எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது எனது தந்தை வழிப்பாட்டி லக்ஷ்மிக்குட்டி அம்மா திருவட்டாறு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள முகமண்டபத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்றையாக சுட்டிக் காட்டி அவற்றில் எதையெல்லாம் நான் ரசிக்கவேண்டுமென்று கற்பித்ததை நினைவு கூர்கிறேன். ஒற்றை விரல்காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘இறை ஒன்றே’ என்றும் மறுபக்கம் உள்ளே நான்குவிரல் காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘அது இங்குள்ளது’ என்றும் சொல்கிறார் என்று அவர் சொன்னது அப்போதிருந்த அவர்களுடைய முகபாவனையோடு இன்றும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு முறை ஒரு ஆலயத்திற்குள் நுழைந்து துவாரபாலகர் சிற்பங்களை பார்க்கும்போது பாட்டி நினைவில் வந்து செல்கிறார்.
சிற்பங்கள் என்பவை கல்லில் பொறிக்கப்பட்ட வடிவங்கள் அல்ல. கல் வழியாக நிகழ்ந்து செல்லும் காலத்தின் ஒரு தருணம் என்று அன்று நான் கற்றேன். சிற்பங்களைப் பார்ப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறை என்பது அவற்றின் நேர்முன்னால் நின்றுகொண்டு விழிகளை நோக்கி நமது கற்பனையால் அவற்றுடன் உரையாட முயல்வதுதான். அத்தனை சிற்பங்களும் ஒரு சொல்லில் உறைந்த உதடுகள் கொண்டிருக்கும். அச்சொற்பொருள் ஒளியாக விரிந்த கண்கள் கொண்டிருக்கும். அவ்வுணர்ச்சியே அவற்றின் உடலசைவாக வெளிப்பட்டிருக்கும். ‘அஞ்சேல்’ என்றும் ‘அருள்’ என்றும் ‘யாம்’ என்றும் ‘இவை’ என்றும் காட்டி நிற்கின்றன அச்சொற்கள். அன்று தொடங்கியது சிற்பங்களுக்கான எனது தாகம்.
நானே பயணம் செய்ய ஆரம்பித்த காலம் முதல் சென்ற நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்தியப் பெருநிலத்தில் அலைந்து சிற்பங்களைப்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது ஐந்து நீண்ட பயணங்களேனும் செய்யாத ஒரு ஆண்டு கூட கடந்து சென்றதில்லை என்பது எனக்கு நிறைவளிக்கிறது. ஆனால் இப்பெருநிலத்தின் சிற்பச் சாதனைகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு மிகப்பெரிய ஏக்கத்தையும் அளிக்கிறது.
பலஆண்டுகளுக்குப்பிறகு ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தின் முகப்பு மண்டபத்தில் அமர்ந்திருந்த போது அங்கிருந்த ஒரு வயதான அய்யங்கார் கருங்கல் தூணில் கரிய பேரழகாக எழுந்த மோகினி சிலையை எனக்கு சுட்டிக் காட்டினார். அவள் விழிகளில் தெரிந்த நிமிர்வும் உடலில் வெளிப்பட்ட மிடுக்கும் கண்டு சொல்லிழந்து நின்றிருந்த எனக்கு அவள் காலடியில் இருந்த குரங்கை சுட்டிக்காட்டி “அழகுடன் பிணைந்த அவலட்சணம்” என்று அவர் விளக்கினார். ஒன்றின் இருபக்கங்களை காட்டி, இரண்டையும் ஒன்றென உணர்த்துவதற்குப் பெயர்தான் செவ்வியல் கலை என எனக்கு விளக்கினார்.
