தெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா?

3_0923

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் மதிப்பீடுகளின் படி சிறந்த சமகால எழுத்தாளர்கள் தெலுங்கு மொழியில் எவரேனும் இருந்தால் தெரியப்படுத்தவும். என் தெலுங்கு நண்பருக்கு வணிக எழுத்துகளே அறிமுகம். அவருக்கு நல்ல சமகால தெலுங்கு இலக்கியம் பற்றி தெரியவில்லை. என்னாலும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றி

சண்முகநாதன்

*

அன்புள்ள சண்முகநாதன்,

நான் வாசித்தவரை தெலுங்கில் நவீன இலக்கியம் என ஏதும் இல்லை.

நமக்கு பிற இந்திய மொழிகளில் இருந்து வாசிக்கக் கிடைப்பவை சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகளால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் நூல்கள் மட்டுமே. அவற்றில் பெரும்பாலும் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் அடிப்படை இலக்கியத்தன்மை கொண்ட ஒரு தெலுங்குப் படைப்பைக்கூட வாசிக்க நேர்ந்ததில்லை. பள்ளிக்கூட குழந்தைகளுக்காக வாத்தியார்கள் எழுதிய நீதிக்கதைகள் போல இருக்கும்.

நான் வாசித்தவற்றிலேயே சிறந்தவை என்பவை இரண்டே. அற்பஜீவி [பண்டித விஸ்வநாத சாஸ்திரி] அவன் காட்டை வென்றான் [முனைவர் கேசவரெட்டி] இரண்டுமே நவீன இலக்கிய வாசிப்புள்ளவனுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றும் இலக்கிய முயற்சிகள். முப்பாள ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிய அசட்டு நாவல்களை வைத்துப்பார்த்தால் இவை பரவாயில்லை அவ்வளவுதான்

ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால் தமிழிலக்கியம் பற்றி கன்னடம் வங்கம் போன்ற மொழிகளின் இலக்கிய வாசகர்கள் இந்த எண்ணம்தான் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாசித்தவை ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் சித்திரப்பாவை போன்ற நாவல்கள், நா.பார்த்தசாரதி, சிவசங்கரி எழுத்துக்கள். அவைதான் மொழியாக்கம் மூலம் அவர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.சமீபத்தில் மும்பை கேட்வே இலக்கியவிழாவில்கூட “நவீன இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருக்கும் தமிழ், கொங்கணி, தெலுங்கு போன்ற மொழிகள்…” என்று ஒருவர் பேசக்கேட்டேன்.

ஆகவே தரமான இலக்கியம் ஒருவேளை தெலுங்கில் கண்மறைவாக இருக்கக்கூடும். அங்குள்ள கல்வித்துறையாலும் ஊடகங்களாலும் மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணிக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

உண்மையில் தெலுங்கில் கொஞ்சமேனும் வாசிக்கத்தக்க எழுத்துக்கள் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதும் வணிகநாவல்கள்தான். துப்பறியும் கதைகள் அவை. ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். வடிவ உணர்வும் இருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6