வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

vannadasan-eruvadi7

 

அன்புள்ள சார்,

பல நாட்களுக்கு முன் சண்டை போட்டுவிட்டு வந்த வாடகைக்காரனின் குழந்தைகள், ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் பார்க்க வருகிறார்கள். சிறுவனும் சிறுமியும்.. அப்போது அவர் யோசிப்பார். தன் மனைவியும் கூட இருந்தால் எல்ஐசி விளம்பரம் போல நிற்கலாம் என. சண்டைக்காரனின் குழந்தைகளிடம் வேறு என்ன பேச முடியும்….

இன்னொரு கதை இமயமலையும் அரபிக்கடலும்.. தன் அம்மா, அப்பாவிடமும் அவரின் புது மனைவியிடமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பாள். அந்நேரத்திலும், அப்பா கச்சிதமாக அணிந்திருக்கும் துண்டையும், கொட்டாங்குச்சியில் நேர்த்தியாக சுண்டப்பட்ட சாம்பலுடன் பீடித்துண்டுகளும், கழுவப்பட்ட செருப்புமாய் இருக்கும் நேர்த்தியை கண்டு வியக்கிறாள் அந்தச் சிறுமி.

ஓவியர் போல கதை மாந்தர்களை தீட்டியளிக்கிறார் திரு.வண்ணதாசன் அவர்கள். சிறுகதையை படிக்கும் போதே அந்த சாலையில் உள்ள புளியமரத்தற்கு ஒரு எண்ணையும் என் மனதும் சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறது.

முதுகில் தட்டி பேசியதால் ஒரு ஆட்டோக்காரர் இன்னும் நெருக்கமாகிறார். லோகு அண்ணாச்சி பக்கத்து வீட்டில் போர் போட்டு இறைக்கும் தண்ணீரை பெருமாள் கோயில் தீர்த்தமாய் அருந்துகிறார். நண்பனின் தங்கை புளியமரத்தில் காலாட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அதுவும் எப்படி?

இப்படி ஒவ்வொரு சிறுகதையிலும் ஒருவர். ஒரு சிறிய குறிப்பில் மொத்த அபிப்ராயத்தையும் மாற்றுகிற அல்லது இன்னும் நெகிழ வைக்கின்ற எழுத்தாளுமை. உயரப்பறத்தல் என்ற சிறுகதை தொகுதியின் பெயரைக் கண்டபோது ஒருநாள் தோன்றியது. சிறகடிப்பின்றி அமைதியாக உயரே பறக்கும் கருடன் கீழே சின்ன சின்ன அசைவுகளையும் நோட்டமிடுவது போல வண்ணதாசன்சாரும் உயரே நின்று பார்த்து எனக்கு எடுத்துரைக்கிறார் என்று.

அகம் புறம் தொடரில் ஒவ்வொரு கதைசொல்லிகளாக வந்து இறுதியில் பேருந்து நடத்துநர் குறித்து சொல்வார். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களையும் கண்முன் நிறுத்திவிடுவார் என்று.வண்ணதாசன் சாரும் அப்படித்தான். சங்கரியோ, கல்யாணி அக்காவோ, கோமதி அத்தையோ இவர் சிறுகதைகளில் வரும்போது ஒரு தொடர்கதையில் அல்லது நாவலில் ஆரம்ப அத்தியாம் தொட்டு படித்து வருபவர்கள் போன்றதொரு அருகாமையை அளிக்கிறார்கள்.

உயிர்மை விழாவில் அவரின் உரையைக் ஒருமுறை கேட்டேன். முறத்தில் அரிசியைப் புடைக்கும் போது எழுந்து வீழும் அரிசியைப்போல் நானும் எழுந்து வீழும் அல்லது வீழ்ந்து எழும் மனிதர்களின் கதையை அழகாக எழுதுகிறேன் என்று கூறினார். அந்த அழகாக என்ற வார்த்தை மனதில் அப்படியே தங்கிவிட்டது. பிறகொருநாள் கேணிக் கூட்டத்தில்.. அன்று நல்ல மழை. கேணியருகேயல்லாமல் கூடத்தில்தான் உரையாற்றினார். நான் மிகத் தாமதமாக சென்றிருந்தேன். கிட்டத்தட்ட கூட்டம் முடிந்திருந்தது.

இந்த விருது விழாவின்போது இருநாட்கள் அவரோடு உரையாடலாம் என்ற நினைப்பே மிகவும் உவகையளிக்கிறது.