அன்றிலிருந்து இன்று வரை சிற்ப அழகையும் சிற்பங்களில் உறைந்துள்ள தத்துவத்தையும் சொல்லிப் புரிய வைத்த வழிகாட்டிகள் பலர் என் நினைவில் எழுகிறார்கள். அவர்களின் முகங்களும் குரலும்கூட மறக்கவில்லை. தாடிக்கொம்பு ஆலயத்தில் குறவனின் சிற்பத்தில் மட்டும் அத்தனை நுட்பமாக தசைநார்களை செதுக்கிய சிற்பி தெய்வச்சிலைகளுக்கு அவற்றை ஏன் செதுக்கவில்லை என்று விளக்கிய குள்ளமான அய்யர் “சிற்பங்களிலே மானுஷிகம் தெய்வீகம்னு ரெண்டு உண்டு. தெய்வங்களுக்கு மனுஷவடிவம் கெடையாது, நாம அப்டிப் பாக்கிறோம் , அவ்வளவுதான்” என்றார். அவர்கள் அனைவரையுமே ஞானாசிரியனாகவே கொள்வேன்.
ஆனால் சென்ற இருபதாண்டுகளாக தமிழக ஆலயங்களில் சிற்பங்களை விளக்கும் வழிகாட்டிகள் அனேகமாக இல்லையென்றே ஆகிவிட்டது. என் இளவயதில் சிற்பங்களை எனக்கு விளக்கிய வழிகாட்டிகள் பெரும்பாலும் அனைவருமே முதிய வயதினர். எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நூறாண்டுகளுக்கு முன் இங்கிருந்த ஆலயப் பண்பாட்டிலிருந்து அந்த அறிவை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். அவர்கள் அனைவருமே இப்போது மறைந்திருப்பார்கள். அதன் பிறகு உருவாகி வந்த தலைமுறையினருக்கு ஆலயங்களைப் பற்றியும் சிற்பங்களைப் பற்றியும் அனேகமாக ஒன்றுமே தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
சென்ற இருபதாண்டுகளில் ஆலயங்கள் சார்ந்து ஒரு புதிய பார்வை உருவாகியிருக்கிறது. அவற்றை ஆன்மீக மையங்களென பார்ப்பவர்கள் அருகிவிட்டார்கள். அவற்றை கலை மையங்கள் என்று பார்க்கும் என்னைப் போன்றவர்கள் இன்னமும் குறைந்துவிட்டார்கள். அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் பரிகாரத்தலங்கள் என்ற அளவிலேயே பெருவாரியான மக்கள் ஆலயங்களுக்கு வந்து குவிகின்றனர். அவர்களை சோதிடர்கள்தான் ஆலயங்களை நோக்கி வழி செலுத்துகிறார்கள்.
கணிசமானவர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து மதம் சார்ந்தும் ,ஆன்மிகம் சார்ந்தும், மரபுக்கலைகள் சார்ந்தும் எதையுமே கற்றுக் கொள்ளாமல் இளவயதில் நாத்திகத்தில் திளைத்தவர்கள். நாத்திகம் என்பது மரபை முற்றாக மறுப்பதே என்று அசட்டுத்தனமாக புரிந்து கொண்டவர்கள். வாழ்க்கையின் போக்கில் அந்த ஆணவம் அடிபடும்போது மீண்டும் மரபுக்குத் திரும்ப அவர்களால் முடிவதில்லை. அதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை. ஆகவே சோதிடர்களிடம் சென்று விழுகிறார்கள். சோதிடர்கள் திறக்கும் சுயநலம் சார்ந்த ஒரு சிறிய திட்டிவாயிலினூடாக மரபின் ஒரு சிறு பகுதிக்குள் வந்து சேர்கிறார்கள். இன்று ஆலயங்களில் இருக்கும் வழிகாட்டிகள் அத்தனை பேருமே இந்த லௌகீக பக்தர்களுக்காக ஒரு விளக்கத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டாண்டுகளுக்கு முன் குடுமியான்மலைக்குச் செல்லும் வழியில் நார்த்தாமலைக்கு சென்றிருந்தேன். தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு கலைக்கோயில். நாயக்கர் காலத்து சிற்பங்கள் நிறைந்த முகமண்டபம். எதிரெதிர் நோக்கி நின்ற ரதியையும் மன்மதனையும் ரசித்துக் கொண்டிருந்த போது ஆலய அர்ச்சகர்களில் ஒருவர் எங்கள் அருகே வந்து நாங்கள் கேட்பதற்குள்ளாகவே வழிகாட்டிப் பணியைத் தொடங்கினார். மன்மதனைச் சுட்டிக்காட்டி “இது ராமர். காட்டுக்கு வில்லுடன் சென்று கொண்டிருக்கிறார். மறுபக்கம் இருப்பது சீதை. ராமனைக் கண்டு அவள் கண்களைத் தாழ்த்தி அமர்ந்திருக்கிறாள். ராமனும் சீதையும் வழிபட்டால் திருமணத்தில் உள்ள தோஷங்கள் அகலும். ராமனுக்கும் சீதைக்கும் நெய்விளக்கேற்றி வழிபட்டால் மங்கல்ய யோகம் உண்டாகும்” என்றார்.
