அன்புள்ள ஜெயமோகன் சார் ..,
தங்கள் நலம் அறிய ஆவல். சமீபத்திய பதிவில் நாஞ்சில் நாடனின் “இடாலக்குடி ராஜா ” என்ற சிறுகதையை குறிப்பிட்டு லிங்க் கொடுத்து இருந்தீர்கள். படித்தேன். ரொம்ப பிரமாதம் அந்த இன்னொசென்ட் மனசு “அவன் சாப்பிடும்போது நமக்கு ரெண்டு கவளம் பழையது தரமாட்டான என்று இருக்கும்'”, யாரு சித்தப்பாவா ராசாவுக்கு பசிகில்லா, வண்டிய விட்டுருவேன், ராஜாவின் உரையாடல்கள் ச்சே என்று சொல்லுமாதிரியான முடிவு .. ரொம்ப பிடித்திருந்தது. நல்ல சிறுகதை என்பதற்கு நீங்கள் சொன்ன முக்கிய அளவுகோல் ஞாபகத்துக்கு வருது “அது படித்து நீண்ட காலத்திற்கு பிறகும் நினைவிலேயே இருக்க வேண்டும்” .இது அம்மாதிரியான ஒரு கதைதான். மேலும் இந்த சிறுகதையை படித்து முடித்தவுடன் சு. வேணுகோபாலின் வெண்ணிலை தொகுப்பில் “வயிற்று புருஷன்” கதையின் பொம்மையா வும் ஞாபத்திற்கு வருகிறார். நாஞ்சில் நாடனின் எந்த சிறுகதையையும் இது வரை நான் வாசித்தது இல்லை இடாலக்குடி ராஜா நல்ல தொடக்கமாக இருக்கும் இனி .. ரொம்ப நன்றி சார் பொர்வர்ட் செய்ததற்கு
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
நாஞ்சில்நாடனை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் அது பெரும் குறையே. தமிழின் இலக்கிய சாதனைகளில் ஒன்று அவரது எழுத்துலகம்
ஜெ
அன்புள்ள ஜெ,
நான் பேசிப்பார்த்தவரை, நாஞ்சில் நாடன் அவர்கள் இசையை தொடர்ந்து கேட்டுவருபவராகவும். இசையின்மேல் ஈடுபாடு நல்ல உடையவராகவும், அதை அறிந்து கொள்வதற்கு முயற்சியெடுத்து செய்து வருபவராகவும் இருக்கிறார்.
இசைகுறித்த அவரது அனுபவங்கள் மிகவும் சுவாரசியமாகத்தெரிகின்றது. அவரை அவரது இசை அனுபவங்களை எழுதும்படி ஊட்டி கூட்டத்திற்கு வந்தபோது
கேட்டுக் கொண்டேன். அவர் சிரித்துக் கொண்டே, அது வெறும்
சம்பவங்களாகப் போய்விடும், இசை குறித்து எழுதும் அளவுக்கு இசை தெரியாது, அது எனது அனுபவப்பகிர்வாக மட்டுமே இருக்கும் என்று சொன்னார்.
எழுத்தாளராய் இருப்பது அரிது, அதிலும், இசை தெரிந்தவராய் இருத்தல்
அரிதினும் அரிது. இசை அனுபவங்களாக இருந்தாலும், இசை விமர்சனம் இல்லாமல் போனாலும் அவரது இசை அனுபவங்கள் அவரது எழுத்தின் வாயிலாக வரும்போது அந்த
வாசிப்பு மிகவும் சுவையாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.
அவரது நடையும் அதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து, உங்கள் நண்பருக்கு இசை குறித்த அவரது அனுபவங்களை எழுத அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு மிகச்சிறந்த இலக்கிய கட்டுரைத் தொகுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அவரது அனுபவங்கள் பதிவு செய்யப் படாமலே போய் விடக்கூடாது.
—
நன்றி
ராமசந்த்ர சர்மா
அன்புள்ள ராமச்சந்திர ஷர்மா
நான் அவரிடம் நெடுநாட்களாகச் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு நாவல். அவரது சொந்த குடும்பத்தின் இடம்பெயர்வு வரலாற்றை, அவரது வேர்களை, நாஞ்சில் நாட்டின் ஒட்டு மொத்தத்தை பற்றிய ஒரு நாவல். அதில் அவர் பல இசைக் கலைஞர்களைப் பற்றியும் எழுத வாய்ப்புள்ளது
ஜெ
http://nanjilnadan.wordpress.com/