ஊன் பொசுங்க வேகவைத்தனர். அருகே அமர்ந்திருந்த நாய்கள் அர்ஜுனனின் நாற்றம் அறிந்து குரைத்தபடி ஓடிவந்தன.

மரக்குடுவைகளில் நுரை புளித்து மேலெழுந்த கள்ளை கொண்டுவந்து பரப்பிக் கொண்டிருந்தவர்கள் அவனை நோக்கினர். ஓரமாக மென்மயிர்க் குவைகளென மயிராடை அணிந்து அமர்ந்திருந்த குழந்தைகளும் முதியவர்களும் எழுந்து நோக்கினர். கையில் ஊன்றிய நீண்ட கழிகளில் கட்டிய சலங்கைகளுடன் ஆடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் திரும்பி அர்ஜுனனை நோக்கி “பிச்சாடனன்” என்று உரக்க கூவினான். “கிராதன்!” என்றான் இன்னொருவன்.

அர்ஜுனன் இரு கைகளையும் தூக்கி உரக்க “நான் காலபைரவன்! இந்திரகீலத்திலிருந்து இறங்கி வருகிறேன். உங்களுக்கொரு செய்தியுடன் வந்துள்ளேன்!” என்றான். நடனமாடியவர்கள் முகம் கூர்ந்து நின்றனர். முழவும் மணியும் கொம்பும் ஓய்ந்தன. “யார்?” என்று கேட்டபடி அவர்களின் குலத்தலைவன் அருகே வந்தான். மென்மயிர்த்தொப்பியில் மலைக்கழுகின் இறகுகளை அணிந்து தோள்களில் கரடித்தோல் போர்த்தியிருந்தான். கையிலிருந்த நீண்ட கழி மீது  அவன் கொன்ற புலியின் தலையோடு கோரைப்பற்களுடன் விழிகளென அமைந்த வெண்மணிகளுடன் சீறித்தெரிந்தது.

“யார் நீங்கள்?” என்றான் தலைவன். “செய்தி சொல்ல வந்த காலபைரவன்” என்றான் அர்ஜுனன். அர்ஜுனனின் தலையிலிருந்து சடைத்திரிகள் இடைவரைக்கும் தொங்கின. மண்ணும் சாம்பலும் கலந்த உடல் சிதையிலிருந்து எழுந்து வந்ததுபோல் இருந்தது. இடையில் அணிந்திருந்த புலித்தோல் கிழிந்து நைந்து திரிகளென தொங்கியது.

“உள்ளே வருக, காலபைரவரே” என்றான் ஊர்த்தலைவன். இருவர் ஓடி வந்து வாயிலைத் திறந்தனர். அவன் உள்ளே சென்றதும் ஊர்த்தலைவன் அவன் கால்களைத் தொட்டு சென்னி சூடி “இன்று எங்கள் குல மைந்தன் மணம்கொள்ளும் நாள். தங்கள் வாழ்த்து அவனுக்கு அமையவேண்டும்” என்றான்.

ஊர்மன்று நடுவே வந்து நின்ற அர்ஜுனன் கையை நீட்டி “ஊன்…” என்றான். அவர்களில் ஒருவன் வெந்து கொண்டிருந்த எருதின் தொடையிலிருந்து தசைப்பகுதியை சிறு கோடரியால் வெட்டி எடுத்தபடி ஓடிவந்து அவனிடம் கொடுத்தான். மறுகையை நீட்டி “கள்” என்றான். மரக்குடுவைகளில் இருந்து மூங்கில் குவளைகளில் ஊற்றி அளிக்கப்பட்டது.

பசித்த வேங்கை என உறுமியபடி ஊனை உண்டு கள்ளை அருந்தியபின் கைகளை விரித்து பெருங்குரலில் “மண்ணவரே” என்று அவன் முழங்கினான். “மானுடரே, கேளுங்கள். உண்ணுங்கள், குடியுங்கள், புணருங்கள், கொல்லுங்கள், வென்று மேற்செல்லுங்கள். வாழ்வதற்கு அப்பால் வாழும் தெய்வமில்லை. இருப்பதற்கு அப்பால் இருப்பென்று ஒன்றுமில்லை. மகிழ்வதன்றி எய்துவது ஏதுமில்லை. இது தெய்வங்களின் ஆணை. இன்பம் ஒன்றே விழுப்பொருள். இதுவே நீலமலைகளின் செய்தி.”

KIRATHAM_EPI_15

கூடிநின்ற மலை மக்கள் தங்கள் குரலை உயர்த்தி “ஆம், அவ்வாறே” என்று கூச்சலிட்டனர். “முழவுகள் முழங்கட்டும்!” என்று கையை உயர்த்தி அவன் கூவினான். “கொம்புகள் பிளிறட்டும்…” துடித்தெழுந்த தாளத்துடன் இயல்பாக இணைந்துகொண்டு அவன் தாண்டவம் செய்யலானான்.

முந்தைய கட்டுரைஇந்தியா குறித்த ஏளனம்…
அடுத்த கட்டுரைடின்னிடஸ் – கடிதங்கள் 2