நோபல் கடிதங்கள்

 

Bob-Dylan-Xavier-Badosa-Huck-958x559

 

அன்புள்ள ஜெ.

உங்களிடம் இது பற்றி கேட்கவேண்டும் என்று இருந்தேன். சற்று பொறுத்து இருக்கலாம் என்று தோன்றியது. நீங்களே எழுதி விட்டீர்கள்.

பொதுவாக அமைதி பரிசு மட்டும் – ஒரு சமூகத்திற்கு செய்தியாக – சற்று அரசியல் கலந்து இருக்கும். மற்றபடி அறிவியல், பொருளாதாரம் மற்றும் இலக்கியத்தில் ஒரு தரம் இருக்குமோ என்றும், தரம் இருக்கலாம் என்கிற ஐயப்பாட்டுடன் ஒலிக்கும் (த்வனிக்கும் என்பதாக).

ஒருவேளை எல்லாவற்றிலும் சற்று அருகில் சென்றால், சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பாப் டிலன் – இலக்கிய பரிசு – சற்று கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. சில வருடம் – இலக்கிய பரிசு இல்லமால் இருந்து இருக்கிறது. அது மரியாதையை காப்பாற்றி இருக்கும்.

சுமாராக பட்டியல் எடுத்தால் – 25 பேர் (நோபல் பரிசு பெற்றோர்) வாசித்து இருக்கிறேன். இலக்கிய விமரிசகன் அல்லன் . வாசகனாக என்னை ஊக்குவித்து இருக்கிறது.ஆனால் அவை சமீப கால எழுத்துக்கள் அல்ல.

2016 நோபல் பரிசு பற்றி பல கேலி விமரிசனங்கள் – என்னைக் கவர்ந்தது –

நோபல் கமிட்டிக்கு என் அனுதாபங்கள் – அவர்களின் முடிவு முற்றிலும் புரிகிறது. புத்தகங்களை படிப்பதுதான் எவ்வளவு சிரமம்!

ஒருபுறம் தொழில் நுட்பத்தின் விளிம்பில் – ஆழத்தில் – இதனை இன்னும் சிறப்பாக செய்யலாமே – மொழி கடந்து – மென்மையான – அனுபவங்களை மரியாதை செய்யலாமே என்றெல்லாம் தோன்றுகிறது.

மறுபுறம் – ஒரு வருட ட்விட்டர் செய்தி கூட இலக்கிய அங்கீகாரம் பெறலாம் என்கிற சாத்தியத்தின் புதுமைக்கு நான் தயாராக இல்லையோ என்றும் தோன்றுகிறது.

ஒருவேளை புதிய நூற்றாண்டிற்கு நாம் தயாராக வேண்டும்.

அதில் வேவ்வேறுவிதமான முயற்சிகள் அங்கீகரிக்கப் படவேண்டும் – நமக்கு பழக்கமில்லாத புதிய கூறுகள் வரலாம். நாம் புறக்கணித்த சில அடிப்படை அறிவியல் சேர்க்கப் படவேண்டும். கணிதம் சேர்க்கப் படவேண்டிய ஒன்று என தோன்றும். (சமுதாயத்திற்க்கு நேரடியாக உதவாது – என்கிற நிலை மாறி – குறைந்த பட்சம் வருடங்கள் இருபத்திற்கு மேலாகிறது). தொழில் நுட்ப யுகத்தில் நோபல் குழு மெய்நிகராக (virtual) இருக்கலாம்.

புதுப்பித்தல் மூலம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறலாம். புதியன இணைதலாக, பழையன பெருகுதலாக..

திடீரென நம்பிக்கை துளிர்கிறது.