விருது நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அவருடைய கதைகளையும் கவிதைகளையும் சென்ற நான்கு ஆண்டுகளாகத்தான் எனக்குத்தெரியும். சொல்லப்போனால் அவரை நான் வாசிப்பதே அவர் ஃபேஸ்புக் வந்தபிறகுதான். அவருடைய உலகத்தை நான் அறிமுகம் செய்துகொண்டாலும் உள்ளே போவது எளிதாக இருக்கவில்லை.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தஞ்சாவூர். இங்கே உள்ள மனநிலையே வேறு இங்கே எல்லாரும் நக்கல் கிண்டலுடன் பேசுவார்கள். ஜானகிராமன் எழுதியதைப்போல. வண்ணதாசனின் உலகிலே எல்லாரும் சென்ற காலத்தின் மீதி போல இருக்கிறார்கள். அல்லது வேறு எங்கோ வாழ்பவர்களின் நிழல்களைப்போல இருக்கிறார்கள். எவருமே சிரிப்பதில்லை. எவருமே கேலிகிண்டல் செய்வதில்லை

அதன்பிறகுதான் சுகாவின் எழுத்தை அறிமுகம் செய்துகொண்டேன். அப்போது மனநிறைவு ஏற்பட்டது. அவர்களும் சிரிக்கிறார்கள். அவர்களும் நக்கல் செய்துகொள்கிறார்கள். அப்படியென்றால் இது திருநெல்வேலி அல்ல. இதெல்லாம் வண்ணதாசனின் அகவுலகம் மட்டும்தான்

அந்தத்தெளிவு வந்தபின்னாடி வாசித்தபோதுதான் வண்ணதாசனை மிகவும் நெருக்கமாக்க முடிந்தது. அது அவரேதான் என்பதுதான் அவரை நாம் வாசிக்க அவசியமானது என நினைக்கிறேன்.

வண்ணதாசனுக்கு விருது அளிப்பதற்கு பாராட்டுக்கள்.

மனோகரன்

***

சின்ன விஷயங்களின் மனிதனுக்கு விஷ்ணுபுரம் விருது..

சின்ன விஷயங்களின் மனிதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றிச்செண்டு, வண்ணதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். விருது அறிவித்த அன்றே அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன்.

அவரை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது’ போன்றது என்று நண்பர்களிடம் கூறுவேன். கடந்த 2015-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்? புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறிய விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்:

“யானையைக் கூட

அடிக்கடி பார்க்க முடிகிறது

மாதக் கணக்காயிற்று

மண்புழுவைப் பார்த்து.”

எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்!

இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்! ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனையும் இந்த மண்புழுக்களே. நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவைகள் இந்த யானைகள். அதைப் பற்றிய கவலை அவருக்கு இருந்திருக்கலாம். இப்படி வரிகளுக்கிடையே வாசித்து அதை நிரப்பிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. அப்படித்தான் உங்களுடைய ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை நிரப்பி வைத்திருக்கிறேன். இப்போது “என்னைவிட சிறப்பாக ஒரு எழுத்தாளர் புனைகதையில் சொல்லிவிடக்கூடும்” என்று அந்த ஜப்பானியர் கூறும் எழுத்தாளர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அவரிடமே இறப்பைப் பற்றி பேச இருக்கிறேன்.

பற்றி யோசிக்கும் போது எனக்குள் தோன்றிய வரிகளை எழுதிவைத்திருக்கிறேன்.

நான் பலரிடம் அவரை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறிய “யானைகளுக்கிடையே நெளியும் மண்புழு” வரிகளையும், என்னுடைய வரிகளையும் சென்னை புத்தகக் காட்சியில் அவரை சந்தித்தபோது அவரிடமே கூறினேன். உரக்கச் சிரித்து அங்கீகரித்தார். புகைப்படங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளுக்குக் கூட உயிர் கொடுக்க முயற்சிக்கும் அவருடைய பரிவும், மென்மையும், அவரால் கல்லைக் கூட எழுத்தின் மூலம் நடக்க வைக்க முடியும். புத்தகக் கண்காட்சியில் அவருடன் நான் நிற்கும் காட்சியைப் படம் பிடித்து வைத்திருக்கிறேன் என் வரிகளை அங்கீகரித்த அவரின் சிரிப்போடு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று நானும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவரது புன்னகையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6
அடுத்த கட்டுரைநோபல் கடிதங்கள்