அன்புள்ள ஜெ,
சிங்கப்பூர் கமலாதேவி அரவிந்தனின் கதைகளை வானளாவப்பாராட்டி வெங்கட் சாமிநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். மிகக்கறாரான விமர்சகர் என்று பெயர் பெற்றவர் அவர். இங்குள்ள பல மூத்த எழுத்தாளர்களைக் காய்ச்சி எடுத்தவர். அசோகமித்திரனுக்கு இலக்கியமே தெரியாது என்று எழுதிக்கொண்டே இருந்தவர். கமலாதேவி அரவிந்தனின் கதைகள் அசட்டுத்தனமானவை என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். வாசகர்கள் எதைக்கொள்ளவேண்டும்?
சீனிவாசன்
*
அன்புள்ள சீனிவாசன்,
இரண்டையும் கொள்ளவேண்டாம். நான் சொல்வதையும் அவர் சொல்வதையும் அந்தத் தொகுதியின் கதைகளை வைத்து பரிசீலியுங்கள். வாசகன் செய்யவேண்டியது அதுதான். நாங்கள் சொல்லும் முடிவுகள் ‘தீர்ப்புகள்’ அல்ல. அவை பரிந்துரைகள், கருத்துக்கள் மட்டுமே. வாசகன் தன்னுள் நிகழும் இலக்கியவிவாதத்திற்கு இக்கருத்துக்களைத் துணைகொள்ளவேண்டும். தன் மதிப்பீட்டு உருவாக்கத்திற்கு இவற்றை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இலக்கியவிமர்சனம் அதற்காகவே.
இலக்கியவிமர்சனம் இலக்கியவாசகனிடமே பேசுகிறது. இலக்கியத்தை வாசித்தாலும் ஒன்றும் புரியாதவனுக்கு இலக்கியவிமர்சனத்தால் ஒரு பயனும் இல்லை. வாசகனுக்குள் உருவாகும் அறிதலையும்உணர்தலையும் விரிவாக்கம் செய்ய, கூர்மைசெய்ய மட்டுமே இலக்கியவிமர்சனம் பயன்படும்.
இலக்கியவிமர்சனம் என்பது ஒரு சூழலில் இலக்கியம் சார்ந்த விவாதத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது. மாறுபட்ட கோணங்களில் வாசிப்பை உருவாக்குவது. இலக்கிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்துகொண்டிருப்பது.
இலக்கியவிமர்சனம் வழியாக பல்வேறு கோணங்கள் ஒரு சூழலில் திறக்கப்பட்டு பலவகை மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமாகவே இலக்கியம் சார்ந்த பொதுவான மதிப்பீடுகள் நிலைநிறுத்தப்படுகின்றன
உதாரணமாக நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் எழுத்தாளர் மரபு பெரும்பாலும் க.நா.சுவின் பட்டியலை ஒட்டியது. ஆனால் அவர் முன்னிறுத்திய ஆர்.ஷண்முகசுந்தரம், ந.சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்கள் இன்றைய பொதுப்பட்டியலில் இல்லை. அவர் புறக்கணித்த ப.சிங்காரம் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.
இது ஏன் நிகழ்கிறது? எந்த விமர்சனத்திலும் முழுமையான மதிப்பீடு வெளிப்படமுடியாது. க.நா.சு கச்சிதமான வடிவம், கட்டுப்பாடான நடை, புறவயமான கூற்று ஆகியவற்றை முன்வைத்தவர். ப.சிங்காரத்தில் வடிவ ஒருமை இல்லை. கட்டற்ற நடை உள்ளது. அந்தரங்கமான மொழி பயில்கிறது. ஆகவே க.நா.சுவால் ப. சிங்காரத்தை ஏற்கமுடியவில்லை. ஆனால் எனக்கு க.நா.சுவின் அந்த அளவுகோல் முழுமையாக ஏற்புடையது அல்ல. ஆகவே நான் ப.சிங்காரத்தை வலுவாக முன்வைத்தேன்
அதேபோலத்தான் அசோகமித்திரனை வெங்கட் சாமிநாதன் நிராகரித்ததும். வெ.சாமிநாதன் கலையின் ‘பித்துநிலை’யின் உபாசகர். டிரான்ஸ் என அதைச் சொன்னார். ஆகவே அவருக்கு லா.ச.ரா ஆதர்சம். அசோகமித்திரனும் ஜெயகாந்தனும் உலகியலின் எழுத்தாளர்கள்.கீழானவர்கள்.
நான் வெங்கட் சாமிநாதனின் நண்பனாக இருந்தவன். என்னை அவர் எப்போதுமே பாராட்டிவந்தார். ஆயினும் நான் அவருடன் முரண்பட்டும் விவாதித்தேன். எனக்கு அசோகமித்திரன் முக்கியமான எழுத்தாளர். என்னைப்பார்க்கும்போதெல்லாம் வெங்கட் சாமிநாதன் அசோகமித்திரனை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பார்
இந்தப் பார்வைமாறுபாடு எப்போதுமே இலக்கியத்தில் உண்டு. இந்த விவாதச்சூழல் வழியாகவே இலக்கியவாசிப்பின் பலகோணங்கள் விரிகின்றன.இவை ஒரு சூழலில் முட்டிமோதித்தான் அழகியல்விவாதங்கள் நிகழ்கின்றன. பொதுமுடிவுகள் உருவாகின்றன
ஆனால் அதெல்லாம் கமலாதேவி போன்றவர்களின் கதைகளுக்குப் பொருந்துபவை அல்ல. ஒரு மிகமிக எளிய இலக்கியவாசகன் கூட அவை அசட்டு எழுத்துக்கள் என்று சொல்லிவிடமுடியும். அப்படி உணராதவனை நான் இலக்கியக்கேணையன் என்பதற்கு அப்பால் மதிக்கப்போவதில்லை.