நான் அவரிடம் “இது ராமனல்ல, மன்மதன். கையிலிருக்கும் வில் மூங்கிலால் ஆனதல்ல. மேலே பாருங்கள், தோகை தெரியும். இது கரும்பு. மறுகையில் அவன் வைத்திருப்பது முல்லை மொட்டு. ராமனுக்கு மீசையுடன் எப்போதும் சிற்பம் வடிக்கப்படுவதில்லை. இவன் அணிந்திருக்கிற அணிகளும் ஆடையும் வனவாசம் சென்றிருக்கும் ராமருக்குரியதல்ல. மறுபக்கம் அமர்ந்திருப்பவள் ரதி. பாருங்கள், அன்னப்பறவை மேல் வீற்றிருக்கிறாள்” என்றேன்.
இருசிற்பங்களையும் மாறி மாறிப் பார்த்தபின் “அப்படியா சொல்கிறீர்கள்?” என்றார். “ஆம். பழங்காலத்தில் ரதி மன்மத வழிபாடு தமிழ்நிலத்தில் மிக பரவலாக இருந்தது. தமிழகத்தில் ஓங்கி இருந்த சூரிய வழிபாடு செய்யும் சௌரமதத்தின் முக்கியமான தெய்வம் இது. ரதி மன்மதனை வழிபட்டு வயலில் விதைப்பை தொடங்கினால் வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருந்தது. விதைகளை ஆலயத்திற்கு கொண்டுவந்து ரதி மன்மதன் முன் வைத்து வழிபட்டுச் செல்வார்கள்.”
“இந்த வழிபாடு சைவ மதத்திற்குள் காமதகனம் என்ற பெயரில் சிவன் மன்மதனை எரித்து அழித்த சடங்காக வேறுவகையில் கொண்டாடப்படுகிறது. ஆலயங்களில் ரதி மன்மதன் சிலைகளை நாயக்கர் காலச் சிற்பிகள் அமைத்தற்கு இதுதான் காரணம். தென் தமிழகத்தில் உள்ள நாயக்கர் கால ஆலயங்கள் அனைத்திலுமே ரதி மன்மத சிலை உண்டு. சௌர மதத்தில் மட்டுமே ரதிக்கும் மன்மதனுக்கும் வடிவம் உண்டு. சைவத்திற்குள் மன்மதனுக்கு அனங்கன் என்றுதான் பெயர். உடலற்றவன், ஏனெனில் அவன் சிவபெருமானால் எரிக்கப்பட்டவன். சைவத்திற்குள் சௌரமதம் வந்து இணைந்து கொண்டபோது அனங்கனாகிய மன்மதன் அங்கம் கொண்டு வந்து ஆலயத்தில் நின்றிருக்கிறான்”என்றேன்.
நண்பர்களுடன் அவரும் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். சிற்பங்களைச் சுற்றிப்பார்த்தபின் அங்கிருந்து குடுமியான் மலைக்குச் சென்றோம்.
