வெள்ளையானையும் கொற்றவையும்

vellaiyaanai__93829_zoom

ஜூலையில் இந்தியா வந்த போது “கொற்றவை” நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். “நீர்” பகுதி முடிப்பதற்குள் கிளம்ப நேர்ந்தது. விமானத்தில் வாசிக்கலாம் என்று என் மேசை மீது வைத்து விட்டு மற்றதை எல்லாம் மூட்டைக்கட்ட, அந்த புத்தகத்தை மட்டும் பையில் வைக்க விட்டுவிட்டேன். விமானம் ஏறியதும் தான் தெரிந்தது. அம்மாவை புத்தகத்தை தபாலில் அனுப்பச்சொல்லி, அது வருவதற்குள் வாசிப்போமே என்று இந்த முறை வாங்கிச்சென்ற “வெள்ளையானை”யை எடுத்தேன். “வெள்ளையானை”யைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் அதை வரலாற்று எழுத்தாக, புராண எழுத்தாக, “கொற்றவை”யுடன் இங்கு ஒப்பிட முடியும் என்று நினைக்கிறேன்.

ஒரு வகையில் “வெள்ளையானை”யும் புராணக்கதை. காத்தவராயன் – அயோத்திதாசர் – புராண கதாபாத்திரமாகவே, சற்று larger than life ஆக வருகிறார். ஏய்டன், கிரேக்க மரபில் சாபக்கேடுடன் அலையும் ஒரு ஆண்டி-ஹீரோ. மரியா, கொற்றவை ஸ்வரூபம். கதை நிகழும் காலம் அண்மையில் என்றாலும், அது உண்மை மனிதர்களைக்கொண்டு, உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது என்றாலும், அக்கதையில் ஒரு புராணத்தன்மையை என்னால் பிரித்தெடுக்க முடியவில்லை. ஒரு இடத்தில் ஏய்டன் அவன் சந்திக்கும் தொழிலாளிகளின் கண்களை மீன் போல மூடாவிழிகளாக காண்கிறான். அந்த உவமை “கொற்றவை”யிலும் வருகிறது. அதை நான் வரலாற்றின் கண்களென புரிந்து கொண்டேன். காலமெல்லாம் கண் விழித்து வெறிக்கும் அந்த விழிகளின் தீவிரமும் ரௌத்திரமும் சத்தியத்தின், எந்நிலையிலும் இணங்கா உறுதியின் பார்வை. வரலாறை வென்றவர்களே எழுதலாம். ஆனால் எழுதப்படாத உண்மையெல்லாம் கண்விழித்துப் பார்ப்பதை எவராலும் தடுக்கமுடியாது. தொழிலாளிகளின் கண்களை பார்க்கும் அந்த கணத்தில் ஏய்டன் “கொற்றவை”யில் வருவது போல கடல் கொண்டு சென்ற உலகங்களில் நீந்தி வரும் மீன்களையே காண்கிறான். கண்ணையையும் மீன்விழியையும் ரேணுகையையும் மற்றும் நிலம் தோறும் பூத்த ஆயிரம் ஆயிரம் விழித்த கண்களையும் காண்கிறான். அவனால் வரலாற்றில் இருந்து தப்பிக்கவே முடியாது. நம்மாலும் கூட.

அயோத்திதாசரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள “வெள்ளையானை” தூண்டியது. உங்கள் தளம் மிகவும் உதவியாக இருந்தது. அவரை 19-ஆம் நூற்றாண்டின் தலித் தலைவர் ஒருவர் என்றே அறிந்திருந்தேன். காந்தியைப் போல, அம்பேத்காரைப் போல, விவேகானந்தரைப் போல, ஒரு அறிஞராக, அறிவியக்கத்தின் தொடக்கப்புள்ளியாக, மாபுருஷனாக இன்று உணர்கிறேன். அவரை வாசித்துக்கொண்டிருக்கிறேன். “இந்திர தேச சரித்திரம்” பற்றி “அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு” என்ற உங்கள் கட்டுரையின் மூலம் அறிந்துக்கொண்டேன். அக்கட்டுரையில் நீங்கள் விவரித்த இரவிபுத்தூர் தலைகீழ் தெய்வத்தின் கதை அளித்த வரலாற்றுச்சித்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. என் “கொற்றவை” வாசிப்பை இந்தக் கட்டுரை, இக்கதை, மெருகேற்றியது. சொற்களை திரித்துத் திரித்து அவை மூலம் கட்டமைத்த வரலாறாகவும் கொற்றவை விரிகிறது. “வான்” பகுதியின் வரலாற்றாக்கமும் புராணமாக்கலும் இந்தப்பார்வையின் நீட்சியே.

சுசித்ரா ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
அடுத்த கட்டுரைஇந்தியா குறித்த ஏளனம்…