அப்படியென்றால் என்ன ஆயிற்று வெங்கட் சாமிநாதனுக்கு? அவரது அந்த மதிப்புரையை முதுமையின் அசட்டுத்தனம் என்று மட்டும்தான் சொல்லமுடியும். வயதான காலத்தில் அவர் இதற்கும் கீழே இறங்கி மகா அசட்டுத்தனமான எழுத்துக்களை எல்லாம் கொண்டாடி எழுதிவைத்திருக்கிறார்.
வயதான விமர்சகனின் நரகம் ஒன்றுண்டு. அவன் எதன்பொருட்டு பேசினானோ அதெல்லாம் அவன் உருவாக்க்கிய விவாதங்களாலேயே ஏற்கப்பட்டு, இயல்பானகருத்துக்கலாக ஆகும்போது அவன் காலத்தில் பின்னகர்ந்துவிட்டிருப்பான். அவன் குரல் பொருளற்றதாக ஆகிவிட்டிருக்கும். வெங்கட் சாமிநாதன் வாழ்நாளெல்லாம் இடதுசாரி இலக்கியக்குறுக்கல்களுக்கு எதிராகப்போராடியவர். இடதுசாரி எழுத்துக்களின் கோணத்தை அவரால் மாற்றவும் முடிந்தது. ஆனால் அதன்பின் அவருக்கு இடமில்லாமல் ஆகியது
அந்தத் தனிமையில் அவர் தன்னை அணுகுபவர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவராக ஆனார். அசோகமித்திரனை நிராகரித்த வெங்கட் சாமிநாதன் அல்ல, கமலாதேவிக்கு முன்னுரை எழுதிய வெங்கட் சாமிநாதன். இவர் தனிமையில் நொந்துபோய் வாசலைப்பார்த்து அமர்ந்திருக்கும் கிழவர். மதிப்பீடுகள் மழுங்கிப்போனவர்
அப்படி வெங்கட் சாமிநாதன் ஒரு கவிஞருக்கு எழுதிய வாழ்த்துக் கட்டுரையை வாசித்துவிட்டு அவருக்கு மிகக்கோபமாக எழுதினேன். ’graceful ஆக சாவது ஒரு கலை. அது உங்களுக்கு வாய்க்கவில்லை. பழைய வெங்கட் சாமிநாதன்மேல் சாணியை அடித்துவிட்டுதான் சாவீர்கள்’. அப்படிச் சொல்லும் உரிமை எனக்கிருந்தது. சாமிநாதன் அதற்கு வழக்கம்போல வேடிக்கையாகவும் நக்கலாகவும் ஒரு பதில் எழுதியிருந்தார்.
வயதான காலத்தில் சாமிநாதன் அதுவரை பேணிய அனைத்துச் சமநிலைகளையும், நவீன இலக்கிய மதிப்பீடுகளையும் இழந்து சாதியுணர்டனும் மதவெறியுடனும் எழுதிய பல பதிவுகள் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றைக்கொண்டே அவரைக்கொண்டாடும் ஒரு கும்பலும் உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு பழைய வெங்கட் சாமிநாதனைத் தெரியாது. இவற்றைக்கொண்டே அவரை அவர்கள் வரையறைசெய்து காலத்திற்கு அளிக்கிறார்கள்.
இந்தக் கடைசிக்கால வெங்கட் சாமிநாதனுக்கும் தமிழில இலக்கிய அழகியலின் கட்டுப்பாடற்ற தன்மையை, கலையின் ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை, அறத்துக்கும் கலைக்குமான உறவை முன்வைத்து விவாதித்த எண்பதுகள் வரையிலான வெங்கட் சாமிநாதனுக்கும் சம்பந்தமே இல்லை.இன்று கமலாதேவியின் கதைகளை வாசித்துவிட்டு ஒருவன் அவற்றை வியந்துபாராட்டியவர் என வெங்கட் சாமிநாதனை மதிப்பிட்டான் என்றால் பழைய வெங்கட் சாமிநாதனை அவன் உச்சகட்டமாகக் கேவலப்படுத்துகிறான் என்றே பொருள்.
ஆகவே இரு வெங்கட் சாமிநாதன்களையும் வேறுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் கொள்ளவிரும்புவது அந்த ‘பாலையும் வாழையும்’ வெங்கட் சாமிநாதனை மட்டுமே. அடுத்த தலைமுறைக்குமுன் நிறுத்த விரும்புவதும் அவரைத்தான். அவர் நான் உட்பட ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொண்டு விமர்சித்து விவாதித்த ஒரு முதன்மையான தரப்பு.
ஜெ
***
- வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி
- வெங்கட் சாமிநாதனும் தமிழிலக்கிய மரபும்
- வெங்கட் சாமிநாதன் கடிதங்கள்
- சொல்புதிது வெசா சிறப்பிதழ்
- வெ சா சில பக்கங்கள்
- வெ சாமிநாதனின் நிகரமதிப்பு
- வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4
- வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல் 3
- வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல் 2
- வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்1