அன்புடன் முரளி

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நோபல் பரிசு பற்றி எழுதப்பட்ட குறிப்பு கண்டேன். நோபல் கமிட்டி மிக அசட்டுத்தனமான முடிவைத்தான் செய்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பாடலுக்கு அளிக்கவேண்டுமென்றால் பாடலுக்கான ஒரு நோபல் பரிசைத்தான் உருவாக்கவேண்டும். அதை கவிதையாகப் பார்ப்பதென்றால் அதன் கவிதை மதிப்பை மட்டும்தான் பார்க்கவேண்டும்

இல்லை, சம்பிரதாயமான முடிவுகளை மீறுகிறார்கள் என்றால் மொழியை எல்லா வகையிலும் பயன்படுத்துபவர்களை ஏன் கணக்கிலே கொள்ளவில்லை? மொழியை மிகத்திறமையாக உபயோகித்தவர்கள் ரோலான் பார்த், தெரிதா போன்றவர்கள். இவர்களை எல்லாம் விட ஒரு படி மேல் லக்கான். அற்புதமான மொழிவிளையாட்டுடன் எழுதியவர்

சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் மொழி இன்று பயன்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் இலக்கியமாகக் கொள்ளலாம் என்றால் இலக்கிய அளவுகோல்தான் என்ன?

நோபல் பரிசு செய்யவேண்டிய வேலை உள்ளது/ அது உலகமெங்கும் உள்ள பண்பாடுகளிலிருந்து நல்ல எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்யவேண்டும். நஜீப் மஃபூஸ் பொல. அதையெல்லாம் செய்ய அவர்களுக்கு மனமும் இல்லை. ஆட்களும் இல்லை

ஆகவே இப்படி காமெடி செய்கிறார்கள். அதாவது அமெரிக்காவின் பாட்டெழுத்தாளருக்குக் கொடுத்தாலும் கொடுப்போமே ஒழிய ஒரு ஆசிய எழுத்தாளனுக்குக் கொடுக்கமாட்டோம் என்பது இதன் நீதி

முகமது ஷெரீஃப்

***

ஜெ

நோபல் பரிசு பெற்ற பாப் டைலனின் பல பாடல்கள் யூ டியூபில் உள்ளன. அவற்றில் எனக்குப்பிடித்த ஒன்று

ஆனால் வரிகளை மட்டும் பார்த்தால் என்ன கவித்துவம் என்றே புரியவில்லை. நம்மூர் கத்தரின் பாடல்களைப்போல இருக்கிறது

எண்பதுகளில் நான் கத்தரின் பாடல்நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். கொந்தளிப்பாகவே இருக்கும். ஆனால் அவற்றை வரிகளாக வாசித்தால் பொங்கி எழு புரட்சி செய்என்று மட்டும்தான் இருக்கும்.

நோபல் பரிசுக்குழு காலத்துக்கு ஏற்பமாற முடிவு செய்திருக்கிறது. ஆனால் அது தான் நம்பும் விழுமியங்களுக்கு ஏற்பத்தான் நின்றிருக்கவேண்டும்

ஆனால் அமெரிக்காவின் அடிப்படையான ஒரு அறிவுத்தளம் மழுங்கிவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன். அமெரிக்கருக்கு நோபல் என்று அவர்கள் எம்பிக் குதிக்கவில்லை. கறாராகவே பார்க்கிறார்கள். நோபல் பரிசை கண்டித்து பலர் எழுதிவிட்டார்கள்

இன்றுவரை பாப் டைலன் நோபல் பரிசை பெற ஒப்புக்கொள்ளவில்லை. அந்தத் தயக்கமே அங்கிருக்கும் விமர்சனத்தைப் பயந்துதான். அந்த சமரசமில்லாத தன்மைதான் இன்றைக்கு அவசியத்தேவை

சொல்லவிட்டுப்போய்விட்டது. பாடகருக்கான எந்த விருதுக்கும் பாப் டைலன் தகுதியானவர்தான்

ஜெயராமன்

 

 

 

 

https://www.youtube.com/watch?v=3l4nVByCL44

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10
அடுத்த கட்டுரைஇரண்டு வெங்கட் சாமிநாதன்கள்