ஓராண்டு கழித்து மீண்டும் நார்த்தா மலைக்குச் செல்லும் படி நேர்ந்தது. முன்னர் சென்ற போது இருந்த அதே நண்பர் குழாம் உடனிருந்தது. கிருஷ்ணன், ராஜமாணிக்கம். அதே ரதி மன்மதன் சிலைக்கு எதிரில் சென்று நின்று கல்லில் எழுந்த உயிர்த்துடிப்பை, சருமத்தின் பளபளப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். கற்பாறை அசைவற்றது. அசலம் என்று அதற்கு பெயர். அதில் அசைவை உருவாக்கியிருக்கிறது கலை. அசைவற்று உறைந்து கிடக்கும் இச்சடப்பிரபஞ்சத்தினை அசைக அசைக என்று கலை மன்றாடுகிறது. முத்தமிட்டுச் செதுக்கி உயிரை எழுப்புகிறது. அல்லது கணம் தோறும் உருமாறி பிறந்திறந்து மறையும் உயிரை உறையவைத்து கல்லென்றாக்கி காலத்தில் நிலைக்கச்செய்கிறதா?
பேசிக் கொண்டிருந்த போது அந்த அர்ச்சகர் அருகே வந்தார். என்னை அணுகி இயல்பாக வழிகாட்டிப் பணியை தலைக்கொண்டு மன்மதனைச் சுட்டிக்காட்டி “இது ராமர். காட்டுக்கு சீதையை தேடிப்போகிறார். கையில் வில் வைத்திருக்கிறார் பார்த்தீர்களா? இந்தப்பக்கம் இருப்பவள் சீதை. காட்டில் அன்னப்பறவை மேல் ஏறி விளையாடுகிறாள். ராமர் விளையாட்டாக ஒரு முல்லை மொட்டை அவள் மேல் அம்பால் தொடுக்கப்போகிறார். ராமர்சீதையை வழிபட்டால் இல்லறச்சிக்கல்கள் தீரும் நெய்விளக்கேற்றி கும்பிட்டால் தாலி பாக்கியம் கிடைக்கும். நெய்விளக்கு ஐம்பது ரூபாய்” என்றார்.
நான் சிரித்தபடி ”இரண்டாண்டுகளுக்குமுன் இங்கு வந்து உங்களிடம் இது ராமனல்ல மன்மதனென்று சொன்னேனே…?” என்றேன். அவர் ஒருகணம் திகைத்தபின் ”ஓ நீங்கதானா அது?” என்றார். ”பரவாயில்லை. ராமன் கையிலிருப்பது முல்லைமலர் என்ற அளவிற்காவது மாற்றிக் கொண்டிருக்கிறீர்களே” என்றேன்
“நீங்கள் சொன்னவுடன் நானும் பார்த்தேன் சார். இது ரதிமன்மதன் தான் ஆனால் அதைச் சொன்னால் யாருக்கும் எந்த ஆர்வமும் இல்லை. ரதிமன்மதனை கும்பிட்டால் எந்த தோஷமும் நீங்குவதில்லை. ராமன் சீதை என்றால் கொஞ்சமாவது நின்று பார்க்கிறார்கள். ஆகவேதான் அதைச் சொல்கிறேன்” என்றார்.
கோயிலை விட்டு வெளியே வரும்போது வெளியில் சிறிய ஆலயத்திற்குள் இருந்த சிவலிங்கத்தைக் காட்டி நண்பர் கிருஷ்ணன் சொன்னார், ”இது அந்தக் காலத்தில் எண்ணை எடுத்த செக்கு. அந்த எண்ணையை தலையில் தேய்த்துக் கொண்டால் சித்தப்பிரமை நீங்கும். அருமையான தூக்கம் வரும் ஒரு புட்டி மூன்று ரூபாய். ஸ்டாக் உள்ளவரையே சலுகை!” அனைவரும் சிரித்தோம். ராஜமாணிக்கம் ”ஐடியா குடுத்திராதிங்கண்ணா அப்படியே ஆரம்பிச்சிரப் போறாங்க” என்றார். எண்ணிப்பார்த்த போது அதுவும் சாத்தியம் தான் என்று தோன்றியது.