ஜெ
கீழ்க்கண்ட வரிகள் என்னை மிகமிக ஆழ்ந்து யோசிக்க வைத்தன. சமீபத்தில் இப்படி ஒரு திறப்பு அமைந்ததில்லை
உண்மையில் நரகாசுரனை எப்படி வைணவம் [அல்லது இந்துமதம்] பார்க்கிறது என்பதற்குரிய சரியான விளக்கம் இது. நரகாசுரன் தற்செயலாக உருவாகி வந்த அழிவுச்சக்தி. ஆனால் அதுவும் கடவுளின் படைப்பே. ஆகவே புனிதமானதே. அதைக் கடவுளே அழித்தார். அதைக் கொண்டாடுகிறோம்.
நரகாசுரனை வில்லனாகக் காட்டுகிறார்கள் என்று ஒரு கும்பல் கூப்பாடு போடுகிறது. அவன் பூமிதேவிக்கு விஷ்ணுவில் பிறந்த மைந்தன் என்றுதான் வைணவம் சொல்கிறது என்று அறிந்தபோது ஒரு பரபரப்பே ஏற்பட்டது. வைணவனாக அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லாம் கடவுளின் லீலை என்றுதான் வைணவன் சொல்வான். ஆக்கமும் அழிவும் ரெண்டுமே.
ரமேஷ்
***
அன்புள்ள ஜெ
தொ.பரமசிவம் என்பவரின் ஒரு நூலின் குறிப்பு இணையத்திலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அவர்தான் திராவிட இயக்கத்தின் உச்சகட்ட சிந்தனையாளராம். அரசியலோ வரலாறோ தொன்மமோ அறியாத ஒரு அப்பாவி என்ற எண்ணம்தான் ஏற்பட்டது
வர்த்தமானர் இறந்த நாளாம் தீபாவளி. அவரது சாவைத்தான் விளக்கேற்றி இந்துக்கள் கொண்டாடுகிறார்களாம். சரி ,அதை ஏன் விளக்கேற்றி சமணர்கள் கொண்டாடுகிறார்கள்? அவர்களுடன் இந்துக்களும் சேர்ந்துகொண்டார்கள் என்றால் என்ன தப்பு? நரகாசுரன் கதை மகாபாரதத்தில் உள்ளது. அதற்கும் முன்னரே உள்ள தொன்மம் அது. அப்போது சமணம் தீபாவளியைக் கொண்டாடிக்கொடு இருந்ததா? அப்போது வர்த்தமானர் இருந்தாரா?
இப்படி பொதுவெளியில் வந்து சொல்வதற்கு ஏதேனும் ஒரு நூலில் ஏதேனும் ஒரு புராணத்தில் ஆதாரம் உண்டா? இந்துப்புராணங்களிலோ சமணப்புராணங்களிலோ? இங்கே சமணமதம் இருந்திருக்கிறது. நூல்கள் பல உள்ளன. எந்த நூலில் இங்கே சமணர் தீபாவளி கொண்டாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது? அவர்கள் வடநாட்டில் இப்போது கொண்டாடுகிறார்கள், அவ்வளவுதான்.
வர்த்தமானரை அரக்கன் என்றோ தீயவர் என்றோ எந்த இந்து நூலாவது சொல்கிறதா? எந்த புராணத்திலாவது அப்படிக் குறிப்பு உள்ளதா? தென்னகத்தின் சைவ நூல்களில் சமண மறுப்பு உள்ளது. அக்காலத்தில் மதம் சார்ந்து பூசல்கள் நடந்ததை சில நூல்கள் காட்டுகின்றன. ஆனால் சமணர்கள் மேல் இந்துக்கள் போரிட்டதற்கு எங்கே ஆதாரம்? எட்டாம் நூற்றாண்டில் ஒருசில சமணரை சைவ நாயன்மார்கள் வாதங்களில் தோற்கடித்து கழுவேற்றியதாக பதினாறாம் நூற்றாண்டில் ஒரு சில சைவர்கள் சொன்னார்கள் என்பதைத்தவிர?
வடநாட்டில் வைணவமும் சமணமும் கிட்டத்தட்ட ஒரேமதம்போலவே இணைந்தவை. வைணவக்கோயில்களில் அருகர் இருப்பார். அருகர்கோயில்களில் கிருஷ்ணர் இருப்பார். என்ன அபத்தம் இதெல்லாம் .எந்த ஆய்வாளனாவது இப்படி சும்மா இருந்தபோது என் மண்டையில் உதித்தது என்று ஒரு முடிவைச் சொல்வானா? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் வந்து வாய்க்கிறார்கள்?
ரமணன்